தம்புள்ளையில் கடந்த வாரம் பௌத்த பிக்குமார்களின் தலைமையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களின் செயற்பாடுகள் யாவும் முடங்கின. பாடசாலைகள், அலுவலகங்கள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டிருந்தன. வீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
அதேவேளை, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட பிரதேசங்களின் பிரதான வீதிகளில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்தப் பிரதேசங்களில் வீதிக்குக் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி டயர்களைப் போட்டும், தீ மூட்டியும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை. இருந்தபோதிலும், ஓரிரு உள்ளூர் பஸ்கள் சேவையில் ஈடுபட்டிருந்தன.
அம்பாறை மாவட்டத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாமையால் பாடசாலை வகுப்புகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தம்புள்ளை பள்ளிவாசல் பேரினவாதிகளால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு இலங்கை தேசிய ஒற்றுமைப் பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கிணங்கவே இன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அரசுக்கெதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், 'துஆ' பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் முஸ்லிம் மக்களுக்கு இலங்கை தேசிய ஒற்றுமைப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருநாள் நாடாளுமன்றப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரை இலங்கை தேசிய ஒற்றுமைப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.