Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது வடக்கு-கிழக்கு இணைக்கப்படல் வேண்டும்

நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது வடக்கு-கிழக்கு இணைக்கப்படல் வேண்டும்
சி.அ.யோதிலிங்கம்

 

வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற விடயம் இன்று மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகிவிட்டது. முஸ்லிம்கள் இணைப்பிற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். எந்த முஸ்லிம் கட்சியும், எந்த முஸ்லிம் அமைப்பும், எந்த முஸ்லிம் தலைவரும் இணைப்பிற்கு ஆதரவாக இல்லை. கிழக்கில் உள்ள சிங்கள மக்களும் ஆதரவாக இல்லை. நல்லாட்சி அரசும் அதற்குப் பின்னால் நிற்கின்ற இந்திய, அமெரிக்க சக்திகளும் மைத்திரி – ரணில் அரசினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இதுபற்றி பேசுவதற்கு தயாராக இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கடப்பாடு கொண்ட இந்தியாவும் பெருந்தேசியவாதத்திற்கு பயந்து வாயை மூடி மௌனமாக உள்ளது. சம்பந்தன் தலைமையையும் அதுபற்றி எதுவும் பேச வேண்டாம் என அமெரிக்க-இந்திய எஜமான்கள் கட்டளை இட்டுள்ளனர்.

இந்திய - அமெரிக்க - ரணில் - மைத்திரி – சம்பந்தன் தலைமை என்பவற்றின் கூட்டு தமிழ் அரசியலில் இருந்து தமிழ் தேசியத்தை நீக்கம் செய்தல் என்ற தமது நிகழ்ச்சி நிரலில் வடக்கு-கிழக்கினை நிரந்தரமாக பிரித்துவிடுதல் என்பதனையும் பிரதானமாக சேர்த்துள்ளது. இக் கூட்டு, இனப்பிரச்சனையை வடக்குடன் முடக்கி விட முயற்சிக்கிறது. இச் சக்திகள் இனப்பிரச்சனையை வடக்குப்பிரச்சனையாக சுருக்கிவிட முயற்சிக்கின்றனர்.

மறுபக்கத்தில் பெருந்தேசியவாதிகள், குறிப்பாக பிக்குமார் வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் நடைமுறை வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளனர். கிழக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டினை மிக இலாவகமாகக் கையாளுகின்றனர். முஸ்லிம்கள் தமிழ்த்தேசிய ஆதரவு நிலைப்பாட்டினை ஒருபோதும் எடுக்கப்போவதில்லை என்பதும் தங்களுடன்தான் தொடர்ந்தும் நிற்பார்கள் என்பதும் பெருந்தேசியவாதிகளுக்கு நன்கு தெரியும். இதனால் முஸ்லிம் ஆதரவு பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டில் தமிழ் மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டினை எடுக்கின்றனர். ஏறாவூர் மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தலையிட்டு தமிழ்மக்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர். திருக்கோவில் வட்டமடு மேய்ச்சல்தரைப் பிரச்சனையிலும் தற்போது தலையிட்டுள்ளனர்.

கிழக்கு தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லாததினால் தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு பிக்குமாரிடம் சரணடைவதை தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. இது மிகவும் அபாயகரமான போக்கு. இது பற்றி தமிழ் தேசிய சக்திகள் இன்னமும் கவனத்தைக் குவிக்கவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லாமல் இந்த அபாயகரமான போக்கினை ஒரு போதும் தடுக்க முடியாது. பெருந்தேசியவாதிகள் கிழக்கினை எப்படியாவது சிங்கள மயமாக்கவே முற்படுகின்றனர். பிக்குமாரின் பிரசன்னம் தற்காலிகமாக சாதகமானது போலத் தோற்றம் தெரிந்தாலும் நீண்டகாலத்தில் மிகப்பெரும் பாதிப்பையே கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். போரின் போது முஸ்லிம்கள் பெருந்தேசியவாதத்திற்கு சார்பான நிலையை எடுத்தனர். இன அழிப்பு நடவடிக்கையில் தாமும் பங்கேற்றனர். இன்று அதன் பயனை அனுபவிக்கின்றனர். இறக்காமம் மாயக்கல் புத்தர்சிலை விவகாரத்தில் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. முஸ்லிம்கள் தனித்து விடப்பட்டனர். கிழக்கு விடயத்தில் குரங்கு அப்பம் பங்கிட்டதைப் போன்று பெருந்தேசியவாதிகள் செயற்படுகின்றனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கு இணைப்பு மூன்று வகைகளில் அவசியமானது. ஒன்று தமிழ் மக்களின் கூட்டிருப்பை, கூட்டுரிமையை, கூட்டடையாளத்தைப் பேணுவதற்கு இணைப்பு அவசியமானதாகும். இவை தேசிய இனத்தின் அடிப்படைகள். இவை இல்லாமல் ஒரு தேசிய இனமாக தமிழ் மக்கள் எழுச்சி பெற முடியாது. இவற்றை சிதைப்பது தேசிய இனமாக இருப்பதை சிதைப்பதற்கு சமமானது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் இச் சிதைப்பிலேயே கவனம் செலுத்தின. குறிப்பாக கூட்டிருப்பு சிதைந்தால் கூட்டுரிமையும் கூட்டடையாளமும் தானாகவே சிதைந்துவிடும்.

