Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜெனிவாவில் இலங்கையைப் பிணை எடுக்கும் இந்தியா?

ஜெனிவாவில் இலங்கையைப் பிணை எடுக்கும் இந்தியா?
முத்துக்குமார்

 

ஜெனிவா விவகாரம் இந்தியாவின் தலையீடுகளோடு தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜெனிவா நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசு இந்தியாவை வேண்டியுள்ளதால் இந்தியா களமிறங்கியுள்ளது. வெறுமனே ஆதரவு மட்டத்தில் இல்லாது பாதுகாப்புக் கவசமாகவும் தொழிற்படத் தொடங்கியுள்ளது.  

ஜெனிவாவிற்கான இந்தியப் பிரதிநிதி ஜெனிவாக் கூட்டத்தில் நேரடியாகவே இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை கொண்டு வரக் கூடாது எனக் கூறியிருக்கின்றார். தனிப்பட்ட நாட்டிற்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படுவது பொருத்தமானதல்ல என அவர் வாதிட்டிருக்கின்றார். நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உலக நாடுகளின் மனித உரிமை மீறல்களை மதிப்பீடு செய்யும்போது இலங்கையையும் மதிப்பீடு செய்யலாம் எனக் கூறியிருக்கின்றார். 

இங்கு நடைபெற்றது மனித உரிமை மீறல்லல்ல. போர்க் குற்றம் என்பது இந்தியாவிற்கு தெரியாதல்ல. போர்க்குற்ற விவகாரம் பெரிதாக வந்தால் தானும் மாட்டுப்படவேண்டும் என்பதற்காக அதனை மனித உரிமை விவகாரமாக அது சுருக்கிவிடப் பார்க்கின்றது.

இந்த கூட்ட உரைக்கு அப்பால் இப்பிரேரணையைக் கொண்டுவர இருக்கும் அமெரிக்காவிடம் இதனைக் கொண்டு வர வேண்டாம் என இந்தியா வேண்டுகோளும் விடுத்திருக்கின்றது. ஆனால் அமெரிக்கா அதற்கு இணங்க மறுத்ததாகவே தகவல்கள் வருகின்றன. போதுமான கால அவகாசம் இலங்கைக்கு கொடுத்தாகி விட்டது. இனிமேல் கொடுக்க முடியாது என அமெரிக்கா கூறியதாகவே தகவல்.

தங்களது நிகழ்ச்சி நிரலை ஏற்காதவர்களுக்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் பழக்கம் இந்தியாவைப் போல அமெரிக்காவிற்கு கிடையாது. அவ்வாறு செல்வது உலக வல்லரசு என்ற அதன் பிரதிமைக்கும் இழுக்கானது. தனக்கு போட்டியாக உள்ள சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கம் தொடர்ந்து வளர விடுவது ஆபத்தானது என்றே அமெரிக்கா கருதுகின்றது. ஐ.நா.வுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக இலங்கை அரசு நடாத்தியுள்ள ஆர்ப்பாட்டங்களும் அமெரிக்காவிற்கு கடுப்பேற்றியுள்ளது. இதனால் இந்தத் தடவை எப்படியாவது ஒரு கை பார்த்து விடுவது என்பதில் அமெரிக்கா தெளிவாக இருப்பது போலவே தெரிகின்றது.

அமெரிக்காவின் தூதர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளின் தலைநகரங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதரவு தேடி வருகின்றனர். இந்தியாவைப் போல அமெரிக்காவிற்கு இலங்கையில் பொருளாதார முதலீடுகளோ பாதுகாப்பு நலன்களோ பெரிதாக இல்லை. அதற்கு இருப்பதெல்லாம் கேந்திர நலன் மட்டும் தான். இந்தியா மியன்மாரில் பின்பற்றிய அணுகு முறையைத்தான் இலங்கையிலும் பின்பற்ற முயற்சிக்கின்றது. கொடூரமான ஆட்சியாளர்களாக இருந்தாலும் அதற்கு பின்னால் இழுபட்டுச் சென்று பிடுங்கக் கூடியதை பிடுங்குவது தான் அந்த அணுகு முறை.

இதே அணுகுமுறையினை மியன்மாரில் அமெரிக்கா பின்பற்றியிருந்தால் மியன்மாரை பணிய வைத்திருக்க முடியாது. தொடர்ச்சியாக கடுமை நிலையில் இருந்ததினால் தான் பணிய வைக்க அதனால் முடிந்தது. எனினும் முழுமையான செல்வாக்கினுள் மியன்மாரை கொண்டுவர அது தடுமாறுகின்றது. சீனா அங்கு வலுவாக காலூன்றி விட்டது தான் அதற்கு காரணம் வெறுமனவே முதலீடுகள் மட்டுமல்லாமல் சீனக் குடியேற்றங்களும் அங்கு தாராளமாக இடம்பெற்றுள்ளன.   

