Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வீட்டு வர்ணப் பூச்சுக்களால் மறைக்கப்பட்ட அத்திவாரம் இராஜதுரை

வீட்டு வர்ணப் பூச்சுக்களால் மறைக்கப்பட்ட அத்திவாரம் இராஜதுரை
மட்டு நேசன்

 

மட்டக்களப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரையின் கடந்தகால அனுபவங்களின் நினைவு மீட்டல் அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இன்று எந்தச் சின்னம் வடகிழக்கில் கோலோச்சுகிறதோ அதனை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தியவர் அவர். அவரது அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்குப் பாடமாக உள்ளது. தற்போதைய தமிழ்த்தேசியவாதிகள் எனப் படம் காட்டுபவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் வைத்தன. ஆடையில்லா ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளிதான் என்றே தற்போதைய அரசியல் நிலை உள்ளது.

தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரை எப்போதுமே பரபரப்புக்காக எதையாவது பண்ணித் தொலைக்கும் M.K.சிவாஜிலிங்கம், 'மட்டக்களப்பு துரோகி', 'சக்கிலியா' என வசை பாடியது யாழ்ப்பாண மக்கள் அனைவரையுமே தலை குனிய வைத்தது.

எப்போதுமே யாழ்ப்பாண மக்கள் திரு.இராஜதுரையை மதித்தவர்கள். தமிழரசுக் கட்சி மகாநாட்டிலோ, கூட்டத்திலோ இராஜதுரை பேசுகிறார் என்றால் வருகை தரும் மக்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காகக் காணப்படும். பல மைல் தூரம் துவிச்சக்கர வண்டியிலோ, பேருந்திலோ பயணித்து வரும் கட்சி விசுவாசிகள் திரும்பிச் போகும் போது அவரது உரையில் தாம் ரசித்த பகுதிகளைச் சிலாகித்துச் செல்வர். 'சொல்லின் செல்வர்' என்ற அடைமொழி இராஜதுரை அவர்களுக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது.

'மட்டக்களப்பில் குழல் புட்டு இருப்பது போல் தமிழரும் முஸ்லிங்களும் வாழ்ந்து வருகிறோம்' என்ற அவரது உவமானம் யாழ்ப்பாணத்தவரால் மிகவும் ரசிக்கப்பட்டது. 'தேங்காய்ப்பூ அடுத்து மா என மாறி மாறி குழல் புட்டு இருப்பது போல்   தொடர்ச்சியாகத் தமிழ் - முஸ்லிம் கிராமங்கள் அமைந்திருக்கின்றன' என அவர் சுட்டிக்காட்டினார். வித்துவத்தனத்தைக் காட்டாமல் எளிய உவமானங்கள், சரளமான உரைமூலம் வடக்கு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 தேர்தலைச் சந்தித்த போது கட்சியில் இரண்டாம் அல்லது மூன்றாவது நிலையில் இருந்தவர். அவருக்கு உரிய கௌரவம் கொடுக்கப்படாதது துரதிஷ்டவசமானதே. தந்தை செல்வா உயிரோடு அப்போது இருந்திருந்தால் இந்த நிலை தோன்றி இருக்காது

கவிஞர் காசி ஆனந்தனின் பிறந்தநாளைக் கொண்டாட அன்றைய இளைய தலைமுறையினர் விரும்பினர். தந்தை செல்வாவுக்கு அழைப்பு விடுத்தனர். இவர்களின் அழைப்பை அவரும் ஏற்றுக்கொண்டார். புகையிரதம் மூலம் பயணித்து மட்டக்களப்பைச் சென்றடைந்தார். இவரைச் சந்தித்த பாலிப்போடி சின்னத்துரை (பின்னாளில் யோகன் பாதர் என போராளிகளால் அழைக்கப்பட்டவர்), ராஜ்மோகன் (தமிழீழ விடுதலைக் கழுகுகள் படை நிறுவனர், பின்னாளில் புளொட்டுடன் எதோ ஒரு வகையில் பணியாற்றிக் காணாமல் போனவர்) ஆகிய இருவரும் இவ்விழா தொடர்பான துண்டுப் பிரசுரத்தை வழங்கினர். அதனை வாசித்ததும் தந்தை செல்வாவின் முகம் மாறியது. 'இதில் இராஜதுரையின் பெயர் போடப்படவில்லையே, ஏன்' எனக் கேட்டார். இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு தான் - தனக்காகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளையும் புறந்தள்ளி விட்டதுடன் எவரையுமே சந்திக்காமல் வாடி வீட்டில் தங்கிவிட்டு திரும்பிச் சென்றார் தந்தை செல்வா. இராஜதுரை மீது தான் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்பதை அன்றைய இளைஞர்களுக்கு உணத்தினார் அவர்.   