ஒரு தேசிய இனத்தின் கூட்டிருப்பைச் சிதைப்பதற்கு பிரதான வழி அதன் நில ஒருமைப்பாட்டைச் சிதைப்பதுதான். தேசிய இனத்தை ஒடுக்கும் அனைத்து அரசுகளும் இதனை ஒரு கருவியாக பின்பற்றுகின்றன. பாலஸ்தீனம், வட அயர்லாந்து, கிழக்குத் தீமோர், தென் சூடான் என்பவற்றிலும் இது பின்பற்றப்பட்டது. இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள் சுதந்திரத்திற்கு முன்னரே இச்சிதைப்பிற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் கல்லோயத்திட்டம் என்ற பெயரில் இச்சிதைப்பு நடவடிக்கை அரங்கேற்றப்பட்டது. மிக விரைவிலேயே தமது வியூகத்தை மாற்றி தமிழர் தாயகத்தை இணைக்கும் மையப்பகுதியான, தாயகத்தின் இதயப்பகுதியான திருக்கோணமலை மாவட்டத்தில் சிதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து வகை நிலப்பறிப்பு முயற்சிகளும் திருக்கோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள், சட்டவிரோத விவசாயக் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், புனிதபிரதேசங்களுக்கான குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என இவை தொடர்ந்தன.

திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களுக்காக அல்லைத்திட்டம், கந்தளாய்த் திட்டம், மகாதிவுல்வெலத் திட்டம், பதவியாத் திட்டம் என்பன உருவாக்கப்பட்டன. இத்திட்டங்களுக்கான காணிகளைப் பங்கிடும்போது திருக்கோணமலை மாவட்டத் தமிழ் மக்கள்கூட புறக்கணிக்கப்பட்டனர். சிங்கள மாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். ஒற்றையாட்சிக் கட்டமைப்பும், சிங்கள மயமாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பும் இவற்றிற்குப் பெரிதும் துணைபுரிந்தன. திருக்கோணமலை மாவட்டத்தை வில்போல வளைத்து இக்குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. குடியேற்றங்களை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்காக சிங்களக் குடியேற்றங்களை ஒரு வால் போல இணைத்து 'சேருவல' தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. சிங்களப் பிரதேசசபைகளும் குறைந்த வாக்காளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.

நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது வடக்கு-கிழக்கு இணைக்கப்படல் வேண்டும்

30 வருடங்களாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் இந்த நிலப்பறிப்பு முயற்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. 2009 இல் ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நிலப்பறிப்பு மீண்டும் தொடர்கின்றது. நிலப்பறிப்பு விடயத்தில் மகிந்தர் அரசிற்கும், மைத்திரி-ரணில் கூட்டு அரசிற்குமிடையே வேறுபாடுகள் இருக்கவில்லை. முன்னையவர் பகிரங்கமாக நிலப்பறிப்பை மேற்கொள்ள, பின்னையவர்கள் சூட்சுமமாக இதனை மேற்கொள்கின்றனர். தற்போது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, முஸ்லிம்களும் தம்பங்கிற்கு தம்மிடமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலப்பறிப்பை மேற்கொள்கின்றனர். எனவே கூட்டிருப்பையும், அதன் வழியான கூட்டுரிமை, கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு வடக்கு கிழக்கு இணைப்பு அவசியமானது.

