Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எஸ்.எம்.ஜி. யின் சிறப்பு ஊடகத்திறமை மட்டும்தானா?

<p>எஸ்.எம்.ஜி. யின் சிறப்பு ஊடகத்திறமை மட்டும்தானா?</p>
அரசு மாதவன்

 

1987 ஆம் ஆண்டு. ஒக்டோபர் மாதம் 10 ஆம் நாள் அதிகாலை 5 மணியிருக்கும். இந்திய இராணுவத்தினர் ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்களைச் சுற்றி வளைத்து அங்கிருந்த பத்திரிகையாளர்களையும், ஏனைய ஊழியர்களையும் கைது செய்து யாழ்ப்பாணக் கோட்டை இராணுவமுகாமுக்கு கொண்டு செல்கின்றனர். பத்திரிகை அலுவலகங்களையும் குண்டு வைத்து தகர்க்கின்றனர்.

இவ் இரண்டு பத்திரிகைகளதும் பிரதம ஆசிரியர்கள் அப்போது அலுவலகத்தில் இருக்கவில்லை. இதனால் அப்போது அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஈழமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக எஸ்.எம். கோபாலரத்னம் (எஸ்.எம்.ஜி) இருந்தார். முரசொலியின் ஆசிரியராக மு.திருச்செல்வம் இருந்தார். (இவர் இப்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார்) இவர்கள் இருவரும் உடனடியாக இந்திய இராணுவத்தினரால் அன்றைய அதிகாலை கைது செய்யப்படாவிட்டாலும் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். திருச்செல்வம் ஒரு சில தினங்கள் யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எஸ்.எம்.ஜி கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 75 தினங்கள் இந்தியச் சிறையில் இருந்தார். இவர் கூடுதலான காலம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இவரது சிறை அனுபவம் «ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை» எனும் பெயரில் நூலாகி வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது.

எஸ்.எம்.ஜி, கோபு ஐயா என்று விழிக்கப்பட்ட ஈழத் தமிழ் ஊடக உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்னம் கடந்த 15.11.2017 இயற்கை எய்தியிருக்கிறார். இப்பத்தி அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதுடன் அவரிடம் இருந்து நாம் கற்க வேண்டிய, இன்றைய காலத்துக்குத் தேவையான சில விடயங்களைச் சுருக்கமாகப் பேசுகிறது.

1987 ஒக்டோபர் மாதம் 10 ஆம் நாள் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு, ஊழியர்கள் கைது செய்யப்பட்டவுடன் இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே யுத்தம் ஆரம்பிக்கும் நிலை தோன்றிவிட்டது. கைது செய்யப்பட்ட ஊழியர்களில் முரசொலி பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கபட்டு, ஈழமுரசு ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அன்று பிற்பகல் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் யுத்தம் ஆரம்பித்து விட்டது.

அன்றைய காலத்தில் இப்போது இருப்பது போன்ற இணையத்தளங்களும் சமூக ஊடகங்களும் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. பத்திரிகைகளே மக்களுக்குத் தகவல்களை வழங்கும் பிரதான ஊடகமாக இருந்தன. யுத்தக்களத்தில் ஏதாவது விசேட சிறப்புச் செய்திகள் கிடைக்குமானால் அவற்றை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க விசேட பதிப்புகளை பத்திரிகைகள் வெளியிடுவது வழக்கம். இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போரைத் தொடங்கத் தீர்மானித்த பின்னர் இப் போர் தொடர்பான செய்திகள் மக்களிடம் போய்ச் சேர்வதைத் தடுக்கும் நோக்கத்துடனும்தான் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளை குண்டு வைத்துத் தகர்த்திருந்தார்கள்.

குண்டு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்ட பின்னர் ஈழமுரசு பத்தரிகையைத் தொடர்ந்து வெளியிடுவது என விடுதலைப்புலிகள் அமைப்பு முடிவெடுக்கிறது. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போர் பற்றிய செய்திகளைத் தாங்கிய வண்ணம் ஈழமுரசு வெளிவந்து கொண்டிருந்தது. அச்சடிக்கும் இடங்களை மாற்றிய வண்ணம் குண்டு வீச்சுக்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும் மத்தியிலும் பேனாவைத் தனது ஆயுதமாக்கி ஈழமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக எஸ்.எம்.ஜி போர்க்களத்தில் நின்றார்.

இது தனக்கு ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தையோ அல்லது ஏனைய ஆபத்துக்களையோ எஸ்.எம்.ஜி எள்ளளவும் பொருட்படுத்தவில்லை. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஈழமுரசு இந்திய இராணுவத்தின் போர்க் கொடுமைகளை வெளிப்படுத்திய வண்ணம் வெளி வந்து கொண்டிருந்தது. போர் விரிவடைந்து இந்திய இராணுவம் பிரதேசங்களை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த பின்னர் ஈழமுரசு பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டுவர முடியவில்லை. பத்திரிகை வெளிவரும்வரை எஸ்.எம்.ஜி பத்திரிகையின் பிரதம ஆசியராகப் பணியாற்றினார். இதன் பின்னர் தனது வீட்டில் இருந்தபோது இந்திய இராணுவம் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது. தாம் குண்டு வைத்துத் தகர்த்த பின்னரும் ஈழமுரசு வெளிவருவதற்கு அவர் வழங்கிய பங்களிப்பு அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது.

எஸ்.எம்.ஜி, தான் நினைத்திருந்தால் அவருக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி போர்ச்சூழலை விட்டு வெளியேறிப் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. தனது சக ஊழியர்கள் சிறையில் இருக்கும்போது தான் தப்பி ஓடக்கூடாது என்று நினைத்தார். மக்களுக்குத் தகவல் தேவைப்படும் ஒரு முக்கியமான தருணத்தில் ஊடகப்பணியைச் செய்வதே அறம் எனக் கருதினார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் சில விடங்களில் அவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைச் சுட்டிக்காட்டியவாறு அவர் போராட்டத்தின் பக்கமே நின்றார். துணிச்சலும், சமூகப்பொறுப்பும், அறநெறிகளைப் பின்பற்றிச் செயற்படும் பாங்கும் இவரது ஊடக வாழ்வில் இருந்து இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

தமிழர் தேசத்தின் அரசியற் தலைவர்களாகட்டும், ஊடகர்களாகட்டும், சமூகத் தலைவர்களாகட்டும் எஸ்.எம். ஜி யின் வாழ்க்கையினை உற்றுப் பாரத்தால் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான பல விடயங்களை இனங் கண்டு பின்பற்ற முடியும்.    

12/24/2017 5:45:20 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்