அவரது மறைவின் பின் இராஜதுரை கட்சியிலிருந்து தானாகவே விலகிச் செல்லும் முடிவை எடுக்க அன்றைய கட்சித் தலைமை தூண்டியது. இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் தொடர்ந்து முதலாவது எம்.பி.யாக இருந்து வந்த அவரை பொத்துவில் தொகுதியில் போட்டியிடச் சொன்னார்கள். அவர் சம்மதிக்கவில்லை. அடுத்து அன்றைய இளைஞர்களின் கதாநாயகனாகத் திகழ்ந்த காசி ஆனந்தனைக் களமிறக்கினார்கள். இந்த அரசியல் சூழ்ச்சிக்குக் காசி ஆனந்தனும் பலியானமைதான் பரிதாபகரமானது.

மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக்கப்பட்டதே தமிழரிலும், முஸ்லிமிலும் தலா ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காகத்தான். அன்றைய சூழலில் இன்னொரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமெனக் கட்சி தீர்மானித்திருந்தால் வீட்டுச் சின்னத்தில் ஒரு முஸ்லிமை நிறுத்தி இருக்கலாம். அத் தேர்தல் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு எனக் கட்சி பிரகடனப்படுத்தி இருந்தது. மூதூர், கல்முனை, சம்மாந்துறை, புத்தளம் ஆகிய தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய கட்சியால் இதனை ஏன் செய்யமுடியாமற் போனது?  

வீட்டு வர்ணப் பூச்சுக்களால் மறைக்கப்பட்ட அத்திவாரம் இராஜதுரை

மட்டக்களப்பில் ஒரு முஸ்லிமை நிறுத்தியிருந்தால் முஸ்லிம் மக்கள் கட்சியைச் சந்தேகத்துடன் பார்த்திருக்க மாட்டார்கள்.

மட்டக்களப்பு, கல்முனை (பின்னாளில் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கிய அஷ்ரப் தான் இங்கு வேட்பாளர்) ஆகிய தொகுதிகள் கட்சியின் வசம் வந்திருக்கும். இந்த தவறுக்கு யார் பொறுப்பு? பல கட்சிகளில் பயணித்து இன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகிய இருவரும் இக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப் பட்டவர்கள்.

1977 தேர்தலில் தமிழீழ இலட்சியத்தைக் கைவிட மாட்டோம் என தந்தை செல்வாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தவர்கள் இவர்கள். இந்த இருவரும் தான் தொடர்ந்து அரசியலில் இருப்பவர்கள். அன்று தமிழ் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு விட்டு இன்று சிங்க கொடியையும் ஆட்டிக்கொண்டு தனது கைகள் இரத்தக் கறை படியாதவை எனக் சொல்ல முடிகிறது சம்பந்தரால். அது மட்டுமல்ல கட்சிக்குள் புலி வாசனை வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

இராஜதுரை துரோகியென ஒரு காலத்தில் கட்சியால் குற்றஞ் சாட்டப்பட்டவர் என்றால் இவர்களெல்லாம் யார்?  