இரண்டாவது கிழக்கில் தமிழ் மக்களின் பாதுகாப்பு. இங்கு பாதுகாப்பு என்பது ஒரு தேசிய இனத்தை தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள்கூட்டம் என்பவற்றின் பாதுகாப்பை குறித்து நிற்கின்றது. கிழக்கில் தமிழ் மக்களிடம் அதிகாரம் இல்லை. சிங்கள தரப்பிடமும் முஸ்லிம் தரப்பிடமுமே உள்ளது. இரண்டு தரப்புகளும் கிழக்கு தமிழ் மக்கள் மீது ஒரு தாக்குதல் யுத்தத்தினை நடாத்தத் தொடங்கியுள்ளன. இதை எதிர்த்து ஒரு தற்காப்பு யுத்தத்தினைக்கூட நடாத்த முடியாத நிலையில் கிழக்குத் தமிழ் மக்கள் உள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டமே சற்று வலிமையான நிலையில் உள்ளது. இது வலிமையான நிலையில் இருந்தால்தான் அம்பாறை மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் எஞ்சியிருக்கின்ற தமிழ்ப் பிரதேசங்களையாவது பாதுகாக்க முடியும். இன்று மட்டக்களப்பு மாவட்டமே தன்னைப் பாதுகாக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது. இயற்கையாக மட்டக்களப்பு வாவி அமைந்துள்ளதால் படுவான்கரைப் பிரதேசம் நிலப்பறிப்பிலிருந்து சற்று தப்பிப்பிழைத்துள்ளது. எழுவான்கரைப் பிரதேசம் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றது. மிக சூட்சுமமான முறையில் காணிகள் பறிக்கப்படுகின்றன.

வடக்கு எப்போதும் சர்வதேசக் கவனிப்புக்குரியது. தமிழ் மக்களும் அதிகளவில் உள்ளனர். அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் ஒரு அரசியல் தளமாக வடமாகாணசபை உள்ளது. எந்தச் சிறிய நெருக்கடிகளும் உடனடியாகவே அரசியல் அரங்குகளில் பேசுபொருளாகிவிடும். உள்நாட்டு மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாகிவிடும். கிழக்கின் நிலை அவ்வாறானதல்ல. சர்வதேச கவனிப்பு அங்கு மிகக் குறைவு. வெளிநாட்டு இராஜதந்திரிகள் கிழக்கிற்கு செல்வதில்லை. சம்பந்தன் தலைமையும் கிழக்கிற்கு செல்லுமாறு வற்புறுத்துவதில்லை. தாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது கிழக்கு பிரதிநிதிகளை அழைத்துச் செல்வதுமில்லை. தாங்களும் கிழக்குப்பிரச்சினை பற்றி சர்வதேச மட்டத்தில் பேசுவதில்லை. மொத்தத்தில் கிழக்கு தமிழ் மக்கள் இருட்டுக்குள் விடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போதுள்ள நிலையிலாவது கிழக்கைப் பாதுகாப்பதற்கு வடக்கு-கிழக்கு இணைப்பு மிகமிக அவசியமாகின்றது.

மூன்றாவது முன்னரே கூறியது போல தமிழ் அரசியலிலிருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் செயல்திட்டம் 2009ம் ஆண்டு தொடக்கம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எந்தவித சுயாதீனமும் இல்லாமல் இந்திய- அமெரிக்க சக்திகளிற் தங்கிநிற்கும் சம்பந்தன் தலைமையும் இந்த செயல்திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழ் அரசியலிலிருந்து புலிநீக்கம், சிங்கக் கொடி உயர்த்துதல், சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளுதல், தமிழ்த் தேசிய சக்திகளை கட்சியிலிருந்து நீக்குதல், இணக்க அரசியல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு வருட அவகாசம், அரசியல் அரங்குகளில் வடக்கு-கிழக்கு இணைப்பை பற்றி பேசாதுவிடல் என அனைத்துமே தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள்தான்.

இதன் ஒரு பகுதியாகத் தான் அமெரிக்க-இந்திய-மைத்திரி-ரணில்-சம்பந்தன் தலைமை கூட்டு இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் முடக்க முயற்சிக்கின்றது. இனப்பிரச்சினையுடன் கிழக்கையும் இணைத்தால் வடக்கு-கிழக்கு இணைப்பை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் வரும். அதை தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சி. இச்செயல்திட்டத்தின் முதலாம் கட்டம் வடக்கு-கிழக்கு பிரிந்த மாகாணசபைகளை செயல்படவிடல். இரண்டாம் கட்டம் வடக்கு-கிழக்கு இணைப்பு நடைமுறையில் சாத்தியமில்லை என பிரச்சாரம் செய்தல். மூன்றாம் கட்டத்தில் பௌத்த பிக்குகள் களத்தில் இறங்கிவிடப்பட்டுள்ளனர். 4ம் கட்டம் கிழக்கை சிங்கள மயமாக்குவதாகவே இருக்கும். இந்த செயல்திட்டத்தை வளரவிடாமல் நிறுத்துவதற்கும் வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்.

