Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு

தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு

 

இம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து இரண்டரை மணிநேர பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலமும் தொடர வேண்டுமென்று இதில் உடன்பாடு காணப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது பற்றி தேர்தல் கால வாக்குறுதிகளைப் பற்றியோ அன்றி புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. உண்மையில் அவை இலவுகாத்த கிளிகளாய் முடிந்துபோன கதையாகும்.

ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்களைப் பற்றியும், அவர்களின் உரிமைகளைப் பற்றியும் பேசுவது என்பது இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் அரசியல் பொறிமுறையைப் பற்றியும் சரிவர புரிந்து கொள்வதிலிருந்து ஆரம்பமாக வேண்டும். அத்துடன் சர்வதேச அரசியல் யதார்த்தத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றிற்குப் பொருத்தமாக தமிழ் மக்கள் தமக்கான அரசியலை முன்னெடுக்காமல் தமிழ் மக்களுக்கான விடிவிற்கு இடமேயில்லை. கூடவே இவை இரண்டையும் சரிவர புரிந்து கொண்டு இவ்விரண்டு அம்சங்களுக்கும் முகங்கொடுக்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் தம்மை தமிழ்த் தேசிய உருவாக்கத்திற்கு உட்படுத்தாமல் விடுதலையைப் பற்றி சிந்திக்கவே முடியாது. இதுவிடயத்தில் தமிழ் மக்கள் தமக்கான ஒரு புதிய வழியை, புதிய அணுகுமுறையை, புதிய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு அடிப்படையாக முதலாவது அம்சமான மேற்படி இருபெரும் சிங்கள கட்சிகளினது அரசியல் பொறிமுறையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்பது முழுமுதல் அவசியமாகும்.

இந்த 'நல்லாட்சி அரசாங்கம்' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக மொத்தத்தில் ஏமாற்றும் என்றும் புதிய உத்தேச அரசியல் யாப்பின் வாயிலாக அரசியல் தீர்வு ஏற்படப் போவதில்லையென்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்பது ஒரு பெரும் ஏமாற்றுகரமான நடவடிக்கை என்றும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்ட 'புதிய உத்தேச அரசியல் யாப்பு' பற்றி எழுதப்பட்ட நூலில் விபரிக்கப்பட்டிருந்தது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இந்நூல் பற்றி கூறிய ஒரு வாக்கியம் கவனத்திற்குரியது. அதாவது 'இந்த நூல் ஒரு அபாய மணியை அடித்துள்ளது. எதிர்காலத்தில் நடக்கப்போகின்ற விடயங்களை இந்நூல் முன்னெச்சரிக்கையுடன் கூறுகிறது' என்பதாக அந்த வாக்கியம் அமைந்தது.

ஆனால் 'நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மீதும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். ஒருவரும் அவசரப்பட்டு எதனையும் குழப்பிவிட வேண்டாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு.ஆர்.சம்பந்தன் உறுதிபடக் கூறினார். ஆனால் தற்போது அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக இறுதிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு

இங்கு நல்மனம், நம்பிக்கை, விசுவாசம் என்பதில் இருந்து அரசியலை ஆரம்பிக்க முடியாது. மேற்படி அபாய அறிவிப்பு முன்கூட்டியே ஒரு நூலின் வாயிலாக உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் அப்பால் அறிவுபூர்வமாக தெரிவிக்கப்பட்ட பின்பும் அதனை பொருட்படுத்தாத தமிழ் அரசியலானது இன்று இறுதி நேரத்தில் இலகு காத்த கிளியின் கதையை கூறி தமிழ் மக்கள் மத்தியில் ஓலம்பாடும் படலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் மேற்படி கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்தமை பொய் என்பதற்கு அப்பால் அவை தமது நலன்களுக்காக ஒன்றிணைந்து அவற்றை நிறைவேற்றிவிட்டு இறுதியில் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளன என்பதற்கான அடிப்படையை புரிந்துகொள்வதற்கு மேலும் ஆழமான அறிவியல் ஆய்வுகள் எமக்குத் தேவை.

ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரக் கட்சியும் தமிழர்கள் பொறுத்து ஒரு நாணயத்தின் இருபக்கங்களாவர். இதில் இரண்டு பக்கங்களுக்கும் ‘பூவா', 'தலையா' என்ற குறியீட்டு வேறுபாடு இருந்தாலும் இரண்டு பக்கங்களும் ஒரு நாணயத்தின் ஒரு பெறுமதியைத்தான் குறித்து நிற்கின்றன.

ஒரு கட்சிக்கு இன்னொரு கட்சி எதிரானது போலத் தோன்றினாலும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான செயல்முறையில் இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று அனுசரணையானவை என்ற பொறிமுறையைக் கொண்டுள்ளன.

சுதந்திரக் கட்சி தமிழ்த் தலைவர்களோடு ஒப்பந்தம் செய்து தனது ஆட்சி நெருக்கடிகளை தீர்க்க முயலும். அப்போது தமிழ் மக்களுக்கான உரிமை பற்றிய உறுதிமொழிகளை அது அளிக்கும். ஆனால் அந்நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்க்கும். இங்கு இதன் பொறிமுறையை ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.

அதாவது ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவற்றை வழங்காமல் இருப்பதற்கு அந்த சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் உதவும் காரியத்தில் ஈடுபடுவார்கள். அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பைக் காட்டி சுதந்திரக் கட்சி அந்த ஒப்பந்தத்தை கைவிடும். அதேபோல ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வருவதற்கு காணப்படும் நெருக்கடிகளைத் தாண்டுவதற்கு தமிழ்த் தலைவர்களோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்.  அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவற்றிற்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க்கொடி தூக்கும். சுதந்திரக் கட்சியின் எதிர்ப்பைக் காட்டி ஐக்கிய தேசியக் கட்சி அந்த ஒப்பந்தத்தை கைவிடும். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாது இனவாதத்தை நிறைவேற்றுவதற்கு சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கைகொடுத்து உதவியுள்ளது என்பதுதான் உண்மையாகும்.

இங்கு இருகட்சிகளும் ஒன்றுகொன்று எதிர் என்று புரிந்து கொள்வதைவிட தமிழர் விடயத்தில் ஒன்றுகொன்று அனுசரணையாக இனவாதத்தை நிறைவேற்றுவதற்கு ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன என்பதே உண்மையாகும். இந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இனவாத அரசியலை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில் ஒருநாணயத்தின் இருபக்கங்களாக இருந்து ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன என்பதே இந்த அரசியல் பொறிமுறையின் உள்ளார்ந்த அம்சமாகும்.

ஒரு விடயத்தை அதன் உள்ளடக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர அதன் தோற்றத்தில் அல்ல. எனவே ஈழத் தமிழர் பொறுத்து இருபெரும் கட்சிகளினதும் உள்ளடக்கம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதே.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்பு இலங்கை அரசு சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கும், நெருக்கடிக்கும் உள்ளானது. காலகட்ட வர்த்தமான தேவைக்குப் பொருத்தமாக சிங்கள இராஜதந்திரம் தன்னை புதுவடிவப்படுத்திக் கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தது.

