Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ்த்தேசியம் மேல் மண்ணில் வேர்விட்ட மரமல்ல

தமிழ்த்தேசியம் மேல் மண்ணில் வேர்விட்ட மரமல்ல
சி.அ.யோதிலிங்கம்

 

2009 போருக்கு பின்னர் தமிழ் அரசியலின் இலக்கும் வழி வரைபடமும் பற்றி ஆழமான விவாதங்கள் நடத்தவேண்டி இருக்கின்றது. இந்தியா உட்பட சர்வதேச வல்லரசுச் சக்திகள் தங்களது புவிசார் அரசியல் நலன்களுக்காக இலக்கினையும் வழிவரைபடத்தையும் முழுமையாக மாற்றுமாறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. தமிழ் மக்கள் தங்களுடைய நலன்களுக்கு எது உகந்தது என்பதைக் கண்டுபிடித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான உபாயங்களை வகுக்க வேண்டுமே தவிர சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு பணிந்து போக முடியாது. விரலுக்கு அளவாக மோதிரத்தை உருவாக்க வேண்டுமே தவிர மோதிரத்துக்கு அளவாக விரலை வெட்ட முடியாது.

பிராந்திய, சர்வதேச சக்திகளின் இந்த அழுத்த வியூகம் போர்க்காலத்திலேயே வகுக்கப்பட்டது. சம்பந்தன் தலைமை அதற்கு ஒத்துக்கொண்டதனால் தான் தமது நிகழ்ச்சி நிரலுக்கு இடைஞ்சலாக இருந்த புலிகளையும் அழிக்க முற்பட்டனர். இங்கு புலிகளை மட்டும் அழிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படவில்லை. இதுவரை காலமும் தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்த தமிழ் தேசிய அரசியலையும் சேர்த்து அழிப்பதற்கே வியூகங்கள் வகுக்கப்பட்டன.

போர் முடிந்த பின்னர் தமிழ் அரசியலின் இலக்கும், வழிவரைபடமும் புதிதாக உருவாக்கப்பட்டன. இலக்கு 13வது திருத்தமும் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட மாகாண சபைகளும் என வரையறுக்கப்பட்டது. தமிழ் மக்களை இவ் இலக்கிற்கேற்ப மாற்றும் வரை தேர்தல் பரப்புரைகளின் போது மட்டும் தேசியம், சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றி பேசுவதென்றும் நடைமுறையில் கைவிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தீர்மானிக்கும் அதிகாரங்கள் அனைத்தும் சம்பந்தனிடமும், சுமந்திரனிடமும் குவிக்கப்பட்டன.

வழிவரைபடத்தின் முக்கிய அம்சங்களாக சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு என்பவற்றை கைவிடுதல், இதற்கு மாறாக சிங்கள தேசம் தருவதை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளைக் கைவிடுதல், இந்த அடிப்படைக் கோரிக்கைகள் இந்தியாவிற்கு பிடிக்காது என்பதால் அவற்றை பகிரங்க இடங்களில் உச்சரிக்க வேண்டாம் என முக்கியஸ்தர்களுக்கு சம்பந்தன் நேரடியாகவே கட்டளையிட்டார். சிங்கள பௌத்த ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளுதல் தமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்கம் செய்தல், மைத்திரி – ரணிலுடன் இணக்க அரசியலை மேற்கொள்ளுதல், சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்று அதன் பின்னால் இழுபட்டுச் செல்லுதல் என்பன இருந்தன.

