Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யார் தலைமையேற்பது சரியானது?

<p>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யார் தலைமையேற்பது சரியானது?</p>
யதீந்திரா

 

முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவுகூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே தீபம் ஏற்றுவதுடன் நினைவுகூர்தல் முடங்கிப் போனது. ஆனால் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை புதிய அரசாங்கம் தடுக்கவில்லை. இதனை வேண்டுமானால் ஆட்சிமாற்றத்தின் பெறுபேறு என்று சிலர் வர்ணிக்கக்கூடும்.

ஒன்றை தடுப்பது அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். அந்த ஈர்ப்பே எப்போதும் விடயத்தை சூடாக வைத்திருக்கப் பயன்படும். ராஜபக்ச நிர்வாகம் அதனைத்தான் செய்தது. முக்கியமாக கோத்தபாய ராஜபக்ச இதில் எந்தவொரு சமரசத்திற்கும் இணங்கியிருக்கவில்லை. ஏன் அவர்கள் அவ்வாறு செய்தனர்? ஒன்றை எதிர்க்கின்ற போது, எதிர்க்கப்படும் அந்த ஒன்றின் மீதான ஈடுபாடு தூண்டப்படும் என்பது ராஜபக்சேக்களுக்குத் தெரியாதா?

அவர்கள் தெரிந்தே அதனைச் செய்தனர். உண்மையில் அவர்களது அரசியலுக்கு, வடக்கின் கொதிநிலை அவசியப்பட்டது. விடுதலைப் புலிகளின் நிழல் வடக்கில் ஊசலாடிக் கொண்டிருப்பதான ஒரு தோற்றம் ராஜபக்சேக்களுக்குத் தேவைப்பட்டது. பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவை தங்களின் பக்கமாக பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு வசதியான முட்டாக (ஒன்றை விழுந்துவிடாமல் பாதுகாப்பதற்காக கொடுக்கப்படும் பிறிதொரு பலம்) வடக்கில் ஒரு கொதிநிலை ராஜபக்சேக்களுக்குத் தேவைப்பட்டது. ஏனெனில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவு தனக்கு எக்காலத்திலும் கிடைக்காது என்று தெரிந்த பின்னர், அந்தத் தமிழர்கள் தொடர்ந்தும் தன்னை எதிர்ப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் சிங்களவர்களை எப்போதும் தன் பக்கமாக வைத்துக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்குமென்று ராஜபக்சேக்கள் கணித்திருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் அது சரியான கணிப்புத்தான்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் 2015இல் ஆட்சி மாறியது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று அரியணையை பிடித்தவர்கள் என்னும் வகையில் ராஜபக்ச அரசு எவற்றையெல்லாம் தடுத்ததோ அவை அனைத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்தம் புதிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில் கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மாவீரர் தினம் நினைவு கொள்ளப்படுவதையும் அரசாங்கம் தடுக்கவில்லை. இதனை அரசாங்கத்தின் நல்லெண்ண நிலைப்பாடாக எவராவது புரிந்துகொண்டால் அது தவறு. விடயம் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியது. ராஜபக்சேவுக்கு தேவைப்பட்டது போன்ற வடக்கின் கொதிநிலை மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குத் தேவைப்படவில்லை. ஏனெனில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தற்போது தேன்நிலவில் இருக்கின்றன. ஒருவேளை இந்தத் தேன்நிலவு அரசியல் தேவையில்லை என்னும் நிலைமை ஏற்படும்போது நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இவ்வாறனதொரு பின்புலத்தில்தான் கடந்த மூன்று வருடங்களாக வடக்கு மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை தலைமையேற்று நடத்திவருகிறது. இதில்தான் தற்போது ஒரு தலையீடு நிகழ்ந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இம்முறை தாங்கள் இதற்கு தலைமையேற்கப் போவதாகவும் அனைவரும் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறும் அறிவித்திருக்கின்றனர்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனோ வழமைபோல் வடக்கு மாகாண சபையே இம்முறையும் இதனை முன்னெடுக்கும் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்குமாறும் அறிவித்திருக்கின்றார். நியாயப்படி பார்த்தால் வடக்கு மாகாண சபை இதனை முன்னெடுப்பதே சரியானது. ஏனெனில் அவர்கள்தான் கடந்த மூன்று வருடங்களாக நிகழ்வை முன்னெடுத்து வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பதற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை இதனை முன்னெடுப்பதற்கும் இடையில் அதிக வித்தியாசமுண்டு. ஏற்கனவே இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் வடக்கு மாகாண சபையால் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு கூரப்படுவதன் அரசியல் பெறுமதி கனதியானது. இந்த விடயங்களை பல்கலைக்கழக மாணவர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறதா அல்லது அவர்கள் பிழையாக கையாளப்படுகின்றனரா?

