Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இலங்கை அரசுக்கான நெருக்கடிகள் - யாருடைய நலன்களுக்காக?

இலங்கை அரசுக்கான நெருக்கடிகள் - யாருடைய நலன்களுக்காக?
சஞ்சீவன் ஜெயக்குமார்

 

ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது. 

முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொடர்பானதாகவும் ஊடக அறம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைகளை சுருக்கவும் தவிர்க்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு

 

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசுக்கு உள்நாட்டு நெருக்கடி என்பது, சமாளிக்கவே முடியாத மிகப் பெரிய சவால். ஆனால், அப்போது வெளியுலகத்தின் ஆதரவுத்தளம் பலமாக இருந்தது. அல்லது சாதகமாக இருந்தது.

இப்போது உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் மிகப் பலமாக உள்ளது. பதிலாக வெளியுலக நெருக்கடி மிகப் பெரிய சவாலாக உள்ளது. எதிர்நிலை அம்சங்கள் அதிகரித்துள்ளன.

புலிகள் இல்லை என்றாலும் புலிகளின் பேராலான – புலிகளுடனான யுத்தத்தின் போது நடந்த - யுத்தக் குற்ற விவகாரங்கள் தொடர்பாகவே இன்றைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த மாதிரியான நிலைமைகளை முன்னரும் சந்தித்திருக்கிறது. குறிப்பாக 1980 களில் ஏற்பட்ட இந்திய நெருக்கடி.

இந்த நெருக்கடி 1989 இல் மேலும் அதிகரித்து உள்நாட்டு அளவிலும் தீவிரமடைந்தது. இந்திய வருகையை எதிர்த்து, 1989 இல் ஜே.வி.பி இரண்டாவது கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தியதால் ஏற்பட்ட நெருக்கடி. இது இலங்கைக்குச் சமநேரத்தில் வெளி நெருக்கடியாகவும் உள் நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நெருக்கடிகளையும் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முறியடித்துவிட்டது.

அதற்காகப் புலிகளை ஒரு கருவியாகப் பாவித்தார் அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ. 1990 களில் அதிகாரத்தில் இருந்த ஆர்.பிரேமதாஸ புலிகளைப் பேச்சுக்கு அழைத்ததன் மூலம் இந்திய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்தார். அல்லது அந்த நெருக்கடியை வென்றார்.

இதனுடைய பின்னணியிற் செயற்பட்டது சிங்கள ராஜதந்திரமே.

பின்னர் 2002 இல் சர்வதேச சமூகத்தின் சமாதான முயற்சிகள் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்தன. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண வேண்டும் என்ற மேற்குலகின் விருப்பம் ஒரு மென் அழுத்தமாக அப்போதிருந்திருந்தது. இதனால், இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேசத்தின் கவனிப்புக்குச் சென்றது.

இந்த நிலையானது ஒரே நேரத்தில் புலிகளையும் சமாளிக்க வேண்டும். இந்தியா உட்பட்ட மேற்குலத்தையும் சமாளிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை என்பது அப்போது சாதாரணமாக இருக்கவில்லை. அன்று புலிகள் பல்வேறு முனைகளிலும் பலமாக இருந்தனர். இராணுவ ரீதியாகப் புலிகள் மிக உச்சத்திற் பலம் பெற்றிருந்தனர்.

அத்துடன், மேற்குலகத்தின் அனுசரணையுடன் பேச்சு மேசையில் இருக்கும் புலிகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அதேவேளை புலிகளின் கோரிக்கைகளுக்கு இடமளிக்காமல் தவிர்க்கவும் வேண்டும். அப்படித் தவிர்க்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களான மேற்குலகத்தின் அதிருப்தியைச் சம்பாதிக்கவும் கூடாது. மேலும் சமாதான முயற்சிகள் முறிவடையும்போது ஏற்படவுள்ள யுத்தத்தை எதிர்கொள்ளவும் வேண்டும் என்ற நிலை.

இது ஒரு பன்னிலைப்பட்ட நெருக்கடியாகவே அப்போதிருந்தது. ஆனால், இந்த நெருக்கடியையும் இலங்கை அரசு வெற்றிகரமாக முறியடித்தது. கூடவே புலிகளையும் தோற்கடித்தது.

பேச்சுவார்த்தையைப் புலிகள் முறித்துக் கொள்ளும்படியாக நடந்து, பழியைப் புலிகளின் தலையிலே போட்டது. யுத்தத்தையும் புலிகளே ஆரம்பிக்கும் படியான சூழலை உருவாக்கி, அந்தப் பழியையும் புலிகளின் தலையிலேயே கட்டியது. அப்படிப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலமாக உள்நாட்டில் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய ஏனைய சக்திகளையும் அது பலவீனப்படுத்தியது.