இந்த அம்சங்களுக்கு ஏற்ப கூட்டமைப்பையும் மக்களையும் மாற்றுவதற்கான முயற்சிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டன. முதலாம் கட்டத்தில் தமிழ் அரசியலில் புலிநீக்கம் செய்யப்பட்டது. இதனை உடனடியாக மேற்கொள்ளுமாறு இந்தியா சம்பந்தனுக்கு கட்டளையிட்டது. சம்பந்தன் குறிப்பறிந்து நடப்பதில் வல்லவர் என்பதால் இந்தியா கட்டளையிடுவதற்கு முன்னரே இந்தப்பணிகளை ஆரம்பித்துவிட்டார். இதன்படி புலிகளினால் கூட்டமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கஜேந்திரகுமார் கொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்தவரென்பதால் தனக்கு ஒத்துழைப்பார் என்றே சம்பந்தன் கருதினார். போர்க்காலத்தில் இருவருக்குமிடையே நல்ல உறவு இருந்தது. கஜேந்திரகுமார் இந்த இலக்கையும் வழிவரைபடத்தையும் நிராகரித்து வெளியேறியபோது சர்வதேச பிராந்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் முதல் சறுக்கல் ஏற்பட்டது. கஜேந்திரகுமாரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இச்சக்திகளினால் கொழும்பு வாசியான சுமந்திரன் களமிறக்கப்பட்டார். சுமந்திரன் அன்று முதல் இன்று வரை தனது எஜமான் விசுவாசத்தை மறக்கவில்லை. கஜேந்திரகுமார் அணி மேலெழுவதைத் தடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.

இரண்டாம் கட்டத்தில் தமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் சம்பந்தன் சிங்கக்கொடியை பகிரங்கமாகவே தூக்கினார். சிங்கக்கொடி என்பது தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கி வீசிய கொடி என்பது சம்பந்தனுக்கு தெரியாதல்ல. தெரிந்தும் தூக்கியவர்களையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாரானார். வாக்கு வங்கியை பாதித்துவிடும் என்று மாவை பதறியடித்து மறுப்பறிக்கை விட்ட போதும் சம்பந்தன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். எதிர்ப்புகள் எவற்றையும் அவர் கணக்கெடுக்கவேயில்லை. சுமந்திரன், கொடியைத் தூக்கிப்பிடித்ததற்கான நியாயங்களை சட்ட நுணுக்கங்களோடு முன்வைத்தார்.

இதேபோல் கறுப்பு தினமாக இதுவரை காலம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த சுதந்திரதினத்திலும் இரட்டையர்களான சம்பந்தனும், சுமந்திரனும் கலந்து கொண்டனர். சுதந்திர தினம் என்பது தமிழ்மக்களை ஒடுக்குவதற்காக சிங்கள தேசத்திற்கு வழங்கப்பட்ட லைசன்ஸ் அதாவது அனுமதிப்பத்திரம் என்பது இங்கு கணக்கெடுக்கப்படவில்லை. சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி ஏற்றியதற்காக சம்பந்தனின் சொந்தத்தொகுதியில் திருமலை நடராசன் சுட்டுக்கொல்லப்பட்டது கூட சம்பந்தனின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவில்லை.

மூன்றாவது கட்டத்தில் தமிழரசுக்கட்சிக்குள் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. கட்சிக்குள் சம்பந்தனதும் சுமந்திரனதும் அதிகாரங்களுக்கு தடையாகவும் தமிழ்தேசியக் கோஷங்களை முன்வைத்தவர்களாகவும் இருந்த பேராசிரியர் சிற்றம்பலம், இளைஞர் அணித்தலைவர் சிவகரன், மகளிர் அணித்தலைவர் அனந்தி ஆகியோர் அகற்றப்பட்டனர். சிற்றம்பலம் உத்தியோகபூர்வமாக அகற்றப்படாவிட்டாலும் ஓரங்கட்டப்பட்டார். தேர்தல் நலன்களுக்காக தேசியப்பட்டியலில் முதலிடத்தை வழங்கிய போதும் பின்னர் வெட்டிவிடப்பட்டார். சிவகரனும் அனந்தியும் பகிரங்கமாக இவர்களது அதிகாரத்தை மீறியபோது ஒழுக்க விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தமிழ்த்தேசியம் மேல் மண்ணில் வேர்விட்ட மரமல்ல

ஒழுக்க விசாரணைக் கைதிகளாக மூன்று நான்கு வருடங்களுக்கு மேலாக அவர்கள் இருக்கின்றனர். விசாரணை இன்னமும் இடம்பெறவில்லை. இந்த இடத்தில் சிங்கள அரசு சம்பந்தனிடமும் சுமந்திரனிடமும் தோற்றுவிட்டது. மாற்று அரசியலை நோக்கி முழுமையாக அவர்களை சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே விடுதலையுமில்லாமல் விசாரணையுமில்லாமல் வைக்கப்பட்டனர்.