வடக்கு மாகாண சபையின் காலம் இன்னும் சில மாதங்கள்தான். அதன் பின்னர் விக்னேஸ்வரன் தனித்துப் போட்டியிடலாம் என்னும் செய்திகள் தமிழ் அரசியல் அரங்கில் அண்மையில் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தற்போது மேற்படி நெருக்கடி தோன்றியிருக்கிறது. கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அங்கு சென்றிருந்த் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் மீதே தமிழரசு கட்சியின் கோபம் திரும்பியிருந்தது. தற்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்று வரும்போதே அதனை முன்னெடுப்பது யார் என்னும் கேள்வி எழுந்திருக்கிறது? விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவர்கள் இதற்கொரு பின்னணி இருக்கலாம் என்றே சந்தேகப்படுகின்றனர். ஆனால் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் எங்களுக்குள் தள்ளுப்பட்டுக்குக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றல்ல.

உண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை வடக்கிற்கு மட்டுமான ஒன்றாகச் சுருக்க முற்படுவதே தவறானது. அது தமிழ்த் தேசிய இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பின் அடையாளம். எனவே அதனை அனைவருமாக இணைந்து எவ்வாறு முன்னெடுப்பது என்று சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு உரையாடல் கடந்த மூன்று வருடங்களில் இடம்பெறவில்லை. இப்போதும் இடம்பெறவில்லை. இந்தப் பத்தியாளரைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தல் என்பது வெறும் நினைவு கூர்தலுக்கான ஒன்றுகூடலாக இருக்கக் கூடாது. அது அரசியலில் முன்நோக்கி பயணிப்பதற்கான ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும். உண்மையில் இந்தளவு பேரழிவைச் சந்தித்த பின்னரும் அதிலிருந்து இன்னும் தமிழ் சமூகம் எதனையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. அவ்வாறு கற்றுக் கொண்டிருந்தால் இவ்வாறு முள்ளிவாய்க்காலை எங்களிடம் தாருங்கள் என்னும் கோரிக்கை எழுந்திருக்காது.

<p>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யார் தலைமையேற்பது சரியானது?</p>

விக்னேஸ்வரனுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு என்னும் செய்தியை விரும்புவர்களுக்கு, மேற்படி நிலைமை மகிழ்சியை கொடுத்திருக்கலாம். ஆனால் இதனால் தமிழ் அரசியலுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. இன்னொரு வகையில் நோக்கினால் இது கொழும்பிற்கு வெற்றி. மெது மெதுவாக தமிழ்த் தேசிய அரசியலின் அங்கங்களை சிதைப்பதன் ஊடாக, அதனை ஒரு முடமாக்கிவிடலாம் என்று கணக்குப் போடுவர்களுக்கே இது போன்ற விடயங்கள் நன்மையளிக்கும். பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். தாங்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக நிற்கப் போகின்றோமா அல்லது அதனை சிதைத்து சின்னாபின்னமாக்க விரும்பும் தீய சக்திகளின் இச்சைக்கு இடம்கொடுக்கப் போகின்றோமா?

5/17/2018 9:29:48 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்