Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஒடுக்கப்பட்ட இனங்களின் ஐக்கியமே இன அழிப்பை தடுக்கும்

ஒடுக்கப்பட்ட இனங்களின் ஐக்கியமே இன அழிப்பை தடுக்கும்
சி.அ.யோதிலிங்கம்

 

பெருந்தேசியவாதத்தின் கோரமுகம் முஸ்லிம் மக்கள் மீது திருப்பிவிடப்பட்டுள்ளது. அம்பாறையில் தொடங்கிய இன அழிப்பு நடவடிக்கைகள் கண்டி, மாத்தறை எங்கும் பரவத்தொடங்கியுள்ளது. பெருந்தேசியவாதத்தை ஊட்டி வளர்த்தவர்கள் இன்று அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். இந்த ஊட்டி வளர்ப்பிற்கு சிங்கள தேசத்தின் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி என எவையும் விதிவிலக்காக இருக்கவில்லை. இன்று அரசின் இருப்பிற்கே நெருக்கடி வந்த போது அதனைத் தணிக்க முடியாமல் திணறுகின்றன. அவர்கள் எறிந்த கல் அவர்களையே திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது. தொடர்பூடகங்களைக் கூட கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இவை சென்றுள்ளது.

இவ் இன அழிப்பு சம்பவங்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. நீண்டகாலத் திட்டமிடலின் ஒரு பகுதி. தமிழர் மீது அரங்கேறிய இத்திட்டமிடல் தற்போது முஸ்லிம்கள் மீது ஏவப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது கோரத்தனமாக ஏவிவிடப்பட்ட போது இது அடுத்து முஸ்லிம்கள் மீதும் ஏவப்படும் என்பது இலங்கையில் பெருந்தேசியவாதத்தின் வரலாற்றை நுணுக்கமாக ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். அவர்கள் பல தடவை இது  தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும் முஸ்லிம் தரப்பு போதியளவு ஒத்துழைக்க முன்வரவில்லை. மாறாக தமிழ்-சிங்கள மோதலில் குளிர்காய முற்பட்டது. இக் குளிர்காய்தல் நிரந்தரமானது என்றும் நினைத்தது. இன்று அவை எல்லாம் பொய்த்துப் போக தன்னைப் போல் ஒடுக்கப்பட்ட ஏனைய சமூகங்களின் ஒத்துழைப்பின்றி தனித்து முகம் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது.

இந்த இன அழிப்பை விளங்கிக் கொள்வதற்கு சிங்களப் பெருந்தேசியவாதத்தின் மூலக் கொள்கையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 'இலங்கைத்தீவு சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் உரியது. ஏனைய இனங்கள் இங்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் உரிமைகள் எவற்றையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிலைநாட்ட முடியாது. ஏனைய இனங்களை இலங்கையில் வாழ விட்டதே சிங்கள-பௌத்தர்களின் பெருந்தன்மை.' இதுதான் சிங்களப் பெருந்தேசியவாதத்தின் மூலக் கொள்கை. ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதனைச் செயற்படுத்தும் அரச இயந்திரமும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுடைய போராட்டம் கோரமாக நசுக்கப்பட்டதும் இதற்காகத்தான்.

முஸ்லிம்கள் பெருந்தேசியவாதத்திற்கு எதிராக நேரடியாகப் போராடியவர்கள் அல்லர். முஸ்லிம் தேசியவாதம் கூட பெருந்தேசியவாதத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டதல்ல. அது தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டது. பெருந்தேசியவாதம் கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பை அச்சுறுத்தி நிலங்களை ஆக்கிரமித்தபோது கூட முஸ்லிம்கள் அதற்கு எதிராக பெரிய போராட்டங்களை நடாத்தவில்லை. மாறாக அதனை ஈடுசெய்ய தமிழ் மக்களின் நிலங்களை பெருந்தேசியவாதத்துடன் இணைந்து பறிப்பதிலேயே அக்கறையாக இருந்தனர். ஆனாலும் பெருந்தேசியவாதத்திடம் இருந்து முஸ்லிம்களின் இருப்பைப் பாதுகாக்க மறைமுகமான முயற்சிகளைச் செய்தனர். தங்களின் பொருளாதாரத்தை கவனமாக வளர்த்துக் கொண்டனர். போரினால் பெரிதளவு பாதிக்கப்படாமல் அது தரும் நலன்களை உச்ச வகையில் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை இருந்தமையும், முஸ்லிம்களின் இயற்கையான இனப்பெருக்கமும் இதனை இலகுவாக்கியது. இப்போக்கு பெருந்தேசியவாதத்தை அச்சமடையச் செய்தது.

