Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான் - சயந்தனின் 'ஆறாவடு' புதினம் பற்றிய சிறு குறிப்பு

கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான் - சயந்தனின்
அ.இரவி

 

1.

ஈழதேசத்தில் தமிழர் மீது நிகழ்த்திய, அதனை எதிர்கொண்ட தமிழர் நிகழ்த்திய யுத்தம், தன் துயரார்ந்த வாழ்வைச் சொல் சொல் என்று இறைஞ்சியது. குருதி கொப்பளித்தும் அவயங்கள் பிய்பட்டும் உடலங்கள் சிதறியும் மாண்டுபட்ட போர் தின்ற சனங்கள் இரந்து கேட்டார்கள் எங்கள் கதையைச் சொல் என்று. கடலோரத்தின் காற்றும் வயலோரத்தின் கதிர்களும் காட்டுப்புறத்தின் பறவைகளும் செம்பாட்டு மண்வெளியின் புழுதிகளும் ஆழக்கடலின் குஞ்சு மீன்களும் தம் தொலைந்த வாழ்வின் கதையைக் கூற எவருமில்லையோ என்று ஏங்கிச் சாம்பின.

அப்பொழுது வந்து சேர்ந்தான் கணிப்பிற்குரிய கதைஞன். இதோ நான் இருக்கிறேன் என்றான். உங்கள் கதையைச் சொல்கிறேன். சற்று எள்ளல் தொனிக்கும். அதனால் பாதகமில்லை. சொல்லி முடிக்கிறேன் என்றான். சொல்லி முடித்தான். அது ஆறாவடு என்று ஆயிற்று. அவ்வாறு சொல்லி முடித்தவன் சயந்தன்.

எந்த மண்ணில் இது விளைந்தது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. எப்படி இவனுக்கு இந்த அமைவு வந்தது என்றும் கேட்கத் தோன்றுகிறது. இப்படிப் புனையும் ஆற்றலை எங்கிருந்து பெற்றான் என்ற கேள்வியும் என்னிடம் உண்டு. ஈழ தேசத்தின் காலம் தன் கதை எழுத இவனுக்காகக் காத்திருந்ததோ என்றும் ஐயப்படுகிறேன்.

ஆறாவடு தன் வலியை கடற்கரையில்தான் தொடங்கி வைக்கிறது. கடற்கரையிலேயே முடித்தும் விடுகிறது. ஆனால் ஒரே கடற்கரை அல்ல. ஆயிரமாயிரம் மைல் கணக்கான இடைவெளி கொண்ட கடற்கரை. அந்த இடைவெளியினை இட்டு நிரப்ப சயந்தனுக்கு 181 பக்கங்கள் தேவைப்பட்டன. காற்போத்தலாவது மைத்துளி தேவைப்பட்டது. சிலபல நாட்கள் தேவைப்பட்டன. கடும் உழைப்புத் தேவைப்பட்டது. மேலாகப் புனையும், ஆற்றல் படைக்கும் திறன், செதுக்கிச் செப்பனிடும் இலாவகம், மொழி ஆளுமை ஆகியன தேவைப்பட்டன.

அதனிலும் மேலாக மனிதம் தேவைப்பட்டது. மனிதம் மீதான வாஞ்சை தேவைப்பட்டது. நெஞ்சுரமும் நேர்மைத் திறனும் தேவைப்பட்டன. நியாய உணர்வின் உறுத்தலும் கடமை உணர்வின் பாரமும் தேவைப்பட்டன. தேசம் மீதான, மக்கள் மீதான, விடுதலை மீதான பொறுப்புணர்வு தேவைப்பட்டது. மனிதர்கள் உயிர்க்க வேண்டும், மானுடம் தளிர்க்க வேண்டும் என்ற ஓர்மமும் தேவைப்பட்டது.

நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று யோசித்தபடி கதையைத் தொடங்குகிறான். எரித்திரியக் கிராமமொன்றில் கடற்கரையில் இத்ரிஸ் கிழவன் செயற்கைக் காலினை கைகளில் ஏந்தி முகத்தினருகே கொண்டு வந்து தொடர்ந்து முத்தமிட்டபடி இருக்க கதை முடிகிறது.

போருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அது சனங்களைத் தின்பது. அதனூடாக வாழ்வின் ஆன்மாவைச் சிதைப்பது. காலத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது. காற்றின் வெளியில் உயிர் ஆவிகளை உலாவ விடுவது. மனிதத்திற்கு உறவு என்று ஒன்றுமில்லை என உணர வைப்பது.

கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான் - சயந்தனின்

அழுகைக்கும் அர்த்தமில்லை. ஆத்திரத்திற்கும் அர்த்தமில்லை. நியாயம், நேர்மை, உணர்வு, உண்மை என்று ஏதுமில்லை என்று முகத்தில் அறைந்து சொல்கிறது யுத்தத்தின் குரல். யுத்தம் ஈழத்தில் நிகழ்ந்தால் என்ன? எரித்திரியாவில், உலகில் எங்குதான் நிகழ்ந்தால் என்ன? யுத்தம் அதைத்தான் சொல்கிறது. யுத்தத்தில் இசைக்க முடியாத பாடலை ஆறாவடு புதினத்தில் பாட முயன்றிருக்கிறார் சயந்தன்.

அந்தப் பாடலை சயந்தன் பாடி முடித்தாரா? நிறைவுற்று விட்டதா அந்தப் பயணம்?.. ஆறாவடுவை வாசித்து முடித்த அந்த நள்ளிரவில் ஓம் என்றுதான் என் மனம் விடை பகர்கிறது. ஓர் அருமையான உணவை உண்டு கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே இப் புதினத்தை வாசிக்கையில் எனக்கு நேர்ந்தது. அப்படிச் சொல்வது இப் புதினத்தின் சுவை கருதித் தானே ஒழிய யுத்தம் சிந்திய இரத்தத்தின் சுவை கருதி அல்ல. பல வரிகளை மீண்டும் வாசித்தேன். சில பந்திகளை திரும்ப வாசித்தேன். ஒரு சில அத்தியாயங்களை மறுபடி வாசித்தேன். குறிப்பாக கடற்பயணம் பற்றிய அத்தியாயங்கள், இறுதி அத்தியாயமான எரித்திரிய கிழவன் பற்றிய அத்தியாயம்...

ஒரே மூச்சில் இதனை வாசிக்க நான் விரும்பவில்லை. உள் வாங்க வேண்டும், அனுபவிக்க வேண்டும், காட்சிப் படிமங்களை எனக்குள் உருவாக்க வேண்டும். ஆறாவடுவில் ஒருவனாக நான் நிற்க வேண்டும். அதனால் நாள் எடுத்து காற்று இலையை அசைய வைப்பது போல பக்கங்களை அசைத்து இதனை வாசித்து முடித்தேன்.

2.

ஈழதேசத்து அரசியல் சில புதினங்களைத் தந்திருக்கிறது. சிங்கள தமிழ் இன முரண்பாடுகளின் கூர்மை அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கடுமையின் வெளிப்பாடு கவிதையில் அதிகம் சுவறியிருக்கிறது. பல சிறுகதைகளை அது தொட்ட போதும் நாவலாக அது அரும்பியது குறைவு. அதன் காரணம் என்னவாக இருக்குமென என்னால் மட்டுக்கட்ட முடிவது என்னவென்றால், புனைகதை எழுதும் பண்பாடு நம்மிடம் குறைவு என்பதே. அது உச்சத்தைத் தொடுகிறமாதிரி எம்மிடம் எந்த முயற்சியும் இல்லை. அற்புதமான அனுபவங்கள் எம்மிடம் திரண்டுள்ளன. அவற்றைப் புனைவுத் திறன் கொண்டு புதினம் ஆக்கும் முயற்சி எம்மிடம் இல்லையே எனலாம்.

மு.தளையசிங்கம் எழுதிய 'ஒரு தனி வீடு' குறிப்பிடத்தகுந்த ஒரு புனைவு முயற்சியே ஆயினும் முழுமையை எட்ட அது முயலவில்லை. 1958 தமிழ் இனப்படுகொலைக்குப் பின்னரான காலப்பகுதியையும் பிரிந்து போவதே தமிழர்களுக்கு இருக்கக் கூடிய தெரிவு என்பதையும் அது சுட்டுகிறது. ஆனால் அதனைச் சிறந்த புனைவாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.