இலங்கையில் சீன முதலீடுகள் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. என்பது உண்மைதான். உதவி வழங்கும் நாடுகளில் இன்று முதன்நிலையில் நிற்பது சீனாதான். ஆனால் சீனக் குடியேற்றங்கள் இன்னமும் பெரிதளவிற்கு வளரவில்லை. எனினும் எதிர்காலத்தில் வளராது எனவும் கூறிவிட முடியாது. பொருளாதார முதலீடுகள் வளர வளர சீனக் குடியேற்றங்களுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கும். மியன்மாரில் ஒரு பிரதேசத்தில் சீனர்கள் பெரும்பான்மை என்று கூடக் கூறப்படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் என்பவற்றிலும் சீனர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இலங்கையிலும் சீனக் குடியேற்றங்களை சிங்கள மக்கள் பெரியளவிற்கு எதிர்க்கப் போவதில்லை. அதனை தங்களுக்குரிய பலமாகவும் அவர்கள் நினைக்கக் கூடும்.   

பொருளாதர முதலீடுகளுடன் குடியேற்றங்களும் வருகின்றபோது ஆதிக்கம் இரட்டை மடங்காகிவிடும். சீனாவின் அதிகரித்த சனத்தொகையும் இதற்கான வாய்ப்புக்களை உருவாக்குகின்றது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மேற்குநாடுகளும் குறிப்பாக பிரித்தானியாவும் இத்தந்திரோபாயங்களைப் பின்பற்றின. அமெரிக்கா, அவுஸ்திரேலியா எல்லாம் பிரித்தானியக் குடியேற்றங்களே! ஆபிரிக்க நாடுகளில் தென்னாபிரிக்கவிலும் சிம்பாவேயிலும்  இத்தகைய குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குடியேற்றங்கள் எப்போதும் ஆதிக்கச் செயற்பாடுகளை சுலபமாக்கி விடுகின்றன. இலங்கை அரசும் இத்தகைய சுலபமான ஆதிக்கத்திற்காக தான் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கின்றது. பாலஸ்தீனத்தின் யூதர்களின் குடியேற்றங்கள் நாம் அறிந்தவையே!       

இலங்கை விவகாரத்தில் தன்னை 2ம் நிலைக்கு தள்ளி விட்டு அமெரிக்கா 1ம் நிலைக்கு வருவதும் இந்தியாவிற்கு சகிக்க முடியாததாக உள்ளது. தானும் எதுவும் செய்யாது, மற்றவர்களையும் எதுவும் செய்ய விடாது என்பதுதான் இதுவரை இந்தியா கடை பிடித்தநிலை. இதனைத் தான் மக்கள் சாதாரண வழக்கில் "வைக்கல் பட்டடை நாய் எனக் கூறுவார்கள்."

இந்த நிலைதான் இந்தியாவிற்கு என்றும் ஆபத்தானது. இதுதான்  மியன்மார் விவகாரத்திலும் இந்தியாவை 2ம் நிலைக்கு தள்ளியது. தற்போது இலங்கை விவகாரத்திலும் தள்ளியிருக்கின்றது. இந்த 2ம் நிலை தமிழ் மக்களுக்கும் அதிக ஆபத்தானதாகிவிடும். சமாதான காலத்திலும் அதுவே நடந்தது. சமாதானமும் குழப்பப்பட்டமைக்கு இந்தியாவின் 2ம் நிலையும் ஒரு காரணம்.

இந்தியா ஜெனிவாவில் இலங்கையை பாதுகாக்க கவசமாக நின்று செயற்பட்டாலும் இந்தத் தடவை அதன் பணி சுலபமாக இருக்கப் போவதில்லை. அமெரிக்கத் தரப்பு, தமிழகத் தரப்பு, இலங்கை தமிழர் தரப்பு என முத்தரப்பையும் எதிர்த்து செயற்பட வேண்டிய நிலைக்கு நிலைமை இந்தியாவை தள்ளியுள்ளது. இது இலகுவானதல்ல. 

இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்கா ஒரு மூலோபாயக் கூட்டாளி. அதுவும் தென்னாசியப் பிராந்தியத்தில் அதன் நட்பில்லாமல் பாகிஸ்தானையும், சீனாவையும் எதிர்த்து நிற்க அதனால் முடியாது. இதனால் தான்  தனது மரபு ரீதியான உறவுகளைக் கைவிட்டு லிபியா விடயத்தில் அமெரிக்கா அணிக்கு சார்பாக நின்றது.  சிரிய விடயத்தில் நடுநிலை வகித்தது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா விடாப்பிடியாக நிற்குமானால் அதற்கு பின்னால் இழுபட்டுப் போவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு தெரிவு இருக்கப் போவதில்லை.

தமிழக தரப்பு இந்தத் தடவையும் இயல்பாகவே எழுச்சியடைந்திருக்கின்றது. தொப்புள் கொடி உறவு என்பதால் நெருக்கடி வரும்போது எழுச்சியடையாமல் அதனால் இருக்க முடியாது. இந்தத் தடவை சகல தரப்புகளுமே போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ஜெயலலிதா இரண்டு தடவைகள் இலங்கைக்கு ஆதரவாக நிற்க வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். கருணாநிதி தனது பிரதிநிதியை நேரடியாக பிரதமரிடம் அனுப்பி இலங்கை அரசினை ஆதரிக்க வேண்டாம் எனக் கூறியிருக்கின்றார்.எனினும் இவ்விருவரும் போராட்டம் என்ற கட்டத்திற்கு இதுவரை செல்லவில்லை. வரும் நாட்களில் அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் இறங்கக் கூடும். கருணாநிதி தனது பாவங்களை கழுவுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார். குடும்ப நெருக்கடியைத் தீர்ப்பதற்கே நேரம் போதாமல் இருக்கும் போது போராட்டங்கள் நடாத்துவதற்கு நேரம் இருக்கும் எனவும் கூற முடியாது. மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், என்பன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன. வலது கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்துகின்றது.  

இந்தப் போராட்டங்களினால் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பது தமிழக காங்கிரஸ் கட்சிதான். ஏற்கனவே காங்கிரஸின் தமிழின அழிப்பினால் தமிழ்நாட்டில் அது கந்தையாகிப் போயிருக்கின்றது. முல்லைப் பெரியாறு  விவகாரமும் ஏற்கனவே அதன் மானத்தை கப்பலேற்றியிருக்கின்றது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெறுமனவே 2% வாக்கினைப் பெற்ற கட்சி இனி வரும் தேர்தலில் பூச்சிய நிலைக்கு சென்றாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழக காங்கிரஸ்காரார்கள் தமது தலைமையிடம் இலங்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இலங்கைத் தமிழர் மத்தியில் இந்தியா தன்னை மீண்டும் ஒரு தடவை நிர்வாணமாகக் காட்டியுள்ளது. புலிகள் காலத்தில் இந்தியா எதிர் நிலையில் நின்றதற்கு காரணம் புலிகள்தான் என்று கூறிய இந்திய விசுவாகிகள் தற்போது வாயடைத்துள்ளனர். இந்தியாவிற்கு வலிந்து வக்காலத்து வாங்கிய பத்தி எழுத்தாளர்களின் சிறிய சத்தங்கள்கூட தற்போது இல்லை. முழுத் தமிழ்ச் சமூகமும் இது விடயத்தில் இந்தியாவை எதிர்த்து நிற்கின்றது. தமிழ் ஊடகங்கள் கட்டுரைகளினூடாகவும் கேலிச் சித்திரங்கள் ஊடாகவும் எதிர்ப்பை வெளிக்காட்டி நிற்கின்றன. 

இதில் மிகவும் சங்கடமான நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான். ஏற்கனவே இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் ஜெனிவாவை புறக்கணித்த கட்சியினர் இந்தியா பாதுகாக்கும் கவசமாக முற்பட்டதனால் நன்றாக ஆடிப்போயுள்ளனர். இதில் மிகுந்த நெருக்கடி சம்பந்தன் தலைமைக்குத்தான். சம்பந்தன், மாவை என்போரின் குடும்ப நலன்கள் இந்தியாவில் இருப்பதனால் இந்தியாவை எதிர்த்து செயற்பட அவர்களினால் முடியாது. மாறாக இதனைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கவும் முடியாது. எதிர்த்தால் இந்தியா கைவிடும். பேசாமல் இருந்தால் தமிழ் மக்கள் கைவிடுவர். இது ஒரு மிகவும் இக்கட்டானநிலை. 

