Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சொல்லும் செயலும் நேர்பட வைத்து வாழுதல்

<p>சொல்லும் செயலும் நேர்பட வைத்து வாழுதல்</p>
பா.செயப்பிரகாசம்.

 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 7  

அவர் வசிக்கும் 'மதுரை மீனாட்சிபுரம்' சரியாக வண்டலூர் வனவிலங்குகள் காட்சியகத்தின் தென்கிழக்கில் உள்ளது. மாநகர உருவாக்கத்தில் உண்டான புதிய குடியிருப்புப் பகுதி அது. ஒரு தடவை சிரித்துக் கொண்டு இன்குலாப் சொன்னார். 'யானை பிளிறும் சத்தம், சிங்கத்தின் கர்ஜனை, புலிகளின் உறுமல் எல்லாமும் என் காதுகளில் கேட்கும்' 

புதிய குடியிருப்பு வடிவமைப்பு செய்த போது சமூகநலக்கூடம், பேருந்து நிலையம், விளையாட்டுத்திடல், பூங்காவுக்கான இடங்கள் ஊராட்சியால் ஒதுக்கப்பட்டன. எல்லாம் செய்யும் வல்லமைகொண்ட சில 'சமுதாயப் பிரம்மாக்களால்' சமூக நலக்கூடம், பேருந்து நிலையத்துக்கென ஒதுக்கீடு ஆன இடங்கள் கபளிகரம் செய்யப்பட்டன. இதுவரை அவைகளுக்கென ஒதுக்கப்பட்ட பொதுநிலங்கள் எங்குள்ளன, அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்தவர்கள் யார் என அங்கத்திய மக்கள் அறிவார்கள். ஆனாலும் அரசியல் கட்சிக்காரர்கள், அதிகார வர்க்கம், ரியல் எஸ்டேட் தாதாக்கள் (எல்லாம் வல்ல பிரம்மாக்கள்) கூட்டு விளையாட்டின் முன்னால் மவுனமாகிக் கிடந்தனர். இறுதியாக விளையாட்டுத் திடலையும் பூங்காவையும் சொந்தக் காணியாகப் போலிப் பதிவு செய்து 'பிளாட்' போட்டு விற்பனை செய்ய, ஊரை அடித்து உலையில் போடும் கூட்டத்தின் பிரதிநிதியான ஒரு 'ரியல் எஸ்டேட் தாதா' முயன்றார். பூங்காவை விசிபி இயந்திரத்தினால் சமப்படுத்தி வேலி (Fencing) போட அடியாட்களுடன் களத்தில் நின்றிருக்கிறார்.

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இன்குலாப் இல்லத்தின் எதிரில் இருக்கிறது. ஒருகால் நீக்கம் நடைபெறும் முன்னிருந்து குடியிருப்போர் சங்கத்தின் உந்து சக்தியாய் இருந்து ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தினை ஒருங்கிணைத்தார். குடியிருப்புவாசிகள் போராடத் தொடங்கினர். பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கடைசியில் நில அபகரிப்பு வழக்குப் போட்டார்கள். 'ரியல் எஸ்டேட்' அதிபர் என்ற அந்த அசகாயசூரன் 'எனது சொந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயன்றுள்ளனர். நிலத்தை சீர்திருத்தம் செய்து வீடு கட்ட முயலுகையில் அவர்கள் அடியாட்களைத் திரட்டி வந்து தாக்கினர்' என இன்குலாப் உள்ளடங்கிய சிலர் மீது புகார் தந்து வழக்குப் போட்டான். இம்மாதிரி வேளைகளில் காவல்நிலையம் என்ன செய்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

நில ஆக்கிரமிப்பாளனின் அடியாட்கள் இன்குலாபின் வீட்டுக்குள் பிரவேசித்துப் பயமுறுத்தினர். அதுவும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் காலை 10 மணிக்குமேல் வந்து 'சண்டியர்கள்' நின்றார்கள். அந்த நேரத்தில் வீடுகளில் குடியிருப்புவாசிகள் எவரும் இருக்கமாட்டார்கள். அனைவரும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு ஈ, காக்கை கூட இல்லாது போகும் அந்நேரத்தில் இன்குலாப் மட்டும் தனியாக இருப்பார் என்பதை அறிந்து நுழைவார்கள். 'நோய்க்கு மருந்திருக்கு, பிடிவாதத்துக்கு என்ன மருந்து' – அவரைப் பார்த்து மிரட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் மு. நடராசன் புரட்சிகர மா.லெ. (மக்கள் விடுதலை) அமைப்பைச் சேர்ந்த தோழர். இவர்கள் இப்படிக் கேட்டதாக அவரிடம் தெரிவித்திருக்கிறார் இன்குலாப்.

