Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜெனிவாப் பிரகடனம் தமிழ் அரசியலுக்கு புதிய வழியைத் திறக்குமா?

ஜெனிவாப் பிரகடனம் தமிழ் அரசியலுக்கு புதிய வழியைத் திறக்குமா?
முத்துக்குமார்

 

ஜெனிவாப் போரின் முதலாம் கட்டம் ஒருவாறு முடிவடைந்து விட்டது. அமெரிக்கா இவ்வளவு கரிசனையுடன் ஜெனிவாக் களத்தில் செயற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசுடன் தொடர்புடைய பெரிய தலைகள் எல்லாம் களத்தில் நின்றன. 100 வரையான இராஜதந்திரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இறுதி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் ஹில்லறி கிளின்ரனே களத்தில் நின்றார்.    

நிஜமான சீன- அமெரிக்க இராஜதந்திரப் போர் போலவே களம் தோற்றம் பெற்றது. ஆய்வாளர்கள் சீன- அமெரிக்கப் போரின் தொடக்கப் புள்ளி என இதனை வர்ணிக்கின்றனர். சீனாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்திருக்காவிட்டால் இலங்கை மேலும் தோற்றிருக்கும். 15 வாக்குகளை அது ஒருபோதும் பெற்றிருக்காது.

ஆசிய நாடுகளில் இந்தியாவைத் தவிர பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே நின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் நிலையும் அவ்வாறே. ஆபிரிக்க நாடுகளின் நிலை 50:50 என்றே இருந்தது. ஐரோப்பிய நாடுகளும், இலத்தீன் அமெரிக்கா நாடுகளுமே அமெரிக்காவிற்கு ஆதரவாக நின்றன. இது ஆசியப் பிராந்தியம் தொடர்பாக சர்வதேசத்தின் நிலையை தெளிவாகக் கோடிட்டுக் காட்டியது.

அமெரிக்கா இலங்கையின் தோல்விக்கு காரணமாக இருந்தாலும் இலங்கையின் கோபம் முழுவதும் இந்தியா மீது தான். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மன்றாட்டக் கடிதம் ஒன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த போதிலும் ஒரு அற்பப்பொருள் போல இலங்கை அதனைத் தூக்கி வீசி விட்டது. பிரேரணையில் திருத்தம் செய்து இலங்கையின் இறைமையைப் பாதுகாத்தேன் என இந்தியா ஒப்புதல் வாக்குமூலம் அளித்த போதும் இலங்கை அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. தற்போது இலங்கையின் கோபத்தை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது என்று தெரியாமல் இந்தியா தடுமாறுகின்றது.    

இந்தியா இவ்வாறு செயற்படும் என இலங்கை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. சீனப்பூதம் இந்தியாவை எப்போதும் தன்னுடனேயே வைத்திருக்கும் என இலங்கை கருதியிருந்தது. போரின்போது தமிழ்நாடு பல்வேறு வகையில் ஆர்ப்பரித்த போதும் இந்திய மத்திய அரசு அதனைக் கணக்கெடுக்கவில்லை. அதேபோல் தான் இந்தத் தடவையும் தமிழ்நாட்டின் ஆர்ப்பரிப்புகளை கணக்கெடுக்காது விடும் என இலங்கை கருதியிருந்தது. அது பொய்த்துப் போய் விட்டது. இது விடயத்தில் சீனப் பூச்சாண்டி இனிமேல் எடுபடாது என்பது தான் இலங்கைக்குள்ள கவலை. இதனால் எதிர்காலத்தில் எவ்வாறான கொள்கையைப் பின்பற்றுவது என்பது தெரியாமல் இலங்கை தடுமாறுகின்றது. இந்திராகாந்தி காலத்திற்கு இந்தியா சென்று விடுமோ என்ற அச்சமும் இலங்கைக்கு இருக்கின்றது.   

