Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இல்லாத இனப்பிரச்சனையும் நோயறியா மருத்துவமும்!

இல்லாத இனப்பிரச்சனையும் நோயறியா மருத்துவமும்!
வி.ரி.தமிழ்மாறன்

 

முன்னாள் ஜனாதிபதி திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் கடந்த வாரம் இந்தியாவில் வெளியிட்ட கருத்து ஒன்றில் சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்களுக்கு பிரச்சனையின் தாற்பரியம் சரியான முறையில் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். நாட்டில் எத்தகைய பிரச்சனை இருக்கின்றது என்பது பற்றிய அவரது புரிதலின் வெளிப்பாடாக அதனை நாம் கருதிக் கொள்ளலாம். சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல என்று காட்டுவதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்தால் அதனோடு ஒத்துப்போக மறுப்பது நியாயமில்லைத்தான். ஆனால் பிரச்சனை அதுவல்ல என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஜாதிக சிந்தனையின் பிதாமகரும் எனது நெருங்கிய நண்பருமான பேராசிரியர் நளின் டி சில்வா அடிக்கடி எங்களைப் பார்த்துக் கேட்கும் ஒரு கேள்வி: 'உங்களுக்கு இருக்கும் பிரச்சனை தான் என்ன?' என்பதாகும். அதாவது தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சனை உள்ளது? என்பதே அவரது வினாவாகும். அவருக்கு பல தடவைகளில் பதில் சொல்லிக் களைத்துப்போன நான் இறுதிமுறையாகச் சொன்னேன்:

'இந்தக் கேள்வியை நீங்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வருவதும் அதற்குத் தொடர்ந்து நான் பதில் சொல்ல வேண்டியிருப்பதும்தான் உண்மையிலேயே பிரச்சனை' என்றேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பின்னர் அந்தக் கேள்வியை என்னிடம் அவர் கேட்பதில்லை. சந்திரிகா அம்மையாரின் கூற்று இந்தப் 'பிரச்சனை மையத்தை' எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்திற்று. 

ஆதியிலே 'வாக்கியம்' இருந்தது என்பதைப்போல, இலங்கையில் ஆரம்பத்திலேயே பிரச்சனை இருந்தது. அதனால்தான் அடிக்கடி, துட்டகைமுனு பற்றியும் எல்லாளன் பற்றியும் எல்லா மட்டங்களிலும் பேசப்படுவதுண்டு. ஆனால் அதனை இனப்பிரச்சனையாக அடையாளம் காண்பதற்கு 1948 வரை பொறுத்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று எனச் சிலர் கருதுகின்றார்கள்.

சர்வசன வாக்குரிமையை சேர்.பொன் இராமநாதன் எதிர்க்கையில் அதற்கான விமர்சனம் அவரைக் குறுகிய அரசியல் சிந்தனாவாதியாகப் படம்பிடித்துக் காட்டிற்று. 'கூடக் கிடந்தவருக்குத் தான் இராக்காச்சல் தெரியும்' என்ற ஊர் வழக்குப் போல அவர் ஏதோவொரு பிரச்சனை தோன்றக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அங்ஙனம் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார் என்பதைப் பலராலும் நீண்டகாலமாக உணர முடிந்திருக்கவில்லை. அவர் ஏகாதிபத்திய நலன்களைப் பேண விரும்புகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளானார். 

