Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பின் தலைமை அதன் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளதா?

<p>கூட்டமைப்பின் தலைமை அதன் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளதா?</p>
யதீந்திரா

 

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரியளவில் சரிவை சந்தித்திருக்கிறது. கூட்டமைப்பின் மீது குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மீதான அதிருப்தி இந்தளவு அதன் வாக்கு வங்கியை சரிக்குமென்று எவரும் கணித்திருக்கவில்லை. அதேவேளை யாழ்ப்பாணத்தில் சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி இந்தளவு அதிகரிக்குமென்றும் எவரும் கணித்திருக்கவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னம் தோல்வியின் சின்னமாகவே பார்க்கப்பட்டிருந்தது. 2010இல் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ச்சியாக தேர்தல்களின் தோல்வியையே சந்தித்திருந்தார். இதன் காரணமாகவே அவரது கருத்துக்களை தோற்றுப் போனவர்களின் கருத்துக்கள் என்றவாறு சம்பந்தரும் அவரது வாரிசான சுமந்திரனும் தொடர்ந்தும் ஏளனப்படுத்தி வந்தனர்.

ஜனநாயக அரசியலில் தோற்றுப் போனவர்களின் கருத்து என்று ஒன்றில்லை. இருப்பினும் சம்பந்தரும் சுமந்திரனும் அவ்வப்போது அந்த வார்த்தைப் பிரயோகம் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை புறம்தள்ளினர். சுமந்திரன் தேர்தல் காலத்தில் கனடிய தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை கணக்கில் எடுக்க முடியாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சம்பந்தன் - சுமந்திரனின் கணிப்பை தலைகீழாக்கியிருக்கிறது. வடக்கில் சைக்கிள் 65000 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. சுமந்திரன் வார்த்தையில் கூறுவதனால் கஜேந்திரகுமார் தற்போது கணக்கில் எடுக்கக் கூடியவராக மாறியிருக்கிறார்.

கூட்டமைப்பின் மீதான அதிருப்தி வெறுமனே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மட்டும் சென்றிருந்தால் அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல. கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு வலுவான தமிழ்த் தேசிய அணி இருப்பது தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானதாகும். ஆனால் வாக்குகளோ தாறுமாறாக சிதறியிருக்கின்றன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வடக்கில் மூன்றாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக தென்னிலங்கை சிங்கள கட்சிகள் அதிக வாக்குகளை பெற்றிருக்கின்றன. மானிப்பாயில் கூட மூன்று வட்டாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருக்கிறது. வாக்குகள் சிதறியிருக்கின்ற முறையில் வடக்கு கிழக்கில் மூன்று சபைகளைத் தவிர்த்து எந்தவொரு சபையிலும் கூட்டமைப்பால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு புதிய தேர்தல் முறையும் ஒரு காரணம்.

கூட்டமைப்பு தொடர்பான கடந்த கால அனுபவங்கள் செவிடன் காதில் சங்கூதும் கதைக்கு ஒப்பானது. எந்தவொரு ஆலோசனையையும் சம்பந்தன் தரப்பினர் இதுவரை பொருட்படுத்தியதில்லை. தன்னைவிட மற்றவர்கள் அனைவரும் மடையர்கள் என்று எண்ணுபவர்கள் எப்போதுமே மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இது பொதுவாக தமிழ் அப்புக்காத்துக்களின் மனோநிலை. ஆனால் இந்த அப்புக்காத்துக்களின் அணுகுமுறை மீண்டும் மீண்டும் தோல்வியிலேயே முடிகிறது. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. சம்பந்தன் - சுமந்திரன் ஆகிய அப்புக்காத்துக்களே அனைத்து விடயங்களையும் கையாண்டிருந்தனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் எவரையும் ஒரு பொருட்டாகவே சம்பந்தன் கருதியிருக்கவில்லை. இதன் விளைவு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்களின் வாக்குகள் பயன்பட்டிருந்தது. அதனால் தமிழ் மக்களுக்கோ எந்தவொரு நன்மையும் கிட்டவில்லை. இதுவா இராஜதந்திரம்? உண்மையில் சம்பந்தன் - சுமந்திரனது நகர்வுகள் படுதோல்விடைந்திருக்கின்றன. இதுவே மேற்குலகு என்றால், இவ்வாறான தோல்விகள் உணரப்படுகின்ற போது, அதற்கு தலைமை தாங்கியவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி துறப்பார்கள். ஆனால் தமிழ்ச் சூழலில் அதனை எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறனதொரு நிலைமை ஏற்படுமென்று பலரும் முன்கூட்டியே எச்சரித்திருந்தனர். சிங்கள ராஜதந்திரத்தை வெறும் தனிப்பட்ட வாக்குறுதிகளாலும் நட்புக்களாலும் எதிர்கொள்ள முடியாது என்று அவ்வாறானவர்கள் எச்சரித்திருநதனர். ஆனால் சம்பந்தனோ எவரையும் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஆகக் குறைந்தது யுத்தத்தால் உருக்குலைந்த வடக்கு கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டத்திற்கான அடித்தளத்தையாவது போட்டிருக்கலாம். ஆனால் அதனையும் கூட்டமைப்பின் தலைமை செய்திருக்கவில்லை. இன்று அபிவிருத்தியும் இல்லை அரசியல் தீர்வும் இல்லை என்னும் நிலைக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கு யார் பொறுப்பு?

