Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

போராட்ட நினைவுகளை மீள் எழுப்பிய ராமுவின் மறைவு!

போராட்ட நினைவுகளை மீள் எழுப்பிய ராமுவின் மறைவு!
பகலவன்

 

வரலாற்றுச் சமர் என வர்ணிக்கப்படும் திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றியோரில் இன்னும் உயிருடன் இருப்போரின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைந்து விட்டது. இந்தத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர். (தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அன்றைய இளைஞர்களை வீட்டில் இருந்து வெளியே வரச் செய்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் இணைந்து கொண்டனர்) இந்தத் தாக்குதலில் பங்கு பற்றிய ராமு (கந்தசாமி கணேஸ்வரன்) 15.06.2017 அன்று   இலண்டனில் காலமானார். 

இரு பிள்ளைகளின் தந்தை இவர். பிரபாகரனின் நேரடி வளர்ப்பு என்று சொல்வார்களே... அது இயக்கத்தில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அப்படியே இருக்கும். ஒழுக்கம், எச்சரிக்கை உணர்வு, சிக்கனம், உணவை விரயமாக்காமை முதலான சகலதுமே ராமுவிடம் கடைசிக் கணம் வரை இருந்தே வந்துள்ளது. இவரது மனைவியாருக்கு ஆறுதல் சொல்லவும், துயரினைப் பகிர்ந்து கொள்ளவும் முன்னாள் போராளியொருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். 'எல்லோருடைய பெயரையும் தொலைபேசி எண்களையும் சங்கேத மொழியில்தான் (code  words) அவர் எழுதி வைத்திருந்தார். எனக்கு அது தெரியாது' எனக் குறிப்பிட்டார் திருமதி ராமு. இத்தனை வருடம் அவருடன் ஒன்றாக வாழ்ந்து இன்ப துன்பங்களில் பங்கு பற்றி இரு குழந்தைகளுக்கும் தாயான அவருக்கே இந்த விடயங்கள் தெரியாதென்றால் பிரபாகரன் கற்பித்ததை இறுதி வரை அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்றுதானே அர்த்தம். 

அன்றைய காலகட்டம் பற்றி விபரிப்பதானால் இன்றைய தலைமுறையினருக்கு அதை நம்பக் கஷ்டமானதாக இருக்கும். 'அந்நாளில் அப்போது நான் தான் பிரபாகரனுடன் கூடச் சென்றேன். இந்த முடிவு எடுக்கும்போது நான் பக்கத்தில் இருந்தேன், நான் இந்த ஆலோசனையைச் சொன்னேன்' என்று கற்பனை கலந்த கதைகளை அல்லது வரலாற்றைத் திரிவுபடுத்தலாக, மிகைப்படுத்தலாக எழுதிக் குவிப்போர், வாய்மொழியாகச் சொல்வோர் தொகை பெருகிவிட்டது. அட இவருக்கு எல்லாமே தெரியுமென்று தம்மைப் பற்றிய பிரமிப்பை, மாயையை அடுத்த தலைமுறையினர் மத்தியில் பதிய வைக்க ஒரு கூட்டமே முயன்று வருகிறது. அதில் கணிசமானோர் ஊடகவியலாளர்கள், பத்தி எழுத்தாளர்கள். வரலாறு என்பது நடந்து முடிந்தது. அதனை எமது விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்ற முயல்வது துரோகம்.