ஜி.ஜி. பொன்னம்பலத்தின் ஆக்ரோஷமான 50 க்கு 50 கோரிக்கையையும் நியாயமற்றது என்று தட்டிக் கழித்தவர்களுக்கு நாட்டில் உள்ள பிரச்சனை பற்றிச் சரியான 'படப்பிடிப்பபு' இருந்திருக்கவில்லை என்பது பின்னால் வெளிச்சமாயிற்று. அக்கோரிக்கையின் பின்னாலிருந்த 'தீர்க்கதரிசனம்' இன்றும் பலருக்கும் விளங்குவதாக இல்லை. 1982 இல் கனடாவில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிப் பேசப்பட்டபோது, பன்மைத்துவ கலாசாரம் கொண்ட நாடொன்றில் சமபலப் பிரதிநிதித்துவமே பொருத்தமாக இருக்கும் என்று அங்குள்ள அரசியலமைப்புச் சட்ட அறிஞர்கள் ஆலோசித்துள்ளார்கள். அதனையே 1946 இல் இலங்கையில் சொன்னபோது அது எப்படி விளங்கியிருக்க முடியும் என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

பின்னர், கூட்டாட்சி முறைமையை தமிழரசுக் கட்சி முன்வைத்தபோது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிவினைவாதியாகப் பார்க்கப்பட்டார். அதன் பின்னர் நடந்தவற்றால் பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களும் சர்வதேச சமூகத்தின் வாசல் கதவு வரை கொண்டுவந்து போடப்பட்டுவிட்டன.

ஆனாலும் உண்மையிலேயே நாட்டிலுள்ள பிரச்சனை எத்தகையது? அதனது மூலக்கூறுகள் யாவை என்று ஆராய முற்பட்டவர்களுக்கு அதற்கான உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுதல் என்பது  ஆட்சியதிகாரத்தைக் கையில் பெற்றவர்களின் தேசாபிமானச் செயற்பாட்டு அலைகளில் அடிபட்டுப் போயிற்று.  

இல்லாத இனப்பிரச்சனையும் நோயறியா மருத்துவமும்!

'இனப்பிரச்சனை' என்ற பதப் பிரயோகம் 1950 களில் தான் இங்கு பாவனைக்கு வந்திருக்க வேண்டும் என்பது எனது கணிப்பாகும். இப்போது எல்லோருமே பொதுவாக உச்சரிக்கும் வார்த்தை 'இனப்பிரச்சனை' என்பதுதான். இந்த விடயத்தில் எனக்கும் மறுமுனையில் இருப்பவர்களுக்கும் இடையில் ஓர் ஒற்றுமையுண்டு. இந்த நாட்டில் இருப்பது 'இனப்பிரச்சனை அல்ல' என்பதிலேயே. இந்த ஒற்றுமையை ஆச்சரியத்துக்குரியதாக வாசகர்கள் பார்க்கலாம்.

1993 இல் தமிழில் வெளியான எனது கட்டுரைத் தொகுப்பொன்றில் இது விடயம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, நாட்டில் உள்ளது இனப்பிரச்சனையல்ல என்றொரு வாதத்தை முன்வைத்திருந்தேன். சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோரும் புதிய அரசியலமைப்பு யோசனைகளை வரைவதில் கூடுதலாக ஈடுபட்டோரும் இந்த வாதத்தை நிறையவே பயன்படுத்தி தமது யோசனைகளை முன்வைத்தனர்.

உண்மையில், நோயின் ஆரம்பம் 1948 அல்ல என்பதைப் பல ஆய்வாளர்கள் ஆவணச் சான்றுகளுடன் ஏற்கனவே விளக்கியுள்ளனர். எனவே அதுபற்றி இப்போது மீட்டுவதனால் பிரயோசனமில்லை. ஆனால் இன்றும் பல்வேறு மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை முறைகள் பற்றிச் 'சீட்டெழுதிக்' கொடுக்கையில், நோய் பற்றிய மாயையில் இருக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

'நோய்நாடி, நோய் முதல்நாடி' சிகிக்சைக்கு முற்படுகின்றார்களா என்பதைக் கவனிக்காவிட்டால் சிகிச்சையால் எவ்வித பிரயோசனமும் இருக்கப் போவதில்லை.

