Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பொதிக்குள் இருந்த மண்டையோட்டுப் படம்

<p>பொதிக்குள் இருந்த மண்டையோட்டுப் படம்</p>
மூனா

 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - பகுதி 2

புறப்படும் நாளுக்கு முதல் நாள் எனது மாநிலத்தில் புனர்வாழ்வுக் கலைத் தென்றல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்திற்கு மேலாக ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். ஓயாத வேலை. கலைஞர்கள், மண்டபம், நிகழ்ச்சி ஒழுங்கு, வரவு செலவு என ஏகப்பட்ட பொறுப்புகள். நிறையவே களைத்து விட்டேன். நிகழ்ச்சி முடிய அப்படியே கலைஞர்கள் பயணிக்கும் பஸ்சில் வூப்பெற்றால் நகரத்துக்குப் பயணமானோம். நித்திரை கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அன்று இரவு நடந்த கலை நிகழ்ச்சிகள் பற்றியே எல்லோரும் கதைத்துக் கொண்டு வந்தார்கள். இடையிடையே கேள்விகள் என்னை நோக்கியும் வரும். எனது இதே பரிதாபகரமான நிலையிலேயே ஆனந்தண்ணையும் இருந்தார். அவரும் நிறையவே களைத்துப் போய் இருந்தார். நித்திரை இல்லாமல் 450 கிலோ மீற்றர் பயணம்.. நிறையவே நான் சோர்ந்து போயிருந்தேன்.

காலையில் வூப்பெற்றால் போய்ச் சேர்ந்தோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மன் கிளை வூப்பெற்றால் நகரிலேயே இருந்தது. அங்குதான் காலை உணவு எடுத்துக் கொண்டேன். செயற்கைக் கால் செய்வதற்கான யேர்மனிய தொழில் நுட்பத்துக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் ஏற்கெனவே பெட்டிகளில் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே என்ன இருக்கிறது எனப் பிரித்துப் பார்க்க வாய்ப்பில்லை.

'செயற்கைக் கால்களைச் செய்வதற்கான சில இரசாயனப் பொருட்களும் இதுக்குள்ளை இருக்கு. எல்லாத்தையும் அங்கை கொண்டு போய்ச் சேர்க்கிறது எங்கடை பொறுப்பு என்ற பேச்சோடைதான் ஒத்தப்பேடியோடை ஒப்பந்தம் செய்திருக்கிறம். நீங்கள்தான் கொண்டு போகோணும். இவை எல்லாம் உங்கடை பொறுப்பு. இங்கை, ஏர்போர்ட்டில் ஏதாவது பிரச்சினை எண்டால் நாங்கள் நிக்கிறம்தானே. திருப்பி எடுத்துக் கொண்டு வரலாம். அங்கை நீங்கள்தான் பாக்கோணும்' ஆனந்தண்ணை சொல்லிக் கொண்டிருந்தார்.

அங்கே போவதற்கு ஏற்கெனவே பயமாக இருக்கிறது. இதற்குள் இது வேறையா? மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். குறிப்பிட்ட நேரம் வந்தது. என்னுடன் வெண்புறா நிறுவனத்துக்கு வரும் தொழில் நுட்பவியலாளர் வந்து சேர்ந்தார். தன்னை என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

'என் பெயர் கொல்கர் றாம்' (Holger Tham)' புன்னகையுடன் தன்னை அறிமுகம் செய்தார். சிரித்த முகம். கனிவாகப் பேசினார். பார்த்தவுடன் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இனி அடுத்த நான்கு கிழமைகள் இவர் எங்களோடுதான். வன்னியில் நுளம்பு, பூச்சிகள், பூரான்களுடன் சிரமப்படப் போகிறான் என நினைத்துக் கொண்டேன்.

டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு புறப்பட பயண ஏற்பாடு. குறித்த நேரத்தில் அங்கே நின்றோம்.

<p>பொதிக்குள் இருந்த மண்டையோட்டுப் படம்</p>

பயணப் பொதிகளை கொடுத்து போடிங் பாஸ் எடுத்துக் கொண்டோம். இப்பொழுது எங்கள் தோள்களில் தொங்கும் அடக்கமான சிறிய பையே மிகுதியாக இருந்தது.

ஆனந்தண்ணையைப் பார்த்தேன். சோர்வாக இருந்தார்.

'நித்திரை காணாது போலை?'

'முந்தநாளும் நித்திரை இல்லை. நேற்றும் இல்லை. உங்களை அனுப்பிப் போட்டு, இரண்டு நாளுக்கு ஒரு வேலையும் செய்யிறதில்லை. பேசாமல் வீட்டிலை இருக்கப் போறன்'

ஆனந்தண்ணை மிகவும் சோர்வாகவே பேசினார். அவரே கேட்டார். 'நேரம் இருக்குத்தானே கோப்பி குடிப்பமே?'