இயக்க நடவடிக்கைகள், செய்ய உத்தேசித்துள்ள விடயங்கள் அடுத்தவருடைய ஊர், சொந்தப் பெயர், உறவினர் பற்றிய விபரங்கள், கல்வித்தகமை, சாதி முதலான விடயங்களை ஆராய முற்படக்கூடாது என்பன அடிப்படை விதிகள். எங்கேயாவது ஒருவர் பொலீசாரிடம் சிக்க நேர்ந்தால் சித்திரவதைகளின் காரணமாக ஏனையோரைப் பற்றிய விபரங்களை அவர் வெளியிடக்கூடும். எனவே ஒருவர் கைதானாலும் இயக்க நடவடிக்கைகள் தடங்கலின்றித் தொடர வேண்டும். இதற்காக இயக்கத்துடன் தொடர்புபட்டோரை மிக அவசியமாகின் மட்டுமே வெளிப்படுத்துவர். சம்பந்தப்பட்ட தேவை முடிந்ததும் அவசியமில்லாமல் அவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. உதாரணத்துக்கு 1983.07.15 மீசாலைச் சுற்றிவளைப்பில் லெப்.சீலனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மயிலிட்டியைச் சேர்ந்த ஆனந்தனை நேரில் சந்திக்காத இயக்க உறுப்பினர் இருந்துள்ளனர்.

அப்போது இந்த இருவரைத் தவிர பிரபாகரன், பேபி (இளங்குமரன்), செல்லக்கிளி, ராகவன், மாத்தையா, பண்டிதர், யோகன் (பாதர்), கிட்டு, பொன்னம்மான், ராமு, புலேந்திரன், ரகு (குண்டன்), ரஞ்சன் லாலா,  அருணா, நேசன், அப்பையா அண்ணா, சந்தோசம், கேபி (குமரன் பத்மநாதன்), தேவர், பசீர், பொட்டு, ஞானம், கணேஷ், ரெஜி, அல்பேட், ராஜேஷ், லிங்கம், விக்டர், சுப்பண்ணா ஆகிய 29பேர்தான் உலகம் முழுவதும் இருந்த புலிகள் இயக்க முழுநேர உறுப்பினர்கள். சங்கர் ஏற்கனவே வீரச்சாவு.

போராட்ட நினைவுகளை மீள் எழுப்பிய ராமுவின் மறைவு!

பொதுவாக ஒரு இடத்துக்கு ஒருவர் அல்லது இருவர் எப்போதாவது மூவர் செல்வர். அதுவும் அந்த விடயம் தவிர்க்க முடியாததா என ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

விதிவிலக்காக நடந்த நிகழ்வுகள் என்றால் 1980 முற்பகுதியில் நீர்வேலி வாய்க்கால்தரையிலும், 1980 ஆகஸ்டில் ஊர்காவற்துறையிலும் நடந்த இரு மாநாடுகளை மட்டுமே குறிப்பிடலாம். அப்போதுதான் இதுவரை ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத முகங்களைப் பலர் கண்டனர்.  (ஏற்கனவே பண்ணைகளில் சிலர் அறிமுகமாகியிருந்தனர்)

பிரபாகரன், செல்லக்கிளி, ராகவன், ஜோண், பண்டிதர், மாத்தையா, சங்கர், ராமு, பொன்னம்மான், ரகு (குண்டன்), குமரன், அன்ரன், சீலன், புலேந்திரன், அய்யர், வாத்தி நாகராஜா, சாந்தன், குமணன், அழகன், மனோ மாஸ்டர், நந்தன், சுந்தரம், கறுப்பி, மதி, கண்ணன், சிவம், நெப்போலியன், சாள்ஸ், பீரிஸ், டானியல், காந்தன், சோமண்ணை ஆகியோர் வாய்க்கால்தரை மாநாட்டில் கலந்து கொண்டோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.

போராட்ட நினைவுகளை மீள் எழுப்பிய ராமுவின் மறைவு!

பேபி (இளங்குமரன்), கலாபதி, கிட்டு, யோகன் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்தால் இம் மாநாட்டில் பங்குபற்றவில்லை.

ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக முகுந்தன் (உமா மகேஸ்வரன்) இம் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமற் போயிற்று 

இந் நிகழ்வுக்கு முன்னதாக இச்சந்திப்பு எவ்வாறு நடைபெற வேண்டுமெனத் திட்டமிட்டார் பிரபாகரன். ஒரு குறிப்பிட்ட வயதினர் ஒன்றாகக் கூடும் போது அயலவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது. சந்திப்புக்கு முன்னதாக நூலகங்களில், நேரத்தைச் செலவிடல் போல வெ வ்வேறு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. எதுவுமே செய்ய முடியாதவர்கள் சினிமாப் படத்தைப் பார்த்து விட்டு அந்த இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் வகையில் பிரபாகரன் ஒழுங்குபடுத்தினார். எல்லோரையும் அளந்து தானே கையாள வேண்டும் அவர். கிரிக்கட் விளையாடச் சென்ற இரு குழுக்கள் போல் இயக்க உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள். அந்த வெளியில் உள்ள மர நிழலில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் அலசப்பட்டன.

'ஆயிரம் சொற்பொழிவுகளை விட ஒரு தாக்குதல் வலிமையானது. கூடுதல் பயனை விளைவிக்கும்' என கியூபா வரலாற்றுடன் தொடர்புபட்டோர் கூறிய கருத்தை இச் சந்திப்பில் ராமு வலியுறுத்தினார். இவரது கருத்தை அன்ரன் வழிமொழிந்தார். இதற்கு மாறாக மனோ மாஸ்டர், நந்தன் ஆகியோர் மக்கள் புரட்சிக்கு பின்னரே ஆயுத நடவடிக்கை என பல்வேறு நாட்டுச் சித்தாந்தங்களால் கூடி இருந்தோரை வறுத்தெடுத்தனர்.       

இச் சந்திப்பின் பின் இயக்கம் பல பின்னடைவுகளைச் சந்தித்தது. உடைந்தது, சிதறியது என்றெல்லாம் குறிப்பிடலாம்.

இந்நிலையில் 1980 ஆகஸ்ட்டில் உறுப்பினரிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தவென இலண்டனிலிருந்து ராஜா என்றழைக்கப்படும் ஒருவர் வந்தார். முக்கியஸ்தர்களைச் சந்தித்தார். இதன் பின் அணிகளின் சகல உறுப்பினர்களையும் சந்திக்க ஊர்காவற்துறையில் மாநாடு கூட்டப்பட்டது. இது காலையில் தொடங்கி நடு இரவு வரை நடந்தும் முடிவு காண இயலவில்லை. அடுத்த நாள் காலை தொடங்கி மாலை முடிவுற்றது.

இதில் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியம், ஐயர், நாகராஜா ஆகிய நால்வரும் இயக்க வரலாற்றை ஆரம்பத்திலிருந்து சொன்னார்கள்.

ஒழுங்காற்று நடவடிக்கைகள் பற்றி விமர்சித்தும் சாதகமாகவும் முரண்பாடான நிலையிலும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். பிரபாகரன், அய்யர் ஆகிய இருவர் சார்பிலும் இரு அணிகளாக உறுப்பினர்கள் நிலைப்பாடு எடுத்திருந்தனர்

பிரபாகரன் அணியில் பின்வருபவர்கள் கலந்து கொண்டனர்.  

பிரபாகரன், பேபி அண்ணா, கலாபதி, ராகவன், பண்டிதர், மாத்தையா, சங்கர், ராமு, பொன்னம்மான், ரகு (குண்டன்), குமரப்பா, அன்ரன், சீலன், புலேந்திரன், சசி, ரத்தினம், மனோ மாஸ்டர், தனி (பல்கலைக்கழகம்).

ஐயர் அணியில் பின்வருபவர்கள் கலந்து கொண்டனர்.  

அய்யர், வாத்தி நாகராஜா, சாந்தன், குமணன், அழகன், நந்தன், சுந்தரம் கறுப்பி, மதி, கண்ணன், சிவம், நெப்போலியன், சித்தப்பா.

எந்த அணியும் சாராமல் செல்லக்கிளி, குலம், காந்தன் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.