பெருந்தேசியவாதம் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனத்தின் எழுச்சியையும் தனித்தனியாக கையாண்டு நசுக்கியது. இதற்கு ஏனைய ஒடுக்கப்பட்ட இனங்களை பயன்படுத்தவும் தவறவில்லை. தமிழர்களை ஒடுக்க முஸ்லிம்களைப் பயன்படுத்தியது. தற்போது முஸ்லிம்களை ஒடுக்க தமிழ் மக்களின் மௌனத்தைப் பயன்படுத்துகின்றது. ஏற்கனவே மலையக மக்களை ஒடுக்க வட-கிழக்கு தமிழ் மக்களினது மௌனத்தையும், முஸ்லிம்களின் மௌனத்தையும் பயன்படுத்தியது. கிட்டத்தட்ட குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான். இலங்கைத் தீவில் வாழும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இணைந்து செயற்படவில்லையென்றால் தமது இருப்பை நீண்ட காலத்திற்கு நிலைநாட்ட முடியாது.

இலங்கைத் தீவைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வட-கிழக்கில் தங்களது இருப்பைப் பாதுகாப்பதே முதன்மையானது. இதே போல மலையக மக்களுக்கு நுவரெலியா, பதுளை மாவட்டமே முதன்மையானது. இவ்விடங்களில் தமது இருப்பை பலமாக வைத்துக் கொண்டால்தான் தீவில் ஏனைய பகுதிகளில் வசிக்கும் தமது வம்சாவழியினரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். தேசிய இனங்களாக தங்களை நிலைநிறுத்துவதற்கும் இவையே மூலாதாரமாக இருக்கும். இதற்கு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் மிக அவசியமானது. முஸ்லிம்கள் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்திருந்தால் இன்று முஸ்லிம்களுக்காக தமிழர்கள் உலகம் முழுவதிலும் போராடியிருப்பர். துரதிஸ்டம் முஸ்லிம்கள் ஹர்த்தால் போராட்டம் நடாத்திய போது தமிழர்கள் வர்த்தக நிலையங்களைத் திறந்து தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தமிழர்கள் ஹர்த்தால் போராட்டம் நடாத்தியபோது முஸ்லிம்கள் ஆதரவு தராததன் விளைவுதான் இது. தமிழர்களின் இன அழிப்பிற்கு முஸ்லிம்கள் ஆதரவு கொடுத்ததினால் முஸ்லிம்கள் இன அழிப்பிற்கு உள்ளாகின்ற போது சாதாரண தமிழ் மக்கள் மகிழ்ச்சிப்படும் நிலையும் உண்டு.

