தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதனை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பொங்குதமிழ் இணைத்தளத்துக்கு தெரிவித்தவை வருமாறு:
'முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களுக்கு உலக உலர் உணவுத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்டு வந்த நிவாரணம் கடந்த ஒன்றரை மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மூதூர் கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, சூடைக்குடா, நவரத்தினபுரம் மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கட்டைபறிச்சான், கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, சேனையூர் ஆகிய பகுதிகளிலுள்ள தற்காலிக முகாம்களில் தொழிலின்றி கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளில் குடியேறாவிட்டால் நிவாரணங்களை விநியோகிக்கக்கூடாதென கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநரும், திருகோணமலை மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தனர். இதனையடுத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயத்தை தெரியப்படுத்தியதன் விளைவாக நிவாரணம் மீண்டும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக இம்மக்களுக்கான நிவாரணம் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் எடுத்துச் சொல்லியும் இன்னும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்கின்றதே தவிர, நிவாரணம் இன்னும் வழங்கப்படாமையால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, நிறுத்தப்பட்ட நிவாரணப் பொருட்களை மக்களுக்குத் தாமதமின்றி உடன் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்' என துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.