Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வாழ்க்கையால் நினைக்கப்படும் ஒரு புயற்பறவை

<p>வாழ்க்கையால் நினைக்கப்படும் ஒரு புயற்பறவை</p>
பா.செயப்பிரகாசம்.

 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 6  

செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரி உடலியல் கல்விக் கூடத்தில் (Anotomy Block) அவரது உடல் வழங்கப்பட்டதும், பதப்படுத்திட 'இன்னும் பத்து நிமிடங்களில் உள்ளே அனுப்பி விடுவோம்' என்றார் அங்கிருந்த பேராசிரியப் பெண்மணி. அவரிடமும் சுற்றி நின்ற மாணவர்களின் முகத்திலும் யாரிவர்? என்னும் கேள்வி நிழலிட்ட போது. 'நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பவர் தமிழ் மக்களின் கவி. கவிஞர் இன்குலாப்' என தெரிவித்துவிட்டு விடை பெறுகிறேன்.

ஒரு செயலின் நியாயத் தன்மையை வைத்து முடிவெடுப்பவர் என் தோழர்.   வெளித்தோற்றத்துக்கு, பொத்தாம் பொதுவில் 'உறுப்புதானம்' நல்ல விசயம். இறப்புக்குப் பின் செயலிழக்கும் உறுப்புக்கள், இன்னொரு உயிரின் இயங்குதலுக்கு மூலமாகின்றன. தனது சிறுநீரகம், இருதயம், விழிகள், கால் என முக்கியமான உயிரியக்கிகள் பழுதடைந்துள்ளன என்பதை என் தோழன் உணர்ந்திருந்தார். சேதாரமாகிப் போன உறுப்புக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது, கூடவே கூடாது. மருத்துவமனைக்கு அல்ல, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கற்கைக்கு உறுதுணையாகும் எனத் தெளிந்த முடிவினை எட்டினார்.

இறப்புக்குப் பின்னர் மகள் பயின்ற அதே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் கற்கைக்காக அவருடைய உடல் கையளிக்கப்பட்டுள்ளது. அவர் சொன்னதாக அவர் மகள் ஆமீனா பர்வீன் தெரிவித்த தகவல் 'நீ அங்க தானம்மா படிச்சே, அங்கேயே கொடுத்திருவோம்'

'விதியே விதியே

என்செய்ய நினைத்தாய்'

- காலத்தை நோக்கி கேள்வி எழுப்பியபடி, பிரம்மாண்டமான உடலியற் கூடத்தின் வெளியை நோக்கி பெருவிருட்சமாக மல்லாந்து கிடக்கிறார். வேர்முதல் நுனிவரையும் பயன்பாடுடைத்து பெருமரம்!

இன்குலாப் வெள்ளை மனதுக்காரர். வெள்ளை மனதுக்காரர்களுக்கு அதனாலே ஞாபகமறதி நிறைய. அவர் பணிபுரிந்த புதுக்கல்லூரி தமிழ்த்துறையில் ஞாபகமறதிப் பேராசிரியர் (Absent Minded Professor) என்ற ஒரு அடையாளமுண்டு.

<p>வாழ்க்கையால் நினைக்கப்படும் ஒரு புயற்பறவை</p>

அவருடைய மகள் ஆமினா பர்வீன் தற்போது மருத்துவர். ஆமினாவுக்கு மருத்துவக்கல்லூரி நுழைவு நேர்காணலுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகத்திலிருந்து அழைப்பு வந்தது. 1999- ஆம் ஆண்டு, ஜூலை.   இன்குலாப் அந்த நேரத்தில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்று விட்டார். அது தொடர்பான செய்தியைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில் தமிழ்த்துறையின் விரிவுரையாள நண்பர் குறிப்பிட்டார். 'மறந்து போய் புறப்பட்டுப் போயிருப்பார். அவருக்கு மகள், மகன்கள் தொடர்பானது என்றால் மறந்து போய்விடும்' என்றார்.

