Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சட்டத்தின் ஆட்சியும் தேசப்பற்றும் முரண்படும் நலன்களா?

சட்டத்தின் ஆட்சியும் தேசப்பற்றும் முரண்படும் நலன்களா?
வி.ரி.தமிழ்மாறன்

 

இலங்கையில் இருப்பது எத்தகைய பிரச்சனை என்று கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையின் மை காய்வதற்குள் பிரச்சனையின் நிஜமுகம் தம்புள்ளையில் நிதர்சனமாக வெளிப்பட்டது. இலங்கையின் பன்மைத்துவம் பற்றி ஜெனீவாவில் பெருமையாகப் பிரஸ்தாபிக்கையில் அங்கு அமைச்சர் ஹக்கீமின் பிரசன்னமும் அதற்கு வலுச்சேர்த்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொள்வோம். பன்மைத்துவத்தின் உண்மையான இலட்சணம் பள்ளிவாசல் இடிப்பு வடிவில் பறைசாற்றப்பட்டது.

இச்சம்பவம் இலங்கைச் சமூகத்தின் பன்மைத்துவம் தொடர்பில் சில வினாக்களை எழுப்பி நிற்கின்றது. நாட்டில் எல்லோருமே சட்டத்தின் முன் சமனாக உள்ளார்களா? சட்டத்தின் சமமான பாதுகாப்பு யாவருக்கும் கிடைக்கின்றதா? தேசப்பற்றும் சட்டத்தின் ஆட்சியும் ஒன்றோடொன்று முரண்படும் நலன்களா அல்லது ஒன்றையொன்று பரஸ்பர ரீதியில் உறுதிப்படுத்தி நிற்பவையா? பெரும்பான்மை இனத்தின், மதத்தின் நலன்கள் என்று வரும்போது சட்டத்தின் ஆட்சி மௌனிக்கின்றதா? இப்படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டே போகலாம்.

இலங்கையில் எல்லா மக்களும் சமமானவர்கள் என்றும் அவர்கள் எந்த உரிமையையாயினும் அனுபவிப்பதில் எவ்விதத் தடையும் கிடையாது என்றும் ஆள்வோர் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகின்றார்கள். அதற்கு ஆதாரமாக அரசியலமைப்பையும் ஏனைய சட்டங்களையும் அடுக்கிக் கூறுவார்கள். உள்நாட்டில் மட்டுமன்றிச் சர்வதேச அரங்குகளிலும் இத்தகைய அச்சடிப்புக்களைக் காட்டியே காரியம் சாதித்துவிட அரசாங்கம் எப்போதுமே முனைப்புக் காட்டுவதுடன் அதில் பல தடவைகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

நாட்டில் எல்லா இனங்களும் மதப் பிரிவனரும் எவ்வித பிணக்குமின்றி வாழ்கின்றார்கள், சிறுபான்மையின அரசியல்வாதிகளே குட்டையைக் குழப்புகின்றார்கள் என்றவாறான அண்மைக்கால வாய்பாடு ஒன்றும் உள்ளது. போர் முடிந்த கையுடன் அமைதி திரும்புவதற்கான கால அவகாசத்தை வழங்குங்கள் என்றுதான் அரசாங்கம் சர்வதேச அரங்கில் கோரிக்கை வைத்தபடி உள்ளது.

முதலில் உள்நாட்டுச் சட்டத்துக்குள் நிவாரணங்களைத் தேட வேண்டும் என்றொரு சர்வதேசச் சட்ட நியதி உண்டு. எனவே, இருக்கின்றதான உள்நாட்டுச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் போதுமான தன்மை குறித்துச் சந்தேகிக்கக் கூடாது என்ற அப்பாவிப் போர்வையைப் போர்த்துக் கொள்வதன் மூலம் உள்ளே நடப்பவற்றை அப்படியே அமுக்கி விடுவதற்கான வாய்ப்புக்களை அரசுகள் இலகுவில் பெற்றுவிடுகின்றன.

