Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஊருக்குத் திரும்பி - மீளுதல்!   

ஊருக்குத் திரும்பி - மீளுதல்!   
சர்வே எழுதுவது...

 

2016 செப்டம்பர் மாதம் ஒஸ்லோவில் ஒரு அரங்க நிகழ்வொன்றை நடாத்தினோம். இவ் அரங்க நிகழ்வின் ஓர் அங்கமாக Forum Theatre உம் இருந்தது. இவ் Forum Theatre பிறேசில் நாட்டு அரங்கவியலாளர் Augusto Boal அறிமுகப்படுத்திய ஓர் அரங்க வடிவம். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு (Theatre of the Oppressed) என்ற அரங்கவகையினுள் இதுவும் ஒன்று. Boal அறிமுகப்படுத்திய வடிவத்தினுள் நாம் சில மாற்றங்களை எமது தேவைகளுக்காகச் செய்து கொண்டோம். இப் பத்தி பேச எடுத்துக் கொண்ட விடயம் இந்த அரங்க வடிவம் பற்றியது அல்ல. மாறாக நாம் இவ் அரங்கத்துக்காக எடுத்துக் கொண்ட பேசுபொருள் தொடர்பானது. இதனால் அரங்க வடிவம் பற்றித் தொர்ந்து பேசாது, அரங்கத்தின் அங்கமான நாடகத்தின் (model) கதை பற்றிப் பார்ப்போம். இதுதான் அந்தக் கதை.

1.

ஒரு குடும்பம். ஒஸ்லோவில் வாழ்கிறது. மூன்று பிள்ளைகள். தாய், தந்தை, அப்பம்மா ஆகியோர் குடும்ப உறுப்பினர்கள். மூத்த மகளும் இரண்டாவது மகனும் வேறு நகரங்களில் கல்வி கற்கிறார்கள். பிள்ளைகள் கடன் எடுக்கக்கூடாது எனக் கல்விச் செலவினையும் பிள்ளைகளின் ஏனைய செலவுகளையும் தமது குடும்ப வருமானத்திலேயே சுமக்கிறார்கள் பெற்றோர்கள். அப்பம்மா தனது பேரப்பிள்ளைகளிடம் மிகுந்த அன்பு செலுத்துவார். மருமகளுக்கும் மாமிக்கும் இடையே மிகவும் நல்ல உறவு. தனது அம்மாவைப்போல் மாமியைப் பார்த்துக் கொள்ளும் மருமகள். வீட்டில் இருக்கும் வேளைகளில் ஊருக்குத் திரும்பிப் போனால் நல்லது என அப்பம்மா அடிக்கடி கூறிக் கொள்வார்.

ஒருநாள் ஒருவரும் வீட்டில் இல்லாதபோது வீட்டின் வெளிக்கதவு மணி மீண்டும் மீண்டும் அடிக்கிறது. கதவைத் திறந்து பதில் அளித்து விட்டு திரும்பி வரும்போது கால் விறைத்து அப்பம்மா கீழே விழுந்து விடுகிறார். எவ்வளவு முயன்றும் அவரால் எழும்ப முடியவில்லை. மிக நீண்ட நேரமாக நிலத்தில் வீழ்ந்தவாறே கிடக்கிறார். வேலையால் திரும்பி வரும் மருமகள் மாமியின் நிலையினைப் பார்த்து மிகவும் பதைபதைத்து அவரைத் தூக்கி ஆசுவாசப்படுத்தி தேற்றுகிறார். பாடசாலையால் வந்த கடைசி மகளும் உதவி செய்கிறார். நல்ல வேளையாக ஆபத்து எதுவும் நிகழவில்லை.

மாமியை இனி தனியே வீட்டில் விட்டுச் செல்ல முடியாது என உணர்ந்த மருமகள் மாமியை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது அவருக்குப் பாதுகாப்பானது என உணர்கிறார். இகு குறித்து கணவனிடம் பேசுகிறார். கணவன் அதனைத் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். மிகச் சிறிய வயதில் அப்பாவை இழந்த தன்னை அம்மா மிகவும் அரவணைப்பாக வளர்த்ததைக் கூறி, அம்மாவை முதியோர் இல்லத்தில் விட தன்னால் முடியாது எனக் கூறி விடுகிறார். எவரையும் வேலைக்கு அமர்த்தி அம்மாவைப் பார்ப்பதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை இடம் தரவில்லை. இதனால் அம்மாவை ஊருக்கு அனுப்பி அம்மாவின் வீட்டில் அவரோடு கூடத் தங்குவதற்கு உதவியாளர் ஒருவரை அமர்த்தி, அம்மாவை பராமரிக்க மகன் விரும்புகிறார். ஊருக்கு போனாலே அம்மாவுக்குத் தெம்பு வந்து விடும் என்பது அவரது கணிப்பு.

