Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உள்ளூராட்சி தேர்தலும் சம்பந்தன் தரப்பின் போலிப் பிரச்சாரங்களும்

<p>உள்ளூராட்சி தேர்தலும் சம்பந்தன் தரப்பின் போலிப் பிரச்சாரங்களும்</p>
யதீந்திரா

 

2009இல் யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின், தற்போது இலங்கை தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களில் ஒரு விடயம் தவறாமல் இடம்பெறுவதுண்டு. இது தொடர்பில் இப்பத்தியாளர் பல சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். அதாவது, இந்தத் தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் - இதனை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தொடர்பில் ஓரளவாவது பரிச்சயம் உள்ளவர்கள் இவ்வாறான பிரச்சாரங்களை எண்ணி கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வர். ஆனால் விடயம் தெரியாத அப்பாவி மக்களோ ஏமாந்துவிடுவர். குறிப்பாக சம்பந்தன் போன்ற ஓர் அனுபவம் மிக்க, படித்த, முக்கியமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒருவர் இவ்வாறு கூறகின்ற போது சாதாரண மக்கள் மயங்கிவிடக் கூடும். ஆனால் இம்முறை ஓரளவு மக்கள் இது தொடர்பில் விழிப்படைந்திருப்பதாகவே தெரிகிறது.

ஆபிரகாம் லிங்கனின் ஒரு கூற்றுண்டு. அதாவது, நீங்கள் அனைத்து மக்களையும் சில நேரங்களில் ஏமாற்றலாம், சிலரை அனைத்து நேரங்களிலும் ஏமாற்றலாம். ஆனால் அனைத்து மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது. ஆனால் சம்பந்தனோ தமிழ் மக்களை எல்லா நேரங்களிலும் ஏமாற்றலாம் என்று சிந்திக்கின்றார் போலும். இதனை நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. உள்ளூராட்சி தேர்தல் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் அல்ல. ஆனால் சம்பந்தனோ இதனை சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் தமிழரசு கட்சியை வழிநடத்திவரும் சுமந்திரனோ கூட்டமைப்பு பலவீனப்படுமாக இருந்தால் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் பலவீனமடையும் என்கிறார். இவைகள் எல்லாம் உண்மைதானா?

இந்த உள்ளூராட்சித் தேர்தலை ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் அடுத்த தேர்தல்களுக்கான வாக்கு வங்கியாகவே கருதுகின்றன. இதன் காரணமாக எப்படியாவது இதன் போது தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்திவிட வேண்டுமென்பதில் முனைப்பாக இருக்கின்றனர். உண்மையில் இந்த நிலைமை வடக்கு கிழக்கை விடவும் தெற்கில்தான் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏனென்றால் இந்தத் தேர்தலில் ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து நிற்பதால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் கூடுதல் கரிசனை காண்பிக்கப்படுகிறது. ஒருவேளை மகிந்தவின் கை ஓங்கினால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரிபால சிறிசேன நெருக்கடிகளை சந்திக்கக் கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வடக்கு கிழக்கு நிலைமைகளோ முற்றிலும் வேறானது. வடக்கு கிழக்கில் தங்களுக்கே பெரும்பான்மை ஆதரவு உண்டு என்று நம்பும் இலங்கை தமிழரசு கட்சி அந்த ஆதரவை நிரூபித்துகாட்ட வேண்டுமென்னும் நோக்கில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

வடக்கு கிழக்கில் பொதுவாக வீட்டுச் சின்னத்திற்கு எதிரான ஒரு அலை இருப்பதாக கூறப்பட்டாலும் அது எந்தளவிற்கு ஒரு வாக்கு வங்கியாக திரட்டப்பட்டிருக்கிறது என்பது தொடர்பில் சந்தேகங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக இம்முறை தேர்தலில் வாக்களிப்பு விகிதம் குறையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வித சோர்வும் வெறுப்பும் காணப்படுவதாகவும் சில நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நிலமைகளை அவதானித்தால் இந்தக் கணிப்பில் உண்மையுண்டு. ஆனாலும் தமிழரசு கட்சியின் வழமையான ஆதிக்கப் போக்கில் நிச்சயம் ஒரு உடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்றும் சிலர் கணிக்கின்றனர். அந்த கணிப்பிலும் உண்மையுண்டு. அதாவது வீட்டுச் சின்னத்தின் கீழ் இயங்குவோரின் அரசியல் சரிவின் ஆரம்பமாகவும் இது அமையலாம்.