எனவே வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது அரசியல் தீர்வின் அடிப்படை. இது எந்தவித பேரம் பேசலுக்கும் அப்பாற்பட்டது. கிழக்கை அகற்றிவிட்டு தமிழ்த் தேசியம் ஒருபோதும் நின்று பிடிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்திற்காக கிழக்கு மாபெரும் அர்ப்பணிப்புக்களைச் செய்தநிலையில் இது அரசியல் அறமாகவும் இருக்கமுடியாது.

இங்குதான் முஸ்லிம் விவகாரம் முக்கியமாகின்றது. வடக்கு-கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என்பதில் இங்கு மாற்றுக்கருத்து இல்லை. இணைந்த வடக்குகிழக்கு அதிகார அலகினை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்களேயானால் அதில் முஸ்லிம்களுக்குரிய இடம் யாது என்பதை அவர்களுடன் பேசித் தீர்க்கலாம். இது விடயத்தில் மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடந்துகொள்ள தமிழ்ச் சமூகம் தயாராகவே உள்ளது. ஆனால் கிழக்கின் யதார்த்த நிலை வேறாக உள்ளது.

வடக்கு கிழக்கிற்கென தமிழ் மக்களினால் நகர்த்தப்பட்ட அரசியலோடு முஸ்லிம்கள் இணையவில்லை. அவர்கள் அதற்கு வெளியேதான் நின்றனர். நபர்களாக ஒரு சிலர் பங்கேற்றார்களே தவிர முஸ்லிம் சமூகம் வெளியேதான் நின்றது. உண்மையில் முஸ்லிம்களும் இணைந்திருந்தால் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இறக்காமம் மாயக்கல்லி புத்தர்சிலை விவகாரத்தை முஸ்லிம்கள் தனித்து முகம் கொடுத்திருக்க முடியாது. முஸ்லிம் தேசியவாதம் தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டதே தவிர, சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்திற்கு எதிராக கட்டமைக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஒரு கருவியாகவும் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இது விடயத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் தமது தனித்துவத்தை இழக்காது உருவாக்கப்பட்ட 'தமிழ் பேசும் மக்கள்' என்ற பொது அடையாளத்திற்குள் வருவதற்கு முஸ்லிம்கள் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தமிழ் மக்களோடு எந்தவகையிலும் தொடர்பற்ற மத அடிப்படையிலான தனியான இனமாகவே தங்களை அடையாளப்படுத்தினர். அவ்வாறு அடையாளப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதை இப்பத்தியாளர் மறுக்கவில்லை.

முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் 'தமிழ் பேசும் மக்கள்' என்ற கோட்பாடு வடக்கு கிழக்கில் படுதோல்வியடைந்தது. அது தமிழ் மக்களுக்கு பொறுப்பையும், முஸ்லிம்மக்களுக்கு பொறுப்பின்மையையும் விதித்தது. அது முஸ்லிம் அரசியலை கொச்சைப்படுத்தியதோடு தமிழ் மக்களுக்கு கைவிலங்காகியது. தமிழ்த் தலைமைகள் தமிழ்- முஸ்லிம் முரண்பாட்டை கையாளத் தெரியாமல் நிலவிரிப்புக்குள் தள்ளியபோது முரண்பாடு கையாள முடியாத நிலைக்குச் சென்றது.

இன்றைய நிலையில் முஸ்லிம்கள் வடக்கு-கிக்கு இணைப்பை ஏற்றுக் கொள்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று வடக்கு கிழக்கிற்கென தனியான அரசியல் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்படாமையாகும். முழு இலங்கைக்குமான முஸ்லிம் அரசியலே கட்டியெழுப்பப்பட்டது. இதனால் வடக்கு- கிழக்கு இணைப்பு தென்இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இரண்டாவது வடக்கு-கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்டால் எதிர்ப்பு அரசியலுக்கு முஸ்லிம் அரசியலும் தயாராக வேண்டும். அதன் வளர்ச்சியாக போராட்ட அரசியலுக்கு தயாராக வேண்டும். ஆனால் முஸ்லிம்களிடம் அந்த அரசியல் கலாச்சாரம் சிறிது கூட வளரவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் இணைந்த அரசியலையே முன்னெடுக்கின்றனர். எதிர்க்கட்சி அரசியலுக்கு அங்கு கொஞ்சம் கூட இடம் இருக்கவில்லை.