இன்னொரு நாள் தாதாக்களின் அடியாட்கள் வந்து மிரட்டியபோது கைபேசியில் தெரிவிக்க, தோழர் நடராசன் தன்னுடன் சில தோழர்களைத் திரட்டி வந்து அடியாட்களைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார். (இன்குலாப் அப்பகுதியில் வீடு எழுப்பி குடியேறிய நாள்முதல் குடும்பத்திற்கு பலவகையிலும் உதவிடும் தோழராக இருந்து வருகிறார் மு.நடராசன்) ஆனாலும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பூங்காவைச் சுத்திகரித்து பிளாட் போடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இன்குலாப் வீட்டின் வாசலில் நின்று அவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார். 'உங்கள் உடல்நலம் பாதிக்கும். நீங்கள் வரவேண்டாம்' என அவரை வீட்டில் இருத்திவிட்டு குடியிருப்போர் சங்கத்தினர் களத்தில் நின்று போராடினார்கள்.  நிலஅபகரிப்பு வழக்குக்காக நியமிக்கப்பட்ட வருவாய் அலுவலர், காவல்துறை தனி ஆணையர் ஆகியோரைத் தொடர்ந்து சந்தித்துப் போராடியதன் காரணமாய், குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்கினை பின்னர் அரசே தனது வழக்காக எடுத்து நடத்தியது. இரண்டாண்டுகளின் பின் அண்மையில் அது பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பொதுச்சொத்து என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

நிலஅபகரிப்பை எதிர்த்துப் போராடி அதை மக்களுக்காக்கியதில் இன்குலாப் பெருமகிழ்ச்சியடைத்திருக்கிறார். போராட்டத்தின் முடிவில் கைவசப்படுகிற மகிழ்ச்சி அது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் 'கல்புர்கி' 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் கொலை செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற முறையில் இந்துத்துவ வெறியர்கள் புனெயில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். 2013-பிப்ரவரியில் மராட்டிய மாநிலத்தில் கோலாப்பூரைச் சேர்ந்த பன்சாரே என்ற மக்களின் போராளியைக் கொலை செய்தனர். இந்தியாவெங்கும் எழுத்தாளர்களிடையே ஒரு கொந்தளிப்பு நிகழ்ந்தது. பல மொழிகளைச் சேர்ந்த 65- க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் தமக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்தனர். ஆனால் ஒரு அசைவுமில்லை தமிழக இலக்கியப் பிரம்மாக்களிடம்! சாகித்ய அகாதமி விருதுபெற்ற ஒரு 16 பேர் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டு சமாதானமாகினர்.

<p>சொல்லும் செயலும் நேர்பட வைத்து வாழுதல்</p>

சென்னையில் அடையாறில் உள்ள இராசரத்தினம் அரங்கில் கருத்துரிமை அமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன அரங்கில் நான் உரையாற்றிய போது 'சாகித்ய அகாதமியின் நல்ல காலம் எனக்கு இதுவரை விருது வழங்கவில்லை. விருது வழங்கியிருந்தால் 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக விருதை வீசியெறிந்திருப்பேன்' என்று கூறினேன்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இனிய நண்பர் இன்குலாப் அதனைச் செய்தார். தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் 2006 - ல் அவருக்கு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்திருந்தது. ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டு கொள்ளாத அன்றைய தமிழக அரசைக் கண்டித்து   கலைமாமணி விருதையும் தங்கப் பதக்கத்தையும் திருப்பி அளிக்கும் யோசனையை முதலில் என்னுடன் பகிர்ந்தார். அது சரியே என்றேன்.

'கலைமாமணி விருது கௌரவமாக அல்லாமல் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. இதை எனக்குத் தந்த தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதாக அமையும். தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடுகையில் இது நிரம்பச் சாதாரணமானது.'

விருதைத் திருப்பி அனுப்பி தன்னை கௌரவப்படுத்திக் கொண்டார். விருதைத் திருப்பியளிக்கும் கடிதத்தை தட்டச்சு செய்து, அவரின் கையொப்பத்துடன் அரசுக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்தேன். ஏன் பதிவு அஞ்சல்? அவ்வாறான கடிதம் வரவில்லயென அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மறுத்துவிட்டால் என்னாவது? அரசு என்றால் ஆயிரம் பிரச்சனைகள்!