வீரியமிக்க அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் சிவில் சமூகக் குழுக்களும் 'கண்கொத்திப் பாம்பாகச்' செயற்பட்டாலேயே இந்தப் போர்வையை அகற்றி நிஜமுகத்தை வெளிக்கொணர முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழான அடக்குமுறை விதிகள் கூட நாட்டின் உள்ளகச் சட்ட ஏற்பாடுகள் என்றளவில் சர்வதேச அரங்கில் பெரிதாக ஆட்சேபனை எதனையும் ஏற்படுத்தப் போதுமானவையாக கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டுமே அச்சட்டங்களின் நியாயமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி வந்துள்ளன.

எப்படியிருந்த போதிலும், அதே அரசியலமைப்பும் அதே சட்டங்களும் இருக்கத் தக்கதாகவே எல்லோரும் சமத்துவமாகவே நடாத்தப்படுகின்றார்கள் என்று நம்ப வைக்கப்பட்டது. ஏதேனும் அநியாயம் இழைக்கப்படின் நீதிமன்றம் சென்று நிவாரணம் கோரலாமே என்று உள்நாட்டிலும் சவால் விடுக்கப்படுவதுண்டு. வெளிநாட்டிலும் நம்பவைக்க முயற்சிக்கப்படுவதுண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் நேர்மையான செயற்பாடுகளாகவே தோன்றும்.

அரசுகளுக்கு இருக்கக்கூடிய ஏகபோக வாய்ப்பொன்றாக அமையும் இந்தச் சட்டப் போர்வை எல்லாவித அராஜகங்களையும் மூடிமறைக்கப் போதுமானதாக இருக்கின்றது. பெரும்பான்மையினவாத அரசொன்று ஆக்கும் சட்டங்களினால் சமத்துவம் பேணப்படும் என்பது எலியினைப் பூனையொன்று விரட்டிச் செல்கையில் இரண்டுமே 'ஓடிப்பிடித்து விளையாடுகின்றன' என்று நம்புவதைப் போன்றதே.

சட்டத்தின் ஆட்சியும் தேசப்பற்றும் முரண்படும் நலன்களா?

ஒரு நாட்டுக்குள் இருக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையான இனங்கள் அந்த நாட்டு அரசால் எங்ஙனம் நடாத்தப்படுகின்றன என்பதை வைத்தே அந்நாட்டின் ஜனநாயகப் பண்பும் மதிப்பும் எடைபோடப்பட வேண்டும் என்பது சர்வதேச அரங்கில் தற்போது தவிர்க்க முடியாத நியதியாகி வருகிறது. தமது சட்டங்களின் நியாயத் தன்மையினை நிறுவ வேண்டிய தேவை அரசுகளுக்கு இப்போது அடிக்கடி ஏற்படுகின்றன.

மக்கள் மீது ஏற்படும் 'அபரிதமான' அக்கறை காரணமாகவும் அரசு விசேட சட்டங்களை ஆக்குவதுண்டு. உதாரணமாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நியாயமற்ற தன்மையை எவ்வளவோ எடுத்துக் காட்டியும் இன்றளவும் அரசு அசைந்து கொடுக்கவேயில்லை.

நியாயமற்ற சட்டங்கள் உண்மையிலேயே சட்டங்களாகுமா என்று கேட்குமளவுக்கு இலங்கையில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடாதவாறு மிகவும் கெட்டித்தனமாகப் பல்வேறு கவர்ச்சிகள், கண்சிமிட்டுதல் நீண்டகால வரலாறாகும். இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற பல்வேறு கவர்ச்சிகளின் பின்னால் இழுபட்டுப் போகும் மக்கள் தமக்கான ஆட்சி முறைமையின் நியாயத் தன்மையைக் கேள்விக்குட்படுத்த மறந்து விடுகின்றனர். இந்தக் கவர்ச்சிகளின் பெயரால், மக்கள் ஜனநாயக விழுமியங்கள் பலவற்றையும் தியாகம் செய்யும்படியான நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது பாராளுமன்றத்தில் அதை எதிர்த்துப் பேசியவர்களில் அப்போதைய எதிர்க்கட்சிக் கொறடாவாக இருந்த மைத்திரிபால சேனநாயக்கா மட்டுமே எதிர்காலத்தில் எப்படி ஜனநாயக விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற எச்சரிக்கையை விடுத்திருந்தார். தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை என்ற விதத்தில் பெரும்பான்மையினம் செயற்பட்டால் அதன் பிற்கால விளைவுகள் எப்படியிருக்கும் என்று அன்றைக்கு எச்சரிக்கப்பட்ட அத்தனை விடயங்களும் தற்போது அரங்கேறிவருகின்றன.