அம்மாவின் விருப்பத்தை அறிய இருவரும் முயல்கிறார்கள். ஊருக்கோ... கோயில் திருவிழாவுக்கோ.. நானும் வாறன் என அம்மா ஆர்வத்துடன் கூறுகிறார். இப்போது மகன் ஊருக்கு நிரந்தரமாகப் போய் இருப்பது பற்றி அம்மாவிடம் கூற, அம்மா மறுத்து விடுகிறார். அம்மா ஊருக்குப் போவதனையோ, முதியோர் இல்லத்துக்குப் போவதனையோ விரும்பவில்லை. ஊருக்குப் போனால் நல்லது என்று அடிக்கடி கூறுவியளே என்று மகன் கேட்க, அம்மா கூறுகிறார் «அது ஊர் ஞாபகம் வரக்கை சொல்லுறனான். உன்னை விட்டுட்டு, மருமகளை, பேரப்பிள்ளைகளை விட்டிட்டுத் தனியாக ஊரில் இருக்கிறதே. என்னை இஞ்சை இருக்க விடுங்கோ» என்கிறார். புரியாத மொழி, பிடிக்காத சாப்பாடு, அந்நியச் சூழல் எனக் கூறி முதியோர் இல்லத்துக்குப் போவதையும் அம்மா மறுக்கிறார். தன்னை இந்த வீட்டிலேயே இருக்க விடுமாறு இறைஞ்சிக் கேட்கிறார். மகனும் மருமகளும் பேச்சை இத்துடன் நிறுத்தி அம்மாவின் விருப்பத்தின்படி விட்டு விடுகிறார்கள்.

சில நாட்களின் பின் மீண்டும் ஒரு விபத்து நிகழ்கிறது. அம்மா குளியல் அறையில் வழுக்கி விழுந்து விடுகிறார். தலையில் அடிபட்டு இரத்தம் கொட்டுகிறது. நல்லவேளையாக மருமகள் அதேநேரம் வீட்டுக்கு வந்தமையால் உடனடியாக அம்புலன்சை வரவழைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை. தகவலை மனைவி பதட்டத்தோடு கணவருக்குத் தெரிவிக்கிறார். கணவன் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சுகம் விசாரித்து விட்டு, அவரிடம் ஊருக்கு செல்வதற்கான விமானச் சீட்டினை கொடுக்கிறார். இரண்டு வாரங்களில் ஊருக்கு போவதற்கான ஆயத்தங்களை செய்யுமாறு கூறுகிறார். அம்மாவின் விருப்பத்தை மீறி அவரை ஊருக்கு அனுப்புவதனை மனைவி கடுமையாக எதிர்க்கிறார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கணவனின் முடிவை மனைவி மிகவும் ஆக்கிரோசமாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். வாதத்தின் உச்சத்தில் கணவன் மிகவும் உரத்து குரலில் கத்திக் சொல்கிறார். «நிப்பாட்டு, நான் ஆம்பிளை. இங்கை நான்தான் முடிவு எடுக்கிறது».

இந்த இடத்தில் நாடகம் நிறுத்தப்பட்டு பார்வையாளர்களுடன் அரங்கம் இணைக்கப்பட்டது. இவ் அரங்கத்தில் model எனக் கூறப்படும் மேற்குறிப்பிடப்பட்ட நாடகப்பகுதியில் இருந்து ஊருக்குத் திரும்பும் விடயம் தொடர்பான சிந்தனைகள் சிலவற்றை நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

ஊருக்குத் திரும்பி - மீளுதல்!   