இன்குலாபின் கேள்விகள்

'எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க 

நாங்க எரியும் போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?'

இன்குலாப் எழுப்பிய கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் திராணி இன்றைய சமுதாயத்துக்கு இல்லை. அதை நோக்கிய செயல்வடிவு எதுவும் உருக்கொள்ளவில்லை. இந்தச் சமுதாயத்துக்கு தான்தான் காவல்காரன் என்று உரிமை கொண்டாடி   சட்டம், ஒழுங்கு, தடி, துப்பாக்கிகளைக் கைக்கொண்டிருக்கிற அரசு என்ற அமைப்பு இன்னும் அப்பதில் நோக்கி ஒரு எட்டு கூட எடுத்துவைக்கவில்லை.  பதில் தர வக்கணையற்ற சமுதாயமும், அரசும் எரியும் நெருப்பில் எண்ணை வார்க்கிற ஊழியத்தை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கேள்வி அல்லது விமர்சனம் பதிலளிக்கப்படாமல் இன்னும் ஜீவிக்கிறது என்றால் அந்தக் கேள்வி ஆழமாய் ஆணிவேர் விட்டிருக்கிறது என்று பொருள். பதிலளிப்பைக் காணுகிற நாள் இச்சமுதாய அடிமட்டம் தகர்ந்து பொலபொலவென உதிர்ந்து போகிற நாளாக இருக்கும். ஏனெனில் இந்திய சமுதாயம் வர்ணாசிரமப் பிரிவான சாதிய அடிப்படையில் நின்றுகொண்டிருக்கிறது.

இந்திய சமூகம் மட்டுமல்ல, 'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்' என நீட்டி முழக்குகிற தமிழ்ச் சமூகமும் சாதிய, வர்ணாசிரம தர்மத்தில் வாழுகிறது. இன்குலாப் எழுப்பிய இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, எந்தவொரு கேள்விக்கும் தமிழ்ச் சமூகம் பதில் பேசா ஊமையாக நின்று கொண்டிருக்கிறது.

மதுரையில் 18-12-2016 அன்று நடைபெற்ற இன்குலாப் நினைவேந்தல் நிகழ்வில் கவிஞர், ஆசிரியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் உரையாற்றுகையில் வெளிப்படுத்திய ஒரு குறிப்பு எம் எல்லோரையும் கட்டிப் போட்டது. 'இதுவரை நான் இன்குலாபை நேரில் கண்டதில்லை. ஒரே அரங்கத்தில் பேசியதுமில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரேயொரு சொல்மட்டும் என்னுடன் கூடவே வந்தது. நாதாரிப் பய, சண்டாளப் பய, தேவடியாப் பய, காமுட்டாப் பய, சூம்படைஞ்ச பய, மாடுதிண்னி என்று எங்களைச் சுற்றி கெட்ட வார்த்தைகள் நட்டு வைத்திருந்தனர். இன்குலாப்தான் முதன் முதலாய் 'நீ மனுசன்' என்றார்.  என்னை 'மனுசன்' என்ற சொல்லால் அழைத்தார். உன்னைப் போல அவனைப் போல எட்டுச் சாணு உசரமுள்ள மனுசன் என்றார். என்னை மனுசன்னு சொன்ன ஒரே ஆள் அவர். அவர் சொன்ன மனுசன் என்ற சொல் எங்களுடன் நிற்கிறது'

தங்களுக்கு மனித அடையாளம் தந்த மக்கள் கவியின் சொல்லில் நெகிழ்ந்து போய் நின்றார்.

கடற்கரை என்ற குறவன் குறத்தியாட்டக் கலைஞர், அவர் ப....... இனம்.   குறவன் குறத்தியாட்டக் கலைஞர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆட்டக்குழுவில் ஒன்றிரண்டு பேர் இடைநிலை சாதியைச் சேர்ந்த சூத்திரராக இருந்தார்கள். மருந்துக்கும் உயர்சாதியைக் காண இயலாது.

புளியங்குளம் என்ற ஊருக்கு ஆட்டம் நடத்தப் போயிருந்தார் கடற்கரை.   புளியங்குளத்தில் ப…ர், ப…..ர், அ……ர் இருக்கிறார்கள். இந்த மூன்று சனத்துக்கும் மேலே இடைநிலை சாதி, உயர் சாதி இருக்கின்றது. அவர்கள் அதிகாரமுள்ள கூட்டம். 

