Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா?

இன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா?
அரசு மாதவன்

 

1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் எதிர்த்தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்கின்றனர்.

அவர்களில் ஒருவராக முன்னரங்கில் விடுதலைப் புலிகள் போராளிகளில் ஒருவராகத் திலீபன் நிற்கிறான். அப்போது அவன் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக இருந்தான். அப்போது கிட்டு விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாக இருந்தார். அக் காலகட்டத்தில் தமிழீழ அரசியற் பொறுப்பாளர் என்று தேசந்தழுவிய பொறுப்புநிலை விடுதலைப்புலிகள் அமைப்பில் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு துறைப் பொறுப்பாளர்களும் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கீழேயே செயற்பட வேண்டும். திலீபன் தளபதி கிட்டுவின் பொறுப்பின் கீழேயே இயங்கி வந்தான்.

பலாலியில் வெளியேறிய இராணுவத்துடனான சமரில் திலீபன் படுகாயமடைகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறான். மருத்துவர்கள் அவனது உயிரைக் காப்பாற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது குடற்பகுதி கடும் சேதமடைந்திருந்தமையால் குடலின் ஒருபகுதியை மருத்துவர்கள் அகற்றி விடுகிறார்கள். சிறிதுகால ஓய்வின் பின்னர் திலீபன் குணமடைந்து மீண்டும் தனது பணியை தொடர்கிறான்.

திலீபன் காயமடைந்தமையால் மிகவும் மனவேதனையடைந்திருந்த திலீபனின் நண்பர் ஒருவர் அவனிடம் மனந்திறந்து பேசுகிறார்.

«விடுதலைப்புலிகள் அமைப்பில் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு திறமையுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியல் நடவடிக்கைகளில் திறமையுள்ளவர்கள் குறைவு. நீ கட்டாயம் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக களமுனைக்கு போக வேண்டியது அவசியம்தானா? உனக்கு உயிராபத்து ஏற்பட்டால் அதனை ஈடு செய்வது இலகுவானதில்லையே!» நண்பர் தனது கவலையை வெளியிடுகிறார்.

இன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா?

திலீபன் இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தனது பாணியில் இயல்பான புன்முறுவல் செய்கிறான். தனது நண்பனின் முதுகில் செல்லத்தட்டுத் தட்டுகிறான். பின்னர் பேசுகிறான்.

«நான் உண்மையானவனாக இருக்க விரும்பிறேன். இயன்றளவு தூய்மையானவனாகவும் இருக்க விரும்புகிறேன். மனித மனம் இலகுவில் அலைபாயக்கூடியது. போர்க்களம் மனித வாழ்வின் நிலையாமையை எப்போதும் வெளிப்படுத்தும். ஒவ்வொரு முறையும் சமர்க்களத்துக்கு சென்று மீள்கையில் நான் பக்குவப்பட்டவனாக வளர்ந்து வருவதனை என்னால் உணர முடிகிறது. நான் மிக மனவிருப்பத்துடனேயே போர்க்களத்துக்குப் போகிறேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தன்னை அரசியல் இராணுவத் துறைகள் என இரு வேறுபட்ட துறைகளாக ஒழுங்கமைக்கவில்லை. இரண்டும் இணைந்த அமைப்பாகவே இயக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளைச் செய்தாலும் எல்லோரும் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். இன்னும் உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு வெற்றிகரமான அரசியல் பொறுப்பாளராக இருக்க வேண்டுமானால் இராணுவ நடவடிக்கைகளில் முன்னிற்பவனாக இருக்க வேண்டும்»

