Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மக்கள், மண், மொழி 

<p>மக்கள், மண், மொழி </p>
பா.செயப்பிரகாசம்.

 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 5   

அவர் முதலில் மக்களைக் கருதினார். மொழி, மண், மக்கள் என நிலவிய அனைத்து ஒழுங்குகளையும் கலைத்துப் போட்டார். சிதைத்தல் அல்ல, கலைத்து மாற்றி அடுக்குதல். மொழி தான் முதல் என்போருக்கு, மக்கள் மீதான அக்கறை இறுதிப் புள்ளியில் போய் நிற்கிறது. இது போன்றோரை மொழி முதல்வர்கள் என்று கைப்பாய் மொழிந்தார் சிரித்தவாறு. மக்கள், மண், மொழி, என வரிசையை மாற்றி அமைத்தார். சிந்திப்பில், செயலில் மாறியதின் அடையாளம் அவரின் எழுத்து, கவிதை, நாடகம், வாழ்க்கை அனைத்துமாகும்.

இன்குலாப் 'நாதியற்றவர்களின்' குரலாக ஒலித்தார். ஆணதிகாரத்தால் ஒடுக்கப்படும் பெண், சாதியத்தால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், ஆதிக்க மேலாண்மையினரால் சுரண்டப்படும் உழைப்பாளர் – என்னும் எல்லோரும்   நாதியற்றவர்கள். நாதியற்றோரின் போர்க்குணம் அவர் குரலில் எழுந்து வந்தது.

                'வெள்ளை எதிர்ப்பின் மனிதம் புரியக்

                கறுப்பனாய் இருந்து பார்

                ஆதிக்க மொழி எதிர்ப்பின் வரலாறு தெரிய

                தமிழனாய் இருந்து பார்

                பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப்

<p>மக்கள், மண், மொழி </p>

                பறையனாய் இருந்து பார்

                வல்லாங்கு செய்யப்பட்ட

                பெண்ணாய் இருந்து பார்

                வன்முறை ஏன் என்ற

                காரணம் புரியும்'

நாதியற்ற மக்களின் எடுப்பான குரலாய் அவர் எழுந்து பாய்ந்த காரணம் இப்போது புரியும். அவர் மாற்றி அமைத்த இந்த வரிசை காரணம்.

அவர் ஈழமக்கள் மீதான இன ஒடுக்குமுறை பற்றிப் பேசிய போதும் இந்த மொழிதான் முதன்மை பெற்றது.

'ஈழத் தமிழர்' மீதான இதே ஒடுக்குமுறை சிங்களவருக்கு நடந்திருந்தால்- தமிழர்கள் பெரும்பான்மையோராக இருந்து சிங்கள இனம் சிறுபான்மை இனத்தவராக இருந்து, தமிழர்களால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்குமானால் அப்போதும் நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுத்திருப்போம். மார்க்சியவாதிகளாகிய நாங்கள் சிறுபான்மைச் சிங்களர் பக்கமே அப்போது நிற்போம். சிங்களரின் சுயநிர்ணய உரிமை, அது தடை செய்யப்படும் போது, தனிச்சிங்கள நாட்டு விடுதலைக்காக நாங்கள் துணை நின்றிருப்போம்'

மனித நேய உணர்வுகள் ஒடுக்கப்படுகிறவரின் பக்கம் அணிவகுத்துச் செல்லுமென்பதை இந்தக் குரல் பதிவு செய்கிறது. ஆனால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழரின் பக்கமாக நிற்கும் குரல்களை 'தனித்தமிழ் ஈழ ஆதரவுக் குரல்கள்' என சிலர் ஏளனம் செய்தனர்.

'தனித்தமிழ் ஈழ ஆதரவுக் குரல்கள் தமிழ் மக்களின் மனிதநேய உணர்வுகளை மடைதிருப்ப முயல்வதை அனுமதிக்க முடியாது'

என்று எழுதியவர்களும் இங்கு மார்க்சீயத்தின் பெயரால் செயல்படுகிறார்கள் என்பதை மறக்க இயலாது.

நோபெல் விருதினும் பெரிது 

விருது என்ற அங்கீகாரம் - ஒரு சிந்தனையாளன், இலக்கியவாதி, கலைஞன், சமுதாயச் செயற்பாட்டாளன் மீது செலுத்தப்படுகின்ற ஒரு நிபந்தனை. அவனுக்குள் இயங்கும் சுய மோகத்தை - சுயத்தன்மையை அளக்கிற அளவுகோல்.

நானொரு சிந்தனையாளன், நானொரு இலக்கியவாதி, நானொரு கலைஞன், நானொரு சமூகச் செயற்பாட்டாளர் – இன்னபிற அடையாளங்களை விருது வழங்குவோர் அல்லது விருது வழங்கும் நிறுவனங்கள் சோதித்து அறிய முயலுகின்றன. நான் யாராகவும் இருக்கலாம். மனிதனாக இருக்கிறேனா என்பது முக்கியம். இவர்கள் எல்லோரினும் மனிதன் மேலானவன். இங்கு மனிதன் என்ற உயரத்தைவிட மற்றவையின் உயரங்கள் குறைவானவை. விருது வழங்குபவர்கள் மற்றவையின் உயரங்களை சாக்காக்கி மனிதனை அளவிட முயல்கிறார்கள்.