இந்தியா உண்மையில் இலங்கையைப் பாதுகாக்கவே விரும்பியது. ஜெனிவாவிற்கான இந்தியத் தூதுவர் அந்த நம்பிக்கையினையே இலங்கைப் பிரதிநிதிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். வாக்கெடுப்பிற்கு இருநாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்ததும் இலங்கையின் முயற்சிகள் எல்லாமே முடங்கிப் போயின. நடுநிலைமை வகிப்பதாக இருந்த நாடுகள் பல பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேவேளை பிரேரணையை எதிர்ப்பதாக இருந்த நாடுகள் பல நடுநிலை வகிக்க முற்பட்டன. இந்தியா மீது இலங்கை தீராத கோபத்துடன் இருப்பதற்கு இதுதான் காரணம். இந்தியா முதுகில் குத்திவிட்டது என அமைச்சர்கள் நேரடியாகவே கூறத் தொடங்கியுள்ளனர். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்தியாவை வசைவாடி கட்டுரைகளையும் காட்டூன்களையும் வெளியிட்டு வருகின்றன.

இது விடயத்தில் பேரினவாத சக்திகளுக்கு தான் கட்டுப்பட வேண்டும் என இலங்கை அரசு நினைக்கின்றது. ஆனால் இந்திய மத்திய அரசு மட்டும் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு பணியாமல் தன்னுடன் நிற்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் கந்தையாகிப் போனாலும் பரவாயில்லை, தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்றே நினைக்கின்றது. பெரியண்ணன் என்றால், தனது நலன்களை ஒறுத்து தம்பியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நினைப்பே இலங்கை அரசிற்கு.

தமிழ்நாடு மத்திய அரசின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரை இந்தியாவினால் இலங்கையின் நினைப்பை நிறைவேற்ற முடிந்தது. தற்போதைய நிலை அவ்வாறானதல்ல ஜெயலலிதா காங்கிரஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கான தேவையும் ஜெயலலிதாவிற்கு இல்லை. ஜெயலலிதாவை சமாளிப்பதற்கு இரண்டு தடவைகள் சிவசங்கர் மேனனை அனுப்ப முயன்றும் அவர் அதனை நிராகரித்திருந்தார். கருணாநிதி பிரேரணைக்கு ஆதரவளிக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகுவேன் எனப் பயமுறுத்தினார்.

ஜெனிவாப் பிரகடனம் தமிழ் அரசியலுக்கு புதிய வழியைத் திறக்குமா?

ஜெயலலிதாவைப் பகைத்தால் தமிழ்நாடு அந்நியப்படும். கருணாநிதியைப் பகைத்தால் ஆட்சி பறிபோகும். இது ஒரு இக்கட்டானநிலை. போதாக்குறைக்கு தனது சர்வதேசக் கூட்டாளியான அமெரிக்காவின் நச்சரிப்பு வேறு. இந்நிலையில் பிரேரணையை ஆதரிப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு தெரிவு இருக்கவில்லை. இந்நிலையிலும் இந்தியா ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த முனைந்தது. பிரேரணையை ஆதரித்து தமிழ்நாட்டினை சமாளிப்பது, பிரேரணையில் திருத்தங்களைச் செய்து இலங்கையைச் சமாளிப்பது. மாங்காய்கள் விழுந்தது தான். ஆனால் இரண்டாவது மாங்காய் அழுகிப் போனது. இலங்கை அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்நிலை வருமெனத் தெரிந்திருந்தால் ஒரு மாங்காயை மட்டும் வீழ்த்தி தமிழ்நாட்டில் இந்தியா ஹீரோ ஆகியிருக்கலாம். இப்போது இரண்டு தரப்பிடமிருந்தும் கெட்ட பெயர் வாங்கவேண்டிய நிலை இந்திய அரசிற்கு.  

தமிழ் மக்களின் நிலை நின்று பார்க்கும்போது பிரேரணையின் உள்ளடக்கம் மிகவும் பலவீனமானது. அது வலிமையாக முன்வைக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை இரண்டாம் தர நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, சனல்- 4 ஒளிப்படத் தொகுப்பு என்பன இன விவகாரத்திற்கு ஒரு சர்வதேசப் பரிமாணத்தைக் கொடுத்திருந்தன. தமிழ்நாடு சட்ட சபைத் தீர்மானம் பிராந்தியப் பரிமாணத்தைத் கொடுத்திருந்தது. இந்த இரண்டு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் பிரேரணையாக ஜெனிவாப் பிரேரணை இருக்கவில்லை. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் என்பவற்றில் மிகவும் பலவீனமான தன்மைகளையே பிரேரணை கொண்டுள்ளது. அமெரிக்காவின் இலக்கும் அதுவல்ல. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே பிரேரணை பிரதானமாகக் கொண்டிருந்தது.