நான்காவது கட்டத்தில் ரணில் - மைத்திரியுடன் இணக்க அரசியலுக்கு சென்றனர். அதற்கு வெகுமதியாகக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். தாங்கள் உருவாக்கிய அரசிற்கு தமிழ்த்தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இல்லை, சிங்கள தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இல்லை. இணக்க அரசியல் சம்பந்தப்பட்ட இரு தரப்பிற்கும் சம அளவிலான பிரதிபலன்களைக் கொடுக்கக்கூடிய அரசியல். உண்மையில் இது இணக்க அரசியலல்ல, மாறாக சரணாகதி.

ஐந்தாவது கட்டத்தில் தமிழ் அரசியலின் சர்வதேசமயம் நீக்கம் செய்யப்பட்டது. ஜெனிவாவில் சம்பந்தன் தலைமை சிங்கள அரசை பிணையெடுத்தது. போர்க்குற்ற விசாரணைக்கு எந்தவித நிபந்தனையுமில்லாமல் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு மேற்கூறிய ஐந்து கட்டங்களினூடாக தமிழ் அரசியல் செங்குத்தாக கீழிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவே விக்னேஸ்வரனும் முதலமைச்சராக களமிறக்கப்பட்டார். விக்னேஸ்வரன் மேட்டுக்குடியைச் சேர்ந்த கொழும்பு வாசியாக இருந்தபடியால் தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்குவார் எனக் கருதியே களமிறக்கப்பட்டார். வட மாகாண சபையை அரசியல் செயற்பாடு எதுவுமில்லாமல் வெறுமனே அபிவிருத்தி வேலைகளில் மட்டும் கவனத்தைக் குவிக்கின்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது.

விக்னேஸ்வரனும் ஆரம்பத்தில் இவர்களின் நிகழ்ச்சி நிரலின் படியே நடந்து கொண்டார். வட மாகாண சபைக்கூடாக ஏதாவது செய்ய முடியும் எனக் கருதினார். இது விடயத்தில் வந்த எதிர்ப்புக்களைக்கூட சம்பந்தன் தலைமை போல இவர் பொருட்படுத்தவில்லை. தமிழக தேசிய சக்திகள் கணவன் - மனைவி போல உறவுக்குள் தலையிட வேண்டாம் என எச்சரிக்கை செய்தார். காலப்போக்கில் யதார்த்த நிலையை அவர் உணர்ந்த போது தமிழ் தேசிய அரசியல் பக்கம் மாறினார். விளைவு வடமாகாணசபை தமிழ் தேசிய அரசியலை வலியுறுத்தும் அரசியல் களமாக மாறியது. சம்பந்தன் தலமைக்கும் அவருக்குப் பின்னால் நின்ற பிராந்திய, சர்வதேச சக்திகளுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல் இது தான். சம்பந்தன் தலைமையின் இருப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவின் பிராந்திய சர்வதேச சக்திகளின் இருப்பையும் ஆட்டங்காணச் சென்ற சறுக்கல் இது தான்.

விக்னேஸ்வரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டம் சம்பந்தன் தலைமை, ரணில் - மைத்திரி அரசு, சர்வதேச பிராந்திய சக்திகள் என்போரின் கூட்டுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. வட மாகாண சபைக்குள் விக்னேஸ்வரனுக்கு எதிரான குழு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. நிர்வாகத்தை நடாத்த தெரியாதவர், ஊழல் நிர்வாகம் எனப் படிமங்கள் உருவாக்கப்பட்டன. இதன் உச்ச கட்டமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. விக்னேஸ்வரன் தமிழ்த்தேசியத் தளத்தில் உறுதியாக நின்று இந்தச் சதித்திட்டங்களை மிக இலாவகமாக முறியடித்தார்.

இதற்கு முன்னரே இரண்டாவது சறுக்கல் தமிழ் சிவில் சமூக அமையத்தின் தோற்றத்துடன் ஆரம்பமானது. இது சம்பந்தன் தலைமையிலான நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக புலமைத்தளத்தை உருவாக்கியது. மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் அதற்கு தலைமை வகித்தமை ஒரு வெகுஜனக் கவர்ச்சியையும் அதற்குக் கொடுத்தது.

