Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்
சி.அ.யோதிலிங்கம்

 

மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப் பின்னால் நிற்கும் இந்திய-அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற பெயரிலும் சமஸ்டியும் இல்லாத, வட-கிழக்கு இணைப்புமில்லாத மாகாண சபைகளுக்கு அதிகாரம் இருப்பது போன்ற தோற்றம் தெரிகின்ற ஒன்றைக் கொண்டுவர இருக்கின்றனர். சம்பந்தன் தலைமையும் இதற்கான பூரண சம்மதத்தினை தெரிவித்துள்ளது. சம்பந்தன் தலைமையின் இலக்கு மாகாணசபைகளைப் பலப்படுத்துவதுதான். அதற்கான வழிவரைபடம் இணக்க அரசியல்தான்.

சம்பந்தன் தலைமையின் இலக்கும் வழிவரைபடமும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றதல்ல. இதனை இப்பத்தியாளர் முன்னைய கட்டுரைகளில் விரிவாக தெளிவுபடுத்தியிருக்கின்றார். சம்பந்தன் தலைமையின் இலக்கும், வழிவரைபடமும் தவறாகும் என்றால் தமிழ் மக்களுக்கான இலக்கும், வழிவரைபடமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஆழமான உரையாடல்கள் அவசியமாகின்றது. இப்பத்தியாளர் இது பற்றி தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கின்றார். இக்கருத்துக்கள் முடிந்த முடிவுகளல்ல. இவை அனைத்தும் பரிசோதனைகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உரியவை.

முதலில் தமிழ் மக்களுக்கான அரசியல் இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். இதற்கு இனப்பிரச்சினை என்றால் என்ன என்பது பற்றி போதிய தெளிவு அவசியமானதாகும். இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதே! அதாவது தேசம் அல்லது தேசிய இனத்தின் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதே! இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என்ற சிங்கள மக்களின் ஏகோபித்த கருத்து நிலையை நடைமுறைப்படுத்துவதற்காகவே அவை அழிக்கப்படுகின்றன. ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதனூடாக சிங்கள மக்களிடம் மட்டும் உள்ள அரசியல் அதிகாரமும் இவ்வழிப்புக்கு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இவ்வழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்களை ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் இறைமையும் அதன் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான அரசஅதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். இக்கட்டமைப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பாக இருத்தல் வேண்டும்.

அரசியல் தீர்விற்கு அரசியல்யாப்புச் சட்டவடிவம் கொடுக்கின்ற போது அதில் முதலாவதாக தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் பேணக்கூடிய வகையில் வட-கிழக்கு இணைந்த அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும். இதில் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ள முடியாது. இதில் முஸ்லிம் மக்களின் நிலை என்ன என்பது தொடர்பாக அவர்களுடன் பேசித் தீர்க்கலாம். முஸ்லிம்கள் சம்மதிக்கவில்லையாயின் வடகிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது இணைத்து இவ்வதிகார அலகினை உருவாக்குதல் வேண்டும். முஸ்லிம்கள் இணங்கவில்லை என்பதற்காக இணைப்பைக் கைவிடுவதற்கு அரசியல் தலைமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. துரதிஸ்டவசமாக இந்த மாற்று யோசனை பற்றிய உரையாடலுக்குக் கூட சம்பந்தன் தலைமை இன்னமும் தயாராகவில்லை. அவர்கள் எப்படியாவது வடகிழக்கு பிரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர்.

இது விடயத்தில் 'தமிழ் பேசும் மக்கள்' என்ற செல்லரித்துப் போன கருத்து நிலை துளி கூட உதவப் போவதில்லை. இக்கருத்து நிலை முஸ்லிம் அரசியலைக் கொச்சைப்படுத்துகின்றது. முஸ்லிம்கள் இக் கருத்துநிலைக்குள் வருவதற்கு தயாராக இல்லை என்பதை வரலாற்று ரீதியாகவே வெளிப்படுத்தியுள்ளனர். மாறாக மதத்தை அடிப்படையாகக் கொண்ட தனியான இனமாகவே தங்களை வெளிப்படுத்த முனைகின்றனர். மறுபக்கத்தில் இக் கருத்துநிலை தமிழ் அரசியலுக்கு கைவிலங்காகி தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களைக் கட்டிப்போடுகின்றது. தமிழ் மக்களுக்குப் பொறுப்பையும் முஸ்லிம் மக்களுக்கு பொறுப்பின்மையையும் விதிக்கின்றது.

இரண்டாவது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சட்டவரைபில் தெளிவாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் இதற்கு பிறப்பாலேயே உரித்துடையவர்கள் என்பதற்கப்பால் ஐம்பது வருடங்கள் பின்தங்கி நிற்கின்ற இடைவெளியை நிரப்புவதற்கும் இவ்வதிகாரங்கள் தேவையானதாகும்.