1977 இனப்படுகொலையில் உயிர் தப்பிய தமிழர்கள் லங்காராணி என்ற கப்பலில் தமிழ்த் தேசத்தை வந்தடைவதைச் சொன்ன லங்காராணி (அருளர்) என்ற புதினம் எந்த வகையிலும் புனைவுத் தன்மையைச் சூடி நிற்கவில்லை. ஓர் அனுபவப் பகிர்வாக அது நம்மிடையே பரப்பப்படுகிறது. பிரச்சாரம் அதன் நோக்கம். ஆனால் பிரச்சாரம் படைப்பாக முடியாது என்று அல்ல. புனைவினூடாக எப்படிப் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்பதற்கு ரஷ்ய இலக்கியங்கள் பல உதாரணமாகத் திகழ்கின்றன.

புனைவு மொழியில் அல்லாது படைப்பு மொழியில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான நாவல் 'புதியதோர் உலகம்'. இதனை கோவிந்தன் எழுதியிருந்தார். அனுபவக் குறிப்புக்களைக் கொண்டு புனைவு மொழியில் கட்டப்படாத இந் நாவல் படைக்கப்பட்ட ஒன்றாக தன் இலக்கை அடைந்து விடுகிறது. நேர்மையான அரசியலில் எழுதப்பட்ட இந் நாவல் எம் நெஞ்சுக்கு நெருக்கமாக வருவதில் யாதொரு வியப்பும் இல்லை.

புனைவு மொழியில் எழுதிய ஒரு அரசியல் நாவல் ஷோபா சக்தி எழுதிய 'கொரில்லா' என்ற நாவல். அது தமிழில் மிகக் கவனத்தைக் கோரி நின்ற நாவல். புனைவுக்கும் உண்மைக்கும் இடையில் வித்தியாசம் காண முடியாதவாறு நுண்ணிதாக இழைத்திருந்தார் ஷோபா சக்தி. ஆயினும் அவரது 'ம்' என்ற அரசியல் நாவல் போன்றே கபட அரசியல் ஒன்று இதில் விரவிக் காணப்படுகிறது.

இந்தப் பாதையில் பயணித்த ஒரு நாவல்தான் சயந்தன் எழுதிய ஆறாவடு. ஆனால் மேற்சொன்ன அனைத்து நாவல்களிலிருந்தும் ஆறாவடு வேறுபட்ட இடங்கள் அதன் புனைவும் அரசியலும்.

இந்நாவல் புனையப்பட்டிருக்கிறது. அது மிக முக்கியம் என்பேன். அவரது புனைவு மொழி இன்னமும் தீராத பக்கங்களை திறந்து விட்டிருக்கின்றது. இப்படி ஒரு புனைவுத் திறனை ஈழதேசத்தவர் எவரினதும் படைப்பிலும் நான் காணவில்லை. எனது ஞாபக அடுக்கில் புரட்டிப் பார்க்கையில் கோகிலம் சுப்பையா எழுதிய 'தூரத்துப் பச்சை' என்ற நாவல் நினைவில் எழுகிறது. அதுவும் முக்கியமான நாவல் என்பேன்.

அவ்வாறே ஆறாவடுவில் சொல்லத்தக்க மற்றைய சிறப்பு அது பேசிய அரசியல். பொறுப்பு உணர்ந்து, தேவை அறிந்து, மானுட விரோதமில்லாத மனிதத்துக்குத் தேவையான அரசியலை ஆறாவடு பேசியிருக்கிறது.

இந்த இடத்தில் ஷோபா சக்தியின் எழுத்துக்களை ஒப்பிட மனம் அவாவுகிறது. அவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' ஆகிய நாவல்கள் பேசிய அரசியல் பொறுப்பற்றது. தெளிவற்றது. மனித தர்மத்தில் நின்று அல்லாமல் தன்னுள் இயங்கிய 'அரசியலை' அது வெளிப்படுத்தியது. கொரில்லா கலாநேர்த்தி மிக்க புனைவுதான். என்றாலும் அது பேசிய அரசியல் அதனைப் பாழடித்து விடுகிறது.