இதனால் ஆனந்தசங்கரி பாணியில் சம்பந்தன் இந்தியப் பிரதமருக்கு இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனக் கடிதம் எழுதியிருக்கின்றார். ஏற்கனவே மனித உரிமைப் பேரவையில் உள்ள 47 நாடுகளுக்கும் தனித் தனியாக கடிதங்களை எழுதியிருக்கின்றார். அதில் கூட சர்வதேச விசாரணை வேண்டும் என எழுதும் துணிவு அவருக்கு வரவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைகளை முழுமையாக நிராகரித்த அவர் பின்னர் அதனைப் போற்றி அதனை அமுல்படுத்தினால் தமிழ்மக்களின் அபிலாசைகள் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கின்றார். வேறு வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாததினால் கடிதம் எழுதுவது மட்டும் ஒரே வேலைத்திட்டமாகி விட்டது சம்பந்தனுக்கு.

ஆனந்த சங்கரியிடம் செல்பவர்கள் நீங்கள் மேற்கொண்ட பணிகள் எவை என்று கேட்டால் கட்டுக்கட்டாக தான் எழுதிய கடிதங்களை அவர்கள் கையில் கொடுத்து விடுவார். சம்பந்தனும் எதிர்காலத்தில் இதனை மேற்கொள்ளக் கூடும்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும் புத்திசாலித்தனமாக சம்பந்தன் தலைமையில் இருந்து தன்னை வேறுபடுத்தித் காட்டியிருக்கின்றார். சற்றுக் காட்டமாக "ஜெனிவாவில் இலங்கை அரசினை இந்தியா பிணை எடுக்க முற்பட்டால் இந்தியாவிற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவு சீர்கேடடையும்’ என எச்சரித்திருக்கின்றார். அவர் இந்தியாவின் மிகுந்த விசுவாசியாக அறியப்பட்டவர். முன்னெப்போதும் இவ்வாறான காட்டமான அறிக்கைகளை விடுத்ததில்லை. தமிழ்ச் சிவில் சமூகத்துடனான சந்திப்பின் போதும் இந்தியா இலங்கை அரசினைப் பாதுகாக்கவே முற்படும்.தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு போதும் நிற்கப் போவதில்லை எனக் கூறியிருக்கின்றார்.    

நான் எனது சென்ற வாரக் கட்டுரைகளில் கூறியது போல சுரேஸ் பிரேமச்சந்திரனின் அண்மைக்காலக் கருத்துக்கள் மிகவும் முற்போக்கானவை இனப்பிரச்சினை விவகாரத்தில் வெளிநாட்டு மத்தியஸ்தம் தேவை, கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு செல்லாதது தவறு. இந்தியா ஜெனிவாவில் இலங்கையை பிணை எடுக்க முற்படக் கூடாது போன்ற கருத்துக்கள் மிகவும் ஆழமானவை. இதனூடாக ஆழமான துணிவான தலைவர் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கூட்டமைப்புக்குள் தமிழ்த் தேசிய அரசியலை வரலாற்று பின்புலத்தில் முழுமையாக உள்வாங்கி கருத்துக்களைக் கூறக் கூடியவர் இருவர் தான்.ஒருவர் சம்பந்தன்.மற்றவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். கூட்டமைப்புக்கு வெளியே இவ்வாறான தகமையை உடையவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். சம்பந்தனை இனிமேல் நம்புவதற்கு எதுவுமில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திர குமாரும் தான் இது விடயத்தில் கருமங்களை முன்னெடுக்க வேண்டும்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் கூறிய கருத்துகளுக்கு தொடர்ந்தும் விசுவாசமாக இருப்பாரேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இக் கருத்துகளுக்கு விசுவாசமான ஒன்றல்ல.இது விடயத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மூன்று தெரிவுகள் உண்டு. ஒன்று கூட்டமைப்பினை விட்டு விலகி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் கூட்டுச் சேர்வது. அவ்வாறு சேருவாரேயானால் தனது கருத்துக்களை நடைமுறையில் செயற்படுத்துவதற்கான களம் அவருக்கு கிடைக்கும்.

இரண்டாவது கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே தலைமையைக் கைப்பற்ற முயற்சிப்பது. இதற்கு கூட்டமைப்புக்குள் அவர் பலமாக இருக்க வேண்டும். இதற்கு வெளியில் உள்ள கஜேந்திரகுமார் அணியுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் வருகின்றபோது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நிற்கின்ற ஏனையவர்கள் தோற்கடிக்கப்பட தலைமையை இலகுவாகாவே கைப்பற்றி விட முடியும்.   