இங்கு முஸ்லிம் அரசியலின் அடிப்படைத் தவறுதான் இப்போக்கிற்கு காரணம். முஸ்லிம்களில் 60 வீதத்தவர் வட-கிழக்கிற்கு வெளியிலும் 40 வீதத்தவர் வட-கிழக்கிலும் வாழ்கின்றனர் என்பது உண்மைதான். எனினும் செறிவாகவும், தமது இருப்பை நிலைநிறுத்தக் கூடிய வகையிலும் நிலத்துடன் இணைந்து வாழ்வது வட-கிழக்கில் தான். வட-கிழக்கில் தான் முஸ்லிம்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் உள்ளனர். தெற்கில் வர்த்தகர்களாக மட்டுமே உள்ளனர். ஓரிடத்தில் செறிந்து வாழாமல் ஆங்காங்கே சிதறியே வாழ்கின்றனர். எனவே இலங்கைத் தீவு முழுவதிற்குமென முஸ்லிம் அரசியலைப் பின்பற்றாமல் வடகிழக்கிற்கென தனியான முஸ்லிம் அரசியலையும், தெற்கிற்கென இன்னோர் முஸ்லிம் அரசியலையும் பின்பற்றியிருக்க வேண்டும். வட-கிழக்கிற்கான முஸ்லிம் அரசியலை தமிழ் மக்களுடன் இணைந்தும், தெற்கிற்கான முஸ்லிம் அரசியலை சிங்கள மக்களுடன் இணைந்தும் முன்னெடுத்திருக்க வேண்டும். இதனூடாக வட-கிழக்கிற்கென ஒரு முஸ்லிம் அரசியல் தலைமையையும், தெற்கிற்கென இன்னுமோர் முஸ்லிம் தலைமையையும் உருவாக்கியிருக்க வேண்டும். இப்பிரிப்பு வெட்டொன்று துண்டொன்றாக இருக்க வேண்டும் என்று கூற வரவில்லை. பொது விடயங்களில் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.

துரதிஸ்டவசமாக இந்தப் போக்கை நோக்கி முஸ்லிம் அரசியல் வளரவில்லை. இதன் விளைவு தமிழ் மக்களின் போராட்டங்களோடு அவர்களால் ஒத்துழைக்க முடியவில்லை. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து இதற்கான அழைப்பு முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் உருவாக்க தினத்தன்றே தந்தை செல்வா இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் இரண்டாவது மாநாடு திருகோணமலையில் இடம்பெற்ற போது முஸ்லிம் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் பேரில் தமிழர்களின் அரசு என்ற தீர்மானம் தமிழர்களின் அரசும், முஸ்லிம்களின் அரசும் இணைந்த மொழிவழித் தமிழரசு என மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட இனங்களின் ஐக்கியமே இன அழிப்பை தடுக்கும்

தமிழ்த்தரப்பு மிக நெகிழ்ச்சியாக நடந்து கொண்ட போதும் முஸ்லிம் சமூகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு சிலர் போராட்ட இயக்கங்களில் பங்கு பற்றினார்களே தவிர முஸ்லிம் சமூகம் வெளியில்தான் நின்றது. விளைவு பெருந்தேசியவாதம் தமிழர்களின் போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்தியது. தற்காலிக வட-கிழக்கு இணைப்யையும் முஸ்லிம்களைக் கொண்டே தடுத்து நிறுத்தியது. தமிழரசுக் கட்சிக் காலத்தில் தமிழர்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகள் ஒரு சில மாதங்களிலேயே அரசாங்கக் கட்சிக்குத் தாவினர். அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழர்களின் இருப்பையே முஸ்லிம்கள் பிடுங்க முயன்ற போது தமிழ்-முஸ்லிம் உறவு சரிசெய்ய முடியாத அளவு உச்சத்திற்குச் சென்றது. உண்மையில் தமிழர்களின் போராட்டத்தோடு முஸ்லிம்கள் ஒத்துழைத்திருந்தால் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை வெற்றிகரமாகத் தடுத்திருக்க முடியும். அம்பாறை மாவட்டம் 'திகாமடுல்ல' வாக மாறியிருக்க முடியாது. திருகோணமலையில் 'சேருவில' சிங்களத் தேர்தல் தொகுதியும் உருவாகியிருக்க முடியாது. அம்பாறைத் தொகுதி உருவாகும் வரை சிங்களப் பிரதிநிதித்துவம் கிழக்கில் இருக்கவில்லை. இன்று முஸ்லிம்களின் உறவை முழுமையாக முறித்து நிலத்தொடர்ச்சியற்ற வகையில் வடகிழக்கு தமிழ்ப் பிரதேசங்களை இணைத்தல் என்பது பற்றி தமிழ்த்தரப்பு சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