பிரேரணையில் சற்று வலிமையான அம்சம் எனக் கூறப்படுவது மூன்றாவதாகக் கூறப்பட்ட விடயம் தான். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் இலங்கை அரசு ஏற்க வேண்டும் என்பதே அது. இவ்விடயம் சர்வதேசப் பொறிமுறை ஒன்றிற்குள் இலங்கையைக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்தியா மேற்கொண்ட திருத்தம் அதனை நீர்த்துப் போகச் செய்துள்ளது. நீர்மோருக்குள் மேலும் தண்ணீரை ஊற்றியதாக ஆகிவிட்டது என நடிகர் விஜயகாந்த் இதனைச் சரியாகவே அடையாளம் காட்டினார். இது விடயத்தில் இந்தியா தமிழர்களின் முதுகிலும் குத்தி விட்டது.    

பிரேரணை பலவீனமாக இருந்தாலும் அதன் நிறைவேற்றத்தினால் ஏற்பட்ட அரசியற் சூழல் தமிழ் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கின்றது.

அதில் முதலாவது இலங்கையை மையமாக வைத்து சர்வதேசம் இரு கூறாக பிரிந்துள்ளமையாகும். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், இந்தியா என்பன ஒரு அணியாகவும் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் என்பன ஒரு அணியாகவும் பிரிந்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் முன்னரை விட சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழ் மக்களுக்கு சர்வதேசம் எவ்வாறு அவசியமோ? அது போல சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் அவசியமாகியுள்ளது. இனிவரும் காலங்களில் தமது பனிப்போருக்காக இச் சக்திகள், குறிப்பாக அமெரிக்க தலைமையிலான மேற்குலக இந்தியக்கூட்டு தான் போகுமிடமெல்லாம் தமிழ் மக்களின் விவகாரத்தையும் கொண்டு செல்லப் போகின்றது.     

1987 வரை இந்தப் பணியினை இந்தியா மட்டும் தனது பிராந்திய நலனுக்காக செய்திருந்தது. தற்போது இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செய்யப் போகின்றன.

இந்தப் போக்கு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுமே தவிர குறைவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில் இது வர்த்தகப் போட்டியுடன் தொடர்புடைய விடயம். இலங்கை சீனாவிற்கான மத்திய கிழக்கு, ஆபிரிக்க கடல் வழிச் சந்தியில் இருப்பதனால் இலங்கையை இழக்க சீனாவினால் முடியாது. அதேவேளை சீனாவிடம் இலங்கையை இழந்தால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் வர்த்தக ஆதிக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சரிந்து விழுந்து விடும்.

அமெரிக்கா தனக்கு எதிரான தடைகளை ஒவ்வொன்றாக சரித்து வருகின்றது. சதாம், பின்லாடன், கடாபி என ஒவ்வொருவராக சரிந்து வீழ்ந்தனர். தற்போது சீனாவின் தடையை அகற்றும் செயற்பாட்டில் அமெரிக்கா இறங்கியிருக்கின்றது. 100 இராஜதந்திரிகளுக்கு மேல் களத்தில் இறக்கி அமெரிக்கா போரிட்டமைக்கு இதுதான் பிரதான காரணம். தனது செயற்பாட்டிற்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் புலிகளை அழிப்பதற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியது. பிரபாகரனை மகிந்தர் பார்க்கட்டும், மகிந்தரை நாம் பார்ப்போம் என்றே மேற்குலக இராஜதந்திரிகள் அன்று கூறினர். புலிகளை வீழ்த்தியாயிற்று. இன்று மகிந்தரை வீழ்த்த வேண்டிய கால கட்டம் அவர்களுக்கு வந்துள்ளது.  