புலிகள் இருந்தவரையிலும் அரசுக்குப் பக்கபலமாக இருந்த தமிழ்க்கட்சிகள் புலிகள் இல்லாத சூழலில் வலுவிழக்கும் நிலை உருவாகியது. மேலும் உள்நாட்டில் அரசுக்குச் சவாலான ஏனைய தரப்புகளான ஜே.வி.பி, ஐ.தே.க போன்ற தரப்புகளையும் அது பலவீனப்படுத்தியது. யுத்த வெற்றி கேள்விக்கிடமற்ற முறையில் ஆட்சியிலிருக்கும் தரப்பைப் பலப்படுத்தியுள்ளது.

புலிகளைப் போரை நோக்கித் தள்ளியதன் மூலமாகவே இந்த வெற்றியை அது பெற்றது. இதற்காக அது புலிகளிடமிருந்த பலவீனங்களைக் கையாண்டது. குறிப்பாகப் புலிகளிடம் நிலவிய உள் முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. உள்நாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரனுக்கும் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் கருணாவுக்கும் இடையில் இருந்த பிணக்கைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது.

இதேவேளை, வெளிநாட்டில் செயற்பட்ட புலிகளிடம் நிலவிய முரண்பாட்டையும் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டது இலங்கை.

அடுத்தது, சர்வதேச ரீதியாக செப்ரெம்பர் 11 க்குப் பின்னர் உலக அரங்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தனக்கு ஏற்றவாறு கையாண்டு வெற்றியடைந்தது இலங்கை. பயங்கரவாத இயக்கங்களைத் தடைசெய்தல், அவற்றை அழித்தல், அல்லது அவற்றைப் பலவீனமாக்குதல் என்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வழிமுறையைத் தனக்குப் பொருத்தமானதாக்கிக் கொண்டது அது.

ஆகவே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அது தன்னுடைய வெற்றியைப் பெற்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். உள்நாட்டு நெருக்கடி தணிவுக்கு வந்தது. ஆனால், இப்போதைய நெருக்கடி முன்னர் இருந்த நெருக்கடிகளை விடவும் வேறுபட்டது. அதிக சிக்கலானது.

இது உள்நாட்டு விவகாரம் என்பதற்கு அப்பால், பிராந்திய சக்திகளுக்கிடையிலான நெருக்கடி என்பதற்கு அப்பால், இது ஒரு சர்வதேச விவகாரமாக மாறியிருக்கும் நெருக்கடி. சர்வதேச வரன்முறைகளைக் கடந்த யுத்தக் குற்றத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடி.

ஆனால், இந்த நெருக்கடியானது உண்மையில் யுத்தக்குற்றத்தின் விளைவான நெருக்கடி அல்ல. இது பிராந்திய ஆதிக்கச் சக்திகளுக்கிடையிலான போட்டிகளின் விளைவான நெருக்கடி. பிராந்திய ஆதிக்கத்துக்காக மேற்குலகம் உருவாக்கியிருக்கும் நெருக்கடி. இந்த நெருக்கடியை இலங்கை எப்படிச் சமாளிக்கப்போகிறது? எப்படிக் கடக்கப்போகிறது? என்பதே இன்றைய முக்கியமான கேள்வி.

இதற்கு இந்த நெருக்கடி உருவாகிய விதத்தைப் பார்க்க வேண்டும். யுத்தத்தில் பங்களிப்பாளர்களாக இருந்தவர்கள் பலர். இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட பல தரப்புகள். ஆகவே, இந்தப் போட்டியில் தாம் வெல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் யுத்தக் குற்றங்களை ஓர் ஆயுதமாகக் கையாள்கிறது.

என்றபடியால், இந்த நெருக்கடிக்கு மறுபக்கத்தில் இன்னொரு அணியின் எதிர்ப்பு உள்ளது. எனவேதான் ஐ.நாவில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதம் வரும்போது சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கின்றன.

ஆனால், அதையும் கடந்து இலங்கை மீதான யுத்தக் குற்ற நெருக்கடிகள் பலமாக்கப்படுகின்றன. இதையே நாம் கவனிக்க வேண்டும். இதுவே சிங்கள இராஜதந்திரத்துக்கும் சிங்கள உயர்குழாத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளாக உள்ளன.

ஆகவே, சிங்கள உயர்குழாமும் சிங்கள இராஜதந்திரமும் இந்த நெருக்கடியை எவ்வாறாயினும் முறியடிப்பதற்கே முயற்சிக்கும். அதற்கேற்ற வகையிலேயே அவை செயற்பட்டும் வருகின்றன. தமக்குச் சாதகமான தரப்புகளின் ஆதரவைப் பலப்படுத்திக் கொண்டு, மேலும் வெற்றிகொள்ள வேண்டிய தரப்புகளைக் கையாள முற்படுகின்றன.

இந்த வகையில், சீனா, ஈரான், கியூபா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற அணியைத் தமக்கு நெருக்கமாக்கிக் கொண்டுள்ள இலங்கை, அடுத்த கட்டமாக மேற்கில் காய்களை நகர்த்த முற்படுகிறது. இதற்காக மேற்குடன் நெருக்கமான சிங்களவர்களை அது பயன்படுத்துகிறது. மேற்கும் இந்த விடயத்தில் தனது கவனத்தைச் செலுத்துகிறது. எப்படியானாலும் பயறு அவிந்தால் சரி என்பதே அரசுகளின் தாரக மந்திரம். ஆகவே அவை எந்த வழியையும் பயன்படுத்தும். எதையும் கைவிடத் தயாரில்லை.