ராஜாவின் கடும் முயற்சியின் பயனாக இரு அணிகளும் ஒற்றுமைப்பட்டதுபோல் காட்டிக்கொண்டன. இறுதியில் மத்திய குழுவுக்கு ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என முடிவாயிற்று. நடுநிலைமை வகித்தவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 27 வாக்குகளுடன் சாந்தன் முதலாவது இடத்திலும், 26 பேரின் ஆதரவு பெற்று அன்ரன் இரண்டாம் இடத்திலும் 25 உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றாவதாக பிரபாகரனும் தெரிவாகினார். அய்யர் 10 க்கு குறைவான வாக்குகள் பெற்றும் தெரிவாகினர்.

வரலாறு செயற்திறனுள்ளவர்களுக்கே உரிய இடத்தைக் கொடுத்தது. வேறு வழிகளில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் சாதனையாளர்கள் என வரலாற்றில் பதியப்படவில்லை. மூன்றாவது இடத்தைப் பெற்ற பிரபாகரனுக்கே செயற்திறன் இருந்தது.

பாரதியார் வாழ்விலும் இதே நிகழ்வு நடந்தது. மதுரை சேதுபதி பள்ளியில் அவர் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது. இதற்கு 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுதே காதினிலே' என்ற கவிதையை அவர் அனுப்பி வைத்தார். இக் கவிதை எளிதில் விளங்கக்கூடியதாக இருக்கிறதே என எண்ணிய நடுவர்கள், போனால் போகிறது என மூன்றாம் பரிசுக்கு அதனைத்  தேர்ந்தெடுத்தனர். முதலிரு பரிசுகளை பெற்ற கவிதைகள் மக்களைச் சேரவில்லை. அவை காலத்தால் காணாமற்போகின. அது போலவே செயற்திறனுள்ள பிரபாகரனை வரலாறு தத்தெடுத்துக்கொண்டது.

***

ஒட்டுப்போட்ட ஐக்கியம் நீடிக்கவில்லை. மனதளவில் மாற்றம் வராவிட்டால் செயலிலும் எதனையும் காணமுடியாது. ஐயர் குழுவுக்குப் போராட்டம் பற்றிய நம்பிக்கை வலுக்காததால் வரலாற்றிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். 

1977- 1980 பிளவு ஏற்படும் வரை புலிகள் அமைப்பில் அநேகர் இணைந்தனர். வன்னியிலும், கிழக்கிலும் மறைமுகப் பண்ணைகள் இருந்தன. இதில் வந்தவர்களில் பண்ணை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் பலர்.

முதலில் வவுனியா பூந்தோட்டம், பன்றிக்கெய்தகுளம் அடுத்த கட்டம்    வள்ளிபுனம், மாங்குளம் (அம்பகாமம்), முத்தையன்கட்டு, மன்னாரில் முருங்கன், பின்னர் பன்னாலை கோழிப்பண்ணை (இதுதான் யாழில் முதல் அமைக்கப்பட்டது). மட்டக்களப்பில் புலிப்பாய்ந்தகல், செங்கல்வாடி மற்றும் மியான்கல்குளம் பண்ணைகளுடன் திருமலையிலும் ஒரு பண்ணை இருந்தது

***

1980 பிற்பகுதியில் டெலோ இயக்கமும் புலிகளும் இணைந்து செயல்பட்டன. 1981 இல் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் கைதானதைத் தொடர்ந்து மிக நெருக்கடி ஏற்பட்டது. ஒரு இரவு படுப்பதற்காக அறிமுகப்படுத்திய இடங்களுக்கும் படையினர் விரைந்தனர். 100 ரூபா தான் அன்றைய காலத்தில் அதி கூடிய பெறுமதி மிக்கது. நீர்வேலியில் வைத்து வங்கியின் வாகனத்தொடரை மறித்து கைப்பற்றப்பட்ட பணத்தில் மிகப் பெரும்பாலானவை இரண்டு ரூபாய் முதலானவையே. அவற்றைப் பகுதியாகப் பிரித்து  வைக்கப்பட்டிருந்தது. இந்த மறைவிடங்களுக்குச் சோதனை வந்தது. சிலர் கைதாக நேர்ந்தது. அப்படியிருந்தும் மூன்று லட்சம் தவிர ஏனையவற்றை இடம் மாற்றி விட்டனர். மறைவிடத்தை விட்டுப் பணத்தை எடுத்ததும் அங்கே படையினர் சென்றமை கிளித்தட்டு விளையாட்டைப்போல நடந்து கொண்டிருந்தது. சிறிய தள்ளு வண்டியில் ஒருவர் பணத்தை வைத்துத் தள்ளிக்கொண்டு போனபோது அவரை படையினரின் வாகனம் விலத்திச் சென்றது.

