Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தலைமைத்துவ வறுமையால் தோல்வியைத் தழுவுகிறோமா?

தலைமைத்துவ வறுமையால் தோல்வியைத் தழுவுகிறோமா?
அரசு மாதவன்

 

Face book பக்கம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தீபாவளியினை முன்னிட்டு 2016, 2017 ஆம் ஆண்டுகளில் ஆற்றிய உரைகளின் சிறிய துண்டு வீடியோவினைப் பார்க்க முடிந்தது. இரண்டு ஆண்டு உரைகளிலும் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த தீபாவளியில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்கிறார். நாங்கள் Sri Lankans ஆக வாழும் நிலை உருவாகும் என்றும் 2017 உரையில் கூறுகிறார்.

உண்மையில் இவ் உரைகளைக் கேட்கும்போது வெட்கமாக இருந்தது. கடந்த வருடம் என்ன கூறினோம் என்பது குறித்து எந்தவித எண்ணமுமின்றி சம்பந்தன் 2017 உரையை ஆற்றுகிறார். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்றோ, ஒரு தேசம் என்றோ அரசியல் உணர்வு ஏதும் இன்றி, எவ்விதக் கூச்சமும் இன்றி சிறிலங்கராக வாழ்வோம் என்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என்ற நிலையை தொலைத்து விட்டு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே தன்னை சம்பந்தன் நிலைப்படுத்தி வைத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

2009 ஆம் ஆண்டின் மே மாதத்தின் பின்னர் ஏற்பட்ட தலைமை வெற்றிடத்தின் போது சம்பந்தன் தமிழர்களின் தலைமையாக முடிசூடிக் கொண்டார். இது உண்மையில் ஒரு துன்பியல் நிகழ்வுதான். விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக சம்பந்தனதும், தி.மு.க. தலைவர் கருணாநிதியினதும் சம்மதத்தை இந்தியா பெற்றிருந்தது என்று உதாசீனப்படுத்த முடியாத தகவல் ஒன்று அரசியல் மட்டத்தில் பேசப்படுவதுண்டு. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கும்வரை அரசியல் தீர்வு முயற்சி எதுவும் வெற்றியளிக்கப் போவதில்லை. அவரையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் அரங்கில் இருந்த அகற்றிய பின்னர் சமஸ்டிக்கு நிகரானதொரு தீர்வை ஏற்படுத்துவது சாத்தியமாக இருக்கும் என இந்திய தரப்பு இவர்களை நம்ப வைத்ததாகவும், அவர்களும் இதற்கு சம்மதம் சொன்னதாகவும் இத் தகவல் தெரிவிக்கிறது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் அவர்களின் சம்மதத்துடன்தான் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழின அழிப்புக்குத் தமிழர் தலைவர்களே சம்மதம் தெரிவிக்கும் வகையில் அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் தலைவராகச் சம்பந்தன் பற்றிப் பேசும் போது நண்பர் ஒருவர் something is better than nothing என்று கூறுவார். தலைமை எதுவும் இல்லாது இருப்பதனை விட எமக்கு ஏதோவொரு தலைமை இருப்பது நன்மையானது என்பது அவரது வாதம். நான் மறுத்து வாதிடுவேன். எனது கருத்து தலைமை சாரந்தது மட்டுமல்ல. அனைத்து விடயங்களுக்கும் பொதுவானது. எந்த விடயமும் - அது தலைமையாக இருந்தால் என்ன, அல்லது வேறு விடயம் ஏதாவதாக இருந்தால்தான் என்ன – எவையும் ஒரு குறிப்பட்ட தரத்தையும் தகுதியையும் கொண்டதாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லாது விடின் ஒன்றுமே இல்லாது இருந்து விட்டால் நல்லவை கிடைப்பதற்கு கூடுதல் வாய்ப்புகள் வரலாம் என்பது எனது நம்பிக்கை. இதனால் நான் நண்பரிடம் சில சமயங்களில் nothing is better than something என்று வாதிடுவதுண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் இதுவரை தமிழ் மக்களுக்கு ஈட்டித் தந்த 'வெற்றிகளை' எவ்வாறு கணிப்பது என்பது ஒரு பிரதானமான கேள்வி. ஓர் ஆட்சிமாற்றத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இவ் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நன்மையானதா அல்லது பாதகமானதா என்பது பார்வைத்தளங்களுக்கிடையில் வேறுபடுகிறது. பாதகமானது என்பவர்கள் ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழர்கள் அனைத்துலக சமூகத்தால் கைவிடப்பட்டு விட்டார்கள் என்கிறார்கள். சாதகமானது என்போர் உள்நாட்டில் அரசியல் வெளி அதிகரித்துள்ளது என்கிறார்கள். இந்த இரண்டு நிலைப்பாடும் மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்து நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து எடுக்கப்படும் நிலைப்பாடாகவே இருக்கிறது.

ஆட்சிமாற்றத்தை தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுவதற்கு உள்ள வாய்ப்புகளைத் தமிழர் தரப்பு சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அதற்குரிய அரசியல் விருப்பு அதற்கு இல்லை. மக்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டவோ, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. அரசியலை உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொறிமுறையாகப் பார்க்காமல் அதனைத் தொழிலாகவும் இலாபம் ஈட்டித்தரும் தொழிற்துறையாகவுமே அணுகும் முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 'வளர்ச்சி' கண்டிருக்கிறது. இதில் தமிழரசுக்கட்சி முன்னணியில் திகழ்ந்தாலும் எனைய கட்சிகளும் போட்டி போடும் வகையில் அரசியற் தொழில்தான் செய்கிறார்கள்.

நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள். தனித்துமான தேசத்தவர். எங்களின் தனித்துவத்தை, எங்களின் தேச அந்தஸ்தை, எங்களின் பாரம்பரியப் பூமியை, எங்கள் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் என்று உரிமைக்குரல் எழுப்ப வேண்டிய தமிழர்களின் தலைவர், நாம் சிறிலங்கர்களாக வாழும் நிலை உருவாகும் என்கிறார். அரசியல் விருப்பு இல்லாத தலைமையால் எப்படித் தமிழ் மக்களின் உரிமையைப் வென்றெடுக்க முடியும்?

எனக்கு விடை தெரியாத கேள்விகளில் ஒரு கேள்வியை இங்கு முன் வைக்கிறேன். மாவீர்களை வணங்கும் தமிழர்களால், தலைவர் பிரபாகரனை இதயத்தில் இருத்தி வைக்கும் தமிழர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கையும் சம்பந்தனின் சரணாகதியையும் எப்படி சகித்துக் கொள்ள முடிகிறது?

10/27/2017 12:22:15 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்