Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சர்வதேச மத்தியஸ்தம்தான் பேச்சுவார்த்தைக்கு ஒரே வழி!

சர்வதேச மத்தியஸ்தம்தான் பேச்சுவார்த்தைக்கு ஒரே வழி!
முத்துக்குமார்

 

அரசுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் விழுந்தடித்துக்கொண்டு இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசினை பாதுகாக்க முற்படுவது வழமையே. இந்தத்தடவையும் அது நடைபெற்றிருக்கின்றது. இந்திய வெளிநாட்டு அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கை விஜயமும் தொடர்ந்து இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இலங்கை விஜயமும் இதற்காககத்தான் இடம்பெற்றிருக்கின்றது.

வரப்போகும் ஜெனீவா மாநாடு தொடர்பாக அரசு மிகவும் பதட்டத்தில் இருக்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அரசு நினைத்தது போல சர்வதேசத்தில் விற்க முடியவில்லை. ஜெனீவா மாநாட்டில்கூட அதனை சமர்ப்பிப்பதில்லை என்றே அரசு முடிவெடுத்திருக்கிறது.

அரசுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் இந்தியக் காட்டில்தான் மழை. நெருக்கடியைச் சாட்டி அச்சுறுத்தியே இலங்கையிடமிருந்து கறக்க வேண்டியதையெல்லாம் இந்தியா கறந்து விடுகின்றது. கக்கத்தில் சம்பந்தனையும் இந்தியா கொண்டு திரிவதால் இந்தியாவின் கறத்தல் மிகவும் இலகுவாகிவிடுகின்றது.

இந்தத் தடவை இந்திய வெளிநாட்டு அமைச்சர் கிருஷ்ணா தமிழ் மக்களைக் கருவியாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குத் தேவையான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். இதன் பிரதிபலன்களும் இலங்கைக்கு நிறையவே அடுத்தடுத்துக் கிடைத்தன. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இலங்கை வருகை, போர்க்குற்றம் சாட்டப்பட்ட படைத்தளபதி சவேந்திர சில்வா ஐ.நா அமைதிப்படை ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டமை, இறுதியாக ஜனாதிபதி - சம்பந்தன் இரகசியச் சந்திப்பு என்பன இந்தப் பிரதிபலன்களின் விளைவுகளே.

அப்துல் கலாம் இலங்கைக்கு வந்து மும்மொழித்திட்டத்தை தொடக்கிவைத்தார். இதன்மூலம் தமிழ்மக்களுடனான இணக்கப்பாட்டிற்கு அரசு அதிக அக்கறை காட்டி வருகின்றது என்கின்ற தோற்றத்தை கொடுத்திருக்கின்றார். இத்தனைக்கும் மும்மொழித்திட்டம் ஏற்கனவே அரசியல் யாப்பிலுள்ள விடயம். 13 ஆவது, 16 ஆவது யாப்புத் திருத்தங்கள் மூலம் அவை உட்புகுத்தப்பட்டிருந்தன. இத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாகியும் அதனை இதுவரைகாலமும் ஏன் நிறைவேற்றவில்லையென கேள்விகள் எதனையும் அப்துல் கலாம் கேட்கவில்லை.

இத்திட்டத்தை தொடக்கிவைத்ததைத்தவிர அவரது உரைகள் எல்லாம் வெறும் போதனைகள்தான். இந்தியாவிலிருந்து வரும் சாமியார்கள் கூறும் போதனைகளுக்கு மேலாக அதில் எதுவும் இருக்கவில்லை. குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்கள் எதனையும் தெரிவிப்பதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக ஒரு வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

தனது பிரதிமைக்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காகவும், ஜனாதிபதியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காகவும் கடைசிவரை அரசியல் பேசுவதை அவர் தவிர்த்தே வந்தார். குறைந்தபட்சம் ஏனைய இந்திய அரசியல்வாதிகளைப்போல 13 ஆவது திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறுவதற்குக்கூட அவருக்குத் துணிவு இருக்கவில்லை.

அவர் கூறிய அரசியல் விடயம் என்பது மீனவர் விவகாரம் மட்டும்தான். அதுகூட வடபகுதி மீனவர்களின் நிலையினை கவனத்தில் எடுத்துக் கூறவில்லை. வடபகுதி மீனவர்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்ப முயற்சிக்கின்றனர். அவர்கள் விடயத்தில் சிறிதுகூட அனுதாபம் இல்லாது மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் வடபகுதி மீனவர்களும் மீன்பிடிக்கலாம் என ஆலோசனை கூறியிருக்கின்றார்.

மடிவலையைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தால் வடபகுதி மீனவர்களுக்கு மீன் எங்கே கிடைக்கப்போகின்றது? இது இராமேஸ்வரத்தில் பிறந்த அவருக்குத் தெரியாததல்ல. தமிழக மீனவர்களின் ரோலர்களினால் வடபகுதி மீனவர்களின் வலைகளெல்லாம் அறுத்தெறியப்படுகின்றனவே. இவைபற்றியெல்லாம் அவர் வாய் திறக்கவில்லை.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கட்டும். வடபகுதி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்கட்டும் எனக் கூறுவதற்கு அவர் தயாராக இருக்கவில்லை.