எத்தகைய சட்டங்களையும் ஆக்கலாம் என்ற அதிகாரத்தை மக்கள் தங்கள் கைகளில் தந்துள்ளார்கள் என்று ஆளவந்தோர் செயற்பட முனைந்தால் அதற்கு எல்லை நிர்ணயம் செய்தல் என்பது பிற்காலத்தில் சாத்தியப்படாது என்பதை அப்போது உணர மறுத்தவர்கள் இப்போது அனுபவத்தில் சந்திக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக நின்றவரே சிறையிலடைக்கப்படுகையில் இந்த ஜனநாக சோசலிஸக் குடியரசின் மக்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. போன 'மூக்கு' போனதுதான்.

எத்தகைய சட்டத்தையும் ஆக்க முனையும்போது முதலில் பலியாவது ஜனநாயக விழுமியங்களே என்பதை மறைப்பதற்காகக் காட்டப்படும் கவர்ச்சிகளில் மயங்கியோர் தற்போது மயக்கம் தெளிய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக்கழக அரசறிவியல் பேராசிரியராக இருந்த Howard Zinn என்பவர் 'எதிர்த்து நிற்பதும் தேசப்பற்றுத்தான்' என்று காரணங்களோடு விளக்கியிருந்தார். சில சட்டங்களை எதிர்ப்போர் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் காட்ட முற்பட்டபோது பலரும் அதற்கெதிராக ஆதாரங்காட்டியது மேற்சொன்ன தேசப்பற்று விளக்கத்தையே.

ஒரு காலத்தில் சட்டமாக இருப்பது பின்னர் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதென்ற வகையில் மக்களால் நிராகரிக்கப்படும்போது ஆட்சியாளர்கள் அதை ஏற்றேயாக வேண்டும். உதாரணமாக, சட்டரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டிருந்த அடிமை முறையையும் கறுப்பின மக்களுக்கு எதிரான நிற வேறுபாட்டையும் பின்னாட்களில் அமெரிக்க மக்கள் எங்ஙனம் வெறுத்தொதுக்கினர் என்பதைக் குறிப்பிடலாம். இங்கு தேசப்பற்று என்பது சட்டத்தை எதிர்ப்பதன் மூலமே வெளிக்காட்டப்பட்டது. அவர்கள் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படவில்லை.

ஆனால், இலங்கையில் அத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது மக்கள் எதிர்ப்பைக் காட்டாமல் அவற்றை ஆதரிப்பதே தேசப்பற்று எனக் கருதிக்கொண்டார்கள். அதன் விளைவு மக்களை ஜனநாயகத்தை மறக்கச் செய்வதில் கொண்டுபோய்விட்டது.

'தேசப்பற்று என்பது வெறுமனே நிலத்தின் மீதும் மக்களின் மீதும் கொண்ட பற்றல்ல. நாடு என்பது உயிர்ப்புள்ளது. அது இச்சமுதாயத்தின் முழுமையான அடிப்படை விழுமியங்கள், அரசாங்கம், மக்களின் ஒட்டுமொத்தக் கலாசாரம், நாட்டுச் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கி நிற்கும்' என்று Howard Zinn குறிப்பிடுகின்றார்.

உண்மைக்கும் நீதிக்கும் ஜனநாயகத்துக்கும் எது முரணாக நிற்க முனைகின்றதோ அதுவே தேசப்பற்றின் முதல் எதிரி என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். அப்படிப் பார்ப்பின் இலங்கையில் எதனைத் தேசப்பற்று என்று எங்களால் வரைவு செய்ய முடியும் ?

புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தும் சட்டம் தேசப்பற்றை வளர்க்க உதவுகின்றதா? 'பகைவர்களை' உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றதா? என்னைப் பொறுத்தளவில், இலங்கையில் கட்டப்படும் ஒவ்வொரு பௌத்த விஹாரையும் ஓர் இலங்கைப் பிரசையை உருவாக்கப் பயன்படவேண்டும். அங்ஙனமே ஒவ்வொரு கோவிலும் பள்ளிவாசலும் தேவாலயமும் தேசத்தை உருவாக்க உதவவேண்டுமே தவிர ஒருபுறத்தில் தேசப்பற்றாளர்களையும் மறுபுறத்தில் தேசத்துரோகிகளையும் உருவாக்கப் பயன்படக்கூடா. இதற்கான ஒரு சூழ்நிலையையே சட்டம் உருவாக்கியிருக்க வேண்டும்.

துரதிர்ஸ்டவசமாக, அங்ஙனமன்றி, புனிதப் பிரதேசங்களும் உயர்பாதுகாப்பு வலயங்களும் 'பகைவர்களை' உருவாக்கப் பயன்படுத்தப்படுவதே இங்கு வழக்காயிற்று.

பன்மைத்துவ சமூகம் என்று ஒருபுறத்தில் கூறிக்கொண்டு மறுபுறத்தில் குறிப்பிட்ட ஓரினத்தின் மரபுகளும் மதச் செயற்பாடுகளும் தேசத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகப் பாவிக்கப்பட வேண்டுமென நிர்ப்பந்தித்தால் தேசப்பற்றும் அங்ஙனமே குறுகிய விதத்தில் வடிவமைக்கப்படும். எதிர்ப்பாளர்கள் எல்லோருமே மாற்று மொழி, கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பவர்களாக அந்நியப்படுத்தப்படுகின்றனர்.

ஆகவே, சமத்துவம் என்பது சுத்தமான 'பம்மாத்து' என்பதும் உலக அரங்கில் உபயோகமாகும் வெற்றுச் சொற்றொடராகும் என்பதும் இதனால் பெறப்படும்.

பெரும்பான்மை வாக்குப்பலத்தால் ஆக்கப்படும் சட்டங்களால் எந்த இடங்களும் புனிதப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்படலாம். சிறுபான்மை இனங்கள் வாழும் நாட்டின் எல்லாப் பகுதியுமே உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கப்பட முடியும். இதுவே ஜனநாயக அரசில பொரும்பான்மை ஆட்சியின் இலக்கணமாக மாறிவிடுகையில் பன்மைத்துவம் என்ற பதத்தின் பொருள் பெரும்பான்மை இனத்தின் நலன்களை மட்டுமே பாதுகாப்பதில் சிறுபான்மை இனங்களும் பங்குபற்றல் என்றாகி விடுகின்றது.

இதனை இன்னொரு விதத்தில் கூறுவதாயின், வடக்கு- கிழக்கு முழுப் பகுதியையுமே உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தும் சட்டமொன்றை இலங்கைப் பாராளுமன்றம் ஆக்க விரும்பினால் அதைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பு உட்பட எந்தச் சட்டத்திலும் கிடையாது எனலாம். அங்ஙனமே எந்தக் காணித்துண்டும் திடீரெனப் புனிதப் பிரதேசமாக 'மாற்றப்பட்டால்' யார் தான் தடுப்பது? பன்மைத்துவ சமூகமொன்றில் எல்லோரும் சமமாக நடாத்தப்படுவதாகச் சொல்வதன் பொருள் அத்தகைய சட்டங்களை ஆக்கும்போது சிறுபான்மையினரும் பங்குபற்றி வாக்களிக்கலாம் என்பது மட்டுமே.

இந்த விடயத்தில், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயற்படுவதற்காக அவர்களைப் பாராட்டலாம். 'நாங்கள்' நினைப்பதே சட்டம்', 'எங்கள் நலன்களே நாட்டின் நலன்கள்' என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள். அந்த நலன்களைப் பாதுகாப்பதில் சிறுபான்மையினரும் பங்குபற்றலையே ஜனநாயகம் என்றும் தேசப்பற்றென்றும் ஏற்கும் கட்டாயத்தில் சிறுபான்மையினர் இருக்கின்றார்கள். தேசிய கீதமும் தேசியக் கொடியும் சிறுபான்மையினரைப் பொறுத்துவரையில் சொல்லாமல் சொல்லும் உண்மைகள் இவைதான்.