அவருடைய வாதத்துக்கு நியாயம் கூட்டுவது போல் அவர் சொன்ன இன்னொரு தகவல், 'இன்குலாப் எங்கள் துறையில் பணியாற்றியது எங்களுக்கு ரொம்ப வசதி. நாங்கள் திருத்த வேண்டிய மாணவர்களின் கட்டுரை நோட்டுகளை அவருடைய நோட்டுக்களில் சேர்த்து இடையில் சொருகிவிடுவோம். அவர் பாட்டுக்கு திருத்திக் கொண்டே போவார். அவர் கண்முன்பே எங்களுடைய நோட்டுக்களை எடுத்துக்கொண்டு, நல்ல காரியம் இப்படியே தொடரட்டும் என்று நன்றி சொல்வோம்'

ஆனால் மகளுடைய மருத்துவக் கல்லூரி நேர்காணலில் நிகழ்ந்தது அவ்வாறன்று. மகளுக்கு மருத்துவ நேர்காணல் எந்த நாளில் வருமென அவருக்குத் தெரியாது. வரும் முன்னர் என்னிடம் தெரிவித்து விட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தார். ஆமினா பர்வீனை நேர்காணலுக்கு நான் அழைத்துச் சென்றேன். தேர்வாகி செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரியில் ஆமினாவுக்கு ஒதுக்கீடு ஆயிற்று. சேருகிற அன்று செங்கற்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு சென்னையிலிருந்து கூட்டிச் சென்று சேர்த்து விட்டுத் திரும்பினேன்.

மத நியதி, ஆசாரம், விதிகள் இவைகளினின்றும் பகுத்தறிவு பூர்வமாய் விலகி நின்றார். 'நான் மதம் சார்ந்தவனல்ல, மனிதன் சார்ந்தவன்' என்று முன்னத்தி ஏர் பிடித்தார். கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் அவர் பிறந்த இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து எழுந்தன. எதுவும் அவரைப் பயமுறுத்தவில்லை. சொந்த ஊரான கீழக்கரை மரைக்காயர்கள் என அறியப்பட்ட உயர்நிலை இசுலாமியர்களிடமிருந்து உயிரழிப்புச் செய்துவிடுவோம் என்கிற மிரட்டல் வந்தவேளையில், அவர் வெளிப்படுத்தியவை மணிகொண்டடித்த மாதிரி கணீர் வாசகம்.

'நான் கொல்லப்பட்டால் மீண்டும் வருவேன். விதைக்கப்பட்ட கல்லறையாவேன்.' 

விடுதலைக்காக கொலை செய்யப்பட்ட கல்லறைகளில் விடுதலை விதை முளைக்காத கல்லறை எதுவுமே இல்லை என்னும் வால்ட்விட்மனின் வரிகளை இவ்விடத்தில் உயிர்க்கச் செய்தார்.

தனது சொல்லுக்கும் சுயவாழ்க்கைக்கும் இடைவெளியற்று வாழ்ந்தவர் தோழர் இன்குலாப். முரண்பாடுகளின் மூட்டையாய் தன்னை ஆக்கிக் கொண்டவர் இல்லை. இப்போதுள்ளதற்கும் மேலே இன்னொன்று இருக்கிறது, அதை எட்டிப் பிடித்துவிடலாம் என்று எண்ணுகின்ற 'சுயமுன்னேற்றப் படைப்பாளிகளை' நம்மில் மிகுதியும் காண இயலும். இத்தகையோர் முரண்களோடு இயங்குதல் தவிர்க்க இயலாது. மக்களுக்கே இந்தவாழ்வுதான் என நிர்ணயமாகிவிட்ட பின், அதையும் தாண்டி தங்களுக்கு வேறு வாழ்வா என்று புத்திபூர்வமான கேள்வியை எழுப்பி, செயல்முறைப் பூர்வமாய், சுய முரண்களற்ற வாழ்வாய் ஆக்கிக்கொண்ட ஒரு வாழ்வியல்ப் போராளி.

நவீன கவிதை, நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை. ஆயினும் அவை பொருட்டேயல்ல.     மனிதனாய் வாழ்ந்த பதிவு தான்.

மூத்த மகன் பெயர் செல்வன். இஸ்லாமியப் பாரம்பரியத்தில் 'செல்வன்' என்றிவ்வாறான பெயரினை எவரிடமும் காண இயலுமா? விடை எளிதானது. மிகக் கனமானதும் கூட! தன்னை ஒரு இஸ்லாமியர் என அவர் ஒருபோதும் அடையாளப்படுத்திக்கொண்டவர் அல்ல. 

'சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்'

 -அவரது இக்கவிதை ஒரு பிரகடனம்.

செல்வன் திருமணத்தை தான் குடியிருந்த ஜானிஜான் கான் சாலையிலுள்ள வீட்டில், மத சம்பிரதாயங்களில்லாது, குடும்பத்தைச் சார்ந்த பெரியவர் ஒருவர் நடத்தி வைக்கச் செய்து முடித்தார்.

இரண்டாவது மகன் இன்குலாபுக்கு, தகுதியான மணமகளைத் தேடிக் கண்டார். பெயர் தமிழ்ச்செல்வி. பகுத்தறிவுச் சிந்தனையில் காலமெல்லாம் நடைபோட்ட ஒரு குடும்பத்தின் மகள் அவர். தாய் தந்தை மட்டுமல்ல, அக்குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சாதி மத வேறுபாடு கடந்து மணம்புரிந்து கொண்டவர்கள். இன்குலாபின் தேடலுக்கு கிடைத்த வெற்றி என்பதினும், மகனுக்கு வாழ்க்கை இணையாய் வர ஒப்பிய பெண்ணின் வெற்றியாக, பெண் கொடுக்க ஒப்பிய குடும்பத்தின் வெற்றியாக இதனைக் காண வேண்டும். கடக்க வேண்டிய தடைகளும் எதிர்கொள்ள வேண்டிய நொடிகளும் சுழிகளும் மணமகன் வீட்டாரை விட மணமகள் வீட்டாருக்கு அதிகம். 

மகனுடைய திருமணத்தினை சடங்குகள் இன்றி சுயமரியாதைத் திருமணமாக நடத்தினார். இஸ்லாமிய அடையாளமற்று நடத்தப்பட்டதை உறவினர் சிலரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. சிறு சிறு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாய் வருகை தந்தவர்களை, வாழ்த்த வந்தவர்களை அவரால் முறையாக உபசரிக்க இயலாமல் போயிற்று.

மகள் ஆமினா பர்வினின் திருமணமும் அவ்வாறே! கவிஞர் அப்துல் ரகுமான் தலைமையேற்று வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்திவைத்தார். உறவினர்கள் அனைவரும் வருகை தர சென்னையில் ஒரு அரங்கத்தில் நடைபெற்றது.

1984 டிசம்பர் 3 ஆம் நாள் இரவு மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு ஆலை விசவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. விசவாயு தாக்கி இரண்டு நாளில் 2500 மாண்டு போயினர். இதுவரை 15000 க்கு மேற்பட்டோர் பிணமாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கண்பார்வை இழந்தனர். இன்னும் இலட்சக்கணக்கான பேர் விசவாயு தாக்கியதால் நடைப்பிணமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

போபால் விஷவாயுக்கு மூலமான யூனியன் கார்பைடு தொழிற்சாலை ஒரு அமெரிக்க நிறுவனம். யூனியன் கார்பைடு நிறுவனதையும் உடந்தையாய்ச் செயல்படும் அரசையும் கண்டித்து 1985 - இல் சுற்றுச் சூழல் ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், மருத்துவர் டொமினிக் சாமிநாதன் முன்னெடுக்க கவிஞர் இன்குலாப் இணைந்து குழந்தைகளைத் திரட்டி அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.  

கவிஞர் இன்குலாப் தனது மகன்கள் செல்வம், இன்குலாப், மகள் ஆமீனாவுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். அமெரிக்க தூதரகத்திற்கு எதிரே நின்று ஆர்ப்பட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. அனைவரும் குழந்தைகளுடன் சாலையில் இறங்கிப் போராடினர். அப்போது மகள் ஆமினாவுக்கு மூன்று வயது. கீச்சுக் குரலில் அந்தச் சின்ன சிறு குஞ்சு எதிர்ப்புக் குரல் எழுப்ப, மற்ற குழந்தைகள் முழக்கமிட்டன.