மூன்றாவது சறுக்கல் தமிழரசுக்கட்சியின் பெரியண்ணன் தனத்தால் ஏற்பட்டது. கூட்டமைப்பில் இணைந்து கொண்ட கட்சிகளுக்கு சமத்துவத்தை கொடுக்காதது மட்டுமல்ல, அவர்களை மனிதர்களாக மதிக்காத நிலையும் கூட்டமைப்பை விட்டு அவர்களை வெளியே தள்ளியது. இக்கட்சிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் சிவில் சமூகம் போன்ற வெகுசன அமைப்புக்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியமையும் சம்பந்தன் தலைமைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு அரசியல் தளத்தை கொடுத்துவிட்டது. இதுபற்றி இப் பத்தியாளர் தனது முன்னைய கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்.

சம்பந்தன் தலைமை எதுவுமே செய்ய முடியாமல் விக்னேஸ்வரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கு நேரடியாக முயற்சித்த போதுதான் மிகப்பெருஞ் சறுக்கலான நான்காவது சறுக்கல் ஏற்பட்டது. முன்னர் கூறியது போல இது சம்பந்தன் தலைமையின் இருப்பையும் பிராந்திய சர்வதேச சக்திகளின் இருப்பையும் ஆட்டம் காண செய்த போதுதான், சம்பந்தன் மட்டுமல்ல பிராந்திய சர்வதேச சக்திகளும் விழித்துக்கொண்டனர். இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும் உடனடியாக விக்னேஸ்வரனுடன் சமரசத்திற்குச் செல்லுமாறு சம்பந்தனுக்கு கட்டளையிட்டனர்.       

மறுபக்கத்தில் மகிந்தர் தரப்பு தற்காப்பு யுத்தத்திலிருந்து தாக்குதல் யுத்தத்திற்கு முன்னேறியமையும் அதன் உச்சமாக மகாநாயக்கர்கள் களமிறக்கப்பட்டமையும் தென்னிலங்கையில் இச்சக்திகளின் நிகழ்ச்சிநிரலை ஆட்டங்காணச் செய்தது. இந்த நிலையில் சம்பந்தனுக்கு தற்காப்பு யுத்தத்தில் இறங்குவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. தேர்தல் நெருங்குகின்றது என்ற பயமும் இந்த தற்காப்புப் நிலையை ஊக்குவித்தது. சம்பந்தன் தமிழ்த்தேசியத் தளத்திற்கு திரும்பிவிட்டது போல ஒரு தோற்றத்தைக்கொடுக்க முற்பட்டார். காணாமல் போனவர்களின் போராட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காதவர் பாதிக்கப்பட்ட தாய்மார்களைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். ஐ.நா பிரதிநிதிகளுக்கு மைத்திரி – ரணில் அரசு எதுவும் செய்யவில்லை என முறையிட்டார். இதை விக்னேஸ்வரன் செய்த போது ஏன் எதிர்த்தீர்கள் என்பதற்கு அவரிடம் பதில் இல்லை.

'போன மச்சான் திரும்பி வந்த கதை இதுதான்' திரும்பி வந்த மச்சான் தொடர்ந்து இருப்பாரா? வரலாறு விரைவில் பதில் சொல்லும்.

சம்பந்தன் தலைமை தமிழ்த்தேசிய அரசியலை அழிப்பது என முடிவெடுத்து  விட்டாலும் மகாநாயக்கர்கள் தமிழ் தேசிய அரசியலை பாதுகாப்பது என முடிவெடுத்துவிட்டனர்.

தமிழ் தேசிய அரசியலுக்கு இன்று மாகாநாயக்கர்களே துணை!

சர்வதேச சக்திகளும் சம்பந்தன் தலைமையும் நினைப்பது போல அழிப்பதற்கு தமிழ்த்தேசியம் மேல் மண்ணில் வேர்விட்ட மரமல்ல.

8/19/2017 2:58:27 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்