மூன்றாவது மத்திய அரசில் ஒரு தேசிய அரசாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். மத்திய அரசின் அதிகாரக் கட்டமைப்பு பன்மைத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் போதே இது சாத்தியமாக இருக்கும். மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக் கொண்டு எந்த அதிகாரப்பகிர்வை வழங்கினாலும் அவை ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்

நான்காவது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு. தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் மக்களின் அனுமதியில்லாமல் சட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க முடியாத பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குத் தேவையான விடங்களைக் கொண்டுவருவதற்கும் பொறிமுறைகள் இருத்தல் வேண்டும்.

மேலே கூறப்பட்ட கோட்பாட்டு விடயங்களும், அரசியல் யாப்பு ஏற்பாடுகளும் இப்பத்தியாளரினால் முன்னரும் கூறப்பட்டவைதான் எனினும் கட்டுரையின் தேவை கருதி மீண்டும் சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றது.

இனி வழிவரைபடத்திற்கு வருவோம். இதில் முதலாவது அம்சம் மேற்கூறிய இலக்கினை அடைவதற்கான தேசிய அரசியல் இயக்கத்தினை உருவாக்குவதாகும். இன்று தமிழ் மக்களுக்குத் தேவையானது தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சிகளல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக்கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கமே. இது மக்கள் அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் இணைத்ததாக ஆனால் மக்கள் அமைப்புக்களின் மேலாதிக்கம் கொண்டதாக இருத்தல் வேண்டும். தேர்தல் செயற்பாடுகள் இதன் ஒரு பணியாக மட்டும் இருக்கலாம்.

ஒரு அரசியல் இயக்கம் வெற்றியடைவதற்கு இலக்கு, கொள்கைகள், வேலைத்திட்டம், அமைப்புப்பொறிமுறை, செயற்பாட்டாளர்கள், அர்ப்பணிப்புள்ள தலைமை என்பன அவசியமாகும். தமிழ் மக்கள் பேரவையை இவ்வாறான அரசியல் இயக்கத்திற்கு ஒரு மாதிரி எனலாம். ஆனால் அதனிடம் வேலைத்திட்டங்களோ, அமைப்புப் பொறிமுறையோ, செயற்பாட்டாளர்களோ, அர்ப்பணிப்புள்ள தலைமையோ போதியளவு இல்லாததினால் முன்னோக்கி செல்ல முடியவில்லை. வெறுமனவே இலக்கும், கொள்கைகளும் முன்நோக்கிய பயணத்தை துரிதமாக்காது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடமும் இக்குறைபாடுகள் உள்ளன. அது இன்னமும் குழு வடிவத்தைக் கூட பெறவில்லை. கட்சி அந்தஸ்தை அடைவதும், அதற்கப்பால் தேசிய அரசியல் இயக்கத்தை நோக்கி முன்னேறுவதும் இப்போதைக்கு சாத்தியமில்லை.

இரண்டாவது புவிசார் அரசியலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக மாறுவதாகும். இலங்கைத் தீவு உலக வல்லரசுகளை பொறுத்தவரை ஒரு கேந்திர இடத்திலும், இந்தியாவைப் பொறுத்தவரை வாசல்படியிலும் இருப்பதால் இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு புவிசார் அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. புலிகள் அழிக்கப்பட்டதற்கும் மகிந்தர் வீழ்ச்சியடைந்ததற்கும் புவிசார் அரசியல்தான் காரணம். தமிழ் மக்களும் இந்த புவிசார் அரசியலில் பங்காளிகளாக மாறவேண்டும். புலிகள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு வலுவான பங்கு இருந்தது. தற்போது இந்தியாவும், அமெரிக்காவும் அந்தப் பங்கினை பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தமிழ் மக்களை மைதானத்திற்கு வெளியே துரத்தி விட்டுள்ளனர். தமிழர் தாயகமும், தமிழகமும் கேந்திர இடத்தில் இருப்பதால் தமிழ் மக்களின் கேந்திரபலம் அதிகமானதாகும். துரதிஸ்டவசமாக இப் புவிசார் அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் ஒழுங்காகப் பேசப்படவில்லை, இலங்கைத் தீவில் சீனாவின் ஆதிக்கம் வளர வளர புவிசார் அரசியலில் தமிழ் மக்களின் முக்கியத்துவமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

மூன்றாவது சமூகமாற்ற அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகும். நண்பர் நிலாந்தன் அடிக்கடி கூறுவது போல தமிழ்த்தேசியம் சமூகமாற்றத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சமூகமாற்றத்தை உள்ளடக்காத தேசியம் ஒரு வலுவான தேசியமாக இருக்கமாட்டாது. தேசியம் என்பது அடிப்படையில் மக்கள் திரட்சியை உள்ளடக்கியது. மக்கள் திரட்சிக்கு தடையாக இருக்கின்ற விடயங்கள் எல்லாம் அகற்றப்படும் போதே தேசியம் வலுவானதாக மாற்றப்படும்.

