Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இடைக்கால அறிக்கை இருக்கக்கூடிய இடம் குப்பைக்கூடையே

இடைக்கால அறிக்கை இருக்கக்கூடிய இடம் குப்பைக்கூடையே
சி.அ.யோதிலிங்கம்

 

மைத்திரி - ரணில் - சம்பந்தன் கூட்டு அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்துவிட்டது. டொனமூர் அரசியல் யாப்பு வெளிவந்தபோது எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாமல் இருந்ததோ அதேபோல இவ் இடைக்கால அறிக்கையும் சமூகம் என்ற வகையில் எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. சொந்த சுயாதீனமில்லாத சம்பந்தன் தலைமையும் ரவூப் ஹக்கீம் தலைமையும் இந்தியா, அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு இதனை ஆதரிக்க முற்பட்டாலும் சமூகமட்டத்திலிருந்து பலத்த எதிர்ப்பு வந்திருக்கின்றது.

விக்னேஸ்வரனும் அவரை இணை தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையும் இடைக்கால அறிக்கையை நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பனவும் இடைக்கால அறிக்கையை நிராகரித்துள்ளன. தமிழ் சிவில் சமூக அமையம் தமது எதிர்ப்பை ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் தரப்பில் அமைச்சர்கள் மௌனமாக இருந்தாலும் அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். துரதிஸ்டவசமாக மலையகத் தரப்பிடமிருந்து ஆக்கபூர்வமான எந்தக் கருத்தும் வரவில்லை.

எதிர்பார்த்தது போலவே மகிந்தர் தரப்பு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மகாநாயக்கர்களும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்கள் பல மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. இது வரலாற்று ரீதியாக நடைபெறுகின்ற ஒன்றுதான். 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் 1988 இல் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இவ்வாறு எதிர்ப்புக்கள் வந்திருந்தன. தமிழ் மக்களுக்கு நாட்டை விற்றுவிட்டார்கள் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளும், மாகாண சபைகளும் எந்த எகையிலும் தமிழ் மக்களுக்கு பயனுடையதாக இருக்கவில்லை. இந்த தடவையும் அதே மாதிரியான எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்த எதிர்ப்பு அரசியல் மகிந்த தரப்பின் இருப்புக்கும் அவசியமாக இருப்பதால் இதனை பேரெழுச்சியாக்கவே முயற்சிப்பர். இந்த எதிர்ப்புக்களை மீறி செயற்படும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் கூறிவிட முடியாது.

இலங்கைத்தீவின் முக்கியமான பிரச்சனை இன ஒடுக்குமுறையே. தமிழர்கள் இதற்கெதிராக போராட்டத்தை முன்னெடுத்திருந்தாலும் ஏனைய இனப்பிரிவுகளான முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் ஒடுக்கு முறைக்குட்பட்டவர்களாகவே உள்ளனர். இதற்கு பிரதான காரணம் இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள மக்கள் கருதுவதேயாகும். இக்கருத்து நிலை வரலாறு, சமயம், ஐதீகம் மூலம் கட்டியெழுப்பப்பட்டது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பு இந்த ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றது. அரச அதிகாரக் கட்டமைப்பின் அனைத்துப் பிரிவுகளும் இதற்கேற்பவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதனால் மானசீகமாக சிங்கள சமூகம் தவிர்ந்த தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் அரச அதிகாரக் கட்டமைப்பிற்கு வெளியேதான் உள்ளனர். இலங்கைத்தீவில் வாழும் அனைத்து மக்களையும் இணைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைமை என்பது இன்னமும் எழுச்சியடையவேயில்லை. ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியான ஒரு அரசியல் தலைமைகளே உருவாகியுள்ளன. அனைவராலும் இணக்கக்கூடிய ஆற்றல் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த போதும் அவையும் தேர்தல் அரசியல் காரணமாக பெருந்தேசியவாதத்திற்குள் மூழ்கிப்போனதால் இம் முயற்சியில் படுதோல்வியடைந்தன.

இந் நிலையில் அனைத்து இனங்களையும் அவர்களுடைய அடையாளங்களுடன் இணைப்பதன் மூலமே பன்மைத்துவ இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு முதலில் இலங்கைத்தீவு அனைத்து மக்களுக்கும் உரியது என்ற அரசியல் கலாச்சாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும். சிங்கள பௌத்த கருத்து நிலை மேலாதிக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கருவியாகிய ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றி எல்லா இனங்களுக்கும் தமது அடையாளங்களுடன் பங்கு பற்றக்கூடிய பன்மைத்துவ அரச அதிகாரக் கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும்.