மறுபக்கத்தில் முஸ்லிம்கள் மீதான இன அழிப்பைப் பார்த்து தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொள்ள முடியாது. சாதாரண தமிழ் மனம் சந்தோசம் கொண்டாட முயலும் என்பது உண்மைதான். ஆனால் அரசியல் ரீதியாக இது பாதகமானது. இது பெருந்தேசியவாதத்தின் நிகழ்ச்சித் திட்டம் என்பதை தமிழ் மக்கள் மறக்கக் கூடாது. முஸ்லிம்களை எதிரியாக்குவது கோட்பாட்டு ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் தமிழரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல. கோட்பாட்டு ரீதியாக வட-கிழக்கு தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, முஸ்லிம்களின் தாயகமும்கூட. ஒரே தாயகத்தில் வாழும் ஒரு சமூகத்தைப் பகைத்துக் கொண்டு இன்னோர் சமூகம் நிம்மதியாக இருக்க முடியாது. அயல் வீட்டுக்காரனைப் பகைத்துக் கொண்டு சொந்த வீட்டுக்காரன் நிம்மதியாக இருக்க முடியுமா? இதற்காக வீட்டையே பிடுங்கிக்கொண்டு போகவும் அனுமதிக்க முடியாது. இராஜதந்திர ரீதியாக பெருந்தேசிய வாதம் முஸ்லிம்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது அதைவிட பெருந்தேசியவாதத்தை முகம் கொள்ள ஒடுக்கப்பட்ட இனங்களிடையே ஐக்கியம் அவசியம்.

இன்று எழும் முக்கிய கேள்வி பெருந்தேசியவாதத்தின் இன அழிப்பை எவ்வாறு தடுப்பது? அரசியல் தீர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை. மிக அண்மையில் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. இந்நிலையில் இன அழிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு வேலைத்திட்டம் அவசியம். இன வழிப்பு என்பது வெறுமனை ஆட்களை அழிப்பதல்ல. ஒரு இனத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், என்பதை அழிப்பதே! இதனூடாக ஒரு இனத்தின் சுய இருப்பை அழிப்பதே! ஆட்களை அழித்தல் இன அழிப்பின் உச்சம். பெருந்தேசியவாதம் தற்போது உச்சத்திற்கு சென்றுள்ளது.

இன அழிப்பை தடுப்பது உள்நாட்டு அழுத்தங்களினால் மட்டும் இடம்பெறக்கூடியதல்ல. சர்வதேச அழுத்தம் இதற்குத் தேவை எனவே இந்த அழிப்பைத் தடுப்பதற்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கு இலங்கைத்தீவில் வாழும் ஒடுக்கப்பட்ட இனங்களான தமிழர்களும், முஸ்லிம்களும், மலையக மக்களும் கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தனித்தனி அழுத்தங்கள் பெரிதாக உச்ச பயனைத் தந்துவிடாது. இந்த அழுத்தங்களினூடக சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறையுடன் கூடிய இடைக்கால தீர்வை நோக்கி நகர வேண்டும்.

இலங்கை மீதான கவனம் ஜெனீவாவில் குவிந்திருக்கின்ற இன்றைய நிலையில் சர்வதேசத்தை நோக்கி அழுத்தங்களை முன்வைப்பது இலகுவானது. தமிழ், முஸ்லிம், மலையக சக்திகள் உடனடியாக இதற்குத் தயாராக வேண்டும். தங்களுக்கிடையேயான அக முரண்பாடுகளை சற்றுத்தூரத் தள்ளி வைத்துவிட்டு இதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். அகமுரண்பாடுகள் பேசக் கூடாது என்பதல்ல. அவை பேசப்படத்தான் வேண்டும். அதற்கு முதல் ஒவ்வொரு இனமும் தமது இருப்பைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த நேரத்திலாவது ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்திற்கு வராவிட்டால் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போடுவதை கடவுளாலும் தடுக்க முடியாது.

3/10/2018 4:19:12 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்