இந்த இடத்தில்தான் தன் வழி வேறு என்று சயந்தன் விலகிப் போகிறார். அவ்வாறு விலகிப் போனமைதான் சயந்தனை உயரிய இடத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. ஓர் அத்தியாயத்தின் ஈறு இப்படி முடிகிறது. 'சில விசயங்கள் தலைமைக்குத் தெரியாமல் நடந்து விடுகின்றன. ஒருசில போராளிகள் பிழை செய்வினம். ஆனால் இயக்கம் ஒருக்காலும் பிழை விடாது'

சில சமயங்களில் படைப்பாளிக்குத் தெரியாமல் படைப்பு அரசியலைப் பேசிவிடுகிறது. அதனூடாக படைப்பாளியின் அரசியலை நாம் கண்ணுறுவோம். அந்த அரசியல் யாருக்கு 'சேவை' செய்கிற அரசியல் என்பதையும் எம்மால் புரிந்து விட முடியும். ஆறாவடு புதினத்தின் நிறைவில் சயந்தன் சொல்ல வந்த அரசியல் எனக்கு அண்மித்ததாகவே இருக்கின்றது.

சயந்தன் வார்த்த நேரு என்பவர் பேசிய அரசியலே சயந்தனுக்கு ஒத்துப் போகின்ற அரசியல் என்று கூறலாம். தமிழ்த்தேசியத்தின் படிகளில் நின்று கொண்டு ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் வேண்டி நிற்கின்றார் நேரு. அமுதனின் பார்வையில் நேரு பிசிறு தட்டுகிறாரோ என்று (மானுடத்தின் தமிழ் கூடல் நிகழ்வில் நேருவின் உரை) சயந்தன் கட்டமைக்க முயன்றாலும் ஆறாவடு பிரதி நேருவை முரண்பாடற்றவராகவே காட்டுகிறது. சயந்தன் இதில் கவனம் பிசகினாரா அல்லது அமுதன் என்ற பார்த்திர வார்ப்பின் கண்வழி பார்த்தரா என்ற சம்சயம் எனக்கு உண்டு.

இச்சமயத்தில் பிறிதொன்றையும் குறிக்க விரும்புகிறேன். இது ஓர் அசாத்தியமான புனைவு முயற்சி என்ற போதிலும் இன்னமும் செதுக்கிச் செப்பனிட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அதற்கான சாத்தியங்களை இப்பிரதி தன்னகத்தே கொண்டுள்ளது. சயந்தனுடனான தொலைபேசி உரையாடலில் அதனை நான் குறிப்பிட்டேன். 'இன்னும் தமிழில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களையாவது வாசித்துவிட்டு ஆறாவடு புதினத்தை மறு எழுத்தாக எழுதவும்'

அது முக்கியம் என்பேன். இப்புதினம் தன் கொள்ளளவுக்கு (Capacity) ஏற்றவாறு பிரதியைத் திருப்தி செய்யவில்லை. ஈழத்துத் தமிழ் புனைகதை செழுமையை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க ஆறாவடு மேலும் முயன்றிருக்க முடியும். ஏனென்றால் தமிழக புனைகதை உலகுடன் ஒப்பிடுகையில் நாம் மிக மிகப் பின்தங்கி இருக்கிறோம். ஓரளவுக்கு அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி என்ற இருவர் மாத்திரமே ஈழத்து தமிழ் புனைகதை உலகின் தலையை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறார்கள். சயந்தனும் சற்று முயன்றால் இந்த இருவருடனும் இணையலாம்.

ஒரு புதினத்தின் புனைவின் பாத்திர வார்ப்பு மிக முக்கியமானது. எட்டாம் பக்கத்தில் நடமாடுகிற சட்டநாதன் எண்பதாம் பக்கத்திலும் அதேவாறு நடமாட வேண்டும். பாத்திர வார்ப்பிலும், வளர்ப்பிலும் குணாதிசயங்கள் மாறுபாடு கொள்ளலாம். ஆனால் அதிலும் கூட ஒரு சீர் இருக்கும். ஆறாவடுவில் அந்தக் குறையை காணமுடியாவிட்டாலும் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு போகையில் பாத்திரங்கள் இட வலம் மாறி வருகிறார்கள். அத்தியாயங்களின் வைப்பு முறை குழப்பியதா, அல்லது பாத்திரங்கள் குழம்பிப் போய்த் திரிகிறார்களா என்று உன்ன முடியவில்லை. அந்தச் சீர்குலைவு இருக்கிறது ஆறாவடு நாவலில்.