கிரேக்க வாசகம் ஒன்றுண்டு 'பித்தன் தன்னைப்பற்றிப் பேசுவான், அற்பன் அடுத்தவனைப் பற்றிப் பேசுவான், சாமானியன் சம்பவங்களைப் பற்றிப் பேசுவான், ஞானி பிரபஞ்சத்தைப் பற்றி பேசுவான்'

பிரபஞ்சத்தைப்பற்றி சிந்திப்பது, பிரபஞ்ச மக்களுக்காக வாழ்வது, பேசுவது என்கிற இந்த ஞானிதான் எழுத்தாளன், கவிஞன், கலைஞன் எல்லாமுமான மனிதன். தான் வாழும் பிரபஞ்சத்தின் மனச்சாட்சியாக இருந்து, இனி வரப்போகிற புதிய உலகத்தை முன்கூட்டியே அறிந்து இந்த மனிதன் பயணம் போவான். பிரபஞ்சத்தின்மேல் மனிதன் கொண்டுள்ள பற்றினை, உறுதிப்பாட்டினை விருதுகளும் விருது வழங்குவோர்களும் சோதித்துப் பார்க்கிறார்கள். மக்கள் மீது அந்த மனிதன் கொண்ட அக்கறை ஆணி வேராய் நிற்கிறதா, 'பெண்டுலம்' போல அந்தப்பக்கம், இந்தப்பக்கம் ஆடுகிறதா என சோதித்துப் பார்க்கிறது விருது.

காலம் கவிஞனை உருவாக்குகிறது. தெளிவுபடச் சொன்னால் காலத்தை உருவாக்குபவன் கவிஞனாகிறான்.

இன்று யாருடைய காலம்?

இது ஒடுக்கப்பட்ட மக்களின் காலம். சாதியத்தால் ஒடுக்கப்படும் தலித்துக்கள், ஆணாதிக்கத்தால் நசுக்கப்படும் பெண்கள், ஆதிக்க வர்க்கத்தினரால் சுரண்டப்படும் உழைப்பாளர்கள் – இவர்களின் வரலாற்றுக் காலம். இனியான வரலாறு இவர்களால் தீர்மானிக்கப்படும். படவேண்டும்.

தலித் விடுதலையை முன்னிறுத்தி செயற்படுகின்ற விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் பாவலர் இன்குலாப்புக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்க தீர்மானித்தது. இந்தச் செய்தியை இன்குலாப் என்னிடம் பகிர்ந்துகொண்டார். விருதுகள் ஏற்பினை கலைஞனே தீர்மானிக்கிறான். அவனுடைய தனித்துவம் அங்கீகரிக்கப்படுகின்ற போது அதை அவன் ஏற்கிறான். கலை உத்தியால், வெளிப்பாட்டு முறையால், மற்றுமற்றுமுள்ள திறனால் தீர்மானிக்கப்படுவதல்ல தனித்துவம். சிந்திப்பு முறை, சமுதாயப் பார்வை, செயற்பாடுகள் என்பவையே தனித்துவத்தின் மூலங்கள். இந்த தனித்துவத்தை அங்கீகரித்தார்கள் என்பதால் ஏற்றுக்கொள்ளும் முடிவு சரியே என வாழ்த்துக் கூறினேன்.

எழுபதுகளில் மங்கிய நிலையிலிருந்த தலித் விடுதலைக் குரலை திட்டமான நெருப்புச்சூடு கொண்ட குரலாய் மாற்றியது அவருடைய 'மனுசங்கடா நாங்க மனுசங்கடா' பாடல்.  

'முதுகில் சுமந்தாய்

அவர்கள் பல்லக்கு

முகத்தில் சுமந்தாய்

அவர்கள் எச்சில்

இன்றும் சுமப்பாய்

அவர்கள் மலங்கள்'

தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றிய இக்கவிதை, இவ்வரிகளோடு நிறைவடையவில்லை.

முற்றுப்புள்ளியிட்டிருந்தால், விவரச் சித்தரிப்பாக இருந்திருக்கும். இன்குலாப் கவிதையாக இருந்திருக்காது. அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல் பூர்வத்தின் வழிகாட்டுதலை

'இனியும் சுமப்பாய்

அவர்கள் தலைகள்'

என முடிக்கிறபோது இன்குலாப் என்னும் காலத்தின் கவி வெளிப்படுகிறார். இறுதி இரு வரிகள் தலித் மக்கள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சியின் மானுடப் பிரகடனம்.

இது எமது காலம் என உணர்ந்த தலித் மக்கள், இவன் எமது காலத்தின் கவி என அங்கீகரித்தார்கள்.

விருதுகளால் புளகாங்கிதம் எய்துபவர் அல்ல எனது நண்பர். விருதை நோக்கிய தேடலில் சிலரைப்போல் ஓட்டமும் நடையுமாய் அலைபவரும் அல்ல. ஒடுக்குமுறை, அதிகாரம், நிறுவனமயம் – அனைத்து எதிர்ப்புகளும் அடி நீரோட்டமாகக் கொண்ட ஒரு போராளி. விடுதலைச் சிறுத்தைகளின் 'அம்பேத்கர் சுடர்' விருதுக்கு முன்னரும் பின்னரும் அவர் ஏதேனும் விருதுகள் பெற்றிருப்பாராயின் அவை அனைத்தும் பின்தள்ளப்பட்டு விட்டன. ஒரு இதழில் எனது பாராட்டை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தேன்.

'இதைவிட மேலான விருதாய் நோபல் பரிசு கூட இருக்க முடியாது' 

தொடரும்..

2/3/2017 4:07:21 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்