மூன்றாவது நீண்டபோர் காரணமாக சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு பல சலுகைகளை வழங்கி தங்களுடன் அணைத்துக் கொண்டனர். இந்தச் சலுகைகளினால் கிழக்கில் தமிழ் மக்களை விட முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக மேல்நிலையில் உள்ளனர். இந்த சலுகைகள் நிரந்தரமானது என நினைக்கின்றனர். தமிழ்த் தேசியப் போராட்டத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தப்பட்டமைக்கும் இதுவே காரணம். புலம்பெயர்ந்த ஒரு முஸ்லிம் ஆய்வாளர் குறிப்பிட்டது போல, 'தமிழரும் சிங்களவரும் மோதினால் நாங்கள் நீந்துவோம்', 'அவர்கள் ஐக்கியப்பட்டால் நாங்கள் மூழ்குவோம்' என்பதே அவர்களது அரசியலாகியது. வடக்கு- கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டால் இந்தச் சலுகைகள் எல்லாம் இல்லாது போகும் என அவர்கள் நினைக்கின்றனர்.

நான்காவது வடக்கு கிழக்கு இணைந்தால் தமது வீதாசாரம் குறைந்து தாம் அதிகாரமற்றவர்களாகி விடுவோம் என்ற கருத்தும் முஸ்லிம்களிடம் உள்ளது. இதனை அவர்கள் நீண்டகாலமாகவே முன்வைக்கின்றனர். முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு வழங்கப்பட்டால் இந்த அச்சங்களுக்கு இடமில்லை என்பதை ஏனோ அவர்கள் உணரவில்லை.

ஐந்தாவது கிழக்கில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையாக உள்ளனர். அம்பாறையில் முதலாவது பெரும்பான்மை அவர்கள்தான். திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பலர் இடம் பெயர்ந்ததால் முதலாவது நிலையை நோக்கி நகர்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் சிறுபான்மையாக உள்ளனர். இன்னமும் சில வருடங்களில் முழு கிழக்கிலும் பெரும்பான்மையாக நாம் வந்துவிடுவோம். எனவே கிழக்கின் அதிகாரம் தங்களிடமே நிலைத்து நிற்கும் என அவர்கள் நினைக்கின்றனர்.

ஆறாவது ஆயுதப் போராட்ட காலத்தில் ஏற்ப்பட்ட வன்முறைகள் காரணமாக கிழக்கில் இரு சமூகங்களும் ஒருவரை ஒருவர் நம்பத் தயாராக இல்லை. எதிர்ப்பு உணர்வு ஆழமாக வேரூன்றியிருக்கின்றது.

எனவே மேற்கூறிய காரணங்களினால் தற்போதைக்கு வடக்கு - கிழக்கு இணைப்பினை ஏற்றுக் கொள்ளும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. அண்மைய காலங்களில் அவர்கள் மனம் மாறுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது மிக மிக அவசியமாகவுள்ளது. அவர்கள் இன அழிப்புக்குள்ளாவதைத் தடுக்க இதைத் தவிர வேறு ஒரு தெரிவும் இல்லை.

இந்த விடயத்தில் தான் தமிழ்த் தரப்பு மாற்று யோசனை நோக்கி நகர வேண்டிருக்கின்றது. அந்த மாற்று யோசனை என்பது வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது இணைப்பது தான். ஒரு கிராம சேவையாளர் பிரிவும் தவறவிடப்படாமல் இவ் இணைப்பு மேற்கொள்ளப்படல் வேண்டும். முஸ்லிம்கள் மனம்மாறி இணைப்புக்கு ஆதரவாக வரும் போது பின்னர் அவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

நிலத் தொடர்ச்சியற்ற ஒழுங்குமுறை உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் இதற்கு நல்ல உதாரணம். அங்கு பாண்டிச்சேரியும், காரைக்காலும் மட்டும் தமிழ் நாட்டில் உள்ளன. 'ஏனாம்' என்கின்ற பிரதேசம் ஆந்திராவில் உள்ளது. 'மாஹி' என்ற பிரதேசம் கேரளாவில் உள்ளது. ஒப்பீட்டு ரீதியில் பார்ப்போமாயின் வடக்கு- கிழக்கு தமிழ்ப்பிரதேசங்கள் இவ்வளவிற்கு சேய்மையாக இல்லை.

எனவே தமிழ்த் தேசிய சக்திகள் உடனடியாக இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நாம் தாமதிக்கின்ற ஒவ்வொரு மணியும் கிழக்கை இழக்கும் நிலைக்கு உடந்தையாகிவிடும். 

9/15/2017 5:36:08 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்