ஈழத்து தமிழ் புனைகதையாளர்களுக்கே இருக்கக் கூடிய மகத்தான குறைபாடு அவர்கள் நல்ல கதை சொல்லிகளாக மாத்திரமே இருக்கிறார்கள். ஈழத்தவரின் தரமான நாவல்கள் என்று கொண்டாடத்தக்க கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை, சி.வி வேலுப்பிள்ளையின் இனிப் பாடமாட்டேன், கே.டானியலின் பஞ்சமர், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் தில்லையாற்றங்கரையில், அ.பாலமனோகரனின் நிலக்கிளி, கோவிந்தனின் புதியதோர் உலகம், ஷோபா சக்தியின் கொரில்லா முதலான நாவல்களை எடுத்தால் என்ன.., சமீபத்தில் வெளியான ஈழத்தவரின் நாவல்களான அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புக்கள், உமா வரதராஜனின் மூன்றாவது சிலுவை, தமிழ்நதியின் கானல் வரி என்பனவும் கதை சொல்லித் தனமாகவே எழுதப்பட்டிருக்கின்றன.

பாத்திரங்கள் கதையை நகர்த்துவதாக இல்லை. உரையாடல்களினூடாக கதை சொல்லப்படவில்லை. படைப்பாளியே தனது பேனாவால் கதையை நகர்த்திச் செல்கிறார். அந்தக் குறைபாட்டிலிருந்து ஆறாவடுவும் விலகவில்லை.

இந்தக் குணாம்சத்தினால்தான் ஈழத்துப் புனைகதையாளர்களினால் நல்ல நாடகப் பிரதி ஒன்றினைத் தரமுடியவில்லை. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா முதலான தமிழகப் புனைகதையாளர்கள் தமிழுக்குத் தந்த நாடகப் பிரதிகள் குறிப்பிடத்தக்கன. ஈழத்துப் புனை கதையாளர்களால் அக்காரியத்தைச் செய்ய முடியவில்லை. தரமான நாடகப் பிரதியைத் தந்த மகாகவி, முருகையன், ம.சண்முகலிங்கம் முதலானோரும் புனைகதையாளர்களாக இல்லை.

சயந்தனே ஆறாவடுவில் கதைசொல்லியாக இருந்தமையால் சயந்தனின் இயல்பில் இருக்கக் கூடிய எள்ளல் (Satire) படைப்பு முழுவதும் விரவிக் கிடக்கிறது. அது புனைவுக்குப் பெரும் இடைஞ்சல். படைப்பு செம்மையாக முயல்வதை அது இழுத்து நிறுத்திவிடும். படைப்பாளி பிரச்சாரம் செய்வது அக் கலைப்படைப்பை எவ்வாறு ஊறு செய்கிறதோ அவ்வாறே எள்ளல் தொனியும் ஊறு செய்து விடும். எள்ளல் தொனி கொண்ட பாத்திரம் எள்ளலை விதைக்கையில் நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். சயந்தன் இதில் கவனம் கொள்ள வேண்டும்.

கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான் என்று தலைப்பிட்டேன். அத் தலைப்பினை எனக்கு உவந்தளித்தவர் பேரா.சிவத்தம்பி. கவிதைக்குள் சேரன் வந்த ஆரம்ப காலங்களில் 'கணிப்பிற்குரிய கவிஞன் வந்து சேர்ந்தான்' என்று பேரா.சிவத்தம்பி மல்லிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சேரன், பேரா.சிவத்தம்பி எழுதியது சரியே என்று காலத்தால் நிரூபித்தார். நிலை நிறுத்தினார். சயந்தனும் மேலுமான புனைகதைகள் மூலமே அதனை நிரூபிக்கவும் நிலைநிறுத்தவும் முடியும். நம்புகிறேன். சயந்தன் செய்வார்.

08.03.2012 வியாழன்

3/16/2012 3:59:20 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்