நாட்டில் இருந்தது பயங்கரவாதப் பிரச்சனைதான் என்று காட்டிக் காலங்கடத்தியவர்கள் இன்னொரு பிரச்சனையைத் தேடவேண்டிய அவசியத்தில் தற்போது உள்ளார்கள். ஜனாதிபதியின் அண்மைக்கால உரைகளைப் பார்க்கையில் புலம்பெயர் தமிழர்கள் தான் பிரச்சனை என்று காட்ட முற்படுவதாகத் தெரிகின்றது.

ஆட்சியில் இருந்தவர்களும் சரி இருப்பவர்களும் சரி நாட்டில் பிரச்சனை இருக்கின்றது என்கிறார்கள். ஆனால் அது என்ன என்பதை அடையாளம் காண்பதில் தொடர்ச்சியாகத் 'தவறிழைத்து' வருகின்றார்கள். இங்ஙனம் நான் கூறுவது பெரிய கண்டுபிடிப்பு விடயமல்ல. பிரச்சனையின் மோசமான உள்ளார்ந்த இயல்பினைச் (inherent nature) சுட்டிக் காட்டவே தவறு பற்றிக் கூறுகின்றேன்.

நோய்முதல் என்பது 1948க்கு முந்தியது. நோய் என்பது அதற்குப் பிந்தியது என்பதே எனது வாதமாகும். தேசத்தை உருவாக்கல், நாட்டைக் கட்டியெழுப்புதல் என்பதெல்லாம் நோய்க்கு முந்திய விடயங்கள். நோய் ஏற்பட்டதன் பின்னர் இவற்றைப் பற்றிப் பேசுவதால் பிரயோசனமில்லை. ஏனென்றால் நோயின் தாக்கத்தால் அவை நிச்சயம் பாதிக்கப்பட்வையாகவே இருக்கும். உதாரணமாக, எங்களில் எத்தனை பேருக்குத் தேசியகீதம் தெரிந்திருக்கின்றது? சிகிச்சை தான் அவசியம். ஆனால் நோய் தெரியாமலே சிகிச்சையா?

நோய்முதல் என்பது இலங்கை அரசு என்பது எப்படி உருப்பெற்றது என்பதோடு சம்பந்தப்பட்டது. சுதந்திரம், வாக்குரிமை, ஜனநாயகம் என்பவற்றோடு தேசம் உருவாகிவிட்டதாகக் கொள்ளப்பட்டுவிட்டது. அங்ஙனம் இல்லை என்று காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் ஆரம்பத்திலேயே தோற்றுப் போயின. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரிவுக் கவுன்சில் வழங்கிய தீர்ப்பாகும். ஒரு புதிய நாடு தனது பிரசைகள் யார் என்பது தொடர்பில் தானே வரையறை செய்ய முற்படுகையில் அதைத் தடுப்பதற்கு நியாயமில்லை என்ற பிரபுக்கள் கூறிவிட்டார்கள். நோய் அறியப்படாமையின் ஆரம்பம் இது. பின்னர் இது தொடர்கதைதான்.

ஆட்சியதிகாரம் வாக்குகளினால் மட்டும் பெறுப்படுகின்ற ஜனநாயக முறைமையில், எண்ணிக்கைதான் ஆட்சி செய்ய முற்படுகின்றது. ஆனால், அந்த எண்ணிக்கையே உள்ளக அடக்குமுறைக்கான (internal oppression) ஆயுதமாகப் பாவிக்கப்படுகின்றமைக்கு எதிரான பாதுகாப்புக்கள் இல்லாதபோது என்ன நடக்கும் என்பதே சுதந்திரத்துக்குப் பிந்திய நாட்டின் வரலாறாயிற்று. நாம் மனம்போன போக்கில் என்னதான் பெயரிட முனைந்தாலும் நாட்டில் நடப்பது இதுவேதான்.

இத்தகைய பாதுகாப்புக்களைத் தேடித்தான் காலத்துக்குக் காலம் பேச்சுவார்த்தைகள் அரங்கேற்றம் கண்டன. ஆனால் ஆடல்கள் வெற்றியளிக்கவில்லை. ஆயுதமும் வெற்றியளிக்கவில்லை. அதற்காக, பாதுகாப்புக்கான தேவைகள் அற்றுப் போய்விட்டன என்றாகாது.