'வானம் வேண்டும்

பூமி வேண்டும்

நாங்கள் வாழ தூய்மையான

காற்று வேண்டும்'

குழந்தை ஆமினா ஒலிக்க மற்ற குழந்தைகளும் தடையை மீறி முன்னேறி முழங்க ஒருமணிநேரம் போக்குவரத்து நின்றுபோனது. அன்று தொடங்கிய சுற்றுச்சூழல் சிதைப்பு எதிர்ப்புக் குரல் இன்குலாப்பிடம் அணு உலை எதிர்ப்புப் போரட்டம் வரை தொடர்ந்தது. இன்குலாபுடையதாக மட்டுமல்ல, அவர் குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலில் சூழல் பாதுகாப்பு இன்றளவும் தொடருகிறது.

ஒரு தொலைக்காட்சியின் செய்தியாளர் இஸ்லாமிய சமுதாயத்தில் நிலவும் 'தலாக்' விவாகரத்து முறை பற்றி நேர்காணல் செய்ய வந்தார். கவிஞரின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் செய்தியாளர் அனுப்பப்பட்டார். இன்குலாப் செய்தியாளரிடம் கேட்ட கேள்வி, 'நீங்கள் என்னை ஒரு இஸ்லாமியராகக் கருதி வந்திருப்பதாகத் தெரிகிறது. நான் இன்குலாப்பாக பேசுவேன்' என்றார்.

செய்தியாளர் சொன்னார் 'நான் இன்குலாபின் கருத்தை அறியவே வந்திருக்கிறேன்'

'தலாக் ஆணதிகாரக் கொடூரத்தின் உச்சம். பெண்களை உயிருள்ள மனுசிகளாக எண்ணாமல் அடிமைகளாகக் கருதுகிற தலாக் முறைக்கு எந்தக் காரண காரியமும் இல்லை. காரண காரியமில்லை என்பதுதான் அதற்கான ஒரே காரணம்' என்று விமர்சித்தார். மத அடிப்படைவாதிகள் எத்தகைய எதிர்வினை கொண்டு சீறியிருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

'முஸ்லிம் திருமணம் தொடர்பான விவாகரத்துக்களில் 'ஜமா அத்கள்' ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்குகின்றன. சொத்துப் பிரச்சனைகளில் கூட இவர்கள்தான் தீர்ப்பு வழங்குகின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இது போன்ற கட்டப் பஞ்சாயத்துக்களின் முடிவை எதிர்த்து நீதிமன்றங்களை நாட முடிவதில்லை. ஐமா அத்கள் 'ஷரியத் கவுன்சில்' என்ற பெயரில் நீதிமன்றங்கள் போல் செயல்பட தடைவிதிக்க வேண்டும்' என பாதிப்புக்குள்ளாகி வாழ்வு சிதைக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. (20-12-2016)

'கோயில், சர்ச், மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களின் உள்ளே சட்டவிரோத மற்றொரு நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது. வழிபாட்டுத் தலங்களில் இறைவழிபாடுதான் நடக்கவேண்டும். போலீஸார் வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்னும் இத்தீர்ப்பு இன்குலாப் முன்மொழிந்த கருத்துக்கான வழிமொழிதலாய் அமைந்துவிட்டது.

மதங்கள் காத்துவரும் மூடுண்ட சமுதாயத்திலும் வெளிப்படையான முதலாளிய சமுதாயத்திலும் பெண்ணின் மீதான ஆண்களின் அத்துமீறல்களை தடுக்கமுடியவில்லை. மதச் சமூகம் செயல்படுகிற இடமெங்கும் ஆண்களின் சமூகமாகவே இருக்கிறது. கோயில், சர்ச். மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களில் திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பெண் மீதான அநீதியின் தொடக்க வளையமாக வழிபாட்டுத் தலங்களின் திருமணங்கள் அமைகின்றன. ஜமா- அத், ஷரியத் கவுன்சில் போன்ற ஆண்சமூகப் பஞ்சாயத்துகள் பெண்ணின் வாழ்வுரிமைச் சிதைப்பை தொடர்ந்து கைக்கொண்டு வருகின்றன.  'வழிபாட்டுத் தலங்களில் இறை வழிபாடுதான் நடக்கவேண்டும். வேறெதுவும் கூடாது' என்ற உட்குறிப்பை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடரும்....

2/11/2017 1:19:59 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்