இதற்கு அடுத்தபடியாக இலங்கை அரசு முயற்சிப்பது தமிழர்களை. தமிழ்ச் சக்திகளை.

இப்போது தமிழர்கள் பல கூறுகளாகச் சிதறுண்டு போயுள்ளனர். அவர்களை வழி நடத்துவதற்கு எந்தச் சக்திகளும் ஆற்றலோடும் ஆளுமையோடும் இல்லை. எந்தத் தலைமையும் மக்களிடம் பேரபிமானத்தைக் கொண்டதாக இல்லை. எந்தச் சக்தியிடத்திலும் மக்கள் நம்பிக்கை கொள்ளவும் இல்லை. தமிழ்த் தேசிய அரசியலில் அக்கறையுடைய தரப்புகள் கூடப் பல நிலைப்பாட்டுடன் இருப்பதை இங்கே நாம் அவதானிக்க முடியும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு பலவீனமான நிலையே. இராணுவ ரீதியாகப் புலிகள் பலமான கட்டமைப்பைக் கொண்டிருந்தபோதும் அவர்களிடையே நிலவிய பிற குறைபாடுகளும் உள் முரண்பாடுகளும் எப்படிப் பலவீனமாக அமைந்தனவோ அவ்வாறே தமிழர்களின் இன்றைய நிலையும் உள்ளது.

ஆகவே, அரசு தனது நெருக்கடியைத் தணித்துக் கொள்வதற்காக இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

இந்த இடத்தில் நாம் மீண்டும் ஒரு முக்கியமான விசயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப்போல இந்த நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது மேற்குலகமே.

இந்த நெருக்கடிக்கு அனுசரணையாளர்களாக மட்டுமே தமிழர்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்த நெருக்கடியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். அவ்வளவுதான். (இதில் நிறைய விமர்சனத்துக்கு இடமுள்ளது. அதைத் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம்).

மேற்குலகம் தன்னுடைய நலன்களுக்காக இப்போது தமிழர்களைத் தூக்கி மடியில் வைத்திருக்கிறது. (முன்னர் 1980 களில் இதே வேலையை இந்தியா செய்தது). இதை வைத்துக் கொண்டு தமிழர்கள் பரமசிவன் கழுத்துப் பாம்புகள் ஆகிவிடக் கூடாது.

2002 இல் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது – அன்றைய நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இலங்கை அரசு உலகம் முழுவதுமுள்ள சிங்களத் தேசியவாதிகளையும் சிங்கள இராஜதந்திரிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனைகளைச் செய்தது.

இதைப் பார்த்த சில தமிழ் ஊடகங்கள், புலிகளுடன் பேச்சு மேசையில் பேரம் பேசமுடியாமற் திணறுகின்றது சிங்கள அரசு என்றவாறாக, கேலியான முறையில் தமது விமர்சனங்களை முன்வைத்தன. போதாக்குறைக்கு புலிகள் 'வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்' (இந்தத் தலைப்பில் கார்ட்டூனிஸ்ற் மதன் ஒரு தொடரை எழுதியிருந்தார்) என்ற தலைப்பில் சிங்கள இராஜதந்திரத்தை மதிப்பிடாமல், அதைக் கொச்சைப்படுத்தி ஒரு கட்டுரைத் தொடரும் எழுதப்பட்டது.

ஆனால், இறுதியில் எல்லாமே தலைகீழாயின.

சிங்கள இராஜதந்திரிகள் மிகச் சாதுரியமாக வென்றார்கள். தமிழர்கள் அவலத்திற்குள் தள்ளப்பட்டனர். மிக மோசமான தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்தனர். இந்த வரலாற்றுப் பின்புலத்திற்தான் இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் தமிழர்களின் நிலையும் உள்ளன.

ஆகவே, நிதானமாகச் சிந்திக்க வேண்டிய நிலையிற் சிங்களர்களும் உள்ளனர். தமிழர்களும் உள்ளனர். தமிழர்களுடன் சமாதானத்தைக் காண்பதன் மூலமாகவே சிங்களவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். இதை விட்டுவிட்டுத் தல யாத்திரை செல்வதைப்போல நாடுகள் தோறும் திரிவதாலும் நேர்த்திகளை வைப்பதாலும் எதுவுமே ஆகப்போவதில்லை. இலங்கை முடிவற்ற அழிவுக்குள் தள்ளப்படுவதே உண்மை.

இதனாற்தான் சுதந்திரத்துக்காகச் செலுத்தாத விலையை உள்நாட்டுப் போரில் செலுத்திக் கொண்டிருக்கிறது இலங்கை. இதிற் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற வேறுபாடேயில்லை.

1/31/2012 4:11:21 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்