முதல்நாள் ராத்திரி குறவன் - குறத்தியாட்டம். கடற்கரை சுருட்டி எடுத்துவிட்டார். வாத்தியாருக்கு ஈடுகொடுத்து ஆட்டக்காரர்களும் பின்னி எடுத்துவிட்டார்கள். அடுத்த நாள் காலை கடற்கரையும் குழுவினரும் தேநீர் சாப்பிடப் போனார்கள். முந்திய நாள் கடற்கரை போட்ட ஆட்டத்தையெல்லாம் சிரிக்கச் சிரிக்கப் பார்த்து ரசித்த கூட்டமும் ஆட்டக்காரர்களைச் சுற்றிக் குழுமியிருந்தது. தேநீர்க்கடை நடத்துகிறவர் தன்னை மேல்சாதியாகக் கருதிக் கொண்டிருக்கிற இடைநிலை சாதிக்காரர். 'வா கடற்கரை, டீ குடி' என்றார்.

'அதுக்குத் தானே வந்திருக்கோம்' என்றார் கடற்கரை. தேநீரை சிரட்டையில் (கொட்டங்கச்சி) ஊற்றிக் கொடுத்தார் கடைக்காரர்.

'ஏன் சிரட்டையில கொடுத்தாங்க. மத்தவங்களுக்கு மாதிரி டம்ளர்ல குடுங்கன்னு கேக்க வேண்டியது தானே' நான் கேட்டேன்.

'அவங்க சாப்பிடுற டம்ளரில நாங்க சாப்பிட மாட்டோமில்ல' என்றார் கடற்கரை.

'அடிரா சக்கை' என்று ஆளைத் தோள்மேல் தூக்கிக் கொண்டாட வேண்டும் போலிருந்தது. 'அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள் எங்களுக்கு ஆகாதது. அதை நாங்க தொடமாட்டோம்' என்பது அதன் அர்த்தம். 

'எங்களைப் புறக்கணிப்பதாக நினைக்கிறார்கள். இல்லை நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கிறோம்.'

'நீ என்ன எங்களைத் தீண்டத் தகாதவன் என்று நினைப்பது? நாங்களல்லவா உன்னைத் தீண்டத்தகாதவன் என்று நினைக்கிறோம்.'

'உன்னை வைத்துத் தான் நாங்கள் என்று நினைக்கிறாய். இல்லை, எங்களை வைத்துத் தான் நீ'

'நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஊரின் கடைசியில் இருப்பது சேரி என்று.

நாங்கள் சொல்கிறோம், ஊரின் முதலில் இருக்கிறது சேரி என்று!'

கடற்கரையின் ஒரு வாசகத்திலிருந்து இப்படி எழுச்சிதரும் பல உள்அர்த்தங்களை தொடுத்துக் கொண்டே போகலாம். மனசளவில் அவர்கள் வில்லேற்றிவிட்டார்கள். செயலளவில் வில்லெடுக்க நிறைய நாள் ஆகப் போவதில்லை.

இவ்வாறு சிதறல் சிதறலான சில பதில்கள் உண்டேயன்றி, இன்குலாப் எழுப்பிய கேள்விக்கான நிரந்தர விடையை அளிக்கத் திராணியற்ற 'சாவாரஞ் செத்த' சமுதாயம் இன்னும் வாழ்கிறது.

சொல்லும் செயலும் நேர்பட வைத்து வாழுதல் என்பது பகுத்தறிவு பூர்வமானது. காரண காரிய சிந்திப்பு அடிப்படையிலானது. தன் வாழ்வு, தன்நிலை பற்றி தளர்வுக் குரல் அவரிடம் காணவில்லை. அவர் வீரச்சாவு எய்தும் ஆறு மாதங்கள் முன் ஒரு நூலுக்கு அணிந்துரை தருமாறு கேட்டேன். தட்டச்சு வடிவில் நூலும் அனுப்பியிருந்தேன். நேரில் கண்டபோது தெரிவித்தார் 'என்னால் எழுதவோ, வாசிக்கவோ இயலவில்லை. முயன்றால் நெஞ்சுவலி வருகிறது'

'பிறகு என்ன செய்கிறீர்கள்?'

'அவ்வாறான பொழுதுகளில் நான் சொல்ல பேத்தி ஆயிஷா எழுதுகிறாள்'

தொடரும்..

2/17/2017 10:27:10 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்