மேற்கூறிய இலக்கில் ஒரு சிறிய தூரத்தையாவது இடைக்கால அறிக்கை அடைந்திருக்கின்றதா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் எந்தவித மாற்றமும் உருவாக்கப்படவில்லை. இதுவிடயத்தில் சொற்பத விளையாட்டு மட்டும் இடம்பெற்றிருக்கின்றது. சிங்களத்தில் 'ஏக்கிய இராட்சிய' எனக் கூறப்பட்ட அதேவேளை தமிழில் ஒருமித்த நாடு எனக் கூறப்பட்டுள்ளது. 'ஏக்கிய இராச்சியத்தின்’ தமிழ் மொழிபெயர்ப்பு 'ஒருமித்த நாடு' என புதுக்கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. குறைந்த பட்சம் 'எக்ஸத்' சிங்களச் சொற்பதத்தைக்கூட ஏற்பதற்கு தயாராக இல்லை. இது தமிழ் மக்களையும் ஏமாற்றி சிங்கள மக்களையும் ஏமாற்றும் முயற்சி. நீண்டகால வரலாறு கொண்ட இனப்பிரச்சனைக்கு இவ்வாறான குறுக்குவழிகள் எந்தவித பலனையும் கொண்டு வர மாட்டாது. சம்பந்தன் 'ஒருமித்தநாடு' என்பதற்கு சிங்களத்தரப்பு இணங்கிக்கொண்டதே பெரிய விடயம் எனக் கூற, ரணிலோ 'ஒற்றையாட்சி' என்பதற்கு தமிழ்த்தரப்பு இணங்கிக்கொண்டது பெரிய விடயம் எனக் கூறுகின்றார். சிங்கள மக்களின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாவிட்டால் இந்தவிதமான குறுக்குவழிகளையே நாட வேண்டியிருக்கும். இந்த இடத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் இதுதான் என முகத்திற்கு நேராக மகாநாயக்கர்களிடம் கூறிய விக்னேஸ்வரனை பாராட்டியே ஆக வேண்டும்.

இதே தவறு பௌத்த மதம் முதன்மை மதம் என்பதிலும் இடம்பெற்றுள்ளது. பௌத்த மதத்திற்குரிய முதன்மை மதத்தை மாற்றுவது கடினமாக இருந்தால் எவ்வாறு சிங்கள மொழி மட்டும் அரச கரும மொழி என்பது சிங்களமும் தமிழும் என மாற்றப்பட்டது போல பௌத்தமும், இந்துவும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் முதன்மை மதங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தங்களின் அபிலாசைகளைப் பற்றி நீண்ட காலமாகவே வெளிப்படுத்தி வருகின்றனர். இனப்பிரச்சனை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக, தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதாக இருப்பதால் இனப்பிரச்சனைக்கான தீர்வு இவ்வழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்கவேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில் கோட்பாட்டு ரீதியாக தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி என்பன ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இடைக்கால அறிக்கை இருக்கக்கூடிய இடம் குப்பைக்கூடையே

இக் கோட்பாடுகளுக்கு யாப்பு வடிவம் கொடுக்கப்படுகின்ற போது கூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளத்தை பேணக்கூடிய வட-கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணயத்தைப் பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள், மத்தியில் ஒரு தேசமாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு, வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன இருக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர்.

ஆனால் இவை எதுவுமே இடைக்கால அறிக்கையில் இல்லை. வடக்கு-கிழக்கு இணைக்கப்படவில்லை. இது விடயத்தில் தமிழ்த்தரப்பின் அபிலாசை பின் இணைப்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பு சம்மதிக்கவில்லையென்றால் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத்தொடர்ச்சியற்ற வகையிலாவது இணைத்தல் என்ற யோசனையை சம்பந்தன் தலைமையும் முன்வைக்கவில்லை. உண்மையில் வழிகாட்டல் குழுவில் இடம் பெற்ற விவாதத்தின்போது வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றி சம்பந்தனோ, சுமந்திரனோ எந்தவித கருத்தையும் முன்வைக்கவில்லை. தேர்தல் அரசியலுக்காக கடைசி நேரத்தில் மட்டும் இதனை பின் இணைப்பிற்கு சேர்த்துள்ளனர். வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஸ்டி பற்றி எதுவும் பேசுவதில்லை என அரசாங்கத்துடனும் இந்திய-அமெரிக்க சக்திகளுடனும் அவர்கள் இணக்கம் கண்டிருந்தனர்.