இந்த வகையில் சர்வதேச ரீதியான போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை பற்றிய பிரச்சினையில் இருந்து இலங்கை ஆட்சியாளர்களையும், இராணுவத்தினரையும் பாதுகாக்க சிங்கள அரச இயந்திரம் 'நல்லாட்சி அரசாங்கம்' என்னும் ஒரு இராஜதந்திர படைப்பை பிரசவித்தது. அதன்போது மேற்படி இருபெரும் கட்சிகளும் ஒன்றிணைந்து தமது அரசை காப்பாற்றியதுடன், கூடவே அதற்குரிய ஆட்சியாளர்களையும், இராணுவத்தினரையும் பாதுகாப்பதில் வெற்றிபெற்றனர். இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது உள்ளடக்கம். இதுதான் எதிரும்-புதிருமாக காட்சியளித்த இருகட்சிகளினதும் கூட்டு அரசாங்கத்தின் முதலாவது உள்ளடக்கம். இரண்டாவது உள்ளடக்கம் மிகவும் விந்தையானது. இதனை ஒரு தனிக்கட்டுரையில் நாம் ஆராய வேண்டும். ஆயினும் சில வசனங்களில் இதனை குறிப்பாக இக்கட்டுரையில் சொல்லிப் போகவேண்டிய அவசியம் உண்டு.

அதாவது இனப்பிரச்சினைக்கு அதிகார பரவலாக்கல் மூலம் தீர்வு காணப்படும் என்பதே இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதியாகும். இதனைக் கூறித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் இந்த அரசாங்கத்திற்கும், தமக்குமான ஆதரவைத் திரட்டியது. உண்மையில் தமிழ் மக்கள் அந்த ஆதரவை அளித்தார்கள். அந்த ஆதரவின் மூலம் உருவான அரசாங்கம் சிங்கள ஆளும் குழாத்திற்குள் ஏற்பட்ட போட்டியைத் தீர்ப்பதற்குப் பொருத்தமாக தமக்கிடையே ஒர் அதிகார பரவலாக்கலை செய்து கொண்டார்கள். அதாவது ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கத்திற்குப் பதிலாக, பல சிங்கள அரசியல் குடும்பங்கள் தமக்கிடைய அதிகாரத்தை பரவலாக்கின. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே அதிகாரப் பகிர்வு பதவிக்கு வந்த உடனடியாகவே நிகழ்ந்தன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கும் இங்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கக்பட்டது. ராஜபக்ஷவோடு முரண்பட்ட இராணுவத் தளபதியான சரத் பொன்சேகவிற்கும் இங்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி வரை அதிகாரப் பகிர்வு நிகழ்ந்தது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் யாப்பிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்விற்கான அரசியல் யாப்பு திருத்தத்திற்குப் பதிலாக சிங்களத் தலைவர்களிடையே காணப்பட்ட அதிகாரப் போட்டிக்கான அதிகாரப் பகிர்வு செய்வதற்கேற்ற அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறுவதற்கான தருணம் வந்துள்ளபோது இருகட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்று ஒரு காட்சியை அரங்கேற்றி ஜனாதிபதிக்கு எதிராக பிரதமரும், பிரதமருக்கு எதிராக ஜனாதிபதியும் கருத்துக்களை வெளியிட்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். அந்த முற்றுப்புள்ளி நிறைவேறிய நிலையில் தமக்கிடையேயான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 5ஆம் தேதி பிரதமரும், ஜனாதிபதியும் நடத்தி தமிழ் மக்களுக்கு கண்ணாடியில் நிலவைக் காட்டும் காட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்கள்.

தமிழ்த் தேசிய இனம் எதிர்காலத்தை கணிப்பிடும் வல்லமை கொண்டது என்பதை கடந்த சில பத்தாண்டுகால அறிவியல் வெளியீடுகள் நிரூபிக்கின்றன. ஆயினும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதான அறிவிப்புக்கள் வெளியாகின்றன.

எக்காலத்திலும் இருபெரும் சிங்களக் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து சிங்களக் கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்ற உள்ளடகத்தைக் கொண்டுள்ளன. நெருக்கடிகள் வரும்போது சிங்களக் கட்சிகள் சமாதானம் பற்றி பேசும். ஆனால் நெருக்கடிகள் தணியும் போது அதைவிடப் பலமடங்கு உக்கிரத்துடன் அவை ஒடுக்குமுறையை மேலும் மேலும் புதிய புதிய வடிவங்களில் அரங்கேற்றும்.

நன்றி: ஈழமுரசு - கனடா

6/22/2018 7:48:18 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்