இரண்டாவது தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக ஒதுங்கியிருப்பதற்கு சர்வதேச நிழல் என ஒன்று இருக்கவில்லை. 87வரை இந்தியா இருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் தனது நலன்கள் நிறைவேற்றப்பட அதுவும் இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. போதாக்குறைக்கு மேற்குலகத்தையும் தன்னுடன் இணைத்திருந்தது. புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் காரணமாக மேற்குலகம் சிறிய அழுத்தங்களை இலங்கையரசிற்கு வழங்க முன்வந்த போதெல்லாம் கவசம் போல நின்று இலங்கை அரசினை இந்தியா பாதுகாத்தது. 

இலங்கை- இந்தியா- மேற்குலகம் என்கின்ற முக்கூட்டு ஒடுக்கு முறைகளினால் தமிழ் மக்கள் அடைந்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் மக்கள் ஒரு தேசமாக வளர்வதை இலங்கை அரசு திட்டமிட்டு சிதைத்தபோது இந்த வல்லரசுகள் எல்லாம் அதற்கு துணைபோயின. பொறுப்புக் கூறல் என்ற தேவை இலங்கை அரசிற்கு அறவே இல்லாமல் இருந்தது. இன அழிப்பை செய்வதற்கு சர்வதேச லைசன்ஸ் கிடைத்துள்ளது போல அது தொழிற்பட்டிருந்தது. இன அழிப்பு என்பது வெறுமனவே உயிர் அழிப்பினை மட்டும் குறித்து நிற்கவில்லை. நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, கலாச்சாரப் பறிப்பு தொழில் பறிப்பு என தமிழ் மக்களின் இருப்புடன் தொடர்புபட்ட அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது.  

இந்த இன அழிப்பு நடவடிக்கைகள் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தன. சுதந்திரத்தினை அதற்கான லைசன்ஸ் என்றே இலங்கை அரசு கருதியிருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டம் தொடங்கியதைத் தொடர்ந்து புலிகளின் ஆயுதப்பலம் இதனை மட்டுபடுத்தியிருந்தது. குறிப்பாக நிலப்பறிப்பினை புலிகள் ஒரு வரையறைகளுக்கப்பால் செல்லவிடவில்லை. முள்ளிவாய்க்கால் அழிப்புடன் இந்த மட்டுப்பாடுகள் எல்லாம் இல்லாமல் போயின. 30வருட தாகத்தினை ஒரேடியாகத் தீர்த்து விட வேண்டும் என்ற முனைப்பில் தமிழர் தாயகம் மீதான பச்சை ஆக்கிரமிப்பினை பேரினவாத அரசு முடுக்கி விட்டது. நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, தொழில் பறிப்பு, கலாச்சாரப் பறிப்பு எல்லாம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்தன. இராணுவ முற்றுகைக்குள் வாழும் தமிழ் மக்களினால் இவற்றை எதிர்த்து மூச்சினைக் கூட விட முடியவில்லை. 'காய்ந்த மாடு கம்பில் விழுவது' போன்றே இது விடயத்தில் இலங்கை அரசு செயற்பட்டது. கிழக்கை முழுமையாக ஏப்பம் விட்ட நிலையில் வடக்கு நோக்கியும் இது பாய்ந்தபோது தமிழ் மக்கள் மௌனமாக கண்ணீர் விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.      

ஜெனிவாப் பிரேரணை அந்தப் போக்கினை மாற்றியுள்ளது. சர்வதேச நிழலில் தமிழ் மக்கள் ஒதுங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. தான் மேற்கொள்ளும் பச்சை ஆக்கிரமிப்புக்கெல்லாம் சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. 

மூன்றாவது இந்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமாகும். முன்னைய கட்டுரையில் கூறியது போல தமிழ்நாட்டின் கரிசனைகளை இனிமேல் மத்திய அரசினால் தட்டிக் கழித்துவிட முடியாது. கொழும்பை தெளிவாகவும், வெளிப்படையாகவும் போசித்து வந்த புதுடில்லி இன்று அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. ஜெனிவாவில் பிரேரணைக்கு ஆதரவாக புதுடில்லி வாக்களித்த போது சென்னையினதும், கொழும்பினதும் கரிசனைகளை ஒன்றாகப் பேணுதல் என்ற அணுகுமுறையினையே பின்பற்ற முனைந்தது. இதனால் தான் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை அதில் திருத்தத்தையும் கொண்டு வந்தது.