வடக்கு-கிழக்கு பிரிப்பால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களே. வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டால் அவர்களுக்கான நிவாரணம் என்ன என்பது பற்றி இடைக்கால அறிக்கை எதுவுமே கூறவில்லை. பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் கிழக்குத் தமிழ் மக்கள் எப்போதும் அதிகாரமற்ற தரப்பாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் உண்டு.

இரண்டாவது சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள். இலங்கை அரசு ஒற்றையாட்சி அரசாக இருக்கும்போது மாகாணங்களுக்கு சுயநிர்ணயமுடைய அதிகாரங்கள் ஒருபோதும் இருக்கமாட்டாது. அது ஒரு நிர்வாகப் பரவலாக்கலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதிகாரப்பகிர்வாக இருக்க முடியாது. உண்மையில் இது விடயத்தில் மத்திய அரசு தலையிடாத சுயாதீனம் இருக்க வேண்டும். மாகாணத்திற்கென உருவாக்கப்படுகின்ற பகிரங்க சேவை ஆணைக்குழுவைக்கூட மத்திய அரசின் நிறுவனமான அரசியலமைப்புப் பேரவை இருக்க அங்கீகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. காணி அதிகாரம் தொடர்பாகவும் தெளிவான ஏற்பாடுகளில்லை.

மூன்றாவது மத்திய அரசாங்கம் தேசிய இனங்களின் கூட்டரசாங்கமாக இருக்கக்கூடிய எந்தப் பொறிமுறைகளும் இல்லை. அது எப்போதும் சிங்கள பௌத்த அரசாகவே இருக்கும். மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்த அதிகாரப்பகிர்வை வழங்கினாலும் அது ஒரு போதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

சுயாட்சி அதிகார விடயத்திலும் மத்திய அரசு சம்பந்தமான விடயத்திலும் 19வது திருத்தச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்டது போன்ற அரசியலமைப்புப் பேரவைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பேரவை சிங்கள மேலாதிக்கம் கொண்ட சபை. அங்கு தீர்மானம் எடுக்கப்படும் அதிகாரத்தில் தமிழ்த்தரப்பிற்கு பெரிய பங்கு இல்லை.

நான்காவது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு. இது மிகவும் பலவீனமாக உள்ளது. இந்தப் பாதுகாப்புப் பிரச்சனை சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றிலும் உண்டு. எனவே மூன்று துறைகளிலும் குறைந்த பட்சம் தமிழ் மக்களின் விவகாரங்களிலாவது தமிழ்மக்கள் தீர்மானிக்க்கூடிய பாதுகாப்புப் பொறிமுறை தேவை. தமிழ் மக்கள் தங்களுக்கு எதிரானவற்றை தடுப்பதற்கு மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையானவற்றை கொண்டு வருவதற்கும் பாதுகாப்புப் பொறிமுறை தேவை. இவற்றில் எவை பற்றியும் இடைக்கால அறிக்கை கவனத்தைக் குவிக்கவில்லை.

செனற் சபை புதிய விடயமாக யாப்பில் கூறப்பட்டுள்ளது. இது சோல்பரி யாப்பில் ஏற்கனவே தோல்விகண்ட சபை. அதேபோன்ற கட்டமைப்புத்தான் இங்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. வெறும் ஆலோசனைச் சபை என்றே கூறப்பட்டுள்ளது. இங்கும் சிங்களப் பெரும்பான்மை ஆதிக்கமேயிருக்கும். ஆலோசனை என்ற மட்டத்தில்கூட தமிழ் மக்களுக்கு உதவப்போவதில்லை.

இவற்றை விட தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை, இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்காகவே முன்வைக்கப்பட்டது. எனவே தனிநாட்டுக் கோரிக்கையை இல்லாமல் செய்வதற்கும், இன அழிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குமிடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கும் போதே தனிநாட்டுக் கோரிக்கை இல்லாமல் போகும். இங்கு தனிநாட்டுக் கோரிக்கையை இல்லாமல் செய்வதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளுக்கு கொடுக்கப்படவில்லை.

மொத்தத்தில் இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் வாசிப்பதற்கே தகுதியற்றது. பரிசீலனைக்கு கிட்டக்கூட நெருங்காதது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இடைக்கால அறிக்கைக்கு இருக்கக்கூடிய இடம் குப்பைக்கூடையே.

9/30/2017 5:46:23 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்