தேடப்படுவோர் தொகை அதிகரித்தது. வறுவா, சின்னவறுவா, பொன்னம்மான், தேவர் அண்ணா, நேசன் (ரவிந்திரதாஸ்), கே.பி (பத்மநாதன்), கிட்டு எனப் பலர் இப்பட்டியலில் சேர்ந்தனர். 

இக்காலப் பகுதியில் யாழ் காங்கேசன்துறை வீதியில் சீலன் தலைமையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இரு படையினரும் அவர்களுடன் கூட வந்த ஒருவரும் இதில் பலியானர். 303 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.   

இந்நிலையில் தற்காலிகமாக இந்தியாவில் இயங்குவதென முடிவாகிற்று.  தேடப்பட்டவர்கள் படகின் மூலம் செல்வதெனவும் ஏனையோர் விமானமூலம் செல்வதெனவும் முடிவாயிற்று. டெலோவில் சுதன் இவ்வாறு சென்றார். புலிகளில் ராமு விமான மூலம் சென்றோரில் ஒருவராக இருந்தார். 

தமிழகத்தின் திருப்பரங்குன்றத்தில் சரவணப்பொய்கைக்கு எதிரில் இருந்த திருமண மண்டபத்தில் இரு இயக்கத்தினருக்குமான உடற்பயிற்சிகளும் வகுப்புக்களும் நடைபெற்றன. உடற்பயிற்சியை ராகவன் வழங்கினார்.  வகுப்புகளை ராமுவே நடத்தினார்.

இக்காலப்பகுதியில் 1982 தைப்பொங்கல் நாளன்று சுதந்திர தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தப் போவதாக கிருஷ்ணா வைகுந்தவாசன் அறிவித்தார். போராட்டத்தை மலினப்படுத்தும் இம் முயற்சியை எதிர்த்து, 'நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு' என்றொரு துண்டுப்பிரசுரத்தைப் புலிகள் வெளியிட்டனர். அதே போல சுந்தரம் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து 'துரோகத்துக்குப் பரிசு' என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியானது. புலிகளின் இலச்சினையுடன் வெளியிடப்பட்ட இவ்விரு துண்டுப்பிரசுரங்களையும் ஸ்ரீசபாரத்தனம் முதலானோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். அப்போது புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பொட்டு, ஞானம் ஆகியோர் இவற்றை மக்களிடையே விநியோகித்தனர்.  

சில மாதங்களின் பின் இரு இயக்கங்களும் தனித் தனியே இயங்குவதென முடிவாயிற்று. குட்டிமணி, தங்கத்துரை முதலான போராளிகளை கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டேனும் மீட்போம் எனப் பிரபாகரன் தெரிவித்த கருத்தைப் பரிசீலிக்க டெலோவினரான ராசப்பிள்ளை, ஸ்ரீ சபாரத்தினம் ஆகியோர் தயாராக இருக்கவில்லை. வழக்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்படும் சமயத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வோம் எனப் பிரபாகரன் தெரிவித்திருந்தார். தமது திட்டத்தைச் செயற்படுத்தத் தயாராக இல்லாதவர்களுடன் இணைந்து பணிபுரிவது கடினம் என்றும் முன்பு போல் தனித்தே இயங்க வேண்டுமெனவும் பிரபாகரன் மனதில் தோன்றியது. தொடர்ந்து முரண்பாடுகள் முற்றின. இறுதியாக ஜெயம் எனப்படும் முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் மீது தன்னிச்சையாக டெலோவினர் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து தனித்தியங்கும் தமது முடிவை அறிவித்தார் பிரபாகரன். ஒன்றாக இருந்து பிரச்சினைப்படுவதை விட பிரிந்திருந்து நண்பர்களாக இருப்போம் எனச் சொன்னார் அவர்.  

அடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆராயவும் விமான மூலம் செல்வோரை முதலில் அனுப்பவும் பிரபாகரன் தீர்மானித்தார். சென்னைக்குச் சென்ற பிரபாகரன், ராமுவையும் அங்கு அழைத்தார். ஒரு நாள் மாலை பாரிமுனைக்கு போன அவர் The commandos படம் பார்த்து விட்டீர்களா? எனக் கேட்டார். இல்லை என ராமு சொன்னதும் நான் நேற்றுத்தான் பார்த்தேன். இன்று தான் கடைசி நாள் எனக் கூறி அவருடன் இன்னொரு உறுப்பினரையும் அனுப்பி வைத்தார்.

பிரபாகரனுடன் ராகவன், நேசன், சென்றனர். படம் பார்த்துவிட்டு ராமு திரும்பி வரும் போது வழியில் சந்தித்த நேசன், 'பாண்டிபஜாரில் முகுந்தன் (உமா மகேஸ்வரன்) கண்ணன் ஆகியோருடன் தம்பியும் (பிரபாகரன்) ராகவனும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். அவ்விருவரையும் பொது மக்கள் பிடித்துப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். என்னை இனங்கண்டு துரத்திய மக்களிடம் இருந்து நான் தப்பியதே பெரும் பாடாகிவிட்டது' எனக் கூறினார். மூவரும் மைலாப்பூரில் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர். தானும் நேசனும் அங்கிருந்த அதற்கான தடயங்களை அழித்து விட்டு வருவதாகவும் உடனடியாக விமான மூலம் மதுரைக்கு சென்று திருமண மண்டபத்தில் தங்கியிருக்கும் அனைவரையும் இடம் மாற்ற ஏற்பாடு செய்யுமாறு பேபி அண்ணாவுக்குச் (இளங்குமரன்) சொல்லுமாறு மற்ற உறுப்பினரைப் பணித்தார் ராமு. அப்படியே கருமங்கள் நடந்ததன. 

விமான மூலம் சென்றோர் நாட்டுக்குத் திரும்பினார். அடுத்து நடக்க வேண்டிய விடயங்களை இளங்குமரன் கையாண்டார். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இவர் எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்றினார்.

நாட்டுக்கு திரும்பிய ராமுவின் நேரடிக் களமாக நெல்லியடியில் நிகழ்ந்த பொலிஸார் மீதான தாக்குதல் அமைந்தது. இதில் நான்கு பொலிஸார் பலியாகினர். சங்கர் இத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். மாத்தையா, ரகு (குண்டன்), அருணா, சந்தோசம், பசீர் ஆகியோரும் இத் தாக்குதலில் பங்குபற்றினர்.

தொடர்ந்து காரைநகரிலிருந்து வந்த கடற்படையினரின் வாகனத் தொடர் அணி மீதான தாக்குதல் முயற்சி நடந்தது. இதில் ராமுவும் பங்கேற்றார். இதற்குச் சீலன் தலைமை தாங்கினார். அப்பையா அண்ணா, சங்கர், அருணா, மாத்தையா, ரகு (குண்டன்), பசீர் ஆகியோரும் இத் தாக்குதலில் பங்கு பற்றினர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலிலும் ராமு பங்கு கொண்டார்.    சீலன் தலைமையில் நடைபெற்ற இத் தாக்குதலில் ரகு (குண்டன்), புலேந்திரன், மாத்தையா, அருணா, சங்கர், சந்தோசம், ரஞ்சன் லாலா, பசீர் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பொன்னம்மானின் தலைமையில் உமையாள்புரத்தில் நிகழ்ந்த இராணுவ அணி மீதான தாக்குதலிலும் ராமு பங்கு கொண்டார். இதில் அப்பையா அண்ணா, செல்லக்கிளி, மாத்தையா, கிட்டு, ரஞ்சன், அருணா, சந்தோசம், பசீர், கணேஷ், ராஜேஷ் ஆகியோரும் பங்குகொண்டனர்.