இராஜதுரை தான் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமை தொடர்பாக அளித்த விளக்கம் நியாயமானதாக மனத்துக்குத் தெரிந்தாலும் ஐ.தே,க. அரசில் இணைந்து கொண்டமை தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது என்பது உண்மைதான். இன்று மாவீரர் பட்டியலை எடுத்தால் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், மற்றும் புளொட்டால் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விபரங்கள் காணப்படுகின்றன. இச் சம்பவங்களுக்கு பொறுப்பானோர் இன்று தமிழ்த் தேசியவாதிகள், இராஜதுரை மட்டும் துரோகி என்று எம்.கே.சிவாஜிலிங்கம் நிறுவ முற்பட்டார். 

பிராந்திய ரீதியில் இக் குழுக்களுக்கு தலைமை தாங்கிய இரா.துரைரத்தினம், கோவிந்தம் கருணாகரம் (ஜனா) ஆகியோரை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தமிழீழத் தேசியத்தின் பெயரால் கூட்டமைப்பு நிறுத்தத் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

இன்று வித்தியாவின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அன்று வழங்கப்பட்டிருக்குமானால் சுவிஸ் குமாருக்கு சீனியராக இருவரும் இருந்திருப்பார்கள்.

ஜனா ஆரையம்பதியில் விஜி என்றழைக்கப்படும் நல்லதம்பி அனுஷ்யா என்ற மாணவி மீது பாலியல் வன்முறை மற்றும் படுகொலை செய்த ஆயுதக் குழுவின் தலைவர்.

இரா.துரைரத்தினம் காத்தான்குடியைச் சேர்ந்த ரிபாயா மீது மேற்கொள்ளப்பட்ட  குற்றங்களை செய்த குழுவின் தலைவர். இதனை இன்னுமொரு ஆவணம் உறுதிபடுத்துகிறது.  

10.10.2017 supeedsam. com இணையதளத்தில் பிரசுரிக்கப்படட 'காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு' இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் ராம் என்பவர் எழுதிய கட்டுரை இதை உறுதிப்படுத்துகிறது. இதில் சம்பந்தப்படட இன்னுமொரு தமிழ்ப் பெண் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்.

http://www.supeedsam.com/?p=54343

அவர் தங்களை மட்டக்களப்பு நகர் கடைத்தெரு வீதியில் காந்தி சிலைக் அருகாமையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அன்றைய EPRLF மாவட்டத் தலைவர் இரா. துரைரத்தினம் கூட்டிச் சென்றவர் என்றும், அலுவலகத்தில் இருந்த EPRLF உறுப்பினரும் இணைந்த மாகாண சபையின் நிதி  அமைச்சருமான கிருபாகரன் தங்களை சித்திரவதை செய்ததாகவும் கூறினார்.

ராமின் கூற்றுப்படி, 

'வந்த பெரு நிதியை முக்கியமானவர்கள் தமக்கும் தம் உறவுகளுக்கும் முடக்கிய பின் எஞ்சியதை ஏனையவர்க்கு பகிர்கையில் பலதும் நடந்தது. காத்தான்குடி பெண்ணை இச்சைக்காக சுகித்து, புலி என மண்ணுள் புதைத்து, மாகாண சபைக்கு வந்தவன் என்ற வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன

புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது இரா.துரைரத்தினம், ஜனா இருவரையும் எந்தக் காலத்திலும் உள்வாங்கக் கூடாது என அந்தந்தக் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தி இருந்தனர். அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் இவ்விருவரையும் கூட்டமைப்பு களமிறக்கினால் மாற்று அரசியலை எதிர்பார்க்கும் அனைவரும் இவர்களை நிராகரிக்க வேண்டும்.

இவர்களோடு ஒப்பிட்டால் இராஜதுரை செய்தது அற்பமே. மாற்று அரசியலை எதிர்பார்ப்போர் திரு.இராஜதுரையின் அனுபவங்களையும், அறிவுரைகளையும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். இராஜதுரை மீது உள்ள மதிப்பு இன்னும் மக்களுக்குக் குறைந்துவிடவில்லை என்பது மக்களின் மத்தியில் இறங்கிப் பணியாற்றினால் தெரியவரும்.   

10/13/2017 2:10:31 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்