Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் மக்கள் பேரவை - எதனை எதிர்பார்க்கிறோம்?

தமிழ் மக்கள் பேரவை - எதனை எதிர்பார்க்கிறோம்?
சர்வே எழுதுவது

 

கடந்த 18.03.2017 அன்று மாலை நோர்வே அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட ரொம்மன் வளாக 25வது ஆண்டுவிழாவுக்குச் சிறப்புவிருந்தினராக வந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடன் சிறிது நேரம் உரையாட முடிந்தது. இக் குறும் உரையாடலில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியற் கட்டமைப்பில் உள்ள போதாமை குறித்து எனது கருத்தை அவருக்குக் கூறினேன். ஒரு சில தனிமனிதர்களின் முன்னெடுப்பாகத் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு இருந்தாலும் இவ் அமைப்பில் அங்கம் வகிக்கும், இணைந்து செயற்படும் அரசியல் அமைப்புகளதும் மக்கள் அமைப்புகளதும் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியற்பீடம் அமைக்கப்பட்டு அதுவே தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட சபையாக இருக்க வேண்டும் என்பதனை அவரிடம் வலியுறுத்திக் கூறினேன். அவர் எனது கருத்தை மறுதலித்துப் பேசவில்லை. இருந்தும் இவ் விடயம் குறித்து விரிவாக விவாதிக்க நேரம் இடம் தரவில்லை.

தாயகத்தில் இருந்து அரசியற்பத்திகளை எழுதி வரும் நிலாந்தன், யதீந்திரா போன்ற அரசியல் ஆய்வாள நண்பர்களின் எழுத்துக்களைப் படிக்கும்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பிரதிநிதித்துவ ஜனநாயகமுறையில் உருவாகியிருக்கும் அரசியற் தலைமை தோல்வியடைந்து வருவதனை உணர முடிகிறது. இதனை இன்னொரு வகையில் சொல்வதானால் மக்களால் தங்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களின் நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாம். இது சிறிலங்கா அரச கட்டமைப்பின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் குறைபாடா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் குறைபாடா அல்லது இரண்டினதும் குறைபாடா என்பதும் கவனத்துக்குரியதொரு விடயமாகும்.

எது எவ்வாறு இருப்பினும், தற்போதய அரசியல் ஒழுங்கில் ஒரு மக்கள் கூட்டத்தின் தலைமையாக மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் அங்கீகாரம் பெறுகிறார்கள். இதனால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் குறித்து அக்கறை கொள்ளாமல் விடுவதோ அல்லது தேர்தல் ஜனநாயகமுறையை நிராகரிப்பதோ விவேகமானதொரு செயலாக இருக்க முடியாது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களை விசுவாசிப்பவர்களாக இல்லாது போயின், குறைந்தபட்சம் மக்களுக்கு அஞ்சுபவர்களாக இருக்கக்கூடிய புறச்சூழல் உருவாக்கப்படுமானால் மக்கள் தொடர்பான அலட்சியம், தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் தலைமைகளுக்கு இல்லாது போகும்.

இப் பத்தியை ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறேன். தமிழ் மக்கள் பேரவை, தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்பாகவே இதுவரை தன்னைத் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் குறைபாட்டை ஈடு செய்யும்வகையில் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக மயப்பட்ட மக்கள் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளுமா? அவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள தமிழ் மக்கள் பேரவை விரும்பினால் அதற்குரிய கட்டமைப்பை இது எவ்வாறு அமைத்துக் கொள்ளப் போகிறது?

பேரவையின் உருவாக்க முன்னெடுப்பில் சில நல்லெண்ணம் கொண்ட தனிமனிதர்கள் இருந்திருக்கிறார்கள். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை மையமாகக் கொண்டு, அவரது ஆதரவு என்பதனை முதலீடாக வைத்து, தமிழ் மக்கள் பேரவையினை கொண்டு நடத்தும் போக்கு அதனை உருவாக்கியவர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் அமைப்புகளுக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முதன்மைப் பாத்திரம் மக்கள் ஆதரவுக்கு அவசியமானது என்ற உணர்வு உண்டு.

வரலாற்றில் அரசியல் சமூக அமைப்புகளின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் தனிமனிதர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் இருப்பதனை மறுப்பதற்கில்லை. சில அமைப்புகளில் இப் பாத்திரம் தீர்மானகரமானதாகவும் அமைந்துவிடும். தமிழ் மக்கள் பேரவை போன்று, பல அமைப்புகள் இணைந்து இயங்கும் அமைப்புகளில் ஒரு தனிமனிதனின் பாத்திரம் எத்தகையதாக அமைய முடியும் என்பது குறித்து ஒரு தெளிவான புரிதல் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமைப்புகளுக்கு இருக்க வேண்டும்.