1983 முற்பகுதியில் புதிய போராளிகளுக்கான பயிற்சி முகாம் ஒன்று உடையார்கட்டு இருட்டுமடுவில் அமைக்கப்பட்டது. இதில் பிரபாகரன், செல்லக்கிளி, பொன்னம்மான், சீலன், புலேந்திரன், கிட்டு, ரஞ்சன் லாலா, ஆகியோருடன் ராமுவும் பயிற்சிகளும் வகுப்புக்களும் நடத்தினார். யோகன் (பாதர்), அருணா, பொட்டு, ஞானம், ராஜேஷ், விக்டர், கணேஷ், ரெஜி, லிங்கம், சுப்பண்ணா, அல்பேர்ட், ஆனந் ஆகியோர் இம்முகாமில் பயிற்சி பெற்றனர்.     

திருநெல்வேலி நடந்த வரலாற்றுச்சமரிலும் ராமு பங்கு பற்றினார். செல்லக்கிளி தலைமையில் நடைபெற்ற இத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, பொன்னம்மான், புலேந்திரன், சந்தோசம், ரஞ்சன் லாலா, அப்பையா அண்ணா, லிங்கம், பசீர், ஞானம், விக்டர், ராஜேஷ், சுப்பண்ணா, கணேஷ், ரெஜி ஆகியோரும் பங்குகொண்டனர்.

மட்டக்களப்பு சம்பந்தமான விடயங்களையும் இவரே கையாண்டார். மட்டு. சிறையுடைப்பு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் இவருடனேயே தொடர்பு கொண்டு ஆயுதங்கள் தருமாறு கோரினர்.

இவர் ஒரு போராளி என சத்தியம் செய்தாலும் ஒருவரும் நம்பமாட்டார்கள். இவரது உருவமைப்பு அவ்வாறு இருந்தமை இவருக்கு ஒரு பலமாக இருந்தது. படையினர் போராளிகளைப் பற்றி வைத்திருந்த பிம்பம் இவரது உருவத்துக்குப் பொருந்தாது.

ஒரு முறை மட்டக்களப்புக்குச் சென்ற பேருந்து அனுராதபுரத்தில்   விபத்துக்குள்ளானது. அதில் இவரும் காயமுற்றார். சிங்களமும் தெரியாது.  எப்படியோ ஆஸ்பத்தியிலிருந்து வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றார்.  இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணிகள் குறித்து 'என் தம்பி ஜெயத்துக்கு....' என்ற நூலில் கவிஞர் காசி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத் தாக்குதலிலும் ராமுவின் பங்கு இருந்தது. மாத்தையா தலைமையில் நடந்த இத்தாக்குதலில் பசீர், சந்தோசம், பரமதேவா, குட்டி, பசிலன், சசி, வசந்தன், சகோதரம், தீசன், கோபி, மான, வள்ளல், லோரன்ஸ், சபா, ரெஜி, பாபு உட்பட பலர் பங்குபற்றினர். 

இயக்கத்திலிருந்து விலகினாலும் அதே நடைமுறை பழக்க வழக்கங்களுடன் தனது மனைவி பிள்ளைகளுடன் இலண்டனில் வாழ்ந்து வந்தார். சரித்திரத்தில் ராமுவுக்கும் தனியான இடம் உண்டு அதை பதிவு செய்ய வேண்டுமென்பதற்கான ஒரு முயற்சியின் அங்கமே இக் கட்டுரை.

7/11/2017 3:34:03 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்