இந்தப் பாதுகாப்புக்கள் பற்றிய பேச்சானது ஏன் இனப்பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்?  கோட்பாட்டு ரீதியில் இதனை முற்றிலும் வேறாகவே நான் பார்க்க விரும்புகின்றேன்.

என்னுடைய வாதத்தில், இவ்விடயம் முற்றிலுமே ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். அதாவது, பெரும்பான்மை வாக்குகளின் எண்ணிக்கைப் பலத்தில் ஆட்சியதிகாரம் தீர்மானிக்கப்படுகையில், பெரும்பான்மை (வாக்குப்பல) ஆட்சியானது பெரும்பான்மையின ஆட்சியாக மாறுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்புக்கள் இல்லாமல் போதல் ஜனநாயக ஆட்சி என்ற வரைவிலக்கணத்துக்கள் வரமுடியாது என்பதே இந்த வாதமாகும். பெரும்பான்மை ஆட்சி (majority rule) வேறு. பெரும்பான்மையின ஆட்சி (majoritarian rule) வேறு. இலங்கையில் இருப்பது இரண்டாவது. இது ஜனநாயகம் சார்ந்த பிரச்சனையா அன்றேல் இனப்பிரச்சனையா?

இது தான் மருத்துவர்கள் தவறிழைக்கும் இடமென்று நான் நினைக்கின்றேன். இலங்கை பல்லினத் தன்மை கொண்ட நாடென்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் அந்தப் பன்மைத்துவம் அரசில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்பதில் பலர் முரண்டுபிடிக்கின்றார்கள். சாதாரண சிங்கள மக்கள் இதையெல்லாம் விளங்கிக்கொண்டு முரண்டு பிடிக்கின்றார்கள் என்று நினைப்பது கற்பனையே.

ஓர் அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது எப்போதுமே ஒரு சிலரால் தீர்மானிக்கப்படுகின்றது. ஜனநாயகம் என்ற போர்வையில், அது வாக்குப் பலத்தால் செயற்படுத்தப்படுகின்றது. வாக்குகளை எப்படிப் பெறலாம் என்ற சிந்தனையில் பல்வேறு கண்டுபிடிப்புக்களையும் அந்த ஒரு சிலரே செய்துகொள்கின்றார்கள். பாட நூலாகவும், மத போதனையாகவும் வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும் ஏன் புதிதாக முளைக்கும் கடவுள்களின் வாயிலாகவும் கூட கண்டுபிடிப்புக்கள் வெளிக்கொணரப்படலாம். ஆக, இதனை இனப்பிரச்சனை என்று எளிதில் பெயர் சூட்டுதல் தவறான 'நோய்நாடலாகும்'. 

இதிலிருந்து வெளிவருதல் இரு தரப்பாருக்கும் நன்மை பயப்பதாகும். அந்தளவில், சந்திரிகா அம்மையாரின் கருத்து வரவேற்கப்படக் கூடியதே. மக்கள் தனித்தனியாக இருக்கையில் ஏற்படாத உணர்வுகள் கும்பலாகக் கூடுகையில் ஏற்படும். இதனை mob mentality என்று கூறுவார்கள். இதனால்தான் பிளேட்டோ ஜனநாயக ஆட்சி முறைமையை 'கும்பலின் ஆட்சி' (mob rule) என்று வர்ணித்தான். எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்று பாருங்கள்.

இலங்கையின் பன்மைத்துவத் தன்மை என்பது அரசாங்கத்தை அமைப்பதற்கான சாட்டாகப் பயன்படுத்தப்படுகின்றதே தவிர அரசை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதனால் அரசின் மீளுருவாக்கம் (reconstructing the State) என்பதே அவசியம் என்று எங்களில் சிலர் தொடர்ச்சியாக வாதிட்டு வருகின்றோம். இது விடுதலைப் புலிகள் காலத்திற்கு முன்பும் சொல்லப்பட்டது. இப்போதும் சொல்லப்படுகின்றது.