இந்தக் கேள்விக்கான பதிலை மக்கள் தாங்களாகவே கண்டிருப்பதன் விளைவாகவே கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சென்றிருப்பதை தமிழ்த் தேசிய அரசியலோடு தொடர்புபடுத்தலாம். ஆனால் அந்த அதிருப்தி வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கோ, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, பொதுஜன பெரமுனவிற்கோ சென்றிருப்பதை எதனுடன் தொடர்புபடுத்துவது? வீட்டின் மீதான அதிருப்தி சைக்கிளுக்கோ அல்லது உதய சூரியனுக்கோ சென்றிருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் அவ்வாறில்லாது வாக்குகள் சிதறியிருப்பதானது ஒரு பெரும் ஆபத்தை முன்னுணர்த்துகிறது? இது தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பில் சிந்திக்கும் அனைவருக்குமான எச்சரிக்கை. எனவே கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதை கொண்டாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. மாறாக அது எவ்வாறெல்லாம் சிதறியிருக்கிறது என்பது தொடர்பில் சிந்திப்பதே அவசியமானது.

பொதுவாகவே தமிழர் தரப்பின் செயற்பாடுகள் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போன்றது. ஒரு விடயம் நடந்த பின்னர்தான் அது தொடர்பில் ஆய்வுகள் செய்ய முற்படுவர். இது எல்லோரையும் விடவும் கூட்டமைப்பின் தலைமைக்கு பொருந்தும். இன்று வாக்கு வங்கியில் ஒரு சரிவு ஏற்பட்டவுடன் மீண்டும் ஒற்றுமை பற்றி பேசப்படுகிறது. கொள்கையில் உடன்பாடுள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டுமென்று சுமந்திரன் கூறுகின்றார். அதற்கான பொறிமுறை என்ன? ஏன் முன்னர் அதனை செய்ய முடியாமல் போனது? ஏன் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன? ஏன் அதனை நிவர்த்தி செய்ய முடியாமல் போனது? இவற்றுக்கெல்லாம் முதலில் விடையை கண்டுபிடிக்காமல் வெறுமேன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டிருந்தால் எவ்வாறு ஒற்றுமை ஏற்படும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படையான பிரச்சினையே அதற்கென்று ஒரு கட்டமைப்பு இல்லை என்பதுதான். கட்டமைப்புசார் பிரச்சினைதான் அதற்குள் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். பல கட்சிகள் ஒரு கூட்டணியாக செயற்படும் போது நிச்சயம் பிரச்சினைகள் எழும். ஆனால் அவ்வாறான பிரச்சினைகள் தெருவுக்கு வராமல் உள்ளுக்குள்ளேயே தீர்ப்பதற்கு ஒரு கட்டமைப்பு இருப்பது அவசியம். ஆனால் அவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்குவதை தமிழரசு கட்சி தொடர்ந்தும் தடுத்தே வந்தது. அதன் விளைவாக கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை இழந்து சென்றது. அதன் விளைவுதான் தற்போது கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது, சிங்கள கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் வலுவாக காலூன்றுவதற்கான அடித்தளம் உருவாக்கியிருக்கிறது.

<p>கூட்டமைப்பின் தலைமை அதன் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளதா?</p>

இந்த இடத்தில் மீண்டும் பழைய கேள்வி அவசியப்படுகிறது. கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக பலப்படுத்துவதற்கான வாய்ப்பு இப்போதும் இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை. ஆனால் அதற்கு முன்நோக்கிச் சிந்திக்கக் கூடியவர்களின் கை கூட்டமைப்புக்குள் மேலோங்க வேண்டும். தமிழரசு கட்சியின் மீதான அதிருப்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் வாக்கு வங்கியையும் சேர்த்தே சரித்திருக்கிறது. டெலோவின் வாக்கு வங்கி மன்னாரில் பெரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மானிப்பாய் தொகுதியில் தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை பேணிவரும் சித்தார்த்தனின் வாக்கு வங்கியும் கணிசமாக வீழ்ந்திருக்கிறது. இது அவர்களின் தேர்தல் எதிர்காலம் தொடர்பான எச்சரிக்கையாகும். இந்த நிலைமை தொடர்ந்தால் செல்வம் அடைக்கலநாதன் 2020 பாராளுமன்றத் தேர்தலில் தோல்விடைய நேரிடும். இதிலிருந்து மீண்டெழ வேண்டுமாயின் கூட்டமைப்பிற்கென ஒரு தேசிய அமைப்பாளரை நியமிக்க வேண்டும். கூட்டமைப்பை மறுசீரமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போதிருப்பவர்களில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய பண்புள்ள ஒருவராக டி.பி.எல்.எப் தலைவர் சித்தார்த்தனே இருக்கிறார். தமிழ்த் தேசிய அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு அணி இயங்கிக் கொண்டிருக்கின்ற அதேவேளை கூட்டமைப்பும் ஒரு உரிமைசார் அமைப்பாக இயங்கலாம். இவ்வாறானதொரு உபாயத்தின் ஊடாகவே சிங்கள கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதை தடுக்க முடியும். இல்லாவிட்டால் தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பு மெது மெதுவாக சிதைவடைந்து செல்வதை எவராலும் தடுக்க முடியாது.

2/25/2018 9:37:06 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்