Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் ஏற்படப் போகும் பேராபத்துக்கள்?

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் ஏற்படப் போகும் பேராபத்துக்கள்?
யதீந்திரா

 

மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் தும்புத்தடியொன்றை நிறுத்தினாலும் கூட மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார். மக்களை தும்புத்தடியுடன் ஒப்பிடுவதிலிருந்து சம்பந்தன் எந்தளவிற்கு மக்களை மதிக்கின்றார் என்பது தெளிவு. இன்று அவரும், அவரால் வழிநடத்தப்படும் இலங்கை தமிழரசு கட்சியும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது தும்புத்தடிகளை மக்கள் பெருவாரியாக பெற்றிபெறச் செய்வார்கள் என. ஏனெனில் தமிழரசு கட்சியின் தலைவர்களது பார்வையில் மக்கள் என்பவர்கள் வெறுமனே வாக்களிக்கும் இயந்திரங்கள் மட்டுமே - அவர்களுக்கென்று சொந்த புத்தி இல்லை. இல்லை – எங்களுக்கு சொந்த புத்தி இருக்கிறது என்பதை மக்கள் எப்போது நிரூபிக்கப் போகிறார்கள்? மக்கள் அதனை நிரூபிக்காதவரையில் மேற்படி கணிப்பு சரியானதாகவே இருக்கலாம்.

பொதுவாக தேர்தல் என்றாலே கொள்கைகள் தூசுதட்டப்படுவதுண்டு. பின்னர் தேர்தல் முடிந்தவுடன் அனைத்தும் கிடப்பிற்கு சென்று விடுவதுமுண்டு. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழரசு கட்சியின் தலைவர்கள் கொள்கைகளை தூசுதட்டத் தொடங்கிவிட்டனர். சம்பந்தன் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்காக மக்கள் ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்கிறார். தமிழரசு கட்சி தோல்வியடைந்தால் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் தோல்வியடைந்துவிடும் என்கிறார் சுமந்திரன். இவ்வாறான கூற்றுக்களை முன்வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? உண்மையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. அப்படியிருக்கின்ற போது ஏன் சம்பந்தன் சுயநிர்ணய உரிமை பற்றி பேசுகின்றார்? சுமந்திரன் ஏன் புதிய அரசியல் யாப்பை தெருவிற்கு இழுக்கின்றார்? தமிழரசு கட்சி ஏன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சிக்கின்றது? இந்த இடத்தில்தான் தும்புத்தடிகளுக்கும் வாக்களிக்க கூடிய மக்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழரசு கட்சி முற்றிலுமாக அரசாங்கத்தை பாதுகாக்கும் ஒரு கட்சியாக உருமாறியது. இன்றுவரை அந்த நிலைமை தொடர்கிறது. தமிழ்த் தேசியத்தின் பேரால் மக்களின் ஆதரவை பெற்ற தமிழரசு கட்சி சிங்கள தேசியவாதத்தின் பாதுகாவலனாக மாறியது. இன்று விவாதிக்கப்படும் இடைக்கால அறிக்கை ஒன்றுதான் இந்தக் காலத்தில் இடம்பெற்ற ஒரேயொரு விடயம். இந்த இடைக்கால அறிக்கைக்குள்தான் சமஸ்டி ஒளிந்திருப்பதாகவும் பதுங்கிருப்பதாகவும் சுமந்திரன் கூறிவருகிறார். ஆனாலும் சுமந்திரனது வாதங்களின் உண்மைத் தன்மையை சுமந்திரன் நம்பிக் கொண்டிருக்கின்ற அரசாங்கத் தரப்பினரே உடனுக்குடன் அம்பலப்படுத்திவிடுகின்றனர். சமஸ்டி என்னும் சொற்பதம் இல்லாமல் சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று சுமந்திரன் அடித்துக் கூறுகிறார். கடந்த 30.12.2017 அன்று வெளியான தினக்குரல் பத்திரிகையில் சுமந்திரனின் மேற்படி கருத்து வெளியாகிருந்தது. ஆனால் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்து வருபவரும், வழிகாட்டல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தினவோ புதிய அரசியல் யாப்பில் சமஸ்டிக்கான எந்த அடையாளமும் இல்லை, அங்கு ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். இது தொடர்பான செய்தி 02.ஒக்டோபர். 2017 வீரகேசரியில் வெளியாகிருந்தது. இதில் யார் பொய்யர்? சுமந்திரனா அல்லது ஜயம்பதி விக்கிரமரத்தினவா?

ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சி இல்லை என்கிறார் சுமந்திரன். ஏக்கிய ராஜ்ய என்றால் தமிழில் ஒருமித்த நாடு என்கிறார். ஆனால் மல்லசேகரவின் சிங்கள அகராதியோ, ஏக்கிய ராஜ்ய என்பதன் ஆங்கிலச் சொல் ஒற்றையாட்சிதான் என்கிறது. இதில் எது பொய் அகராதியா அல்லது சுமந்திரனா?

01.10.2017அன்று வெளியான டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய தகவலில் ஜயம்பதி விக்கிரமரத்தின இவ்வாறு கூறுகின்றார். இலங்கை என்பது சுதந்திரமுள்ள, இறைமையுள்ள ஒரு சுயாதீன குடியரசாக இருக்கும். அது, சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய அல்லது தமிழில் ஒருமித்த நாடு அல்லது ஆங்கிலத்தில் யுனிட்டரி ஸ்டேட் என்பதாக இருக்கும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் தமது சொந்த புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். யுனிட்டரி ஸ்டேட் என்னும் ஆங்கிச் சொல்லிற்கான தமிழ் சொல் என்ன? விடை – ஒற்றையாட்சி என்பதாகும். ஒற்றையாட்சி என்னும் தமிழ் சொல்லுக்கான ஆங்கிலச் சொல் யுனிட்டரி ஸ்டேட் என்பதாகும். அவ்வாறாயின் ஒருமித்த நாடு என்னும் தமிழ்ச் சொல்லுக்கான பொருள் என்ன? உண்மையில் ஒற்றையாட்சி என்னும் சொல்லிற்கான சிங்கள சொல்லும் ஆங்கிலச் சொல்லும் சரியாக இருக்கின்ற போது ஏன் தமிழ் சொல் மட்டும் குழப்பகரமான ஒன்றாக இருக்கிறது? இந்த இடத்தில்தான் தமிழரசு கட்சி தனது சித்துவேலையை செய்திருக்கிறது. சிங்கள தேசியவாதத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தமிழ் மக்களை பயன்படுத்தும் ஒரு டீலை, தமிழ் மக்களைக் கொண்டே அமுல்படுத்த முயற்சிக்கின்றது. ஏனெனில் தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தும்புத்தடிக்கே வாக்களிப்பவர்கள் அல்லவா! ஜயம்பதி விக்கிரமரத்தின என்னும் சிங்களவர் தன்னுடைய மக்களுக்கு உண்மையாக இருப்பது போல் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு உண்மையாக இருக்கவில்லை. ஒரு வேளை சுமந்திரன் தும்புத்தடிக்கு வாக்களிக்கும் மக்களுக்கு ஏன் உண்மையை கூற வேண்டுமென்றும் நினைத்திருக்கலாம்.