2

புலம்பெயர் வாழ்வில் ஊருக்குப் போதல் அல்லது ஊருக்குத் திரும்புதல் என்பது முக்கியமான ஒரு விடயமாக இருக்கிறது. டயாஸ்பொறா அல்லது சிதறுகைச் சமூகம் என்ற கருதுகோளை வரையறுக்க முயன்ற கல்வியாளர்கள் பலர் ஊருக்குத் திரும்பும் விருப்பு (desire to return) என்பதனை டயாஸ்பொறாவுக்குரிய முக்கிய குணாம்சங்களில் ஒன்றாக வகைப்படுத்தினர். புலம்பெயர்ந்து வாழும் மக்களில் டயாஸ்பொறா என்ற வகையினர் சில குறிப்பிட்ட குணாம்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள் அல்லது இருக்க வேண்டும் என்ற கருத்து பல கல்வியாளர்களிடம் இருந்தது. ஒரு மையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் துயரம் நிறைந்த அனுபவங்களுடன் பாதிக்கப்பட்டவர்களாக சிதறிப் பரவியிருக்கும் தன்மை, தாம் வாழும் நாட்டைத் தமது நாடாக ஏற்றுக் கொள்ளாது தாமோ அல்லது தமது மூதாதையரோ எங்கிருந்து வந்தார்களோ அதனையே தமது தாயகமாகக் கொள்ளும் நிலைமை, தமது தாயகத்துக்கு (ஊருக்குத்) திரும்பும் விருப்பைத் தொடர்ச்சியாகக் கொண்டிருத்தல் போன்றவை டயாஸ்பொறாவுக்குரிய குணாம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இங்கு ஊருக்குச் செல்லும் விருப்பு என்பது நிரந்தரமாகவே ஊருக்குத் திரும்புதல் என்ற அரத்தத்தில்தான் உணரப்பட்டது.

ஆனால் காலவோட்டத்தில் டயாஸ்பொறாவுக்குரிய குணாம்சங்கள் எனக் கருதப்பட்டவை பலவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. டயாஸ்பொறாவை வரையறை செய்வது அல்லது அடையாளம் காண்பது தொடர்பாகவும் பல்வேறு வகையான கருத்துகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றாக ஊருக்குத் திரும்பும் விருப்பு என்பதற்குப் பதிலாக ஊருக்குத் திரும்பி மீளும் விருப்பு (desire to re-turn) அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஊருக்குத் திரும்பும் விருப்பு ஆரம்ப காலங்களில் இருந்ததனை அவதானிக்க முடிந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அது குறைவடைந்திருக்கிறது. ஊர் நினைவுகளுடன் வாழும்போது ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற விருப்பு மனதில் இருந்தாலும் நடைமுறையில் அது சாத்தியம் குறைந்ததாகவே இருந்து வருகிறது. இதேவேளை இவ் விருப்பு அவ்வப்போது தலையை நீட்டிக் கொண்டும்தானிருக்கிறது. எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அண்மையில் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு «ஊருக்குத் திரும்பணும்» என்ற தலைப்பைக் கொண்டிருந்தமை இங்கு கவனத்துக்குரியது. ஊருக்குத் திரும்பும் விரும்பு குறைவடைந்திருந்தாலும் ஊருக்குத் திரும்பி மீளும் விருப்பு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் வலுவாக இருக்கிறது.

இப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்மா ஊர் நினைவுகளுடன் வாழ்கிறார். ஊரை அடிக்கடி நினைத்து ஊருக்குப் போனால் நல்லாய் இருக்கும் என எண்ணிக் கொள்கிறார். அதனை அடிக்கடி சொல்லியும் கொள்கிறார். ஆனால் உண்மையில் ஊருக்கு நிரந்தரமாகத் திரும்பி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது அதனை மறுக்கிறார். இங்கு அவர் ஊருக்கு நிரந்தரமாகத் திரும்பும் விருப்பு பல்வேறு காரணங்களால் இல்லாது போகிறது. அதே நேரம் ஊர்த் திழுவிழாவுக்கு சென்று ஊரையும் திருவிழாவையும் பார்த்து ஊரவர்களை, தெரிந்தவர்களை சந்தித்துக் கதைத்து மீண்டும் நோர்வே திரும்புவதில் விருப்பு கொண்டவராய் இருக்கிறார். ஊருக்கு திரும்பும் விருப்பு ஊருக்குத் திரும்பி மீளும் விருப்பாக மாற்றம் அடைந்தமைக்கு அம்மா ஓர் உதாரணமாகி விடுகிறார்.

புலம்பெயர் மக்களுக்கும் ஊருக்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பதற்கு குறைந்த பட்சம் ஊருக்குத் திரும்பி மீளும் விருப்பு வலுவாக இருக்க வேண்டும். எமது அடுத்த தலைமுறையினரிடம் ஊருக்குத் திரும்பி மீளும் விருப்பு எப்படியாக இருக்கிறது? எதிர்காலத்தில் தமிழ் டயாஸ்பொறாவுக்கும் ஊருக்கும் இடையே இருக்கக்கூடிய உறவின் வலிமை இக் கேள்விக்குரிய பதிலில் கணிசமாகத் தங்கியிருக்கிறது.

3/7/2017 3:59:00 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்