தமிழ் மக்களின் அகமுரண்பாடுகளாக இருக்கின்ற சாதி, மதம், பிரதேசம், பால் என்பவை மக்கள் திரட்சிக்கு தடையாக உள்ளன. இவை அகற்றப்படும் போதே தமிழ்த் தேசியம் வலுவானதாக மாறும். இவற்றை நிலவிரிப்புக்குள் தள்ளிவிட்டு இவையெல்லாம் இல்லையெனக் கூறிவிடமுடியாது.

நான்காவது அடிப்படைச் சக்திகளையும், சேமிப்புச் சக்திகளையும் நட்புச் சக்திகளையும் தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பின்னால் அணி திரட்டுவதாகும். தமிழ் மக்கள் ஒரு சிறிய தேசிய இனம். அது தனித்து நின்று ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முகம் கொடுப்பது கடினம். மேற்கூறிய சக்திகளை இணைத்து முகம் கொடுக்கும் போதே வெற்றிகளை அடையமுடியும். இங்கு அடிப்படைச் சக்திகள் எனப்படுவோர் தாயக மக்களும் அதன் நீட்சியாக உள்ள புலம் பெயர் மக்களுமாவார். சேமிப்பு சக்திகள் மலையக மக்கள், தமிழகமக்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழி தமிழ் மக்களாவர். நட்புச் சக்திகள் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர். இச்சக்திகளை இணைப்பதற்கு நிலம், புலம், தமிழகம் என்பவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். 

ஐந்தாவது மக்கள் பங்கேற்பு அரசியலை தொடங்கி வைப்பதாகும். துரதிஸ்டவசமாக தமிழ் அரசியல் வரலாற்றில் மக்கள் பங்கேற்பு அரசியல் தோல்வி அடைந்துள்ளது. அரசியலில் மக்கள் பங்கேற்பதோ அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதோ இடம்பெறவில்லை. மாறாக தொண்டர்களும் வீரர்களுமே பங்கேற்றனர். ஜனநாயக அரசியல் தளத்தினூடாக எமது இலக்கினை அடைவதற்கு இம் மக்கள் பங்கேற்பு அரசியல் மிகமிக அவசியமானதாகும். அரசியல் தலைமைகளின் குத்துக்கரணங்களை தடுத்து நிறுத்துவதற்கும் மக்கள் பங்கேற்பு மிகமிக அவசியமானதாகும்.

ஆறாவது சர்வதேச சமூகத்தை எமக்கு சார்பாக திருப்புவதாகும். தமிழ் மக்களின் அரசியல் வெற்றியை சர்வதேச அரசியலே தீர்மானிக்கக்கூடியதாக இருப்பதால் இது மிக மிக அவசியமானதாகும். தமிழ் மக்களின் இதுவரை கால போராட்டம் சர்வதேசக் கவனிப்பு ஒன்றைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இக் கவனிப்பை செயற்பாட்டுக்கு கொண்டு வருவதே மீதியாக உள்ளது. இது விடயத்தில் வல்லரசுகள் எமக்கு சார்பாக தற்போது இல்லாவிட்டாலும் சர்வதேச சிவில் சமூகத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலம் வல்லரசுகளின் எமக்கு எதிரான செயற்பாடுகளையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

இதைவிட அரசியல் தீர்வு வரும் வரை ஆக்கிரமிப்பிலிருந்து தாயகத்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. சர்வதேசப் பாதகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் மூலமே இதனைச் சாத்தியமாக்க முடியும். சர்வதேச சமூகத்தின் உதவி இதற்கு மிகமிகத் தேவையானதாகும்.

ஏழாவது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு உத்தியோகபூர்வமற்ற அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவதாகும். தமிழ் மக்களை அரசியல் விழிப்புணர்வொடு வைத்திருப்பதற்கும், போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள், போராளிகளின் நலன்களைப் பேணுவதற்கும், தமிழ் மக்களின் அடிப்படைப் பொருளாதாரத்தை தக்கவைப்பதற்கும், நிலம், மொழி, கலாச்சாரம் என்பவற்றை பாதுகாப்பதற்கும் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் தேசியத்தை ஒரு வாழ்வு முறையாக மாற்றுவதற்கும் இவ்வதிகாரக் கட்டமைப்பு அவசியமானதாகும்.

இவ் வழிவரைபடத்திலுள்ள ஏழு அம்சங்களும் போதுமானவை எனக் கூறமுடியாது. மேலும் மேலும் தேவையானவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ் மக்களின் இலக்கிற்கான கோட்பாட்டு வடிவமும் அரசியல் யாப்பு வடிவமும் மேலும் செம்மைப்படுத்தப்படல் வேண்டும்.

மொத்தத்தில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு பணிகள் நிறையவே காத்திருக்கின்றன.

8/26/2017 10:01:49 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்