Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வைக்கப்படாத கொள்ளிகள்! 

வைக்கப்படாத கொள்ளிகள்! 
மனா

 

'மனா! குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்?“

'கொள்ளி வைப்பன்'

கேள்விக்கான பதில் கிடைத்ததும் அகமகிழ்வார் குஞ்சையா. இந்தக் கேள்வியினதோ நான் சொன்ன பதிலினதோ தாக்கம் என்னவென்று தெரியாத வயது அது.

அந்தப் பதிலை உறுதிப்படுத்துவதற்காகவோ என்னவோ, என்மீது அபாரப் பிரியம் காட்டிய அவர் அடிக்கடி எனக்குத் தின் பண்டங்களை வாங்கித் தருவார். அடிக்கடி அவை எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நானும் இந்தப்  பதிலைச் சொல்வேன்.

சகோதரர்களான எனது ஐயாவும் குஞ்சையாவும் முறையே சகோதரிகளான எனது அம்மாவையும், குஞ்சம்மாவையும் திருமணம் செய்திருந்தமையால் இவர்களுடன் எனக்கு நெருக்கம் கூட. எனது ஐயா வெளி மாவட்டத்திலேயே வதிய நேர்ந்ததால் நாலு வயதிலேயே அம்மாவை இழந்த என்மீது குஞ்சையாவுக்கு நல்ல வாரப்பாடு.

அடுத்தது ஆண்பிள்ளை தான் என்ற நம்பிக்கையில், அடுத்தடுத்து சியாமளா, மஞ்சுளா, பிரேமளா, கோமளா என்று பெற்றுக் கொண்டே போனதில், இனி ஆண் பிள்ளையே கிடைக்காது என்று முடிவுகட்டி விட்டதாலோ என்னவோ என்னையே தனது ஆண் பிள்ளை என்றும் குஞ்சையா முடிவு கட்டியிருக்க வேண்டும்.

தமிழ் உணர்வு மிக்க குஞ்சையா நாளாக நாளாக எனது ஆதர்ஷ புருஷராக விளங்கினார். 'சுதந்திரன்' பத்திரிகை, அதன் வெளியீடுகளான காசி ஆனந்தன் அண்ணாவின் குட்டிக் குட்டிக் கவிதைத் தொகுப்புகள் என இவர் வாங்கி வருபவை எனது வாசிப்புப் பசிக்குத் தீனியாகின. அவற்றின் தாக்கம் எனது மனதில் பதியலாயின.

தொடர்ந்தும் குஞ்சையா குஞ்சம்மாவுக்கு சரளா, மங்களா என பெண் பிள்ளைகளே பிறந்தன. அடுத்ததும் பெண்பிள்ளை. 'சும்மா 'ளா' 'ளா' எண்டு பேர் வைச்சுக்கொண்டு போறதால தான் தொடர்ந்து உங்களுக்குப் பெட்டையாப் பிறக்குது. இந்த முறை பேரை மாத்தி வையுங்கோ' என்று பலரும் சொன்னதால் 'ளா' வரிசையை முறித்து 'வாசுகி' என பெயர் வைத்தனர்.

வைக்கப்படாத கொள்ளிகள்! 

அந்த ராசியோ என்னவோ அதற்கு அடுத்ததாகக் கிடைத்தது ஆண் குழந்தை. 'செந்தில் குமரன்' என்று அவனுக்குப் பெயரிட்டு விழாக் கொண்டாடியது குஞ்சையா வீடு. அதன் பின்னர் 'தம்பியுடையான் படைக் கஞ்சான்' என்ற பழமொழி நினைவுக்கு வரவே இவனுக்கு ஒரு தம்பியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்து மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமல் பெண் குழந்தையாகவே பிறந்தது. 'கவிதா' என்ற அதற்குப் பெயர் வைத்ததுடன் எல்லாவற்றிக்கும் சுபம் சொல்லியாயிற்று.

இக்காலப் பகுதியில் நான், 'குஞ்சையா இப்ப செத்து.. நான் கொள்ளி வைக்கப் போனா.. அவர் பெட்டிக்குள்ளால எழும்பி, நீ ஏன் கொள்ளி வைக்கிறாய்? செந்தில் எங்கை போட்டான்? என்று கேட்டாலும் கேப்பார்' என்று எனது குடும்பத்தவரிடம் சொல்வதுண்டு.