தமிழரசு கட்சி தனது வாக்குவங்கியை நிரூபிப்பதற்கு போலியான பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில்தான், பிறிதொரு புறமாக அரசாங்கமோ தனது நிகழ்ச்சிநிரலை கச்சிதமாக முன்கொண்டு செல்கிறது. தமிழரசு கட்சியின் அல்லது கூட்டமைப்பின் நட்பு சக்தியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை அமைக்கப் போவதாக சூழுரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழரசு கட்சி இதுவரை வாய் திறக்கவில்லை. சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறும் சுமந்திரன் இது தொடர்பில் வாய்திறக்கவில்லை. பொதுவாகவே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் முக்கியமாக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சுமந்திரன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை. பவுத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கவுள்ள அரசியல் யாப்பொன்றை தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சிகளை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்ற சூழலில்தான், ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் கனடிய தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, குரைக்கிறதுகள் குரைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதாக பதிலளித்திருக்கின்றார். அதாவது. வடக்கு கிழக்கில் எப்படி புத்தர் சிலைகளை வைக்கலாம் என்று ஒருவர் கேட்கக் கூடாது. அந்த அடிப்படையில் சம்பந்தனையோ அல்லது சுமந்திரனையோ எவரும் விமர்சிக்கக் கூடாது. அப்படி எவராவது விமர்சித்தால் அவர்கள் நாய்களுக்கு சமமானவர்கள்! அதே நேர்காணலில் தாங்கள் பொய் சொல்லவில்லை என்றும் கூறுகின்றார். வடக்கு கிழக்கு இணைப்பை தாங்கள் கைவிடவில்லை என்றும், இடைக்கால அறிக்கையில் அது உள்ளடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன், அந்த உண்மைகளுக்கு மாறாக மற்றவர்கள் பேசுகின்றனர் என்கிறார். ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் குறிப்பிடுக்கின்றார்.

சுமந்திரன் கூறுவது உண்மைதான். அதாவது இடைக்கால அறிக்கையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்னும் ஒரு சிபார்சு இருக்கிறது. அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெறக் கூடாதென்றும் பிறிதொரு சிபார்சு இருக்கிறது. இதில் எந்த சிபார்சிற்கு சிங்களப் பெரும்பான்மை ஆதரவாக இருக்கும்? உண்மையில் இந்த விடயத்தில் பல தெரிவுகளுக்கு இடமளித்திருக்கக் கூடாது. ஒரு அறிக்கையில் வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் இருக்குமாக இருந்தால் சிறிலங்காவை பொறுத்தவரையில் வேண்டாம் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தில் பல தெரிவுகளுக்கு இடமளித்திருக்கும் சுமந்திரனின் நிலைப்பாடு அடிப்படையிலேயே தவறானது.

அண்மையில் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்றும் அவ்வாறாயின் அரசியலமைப்பில் இருக்கும் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு வடக்கு கிழக்கில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி போதிய புரிதல் இல்லாமல் சுமந்திரன் பதிலளித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2001 மாவீரர் தின உரையில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை வேண்டி நின்றதாகவும் அப்போது அவரிடம் உருத்திரகுமாரன் ஏன் கேள்வி கேட்கவில்லை என்கிறார்? அந்த உரையில் உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பில் பிரபாகரன் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யும் ஒரு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் பேசியிருந்தார் என்பது உண்மை. ஆனால் பிரபாகரனின் ஒவ்வொரு உரையும் முடிவடையும் போது, புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முடிவடைவதுண்டு. இதனை சுமந்திரன் கவனிக்கவில்லை போலும். தவிர, விடுதலைப் புலிகள் ஒரு இராணுவ பலத்தின் பின்னனியில்தான் அந்த பேச்சுவார்த்தையை எதிர்கொண்டிருந்தனர். பிரபாகரனிடம் எப்போதும் ஒரு மாற்றும் திட்டம் இருந்தது.

