ஜப்பானின் பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா தமது நாட்டின் நிதியுதவியுடன் வேலணையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேற்றுப் பார்வையிட்டுள்ளார்.
வேலணைக்கு நேற்று மாலை சென்றிருந்த ஜப்பானின் பிரதிப் பிரதமர் தலைமையிலான குழுவினர் அங்கு ஜப்பான் மற்றும் 'பார்சிக்' நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றுவரும் ஐஸ் தொழிற்சாலைப் பணிகளையும், மீன் பதனிடும் தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகான ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் பிரதேச சபை, பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இமன்போது வேலணை பிரதேச சபையின் தலைவர் சி.சிவராசா அபிவிருத்தி தொடர்பிலான ஐந்து அம்சங்களைக் கொண்ட கோரிக்கை மனுவொன்றை சிறிலங்காவின் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து அச்சுவேலிக்குச் சென்ற ஜப்பானியக் குழுவினர் அங்கு 14.5 மில்லியன் ரூபா செலவில் ஜப்பானிய அரசினால் அமைக்கப்பட்ட தென்னை நாற்றுமேடை, நிர்வாகக் கட்டடப் பணிகளையும் பார்வையிட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.