எனக்கும் அது நல்லதாகப் பட்டது.

விமான நிலையத்துக்குள் இருந்த கோப்பி பாரில் நிறைய கூட்டமாக இருந்தது. எங்களுக்காககவே ஒதுக்கப்பட்டது போல் ஓர் இடம் பாரின் மூலையில் இருந்தது. அமர்ந்து கொண்டோம்.

கோப்பி வந்தது. அதை பருக ஆரம்பித்தோம். அப்போதைக்கு அது அமிர்தமாக இருந்தது.

'அங்கை ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு போன் செய்யுங்கோ' சொல்லிக் கொண்டிருந்த ஆனந்தண்ணை கதிரையில் இருந்து நழுவி தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தார்.

இது யாரும் எதிர்பார்க்காதது.

நிலைமையை அவதானித்த பாரின் ஊழியர் ஒருவர் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் திரை மறைப்பு ஒன்றை தற்காலிகமாகப் போட்டார்.

ஆனாலும் ஆனந்தண்ணை நிலத்தில் இருந்து துடிப்பதை அவதானித்த அங்கிருந்தவர்கள், ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது எனப் பயந்து பாரை விட்டு ஓட ஆரம்பித்தார்கள். சில செக்கன்கள்தான் பார் வெறுமையாக இருந்தது.

கொல்கர் உடனடியாகவே அம்புலன்சிற்கு போன் செய்தான்.

ஆனந்தண்ணையுடன் கூட வந்தவர் அவருக்கு எப்போதாவது இப்படி வரும் என்று சொன்னார்.

கொல்கர் உட்பட நாங்களும் நிறையப் பயந்து போயிருந்தோம்.

அம்புலன்ஸ் வந்தது. ஆனந்தண்ணைக்கு அவசர சிகிச்சை தந்தார்கள். வைத்தியசாலைக்கு கொண்டு போவதற்கு அவரை தள்ளு வண்டியில் வைத்து நகர்த்தினார்கள்.

ஆனந்தண்ணையால் உரையாட முடியவில்லை கண்கள் சொருகி இருந்தன.

'நித்திரை கொள்ளாதீர்கள்' என அவரைத் தட்டித் தட்டி எழுப்பியபடியே அம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

ஆனந்தண்ணையுடன் கூட வந்தவரும் அவர்களது வாகனத்திலே ஏறிக் கொண்டார்.

நாங்கள் தனித்து நின்றோம்.

பார் உரிமையாளர் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 'பாவிகளே எங்களின்ரை வியாபாரத்தை நாசமாக்கிட்டீங்களே' என்று அந்தப் பார்வை எனக்கு விளக்கம் சொன்னது.

நேரம் நெருங்கி விட்டிருந்தது. போடிங் பாஸைக் காட்டி விட்டு விமானத்துக்குள் ஏற முற்படும் பொழுது ஒலிபெருக்கி என் பெயரைச் சொன்னது.

'நீங்கள் கொண்டு செல்லும் பொதிகளில் உள்ள பொருட்களைப் பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது. எங்களது இடத்துக்கு தயவுசெய்து உடனடியாக வரவும்' என்று அது மேலும் சொன்னது.

விமான சிப்பந்தி என்னை அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

மேசையில் எனது பொதி இருந்தது. திறந்து காட்டச் சொன்னார்கள்.

அப்பொழுதுதான் நானும் அதை திறந்து பார்க்கிறேன்.

'நீங்கள்தானே இதை பக் செய்தது?'

வெளியார் யாரும் பொதிகளை தந்தார்களா? நீங்கள்தான் எல்லாவற்றையும் பொதி செய்தீர்களா என்று பொதிகளைக் கையளிக்கும் பொழுது கேட்ட கேள்விகளுக்கு அடியேன் எல்லாம் நான்தான் என்று ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். ஆகவே இப்பொழுது மறுக்க முடியாது. இல்லை என்று மறுத்தால் பிரச்சினை அதிகமாகும். ஆனந்தண்ணையும் இல்லை. உள்ளே ஆயுதங்கள் ஏதாவது..? மனது படபடத்தது. ஆனாலும் துணிவுடன் பொதியை திறந்து காட்டினேன்.

பொதிக்குள் இருந்து மருந்துகள் நிறைந்த இரண்டு தகர டப்பாக்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். இரண்டு தகர டப்பாக்களிலும் மண்டை ஓட்டுப் படம் இருந்தது.

தொடரும்...

2/15/2015 1:48:53 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்