இது திலீபனின் தனது நண்பனிடம் வெளிப்படுத்திய கருத்து. உணர்வும் உண்மையும் நிரம்பிய வார்த்தைகள் இவை. இவற்றை பொதுவெளியில் திலீபன் பேசியதில்லை. ஒரு தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பேசுவது அறம் சார்ந்ததுதானா என்ற கேள்விக்கும் இங்கு இடமுண்டு. இருந்தும் தற்போதய அரசியல் சூழலில் திலீபனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு உரிய சில விடயங்களையாவது உணர்ந்து கொள்வதற்கு இவ் உரையாடல் உதவும் என்ற நோக்குடன் உரிய அறநெறி சார்ந்து பொறுப்புணர்வுடன்தான் இது இங்கு பகிரப்படுகிறது. விடுதலை இயக்கங்களில் இருந்த போராளிகளுக்குத் தெரியும். பொதுவெளியில் பேசாத முக்கியமான பல்வேறு விடயங்கள் போராளிகளின் வீரச்சாவோடு மறைந்து போயிருக்கும். உயிரோடு இருப்பவர்கள் அவற்றை இப்போதும் அவர்கள் தம்முடன் சுமந்து திரிவார்கள்.

திலீபன் மக்களுடன் இயன்றளவு உண்மையைத்தான் பேசுவான். தனது மனச்சாட்சிக்கு ஒத்துவராத விடயங்களை செய்வதனை இயன்றளவு தவிர்ப்பான். ரெலோ போராளிகள் மீதான தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பு யாழ்ப்பாண மாவட்டம் பூராக நடாத்திய பரப்புரைக் கூட்டங்களை திலீபன் நடத்தவில்லை. அவன் அரசியற் பொறுப்பாளராக இருக்கும்போது நடைபெற்ற கூட்டங்களில் திலீபன் பங்குபற்றவும் இல்லை. மலரவனே இக் கூட்டங்களில் பிரதான பேச்சாளராக இருந்தார். யாழ் ஆயர் மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ் விடயம் தொடர்பாக திலீபன் பங்குகொண்டு உரையாடியிருக்கிறான். அக் கூட்டத்திலும் அவன் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசவில்லை. ரெலோ அமைப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான அரசியற் பரிமாணத்தை திலீபன் புரிந்து கொண்டாலும் இதனை இராணுவ வழிமுறை மூலம் கையாள்வதில் திலீபனுக்கு சம்மதம் இருக்கவில்லை எனக் கருத இடமுண்டு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு விடும் என்று திலீபன் கவலையுற்றான். மக்கள் ஒப்பந்தத்தின் ஆபத்தை உணராது இருக்கிறார்கள் என்று வேதனையுற்றான். அரசியல் வேலைகளின் போதாமையும் இதற்குக் காரணம் என்று மனம்நொந்து கூறியிருக்கிறான். இந்நிலை களைய தன்னையே அர்ப்பணிப்பேன். தனது தியாகத்தின் மூலம் மக்கள் உண்மையை உணர்வார்கள் என்று உறுதியாக நம்பியிருக்கிறான். தண்ணீர் அருந்தியவாறு உண்ணாவிரதம் இருக்குமாறு நண்பர்கள் பலர் விடுத்த வேண்டுகோளை அவன் நிராகரித்திருக்கிறான். தனது இலட்சியத்துக்காக அறப்போரில் தனது உயிரை ஈகம் செய்திருக்கிறான்

26.09.2017 அன்று திலீபன் ஈகைச்சாவு அடைந்து 30 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இக்கட்டுரை திலீபன் நம்மை விட்டுப் பிரிந்த 30 ஆண்டு நிளைவுநாளில்தான் எழுதப்படுகிறது. எழுதிக் கொண்டிருக்கும்போது மனதில் கேள்வியொன்று எழுந்தது. திலீபனிடம் இருந்து இன்றைய தமிழ்த் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் குறித்து சிந்தனை ஏதும் நமது தலைவர்களிடம் உண்டா?

திலீபனைப் போன்று உயிர்த் தியாகம் எதுவும் செய்யத் தேவையில்லை. மக்களுக்கு உண்மையாகவும் கொண்ட இலட்சியத்துக்கு உறுதியாகவும் செயற்படவேண்டும் என்று திலீபனின் நினைவோடு நாம் இவர்களைக் கோருவது தவறுதானா?

9/30/2017 2:44:51 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்