எட்டுப் பெண் சகோதரர்கள் மத்தியில் ராஜகுமாரனாக செந்திலின் வாழ்வு அமைந்தது. காலம் அவனை வளர்த்ததுடன் அவனுக்குரிய பணியையும் காட்டியது. நக்கீரன் என அவனுக்கு பெயர் சூட்டப்பட்டது. அதேபோல்  அவனுக்கு நேரே மூத்தவளான வாசுகியின் பெயர் 'அர்ச்சனா' ஆகியது. இவர்களில் முதலில் பெட்டியில் வந்தது செந்தில் தான். வீட்டிலிருந்து அவனது வித்துடலைக் காவிச் செல்லும்போது குஞ்சையா என்னிடம் கேட்டார். 'மனா, எனக்குக் கொள்ளி வைப்பாய் தானே?'

எத்தனையோ வருடங்களுக்கு முந்திய உடன்பாடாயினும் அந்தச் சூழலில் இதனை அவர் ஞாபகப்படுத்தியது சம்மட்டியால் நெஞ்சில் அடித்தது போலிருந்தது.

யாழ். இடப்பெயர்வின் பின்னர் எல்லோரும் வன்னி வாசிகளானோம். அங்கு வாசுகியும் பெட்டியில் வந்தாள். அவளுக்கு வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் ஒரு கல்லறை கிடைத்தது. குஞ்சையா – குஞ்சம்மாவுக்கு 'இரண்டு மாவீரர் குடும்பம்' என்ற பெயர் ஓட்டிக் கொண்டது. இதற்குப் பின் குஞ்சையாவால் வன்னியில் இருக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேறும் தருணத்தில் தழுதழுத்த குரலில் மீண்டும் எமது உடன்பாட்டை நினைவு படுத்தினார். 'இனிச்  சந்திக்கிறாயோ தெரியாது, சந்தர்ப்பம் கிடைச்சா நீதான் எனக்குக் கொள்ளி வை'

சமாதான ஒப்பந்தம் அமுலாகி யாழ் - வன்னி போக்குவரத்தும் ஆரம்பமானது. 'குஞ்சையா காலமாகி விட்டார்' என்ற செய்தி வன்னியில் எனக்குக் கிடைத்தது. சிறுவயது ஒப்பந்தம் மனதில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்க 'நான் எப்படியும் வருவேன்' என்ற செய்தியை அனுப்பினேன். எமக்கான விசேட அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் விரைந்தேன். செம்மணிச் சுடலையைத் தாண்டும் போது அங்கே கட்டை அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். குஞ்சையாவுக்குத்தான் இது என்று நினைத்துக் கொண்டு போகும் போது அவரது காடாத்தே (சடங்கு) முடிந்து போயிற்று என்ற செய்தி கிடைத்தது.

ஆத்திரமா, கோபமா, என்று சொல்லமுடியாத நிலை எனக்கு. பழைய நினைவுகள் என்னைக் குத்திக் கிளறின. போக முடியாத காலத்தில் இப்படி நடந்திருந்தால் மனம் சமாதானம் அடைந்திருக்கும். இனி என்ன செய்வது? கொள்ளிக் கடன் தீரவேயில்லை. அவருக்கு வைத்திருக்க வேண்டிய கொள்ளியின் வெக்கையை என் மனதில் உணர்ந்தேன்.

***

எனது சின்ன மகன் நசிகேதனைச் சீண்டுவது மூத்தவன் சங்கருக்கு ஒரு கலை. சின்னவன் 'நான் தான் அப்பான்ர புள்ள' என்று அடிக்கடி கூறுவதுண்டு, அவனை 'டேய்! நீ அம்மான்ர புள்ள' என்று கடுப்பேத்துவது மூத்தவனின் வழக்கம்.

இவர்களின் சண்டையை ரசிப்பதே எனக்கும் என் மனைவிக்கும் சுவாரஸ்யமான விடயமாக இருக்கும்.

ஒரு நாள் மத்தியானம் இந்தச் சீண்டல் நீண்டு கொண்டே போயிற்று. ஒரு கட்டத்தில் மூத்தவன் சொன்னான் 'டேய்.... என்ன இருந்தாலும் நான் தான்ரா அப்பான்ரை கொள்ளி. ஏனெண்டா நான் தான் மூத்த ஆம்புளப் புள்ள. நீ கடைசி என்ற படியால அம்மான்ர கொள்ளி தான்' - சின்னவன் சீறினான். 'அதென்னெண்டு? நான் தான் அப்பான்ர புள்ள. அப்ப நான் தான் அப்பான்ர கொள்ளி'

இவனை மடக்கவென்றே மூத்தவன் சொன்னான். 'பார் அப்பா ஒரு நாளைக்குச் சாவார் தானை. அப்ப எல்லாரும் வந்து, டேய் சங்கர்! நீ தான்ரா மூத்தபிள்ளை, நீதான் உங்கட அப்பாவுக்குக் கொள்ளி வைக்க வேணுமெண்டு சொல்லுவினம் அப்ப நீ என்ன செய்வாய்?'