ஆனால் யதார்த்தம் சென்னையின் கரிசனைகளையும், கொழும்பின் கரிசனைகளையும் ஒன்றாகப் பேணக்கூடிய சூழலில் இல்லை. கொழும்பு பேரினவாதத்துடன் தொடர்புடையது சென்னை தமிழ்த் தேசிய வாதத்துடன் தொடர்புடையது. இரண்டும் ஒன்றிற்கு ஒன்று எதிராக வளர்ச்சியடைந்தவை. தமிழ்த் தேசியவாதத்தை போஷித்தால் கொழும்பை கைவிட வேண்டும். பேரினவாதத்தை போஷித்தால் சென்னையைக் கைவிட வேண்டும். 1987வரை புதுடில்லி தமிழ்த் தேசியவாதத்தை போஷித்தது, அதனால் கொழும்பைக் கைவிட்டது. 1987க்கு பின்னர் கொழும்பினை போஷித்தது, அதனால் சென்னையைக் கைவிட்டது. தற்போது மீண்டும் சுழற்சி நிலை வந்துள்ளது. புதுடெல்லி விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, சென்னையைப் போஷிக்க வேண்டிய நிலையில் உள்ளது. கொழும்பின் மீது பீகிங்கின் செல்வாக்கு அதிகரிக்க புதுடெல்லியின் சென்னையைப் போஷித்தலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிகவும் வாய்ப்பானது. 

நான்காவது, தமிழ் மக்களுக்கு சர்வதேசவெளி போதியளவு திறந்து விட்டமையாகும். இது பற்றி கடந்தவார கட்டுரையிலும் கூறப்பட்டுள்ளது. புலிகள் இருக்கும் வரை இந்தச் சர்வதேச வெளியும், பிராந்திய வெளியும் சிறிதளவு கூட தமிழ் மக்களுக்கு திறக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் சர்வதேச மட்டப் பரப்புரையை சிறிதளவில் மேற்கொள்ளக் கூட தமிழ்த் தரப்பினால் முடியவில்லை. ஜெனிவாவிற்கு பின்னர் தமிழ்த் தரப்பிற்கு இரட்டைப் பரப்புரை கிடைக்க உள்ளது. அமெரிக்க- இந்தியக் கூட்டு ஒரு பக்கத்தில் பரப்புரையை மேற்கொள்ளப் போகின்றது. மறுபக்கத்தில் தமிழ்த் தரப்பு சொந்தமாகப் பரப்புரையைச் செய்ய வாய்ப்பு உருவாகப் போகின்றது. இதற்கப்பால் தமிழர் அரசியல் தளங்களும் வலிமையடையப் போகின்றன. தமிழர் அரசியல் தளங்கள் என்பவை மூன்று தான். தாயகம், புலம், தமிழகம் என்பவையே அவையாகும். தாயகத்திற்கு அப்பால் 1987க்கு முன்னர் தமிழகமே முக்கிய தளமாக இருந்தது. 1987 க்கு பின்னர் தமிழகம் செயற்படக் கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் புலம் என்கின்ற புதியதளம் எழுச்சியடையத் தொடங்கியது. தற்போது தமிழகம், புலம் ஆகிய இரண்டுமே செயற்படக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகச் சூழல் ஏற்படும் போது தாயகமும் செயற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

சிறீலங்கா அரசினைப் பொறுத்தவரை ஜெனிவா பிரேரணை நிறைவேறினாலும் நெருக்கடிதான். நிறைவேறாவிட்டாலும் நெருக்கடிதான். தற்போதைய மகிந்தர் அரசு என்பது பேரினவாதத்தை தளமாகக் கொண்ட அரசு. சுருக்கமாக பேரினவாதத்தின் கைதி எனலாம். இவ்வாறு கைதியாக இருக்கும்வரை பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளையோ, நல்லிணக்க நடவடிக்கைகளையோ அது ஒருபோதும் மேற்கொள்ளப் போவதில்லை. இதனை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு பயன்படுத்துகின்ற சர்வாதிகார ஆட்சியையும் விட்டுவிடப் போவதில்லை. இவற்றை மேற்கொண்டால் அடுத்த சில நாட்களிலேயே அரசாங்கம் கவிழ்ந்து விடும்.  