மீனவர் விவகாரம் ஒரு சீழ் பிடித்த புண்போல தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதே இலங்கை, இந்திய அரசுகளின் விருப்பம். இதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே பகைமையினைத் தோற்றுவிக்கலாம். தொப்புள்கொடி உறவுகளையும் அறுத்தெறியலாம். அப்துல் கலாம் இதனை வளர்த்தெடுக்க விரும்புகின்றார் போலவே தெரிகின்றது.

சவேந்திர சில்வா இறுதிப்போரின் போது கட்டளை அதிகாரியாகத் தொழிற்பட்டவர். அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இது விடயமாக பல வழக்குகளும் அவர் மீது தொடரப்பட்டுள்ளன. இவ்வாறான ஒருவர் ஐ.நா ஆலோசனைக் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார் என்றால் இந்தியச் செல்வாக்கே அதற்குக் காரணமாக இருக்கமுடியும்.

இந்தியாவின் இறுதிக் காய் நகர்த்தல்தான் மிகவும் முக்கியமானது. சம்பந்தனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தைதான் அது. கிருஷ்ணா இலங்கையில் கூட்டமைப்பினரைச் சந்தித்தபோது தெரிவுக்குழுவிற்குச் செல்லுங்கள் என்றே வலியுறுத்தினார். தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதால் கூட்டமைப்பினர் அதற்குத் தயக்கம் காட்டினர். கூட்டமைப்பினரை தங்கள் வழிக்கு கொண்டவருவதற்காகவே நிச்சயிக்கப்பட்ட பேச்சுவார்த்தை தினத்திற்கு அரசுதரப்பினர் வருகை தரவில்லை. இந்தப் பகிஸ்கரிப்பு கிருஷ்ணாவின் சம்மதமில்லாமல் நடந்திருக்கும் எனக் கூறமுடியாது.

பேச்சுவார்த்தை முட்டுச் சந்திக்கு வந்ததினால் சுரேஸ் பிரேமச்சந்திரன் சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு தமிழ் மக்களிடமிருந்தும் சர்வதேச சக்திகளிடமிருந்தும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

பேச்சுவார்த்தைச் செயற்பாட்டின் தர்க்கரீதியான அடுத்தகட்ட வளர்ச்சி இதுவாகத்தான் இருக்கமுடியும். தனித்து கூட்டமைப்பும் அரசும் பேசுவதன்மூலம் தீர்வு எதுவும் வராது என்பதுதான் இலங்கையின் அரசியல் யதார்த்தம். காலம் அறிந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த யோசனையை முன்வைத்தமை பாராட்டத்தக்கதே.

இதனை முறியடிப்பதற்காகவே இந்தியா அவசர அவசரமாக ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்குமிடையே இரகசிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்திய குடியரசுதின விழாவில் சம்பந்தன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள சம்பந்தன் சம்மதித்ததாகவும் அதற்கான பெயர்களைக் கொடுத்ததாகவுமே தகவல்கள் வருகின்றன. திருக்கோணமலை விநாயகபுரம் தாக்குதல்கூட சம்பந்தனை பணியவைப்பதற்காக இடம்பெற்றிருக்கலாம்.

இந்தச் சந்திப்பு பற்றிய செய்தி உண்மையானால், சம்பந்தன் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடனோ, குறைந்தபட்சம் தனது கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர்களுடனோகூட இதுவிடயத்தில் எந்தவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை. வழமையாக கலந்துரையாடும் சுமந்திரனைக் கூட கைவிட்டிருக்கின்றார். இவ்வாறு முக்கியமான விடயங்களில் தனித்து எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல் அரசியல் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு யார் அவருக்கு அனுமதி வழங்கியது? கூட்டணி ஜனநாயகத்தை விட்டுவிடுவோம். உட்கட்சி ஜனநாயகத்திற்குகூட மதிப்பளிக்காததை எவ்வாறுதான் ஏற்றுக்கொள்ளமுடியும். ஜனாதிபதி மகிந்தர் தனித்தனியாக ஆட்களைக் கையாண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றுவதில் வல்லவர். அதற்குச் சம்பந்தன் பலியாகியிருக்கின்றார். தான் பலியாகியது மட்டுமல்ல தமிழ் மக்களின் அரசியலையும் பலியாகக் கொடுத்திருக்கின்றார்.

ஏனைய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றிச் சம்பந்தனிடம் கேட்டபோது சந்தித்தது உண்மை, ஆனால் பெயர்கள் எதனையும் கொடுக்கவில்லை என பதில் அளித்ததாகத் தகவல். இது உண்மையானால் பகிரங்கமாக பத்திரிகைகளில் வந்த செய்திக்குப் பகிரங்கமாகப் பதில் கொடுக்கவேண்டியதுதானே!