பொறுமையிழந்து விட்டான் சின்னவன் -  'ஆ! அப்பிடியோ? அப்ப நான் இப்பவே வைக்கிறன் கொள்ளி' என்று கூறிவிட்டு சமையறையை நோக்கி விரைந்தான். அடுத்த சில வினாடிகளில் எனது மனைவியின் குரல் கேட்டது. 'டேய் கேதன் எங்கையடா கொண்டு போறாய் நெருப்புக் கொள்ளியை?“

மெல்ல மெல்லத்  தூக்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த நான் இந்தச் சத்தத்தைக் கேட்டதும் சூழ்நிலையின் விபரீதத்தைப் புரிந்து கொண்டு எடுத்தேன்  ஓட்டம். கையில் நெருப்புக் கொள்ளி. அதைவிட தான்  நினைத்தது  நடக்காத கோபத்தை முகத்தில் வெளிப்படுத்தியபடி நின்றான் சின்னவன்.

'எனக்குத் துயிலுமில்லத்தில் தான் இடம். இவர்கள் இருவரும் கொள்ளிக்கு அடிபடுகிறார்கள்“ என்று மனதில் நினைத்துக் கொண்டேன் நான்.

***

ஒவ்வொரு இடமாக நகர்ந்து நகர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு வந்தாயிற்று. சேவலின் கூவல் கேட்டு நீண்ட நாளாயிற்று. அடிக்கடி கேட்கும் எறிகணையின் கூவல் எங்களது கூடாரத்திலும் ஒருநாள் முடிந்தது. க.பொ.த சாதாரண தரப்  பரீட்சை எழுதிய பின்னரும் கை சூப்பும் பழக்கத்தைக் கைவிடாத எனது மூத்தவன் சங்கர்  07/04/2009 அன்று அதே நிலையில் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தான்.

துடிக்கக் கூட முடியாதபடி பிடரியில் விழுந்திருந்தது மரண அடி. துடிந்திருந்தால் நிச்சயம் வாயிலிருந்து விரலை எடுத்திருப்பான்.

'நான் தான் மூத்த புள்ள. நான் தான் அப்பான்ர கொள்ளி' என்று சின்னவனுடன் சண்டை பிடிப்பவனுக்கு மூட்டித் தீவைக்க விறகோ, அவனோடு சேர்த்துப் புதைக்கச்  சவப்பெட்டியோ கிடைக்கவில்லை. ஒரு பொலிதீன் பையினால் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டான்.

அப்போது எனது போராளி மகள் தாயை நோக்கிக் கேட்டாள் 'அம்மா! மார்க்கண்டேயரைப் போல  ஒரு மகன் வேண்டுமெண்டு கேட்டிருக்கலாமே கடவுளை!' அவள் அவன் வயதை ஞாபகப்படுத்த, நான் நவநீதம் பிள்ளையை நினைத்துக்கொண்டேன்.

இன்னும் இருபது நாளுக்குள் எமது கையால் போடும் மண் கூடக் கிடைக்காமல் தான் மண்ணுக்குள் போகப்போவது தெரியாமல் குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள் என்மகள் சங்கீதா (அறவிழி  26/04/2017).

எல்லாமே முடிந்து விட்டது. தன்னுடன் நான் நிற்பேன் என்று நம்பி என்னைச் சேர்த்துக் கொண்டவரைக் கைவிட்டு, செய்த சத்தியப் பிரமாணத்தை மறந்து, வட்டுவாகல் தாண்டி முள்ளுக் கம்பிகளுக்குள் வாழும் வாழ்வைத் தேடிப் போன என் இழி நிலையை எண்ணி வெதும்புகின்றேன். இன்று துயிலுமில்லத்துக்குக் கொண்டு செல்லப்படும் தகுதியும் எனக்கில்லை. ஏன் துயிலுமில்லங்களே இல்லை என்றாகி விட்டது.

சரி! கொள்ளியாவது கிடைக்குமா? அல்லது பிந்துனுவெலவில் இருந்தோருக்குக் கிடைத்தது போன்று இரவல் கொள்ளியா?

***

(பண்டாரவளை பிந்துனுவெல -  இந்த இடத்தில் அமைந்திருந்த தமிழ் இளைஞர்களின் தடுப்பு முகாம் அங்கிருந்த படையினராலும் சிங்கள பொதுமக்களாலும் தாக்கப்பட்டது. அறைகுறை உயிரில் இருந்தவர்கள் கூட தீமூட்டி எரிக்கப்பட்டனர்)

***

குஞ்சையா: ஈழத்து கிராமங்களில் தந்தையின் சகோதரரை அழைக்கும் முறை

குஞ்சம்மா: தாயின் சகோதரி

வாரப்பாடு: விருப்பம்

5/22/2017 10:52:32 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்