எனவே ஜெனிவா பிரேரணையை சிறீலங்கா அரசு நிராகரிப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிராகரிக்குமானால் அமெரிக்க- இந்தியக் கூட்டுடனான முரண்பாடு தொடர்ச்சியாக அதிகரித்தே செல்லும். இது அதிகரிக்க அதிகரிக்க தமிழ்த்தேசிய அரசியலின் முக்கியத்துவமும் அதிகரித்துச் செல்லும்.

இந்த இடத்தில்தான் அமெரிக்க- இந்தியக் கூட்டின் நலன்களையும், தமிழ்த் தேசிய நலன்களையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து கூட்டாக பயணமாவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக வேண்டும். நல்லிணக்கம், போர்க்குற்ற விடயத்தில் அமெரிக்க- இந்தியக் கூட்டின் இலக்கு வெறுமனே 13வது திருத்தமும், போர்க்குற்ற பொறுப்பேற்றலும் மட்டும்தான். இவை ஒரு போதும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு இணையாகாது. தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் வலுவாக இருந்தால் சுயநிர்ணயம், இனப்படுகொலை என்பவற்றினை அமெரிக்க- இந்திய கூட்டின் நிகழ்ச்சி நிரலில் இணைக்க முடியும். ஏனெனில் முன்னர் கூறியது போல இன்று தமிழ் மக்களுக்கு அமெரிக்க- இந்தியக் கூட்டு அவசியம் என்பதை விட அமெரிக்க- இந்தியக் கூட்டிற்கு தமிழ் மக்கள் அவசியம்.

இங்குதான் தமிழ்த் தலைமையின் ஆற்றல் முக்கியமாகின்றது. அமெரிக்க- இந்தியக் கூட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வதாக தமிழ்த் தலைமை இருக்கக் கூடாது. அதற்கு உண்மையில் ஒரு தலைமையே தேவையில்லை. தனது மக்கள் வலிமையினாலும் இராஜதந்திரச் செயற்பாட்டினாலும் சர்வதேச அரசியலுக்குள் மிக இலாவகமாக தமிழர் விவகாரத்தைப் புகுத்தக் கூடிய தலைமையே இன்று தேவை.

கொசேவா விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவர் முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரைச் சந்தித்த போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

'போரின் தோல்வியை வைத்து நீங்கள் துவண்டு விடாதீர்கள். உங்கள் கொள்கைகளில் உறுதியாக நில்லுங்கள். உங்களுக்கும் ஒருகாலம் வரும். கொசேவாவின் தனிநாட்டுக் கோரிக்கையை மேற்குலகம் முதலில் நிராகரித்தது. சிறியளவிலான அதிகாரப் பங்கீட்டினையே தீர்வாக ஏற்றிருந்தது. இதற்காக விடுதலை இயக்கத்தை நிராகரித்து தனக்கு பொம்மையாக இருந்த மிதவாதத் தலைவரை உலகமெல்லாம் கொண்டு சென்றது. இறுதியில் சேர்பியாவுடனான முரண்பாடு முற்றிய நிலையில் தமது விடுதலை இயக்கத்தை ஏற்றதோடு கொசேவா தனிநாடாக செல்வதை ஏற்கும் நிலைக்கும் வந்தது.'

எனவே தமிழ்த் தரப்பிற்கு இப்போதைய தேவை. தெளிவான இலக்கு, வலுவான கொள்கை, உறுதியான வேலைத்திட்டம் விலைபோகாத தலைமை, தீர்க்க தரிசனமான இராஜதந்திரம்.

தமிழ்த்தேசிய சக்திகள் இவற்றிற்காக இப்போதே உழைக்கத் தொடங்குவது நல்லது.

3/30/2012 4:22:37 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்