தாயகத்தில் உள்ள ஊடகவியலாள நண்பர் ஒருவரிடம் பேசும் போது, 'தமிழ் மக்கள் பேரவை எப்படி இருக்கிறது?' என்று கேட்டேன். 'படுத்துக் கிடக்கிறது. இடையிடையே எழும்பி நடவடிக்கைகளில் ஈடுபடும். பின்னர் படுத்துவிடும்' என்றார். 'இதற்கான காரணம் என்ன?' என்று அவரிடம் கேட்டேன். 'முதலமைச்சர் என்ற தனிமனிதரை நம்பி இயங்குகிறார்கள். பொருத்தமான கட்டமைப்பொன்றை இன்னும் அவர்கள் அமைத்துக் கொள்ளவில்லை' என்றார். இக் கருத்தினைத் தமிழ் மக்கள் பேரவை சார்ந்தவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஈழத் தாயகத்தை, 'தேசம்' என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற அரசியற் கோரிக்கையினை வலுப்படுத்த வேண்டியது ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கியமானதொரு பணி. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்கள் தனித்துவமான தேசத்தவர் என்று நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்குத் தடுமாற்றமில்லாமல் பங்களிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை - எதனை எதிர்பார்க்கிறோம்?

தேசம் என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்தால், தான் கஜேந்திரகுமாரின் நிலைப்பாட்டை எடுப்பதாகக் கருதப்பட்டுவிடும் என்று முதலமைச்சர் தயங்குவதாகவும் ஒரு கருத்து உண்டு. ஈழத்தமிழ் மக்கள் தனித்துவமான தேசத்தவர் என்பது கஜேந்திரகுமார் கண்டெடுத்த அரசியல் நிலைப்பாடல்ல. தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் காலத்தேயிருந்து தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடே இது. இலங்கைத்தீவில் தமிழர் தாயகமும் தமிழ் மக்கள் வாழ்வும் பாதுகாக்கப்பட, தேசம் என்ற நிலைப்பாட்டுக்கான அங்கீகாரத்தை வென்றெடுத்தல் அவசியமானதாகும். இந்த உணர்வுடன் தமிழ் மக்கள் பேரவை இயங்க வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை, தன்னை மீள ஒழுங்கமைத்து, தோல்வி கண்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கு மாற்றான ஓர் அரசயற்தலைமையினை வழங்க முன்வரவேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதனை பேரவை உறுதியான நிலைப்பாடாகக் கொள்ளலாம். சரியான அமைப்புக் கட்டமைப்பை உருவாக்கி, அதனைக் கிராமமட்டம் வரை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வாரு கிராமத்திலும் மக்களின் நன்மை தீமைகளுடன் இணைந்து நிற்கும் வகையிலான நெருக்கமான பிணைப்பை மக்களுடன் ஏற்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவை தன்னை மக்கள் மயப்படுத்த வேண்டும். தேசிய அரசியற்பிரச்சினை சார்ந்த விடயங்களில் மட்டுமன்றி, சமூகநீதி சார்ந்த விடயங்களிலும் பேரவை அக்கறையுடன் செயற்படல் அவசியம்.

தேர்தலில் பங்குபற்றும் அமைப்புகளைப் பங்காளராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை, தேர்தல் அரசியலில் இருந்து எவ்வாறு தள்ளி நிற்க முடியும் என்ற கேள்வி எழுதல் இயல்பானது. தேர்தல் அரசியலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஓர் அழுத்த சக்தியாக இயங்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை அமைதலே நல்லது. பேரவையில் உள்ள அமைப்புகள் தேர்தலில் போட்டியிடும் போது தமிழ் மக்கள் பேரவைக்கு வெளியே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேர்தலில் ஈடுபடாத மக்கள் அமைப்புகள், தமிழ் மக்கள் பேரவையில் கூடுதல் பங்கு வகித்தல் தமிழ் மக்கள் பேரவையினை, தேர்தல் அரசியலைக் கடந்த மக்கள் அரசியல் நடத்தும் அமைப்பாக வளர்த்தெடுக்க உதவும். அதுவே ஆரோக்கியம் என்பது என் துணிபு.

4/23/2017 1:42:54 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்