இந்தப் பின்னணியில், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி ஏன் வெற்றிவாய்ப்பை கோருகிறது என்னும் கேள்விக்கான பதிலை காண்பதற்கு இனி கஸ்ரப்பட வேண்டியதில்லை. ஒரு ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்கக் கூடிய அரசியல் யாப்பை தமிழ் மக்களது ஆதரவோடு கொண்டுவருது ஒன்றே தமிழரசு கட்சியின் திட்டம். இதனை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்ற சூழலில்தான் இந்தத் தேர்தல் குறுக்கிட்டது. உண்மையில் இந்தக் காலத்தில் ஒரு தேர்தலை சம்பந்தன் - சுமந்திரன் தரப்பு விரும்பியிருக்கவில்லை. எனினும் தேர்தலை தொடர்ச்சியாக பிற்போட முடியாத ஒரு சூழலில்தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. தமிழரசு கட்சியை பொறுத்தவரையில், மக்களிடம் சொல்வதற்கு அதனிடம் எதுவுமில்லை. இதன் காரணமாகவே சம்பந்தன் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசுகின்றார். சுமந்திரனோ புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றார். இடைக்கால அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் வழிகாட்டல் குழு 73 தடவைகள் கூடியிருந்தது. இந்த வழிகாட்டல் குழுவில் தமிழரசு கட்சியின் சார்பில் சம்பந்தனும், சுமந்திரனும் பங்குபற்றியிருந்தனர். இந்த 73 சந்தர்ப்பங்களில் ஒரு தடவை கூட, சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சுயநிர்யண உரிமை தொடர்பில் வாய்திறக்கவில்லை. அங்கு திறக்காத வாய் உள்ளூராட்சித் தேர்தலின் போது மட்டும் ஏன் சுயநிர்யண உரிமையை முணுமுணுக்கின்றது?

இதற்கும் அப்பால் சுமந்திரன் திட்டமிட்ட வகையில் சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். தமிழரசு கட்சிக்குள் தனக்கு சவாலாக இருக்கக் கூடியவர்களை மெதுவாக களையெடுத்து வருகின்றார். இதற்கு தன்னால் ஏற்கனவே உள்நுழைக்கப்பட்டவர்களை கச்சிதமாக பயன்படுத்தி வருகின்றார். இதன் விளைவாகவே தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் அருந்தவபாலன் கட்சியிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் 1200க்கும் குறைவான முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்ந்து வருவது போன்றதொரு தோற்றத்தை காண்பிக்கும் வகையில் நான்கு முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சுமந்திரன் இடமளித்திருக்கின்றார். இத்தனைக்கும் யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம் அவர்கள் சார்பில் இருவருக்கு இடமளிக்குமாறு கோரியிருந்தது. ஆனால் அதனை தமிழரசு கட்சி பொருட்படுத்தவில்லை. இன்று வடக்கு கிழக்கில் மொத்தமாக 50 வேட்பாளர்கள் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர். இலங்கையை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் அனைத்து தேசிய கட்சிகளிலும் அங்கம் வகிக்கின்றனர். அதேவேளை தங்களுக்கென பிரத்தியேக கட்சிகளையும் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒரு போதும் தமிழ்த் தேசியவாத கட்சிகளில் இணைந்து போட்டியிடுவதில்லை. ஏனெனில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அவர்கள் ஒரு போதுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. ஆனால் இம்முறை இந்தளவு வேட்பாளர்கள் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றார்கள் என்றால் அதன் பொருள் என்ன? வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உரிய ஒன்றல்ல என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதுதானே அதன் பொருள். இதே வேளை நல்லூர் வட்டாரத்தில் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த ஒருவரை சுமந்திரன் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றார். இது அந்தப் பகுதி இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தமிழ் தேசியத்தின் பேரால் ஒற்றுமைப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலா? 

மொத்தத்தில் தமிழரசு கட்சி தமிழ் தேசிய அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டு செல்கிறது. இதற்கு பின்னரும் ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரிக்கின்றார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்பதே அதன் பொருளாகும். அவர் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கின்றார். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார். தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால், அதன் பின்னர் தமிழ் தேசியம் என்னும் சொற்சேர்க்கை அவசியமற்ற ஒற்று. இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது என்னும் பொய்யை அங்கீகரிக்கின்றார். இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான கொலைக்கு நீதி தேவையில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் ஏற்படப் போகும் பேராபத்துக்கள்?

எனவே இலங்கை தமிழரசு கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றால், இவை அனைத்தையும் சரி என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று தமிழரசு கட்சியால் வாதிடமுடியும். இதனை தமிழ் மக்கள் அனுமதிக்கப் போகின்றார்களா? எப்போதும் தும்புத்தடிகளுக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடியவர்கள் என்னும் தமிரசு கட்சியின் அகந்தைக்கு அங்கீகாரம் வழங்கப் போகின்றார்களா? இனி முடிவு மக்களின் கையில். 

1/20/2018 4:11:41 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்