அரசையும் அரசாங்கத்தையும் ஒன்றென்றே கருதிக் கொள்பவர்களும் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கைப் பலம் என்று மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களும் அந்தப் பலத்தின் ஏக விருப்பு ஒற்றையாட்சியும் சிங்கள-பௌத்த அடையாளமுமே என்று சாதிப்பவர்களும் இனவாதிகள் என்று பார்க்கப்படத் தேவையில்லை. ஜனநாயக மறுப்பாளிகள் என்றே கொள்ளப்பட வேண்டும்.

ஆக, வெறுமனே அரசியலமைப்பில் ஜனநாயக குடியரசு என்று குறிப்பிடுவது மட்டும் போதாது. அரசாங்கத்தின் மூன்று துறைகளும், அதாவது பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றுமே அடிப்படை ஜனநாயக அம்சங்களை மீறாமல் செயற்படும் விதத்தில் அரசியலமைப்பில் பாதுகாப்புக்கள் இருக்க வேண்டும்.

உண்மையில், நீதித்துறை விரும்பியிருந்தால் இலங்கையின் பன்மைத்துவத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையிலான அரசுருவாக்கத்துக்கு உதவியிருக்க முடியும். ஆனால், அது மறுவாறாகவே செயற்பட்டு வந்துள்ளது. அதன் விளைவாகவே பெரும்பான்மையின வாதம் நிலைபேறாகிவிட்டது. 

இன்றைய பூகோள ஒழுங்கில், ஜனநாயக மறுப்பு அரசுகளைக் கையாள்வதற்கெனப் பல்வேறு வழிவகைகளை சர்வதேச சமூகம் முன்வைக்கின்றது. இதன் பின்னைய வருகைதான் R2P என்று அறியப்படுவதான 'பாதுகாப்பதற்கான அரசுகளின் பொறுப்புடைமை' என்பதாகும். இது ஒரு போர்வையின் பெயர் மட்டுமே. இதன் உள்ளீடு என்ன என்பதைச் சர்வதேச சமூகம் அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தீர்மானித்துக் கொள்ள முடியும்.

குறிப்பாகப் பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்டள்ள அரசொன்றின் இந்தப் பொறுப்புடைமை அவ்வரசுக்குள் உள்ள சிறுபான்மையினங்களின் பாதுகாப்புடன் எப்போதுமே சம்பந்தப்பட்டிருக்கும் என்பது கூறித் தெரியவேண்டியதில்லை.

ஆகவே, இனப்பிரச்சனை என்று பார்ப்பதை விடுத்து ஜனநாயக மறுப்பின் விளைவுகள் என்று பார்ப்போமாயின் அரசின் பல்வேறு முகங்கள் இலகுவில் அம்பலத்துக்கு வரும். அரசொன்றுக்குள் உள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையான இனங்கள் சர்வதேசச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் மிக இலகுவாகக் கொண்டு வரப்பட்டுவிடும். அரசியல் தீர்வின் அவசியம் பற்றி சர்வதேச சமூகம் பேசுவதும் நியாயமாகிவிடும். மூன்றாம் தரப்பின் பிரசன்னத்துக்கான தேவையும் விளங்கிக் கொள்ளப்படும். 

எனவே பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதபோது அல்லது தொடர்ந்து இழுபட்டுக்கொண்டு போகும்போது அடுத்த கட்டமென்ன என்பது சம்பந்தப்பட்டவர்களின் கைகளில் மட்டுமே தங்கியிருக்கும் என்பது கட்டாயமில்லை. இதைத்தான் ஜெனீவாத் தீர்மானமும் சுட்டி நிற்கின்றது என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.

4/22/2012 1:15:57 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்