Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும்

தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும்
யதீந்திரா

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க இந்திய தரப்பினரிடம் கூட இவ்வாறானதொரு கணிப்பு இருந்திருக்குமென்பது சந்தேகமே. புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஊடகச் செய்திகளிலும் மகிந்த இரண்டாம் நிலையில் வரக் கூடுமென்றே கணிப்பிடப்படிருந்தது. ஆனால் இறுதியில் அனைவரது கணிப்புக்களும் பொய்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மகிந்த தனது கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றிலேயே போட்டியிட்டிருந்தார். ஆரம்பத்தில் இப்படியொரு கணிப்பும் சிலரிடம் இருந்தது. என்னதான் மகிந்த கவர்ச்சிமிக்கவராக இருந்த போதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி, தனித்து இயங்குவாராக இருந்தால் அவர் பெரியளவில் வெற்றி பெற முடியாது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னணி வகிக்கும். எனினும் இந்தக் கணிப்பும் பொய்த்துவிட்டது. சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவின் கவர்ச்சி முன்ரைப் போன்று அப்படியேதான் இருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையின் அரசியலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமென்று அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் சற்று பதட்டத்துடன் நோக்கப்படுகிறது. கிடைக்கும் தகவல்களின்படி ஐக்கிய தேசிய கட்சி – சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆளும் தரப்பாக இருக்கின்ற இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டி மகிந்த வெற்றி பெற்றிருப்பதுதான். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.

உண்மையில் சிங்கள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை ஏற்கவில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால் ஆட்சிமாற்றத்தின் போது எவ்வாறு பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லையோ, அதேபோன்றதொரு நிலைமைதான் தற்போதும் தொடர்கிறது. அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, அவரால் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தனிப்பெருந் தலைவராக வர முடியவில்லை. அவரது தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மகிந்தவை உள்வாங்கினால் மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் எழுச்சிகொள்ள முடியும் என்னும் நிலைமையே தொடர்கிறது. இதுவரை ஒரு அவதானமாக மட்டுமே இருந்த நிலைமை தற்போது மகிந்தவின் வெற்றியால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது மைத்திரியும் ரணிலும் என்ன செய்யப் போகின்றனர் என்னும் கேள்வி அரசியல் அரங்கில் மட்டுமல்ல, சாதாரண மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. கிடைக்கும் தகவல்களின்படி ரணில் தலைமையிலான குழுவினரும் மைத்திரி தலைமையிலான குழுவினரும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கலாமா என்று முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறானதொரு நிலைமை உருவாகினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இணையாது என்று அதன் தலைவர் சம்பந்தர் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இணைவதோ அல்லது கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதோ இரண்டுமே பரஸ்பரம் இருவருக்கும் புதைகுழி வெட்டுவதாக அமைந்துவிடும். இவ்வாறானதொரு சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலரை உடைத்து எடுத்து அவர்களோடு ஏனைய தரப்பினரையும் இணைத்து பயணிக்க வேண்டும். இதேவேளை மைத்திரி தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் மகிந்த தரப்புடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதுடன் மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

ஆனால் சிலரது கணிப்பின்படி தற்போது இருக்கின்ற கூட்டு அரசாங்கத்தை ஏதோவொரு வகையில் 2020 வரையில் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபடுமென்றும் பார்க்கப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தையும் இலகுவாக நிராகரிக்க முடியாது. எனினும் கட்சி அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் அடுத்து வரவுள்ள தேர்தலை இலக்கு வைத்தே செயற்படுவர். தேர்தல் அரசியல் தங்களுக்கு பாதகமாக வருமென்று கணித்தால் முதலில் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருப்பர். அந்த வகையில் பார்த்தால் மகிந்த அலையுடன் ஐக்கியமாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பலரும் விரும்புவர். மகிந்தவுடன் இணைய முடியாத ஒரு சிலரைத் தவிர, ஏனைய அனைவரது சிந்தனையும் அடுத்த தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே நகரும்.

ஒருவேளை வெளிச் சக்திகளால் இந்த அரசாங்கம் ஏதோவொரு வகையில் கொண்டு இழுக்கப்பட்டாலும் கூட, இதனால் எந்தவொரு ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்ய முடியாமல் போகும். இதன் விளைவை உடனடியாக எதிர்கொள்ளும் அமைப்பாக கூட்டமைப்பே இருக்கும். கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி இந்த கூட்டரசாங்கத்தை நம்பி அதனுடன் இழுபட்டுச் சென்றது. இதன் விளைவாக ஏற்கனவே கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரியத் தொடங்கிவிட்டது. இது தனியாக ஆராயப்பட வேண்டியது என்பதால் அதனை அடுத்த பத்தியில் பார்ப்போம்.

மகிந்தவின் வெற்றி ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் மகிந்த தொடர்பில் மேற்கொண்ட எதிர்ப்பிரச்சாரங்கள் எதுவும் சாதாரண சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாதாரண மக்கள் இப்போதும் போர் வெற்றியின் ஊடாக மட்டுமே மகிந்தவை பார்க்கின்றனர். மேலும் இந்த அரசாங்கம் இருப்பதை விடவும் அது இல்லாமல் போவதே சிறந்தது என்றும் அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தளவு ஆதரவை மகிந்த பெற்றிருக்க முடியாது. இதில் இன்னொரு ஆபத்தும் உண்டு. 2015 ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளே மகிந்தவின் தோல்விக்கு பயன்படுத்தப்பட்டன. இது சிங்கள தேசியவாத சக்திகளின் மனங்களில் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கலாம். வெல்ல முடியாதவர்கள் என்று கருதிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த மகிந்த ராஜபக்ச, மீண்டும் தமிழர்களின் வாக்குகளைக் கொண்டே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இது அவர்களவில் சகிக்க முடியாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம். அதேவேளை புதிய அரசாங்கம் தங்களை பிரமாண்டமாக காட்சிப்படுத்திய போதிலும் கூட, மக்களுக்கு பெரியளவில் நன்மைகளை செய்யவில்லை என்னும் கருத்தும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கலாம். இதனுடன் சேர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய ஊழல் தொடர்பான கருத்துக்களும் மக்கள் மத்தியில் பரவியிருந்தன. மகிந்தவின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய அரசாங்கத்தின் மீதும் அதே ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இப்படி பல காரணங்களும் சேர்ந்து மகிந்தவை மீண்டும் நிமிர்த்தியிருக்கிறது. மகிந்தவின் வெற்றி இன்னொரு செய்தியையும் பறைசாற்றியிருக்கிறது. கட்சி, சின்னம் அனைத்தையும் மீறி மக்கள் எழுச்சிகொள்ளும் ஒன்றுடன்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். அதுதான் தற்போது தாமரை மொட்டின் கீழ் மகிந்தவின் மீளெழுச்சியாக மாறியிருக்கிறது.

தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும்

மொத்தத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த பெற்றிருக்கும் வெற்றி மீண்டும் இலங்கைத் தீவை அதிகம் வெளியக சக்திகளின் செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு செல்லப் போகிறது. கூட்டாட்சி முற்றிலும் குழம்பிவிட்டது. இத்தனை குழப்பங்களின் மத்தியிலும் மைத்திரி-ரணில் ஆட்சி தொடருமானால் அது சில வெளியக சக்திகளின் நிகழ்சிநிரலின் அடிப்படையில் மட்டுமே சாத்தியப்படும்.

2/21/2018 1:53:37 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்