கூட்டமைப்புக்குள் ஆனந்தசங்கரி, சித்தார்த்தனுடன் கூட்டுச் சேர்ந்து புதிய உள் அணியினை உருவாக்குவது பெரிய வெற்றியைத் தரப் போவதில்லை. புலிகள் காலத்தில் இவர்கள் இருவரும் தமிழ்த்தேசிய அரசியல் தளத்திற்கு எதிர்த் தளத்தில் நின்றவர்கள். புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கும் ஒரு வகையில் காரணமாக இருந்தவர்கள். சித்தார்த்தன் தற்போதும் தனது உறுப்பினர்களுக்காக  பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பணம் பெற்று வருகின்றார். இவர்களுடனான கூட்டை மக்கள் பெரியளவிற்கு ஏற்கப் போவதில்லை.

மூன்றாவது கதிரையை இழக்கக் கூடாது என்பதற்காக இடைக்கிடை முற்போக்கான கருத்துக்களைக் கூறினாலும் சம்பந்தன் தலைமைக்கு பணிந்து செயற்படுவது, ஜெனிவாவிற்கு கூட்டமைப்பு செல்லாதது பற்றி பி.பி.சி. வரை சென்று கடுமையாக விமர்சித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், பின்னர் சம்பந்தனுடன் சமரசமாகி அவரது முடிவை ஏற்றிருக்கின்றார். புதுடில்லி மாநாட்டிலும் தேசியம், சுயநிர்ணய விடயத்தில் சமரசமாகியிருக்கின்றார். எதிர்காலத்திலும் பதவியைக் கருத்திற் கொண்டால், இவர் சமரசத்திற்கு செல்லலாம். இதுதான் நடக்குமெனின் மூன்றாவது தெரிவிற்கே அதிக வாய்ப்புக்கள் உண்டு.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்பாக தேசிய சக்திகள் வைக்கின்ற மிகப் பெரிய விமர்சனம் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை என்பதே! தமிழ்ச் சிவில் சமூகத்தின் பெரும்பாலோரிடமும் குறிப்பாக அதில் அங்கம் வகிக்கும் மருத்துவர்களிடம் இக் கருத்து உண்டு. இக்கருத்துக்களை மாற்றுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் நிறையவே உழைக்க வேண்டும்.

மக்களுடனான தொடர்புகளிலும் நிறைய பலவீனம் உள்ளது மக்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேண அவர் பெரியளவிற்கு முற்படுவதில்லை என்ற விமர்சனம் நிறையவே உண்டு. சாதாரண மக்களுடனும் பெரிய தொடர்புகளில்லாமல் முன்னேறிய பிரிவினரிடமும் தொடர்புகளில்லாமல் மக்கள் தலைவனாக ஒருபோதும் எழுச்சியடைய முடியாது.

தற்போது சம்பந்தன் செல்லும் இடமெல்லாம் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் தமிழ்மாறனும் செல்கின்றார். திருகோணமலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம், வவுனியாவில் சிவில் சமூகத்துடனான சந்திப்பு என்பவற்றிற்கெல்லாம் சம்பந்தனுடன் கூடவே சென்றிருக்கின்றார். இதுமட்டுமல்ல தமிழ்த்தேசிய சக்திகளுடன் ஒரு கோட்பாட்டுப் போரையும் தொடக்கியிருக்கின்றார். இந்த ஆற்றல் சுமந்திரனுக்கு கிடையாது. சுமந்திரனுக்கு சட்டமும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். தமிழ்த் தேசிய விடயங்கள் பற்றிய ஆழமான புலமை அவருக்கு இல்லை.

தமிழ்மாறன் கட்சி அரசியலுக்கு வருவது உண்மையானால், வித்தியாதரனின் அரசியற் பிரவேசத்தினால் தமிழ்ச் சமூகம் ஒரு மூத்த பத்திரிகையாளரை இழந்தது போல ஒரு மூத்த சட்ட விரிவுரையாளரையும் இழக்க வேண்டி ஏற்படும்.

அமெரிக்கா எதிர்ப்பு, தமிழக எதிர்ப்பு, தாயக எதிர்ப்பு என்பவற்றீனால் இந்திய மத்திய அரசாங்கம் உண்மையில் சற்று ஆடித்தான் போய்விட்டது. இதனால் சிலவேளை ஜெனிவாவில் நடுநிலை வகிக்க முற்படக் கூடும். அவ்வாறு நடந்தால். கூட அது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு வெற்றிதான்.

இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் பாரிய மாற்றம் வரும்வரை இந்தியாவிடம் அளவு ரீதியான மாற்றங்களையே எதிர்ப்பார்க்க முடியும். பண்பு ரீதியான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

அளவின் வளர்ச்சி தான் பண்பில் மாற்றம் கொண்டுவரும் என்பது இயங்கியல். அதற்கு இந்தியா மட்டும் எவ்வாறு விதிவிலக்காக முடியும்.

3/9/2012 2:52:53 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்