பேச்சுவார்த்தை இதற்குமேல் இந்தப்பொறிமுறையினூடாக நகர்த்த முடியாது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழ்மக்களுக்கு சாதகமாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை சிங்களவர்களை பெரும்பான்மையாகக்கொண்ட தெரிவுக்குழு தமிழ்மக்களுக்கு சாதகமாக இருக்குமென ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. கூட்டமைப்பு அதில் கலந்து கொள்வது தீர்வு விடயத்தில் அரசு கையை விரிப்பதற்கு தமிழ்த்தரப்பே வாய்ப்புகளை கொடுத்ததாக அமைந்துவிடும்.

முதலில் தமிழ்த்தரப்பும் அரசுதரப்பும் பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும். பின்னர் அரச தரப்பு அதற்கு சிங்கள மக்களின் ஆதரவுகளைப் பெறும் முயற்சிகளையும் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவுகளைப் பெறும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பிற்கு பேச்சுவார்த்தை விடயத்தில் சுயாதீனமும், சுயமரியாதையும் அவசியம். கிருஷ்ணா இலங்கை வந்து இந்தியாவிற்குச் சார்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றார் என்றால் அதற்கு தமிழ் மக்கள்தான் காரணம். தமிழ் மக்களைப் பயன்படுத்தி இந்தியா தன்னுடைய நலன்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பிரதிபலன்கள் ஒரு தரப்பிற்கு மட்டும் கிடைப்பது தர்மமல்ல. இருதரப்புக்குமே அது கிடைத்தல் வேண்டும். குறைந்தபட்சம் அள்ளிக்கொண்டு செல்வதில் கிள்ளியாவது தமிழ்மக்களுக்குக் கொடுப்பதற்கு இந்தியா தயாராக வேண்டும். இங்கு இந்தியா தனது நலன்களை மட்டும் பார்த்துக்கொண்டு சென்றால் பரவாயில்லை தமிழ்மக்களின் அரசியலை படுகுழியில் விழுத்திவிட்டுச் செல்வதை எவ்வாறுதான் அனுமதிக்கமுடியும்? இங்கு இந்தியாவைக் குறைசொல்லி எந்தவித பயனுமில்லை. கூட்டமைப்புத்தான் இதில் சரியாக நடந்துகொள்ள வேண்டும்.

தற்போதய சூழலில் அரசு தீர்வுகள் எதனையும் முன்வைக்கப் போவதில்லை. இந்தியாவும் இலங்கையும் பறைசாற்றித் திரிகின்ற 13 ஆவது திருத்தத்தினைக் கூட நிறைவேற்றப் போவதில்லை. வடமாகாணசபைத் தேர்தலையும் நடாத்தப் போவதில்லை. குறைந்தபட்சம் சிவில் நிருவாகத்தைக்கூட தமிழ்ப்பிரதேசங்களில் கொண்டவரப் போவதில்லை.

அது தமிழ்மக்களின் இருப்பை சிதைக்கும் வேலைத்திட்டங்களையே கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றது. தாயகத்தில் நடைபெறுகின்ற பச்சை ஆக்கிரமிப்புக்கள் இதன் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. பேச்சுவார்த்தைப் பம்மாத்துகள் எல்லாம் ஆக்கிரமிப்பு வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கால அவகாசங்களை பெற்றுக்கொள்வதற்காகவே தவிர வேறொன்றுமல்ல.

இந்த உண்மையை கூட்டமைப்பு உட்பட தமிழ்த்தேசிய சக்திகள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப தந்திரோபாயங்களை வகுத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருக்கவேண்டும்.

இதன் முதற்கட்டமாக சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தை என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இதன் மூலம்தான் தற்போதய ஏமாற்றுப் பேச்சுவார்த்தைப் பொறியிலிருந்து கழரமுடியும். பேச்சுவார்த்தைச் செயற்பாட்டை சரியான புதிய பாதையில் நிறுத்தவும் முடியும்.

சர்வதேச சமூகம் வலிமையாக வருகின்ற கோரிக்கைகளுக்குத்தான் செவிசாய்க்கும். இதற்கு கோரிக்கையை முன்வைக்கிற் தரப்பு அமைப்பு ரீதியாக வலிமையாக இருக்கவேண்டும்.

நிலமும், புலமும், தமிழகமும் ஒரு நேர்கோட்டில் செயற்பட்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதே இதனைச் சாத்தியமாக்கமுடியும். இதற்கு கொள்கை ரீதியில் வலிமையான அரசியல் இயக்கம் அவசியம். தேசியம், சுயநிர்ணயம் என்பதை ஏற்றுக்கொண்ட சக்திகளை இணைத்து ஒரு வலிமையான ஐக்கிய முன்னணியை நிலத்திலும், புலத்திலும், தமிழகத்திலும் உருவாக்கி செயற்படுத்துகின்றபோதே இதில் சாத்தியங்களைக் காணமுடியும்.

இதற்கு கதிரைகளுக்கான கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு உலகம் தழுவிய வகையில் ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக வேண்டும்.

2/3/2012 5:20:07 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்