எனவேதான், சில வேளைகளில் சட்டங்கள் சிலரால் மீறப்படும்போது அது தேசப்பற்றின் அடையாளச் செயற்பாடாக அமைந்து விடுகின்றது. அதே வேலையை வேறு சிலர் செய்கையில் அது தேசத் துரோகமாகி விடுகின்றது. அவர்களைப் பயங்கரவாதிகளாக அதே சட்டம் சித்தரிக்கும்.

குறிப்பிட்ட ஓரினத்துக்கோ மதத்தினருக்கோ எதிராக  வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுதல், எழுதுதல் எல்லாம் குற்றமென்று பிரிட்டிஷார் ஆக்கிவைத்துவிட்டுப் போன சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதைச் சிலர் செய்தால் அது தேசப்பற்றின் அடையாளம் என்றும் வேறு சிலர் செய்ய முற்பட்டால் பயங்கரவாதம் என்றும் நாம் நடைமுறையில் காட்டி நிற்கின்றோம். வேடிக்கை என்னவென்றால், நாட்டின் பன்மைத்துவத் தன்மையைச் சுட்டிக்காட்டித்தான் இவையெல்லாம் நடைபெறுகின்றன.  

மிகச் சிறந்த உதாரணம்: பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசநாயகம் எழுதிய சில விடயங்களுக்காக அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். குற்றச்சாட்டு என்னவென்றால் இனங்களுக்கிடையில் குரோதத்தைத் தூண்டும் விதத்தில் எழுதினார் என்பதாகும்.

ஆனால் தம்புள்ளயில் நடந்தவற்றுக்கு எந்தச் சட்டத்தின் கீழ் வழக்கிடுவது? யாரைத் தண்டிப்பது? முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வழங்கிய இரு தீர்ப்புக்களிலும் தற்போதும் உயர்நீதிமன்ற நீதியரசராக உள்ள சிராணி திலகவர்த்தன வழங்கிய தீர்ப்பொன்றிலும் அரசியலமைப்பு நன்கு ஆராயப்பட்டு இலங்கை மதச்சார்பற்ற ஒரு நாடென்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் என்ன பயன்? மதச்சார்பற்ற நாடொன்றில் புனிதப் பிரதேசங்கள் எப்படி உருவாகின்றன? புனிதப் பிரதேசங்கள் குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மட்டுந்தானா? யாரால் எதனைத் தடுத்து நிறுத்த முடிகின்றது?

தேசப்பற்றும் தேசத்துரோகமும் எங்ஙனம் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது என்பது இதனால் புலனாகும்.

எனது முந்தைய பத்திகளில் ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளதைப்போல, சிறுபான்மைச் சமூகங்களை ஒன்றுகலக்கச் செய்ய (assimilate) அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டுமானால் இச்சமூகங்களின் தனித்துவ அடையாளங்களைப் பேணும் விடயங்கள் அரசியலமைப்பு ரீதியில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவை ஒரு தரப்பால் மட்டுமே மாற்றப்பட முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது. தனித்துவ அடையாள நலன்களைப் பேணுதலும் தேசப்பற்றின் இன்றிமையாத ஓர் அம்சமேயென்பது எல்லோருக்கும் புரிய வைக்கப்பட வேண்டும்.

உண்மையான தேசப்பற்றாளன் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் சிந்திக்க மாட்டான். ஆனால் இலங்கையில் தேசப்பற்றாளர்களுக்குச் சட்டத்தின் ஆட்சி தேவைப்படாத ஒன்று போலவே தோன்றுகின்றது.

பன்மைத்துவம் பற்றி வெளியில் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, சமூகத்தின் அத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பில்  அரசாங்கத்தின் நேர்மறைக் கடப்பாடுகள் (positive obligations) என்ன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் மனப்பாங்கு ஆட்சியாளரிடம் ஏற்படும் வரை தேசப்பற்றும் சட்ட ஆட்சியும் ஒருவழிப்பாதையாகவே தொடர்ந்துமிருக்கும் எனலாம்.

இந்த ஒருவழிப் பயணத்திற்கு ஜெனீவா வரை 'ரிக்கற்' எடுப்பவர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசிக்கக் கூடும். 

4/28/2012 3:58:41 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்