<p>உள்ளூராட்சி தேர்தலும் சம்பந்தன் தரப்பின் போலிப் பிரச்சாரங்களும்</p>

ஒருவேளை சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தால் சுமந்திரன் வைத்திருக்கும் மாற்றுத் திட்டம் என்ன? இந்த விடயங்களை நாங்கள் குழப்பக் கூடாது – அவர்களாக குழப்பினால் அதன் பின்னர் இதனை அடிப்படையாகக் கொண்டு தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு ஒன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சுமந்திரன் கூறுகின்றார். சுமந்திரன் அந்த நிலைப்பாட்டில் இருப்பது உண்மையாயின் அவரால் இதனை பகிரங்கமாக மக்கள் முன்னால் கூற முடியுமா? இப்போது ஒரு புதுக் கதையை சுமந்திரன் சொல்கிறார். இந்த விடயங்கள் தோல்விடைந்தால், அதற்கு தானே பொறுப்பேற்பதாகவும் அதன் பின்னர் அரசியலிலிருந்து விலகிவிடுவதாகவும் கூறுகின்றார். அவ்வாறு அவர் விலகிவிட்டால் அவரது இதுவரையான செயற்பாடுகளால் ஏற்பட்ட அரசியல் சரிவுகளுக்கு யார் பொறுப்பெடுப்பது? ஒரு தேசிய இனத்தின் பிரச்சினையை சுமந்திரன் எவ்வாறு தனது குடும்ப விவகாரம் போன்று கையாள முடியும்?

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகின்ற போது தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர் பிரபாகரன் என்று பேசுவதை காணக் கூடியதாக இருக்கிறது. அண்மையில் சம்பந்தனும் பங்குகொண்டிருந்த கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தலைவர் பிரபாகரன் என்று ஒருவர் பேசுகின்றார். சம்பந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைவிடவும் ஒரு அரசியல் போக்கிரித்தனம் வேறொன்றும் இருக்க முடியாது. இதே சம்பந்தன் விடுதலைப் புலிகளை கேவலப்படுத்தும் போது இதே தமிழரசு கட்சியினர் அமைதியாக இருந்தனர். ஆனால் அதே ஆட்கள் தேர்தல் காலங்களில் தலைவர் என்கின்றனர். இது தொடர்பில் சுமந்திரனின் நிலைப்பாடு என்ன? இவ்வாறு தேர்தல் காலத்தில் பேசி வாக்கெடுப்பதை ஏன் சுமந்திரன் கண்டிக்கவில்லை? மற்றவர்கள் பொய் சொல்லுகின்றார்கள் என்று குற்றம் சாட்டும் சுமந்திரன் தமிழரசு கட்சியின் இந்த ஒட்டுமொத்த பொய் தொடர்பில் ஏன் எதுவும் பேசுவதில்லை? தேர்தல் வெற்றிக்காக எதனையும் பேசலாமா?

சுமந்திரன் இந்த தேர்தலில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். தான் நினைப்பதையெல்லாம் பேசுகின்றார். தன்னைச் சுற்றியே தமிழரசு கட்சியின் அரசியல் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டார். இவ்வாறானதொரு சூழலில் அவருக்கு இந்தத் தேர்தல் வெற்றி முக்கியமான ஒன்றுதான். அதேபோன்று சம்பந்தனுக்கும் தொடர்ந்தும் தானே தீர்மானிக்கும் சக்தி என்பதை நிரூபிப்பதற்கும் இந்தத் தேர்தல் வெற்றி அவசியம். மொத்தத்தில் இந்தத் தேர்தல் வெற்றி ஒவ்வொரு கட்சிகளுக்கும் அதன் அடுத்த கட்ட நகர்விற்கான அரசியல் முதலீடாகவே அமையப் போகிறது. 

2/3/2018 1:55:30 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்