Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர்

வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர்
ஆழ்வாப்பிள்ளை

 

ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது அது அதிர்ச்சிக்குள் இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல தாக்குதல்கள் துலக்கப்படாமலே இருந்து வந்தது. அதிலும் 2000 இல் இருந்து 2006ம் ஆண்டுவரை சிறிய வர்த்தக நிலையங்களை வைத்திருந்த எட்டு துருக்கி இனத்தவர்களதும், ஒரு கிரீக் நாட்டவரதும் கொலைகள் மர்மமாகவும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தன. 25.04.2007 இல் கைல்புறோன் என்ற நகரத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதும் அவருடன் கடமையில் இருந்த மற்றைய ஆண் பொலிஸ் படுகாயப்படுத்தப்பட்டதும் யேர்மனியின் பொலிஸ் துறையையே புரட்டிப்போட்டது.

எவ்வளவுதான் புலனாய்வுகள் செய்தும் கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியவில்லை. இது யேர்மனிய பொலிஸின் கையாகாலாத தன்மையா? அல்லது குற்றவாளிகளின் தடயங்கள் திட்டமிட்டே அழிக்கப்படுகின்றனவா? என்ற கேள்விகளும், கருத்தாடல்களும் மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கின. பொலிஸைச் சேர்ந்த ஒருவர் பட்டப்பகலில் அதுவும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவரது வாகனத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதும், மற்றையவர் படுகாயப்படுத்தப்பட்டதும், தாக்குதலின் பின்னர் அவர்களது ஆயுதங்கள் களவாடப்பட்டதும் சாதாரண விடயங்கள் அல்ல. பொலிசுக்கே நிலமை மோசம் என்றால், சாதாரண பொதுமக்களுக்கு, அதுவும் வெளிநாட்டவருக்கு என்ன பாதுகாப்பு என்று யேர்மனிய ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

Haller Tagblatt என்ற பத்திரிகையின் ஆசிரியரும், எடிட்டரும், எழுத்தாளருமான துமிலன் என்பவர், யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி தான் சேகரித்த தகவல்களை பத்திரிகையில் எழுதத் தொடங்க மறைந்திருந்த பல தகவல்கள் மக்களைச் சென்றடைந்தன. அதிலும் முக்கியமாக, நியோநாசி என்று அழைக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்கும் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்புக்குமான தொடர்புகளை அவர் வெளிச்சம்போட்டுக் காட்ட, அது பொலிஸ் துறைக்கு ஒரு சவாலாகப் போய்விட்டது. அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்கு பாராளுமன்றத்தில், சட்டம், பாதுகாப்பு, ஒழுங்கு பற்றி விவாதத்தைத் தொடங்கிவிட்டனர்.

04.11.2011 இல் Mundlos, Boehnhardt ஆகிய இரு யேர்மனியர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்யும் முன் Eisenach என்ற நகரத்தில் உள்ள வங்கியில் 70,000 யூரோக்களைக் கொள்ளை அடித்திருந்தார்கள். பொலிஸார் Eisenach நகரத்தைச் சுற்றிவளைத்து கொள்ளையர்களைத் தேடத் தொடங்கினார்கள். அநாதையாக நின்ற வெள்ளை நிற கரவன் வாகனம் ஒன்றை பொலிஸ் நெருங்கும் பொழுது, அதற்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. தொடர்ந்து கரும்புகையுடன் வாகனம் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைத்து பொலிஸ் வாகனத்துக்குள் நுளைந்த பொழுது வாகனத்துக்குள் Mundlos, Boehnhardt இருவரும் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு இறந்திருந்தார்கள். இறப்பதற்கு முன்னால் வாகனத்தை உள்ளிருந்தே அவர்கள் தீயிட்டு இருந்தது புலனாய்வில் தெரிய வந்தது. வாகனத்துக்குள் இருந்து 110,000 யூரோக்கள், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், கைல்புறோன் நகர பொலிஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். இதேநாள் மாலை 3மணிக்கு Weissenborn என்ற நகரத்தில் ஒரு வீடு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த வீட்டில்தான் தற்கொலை செய்து கொண்ட Mundlos, Boehnhardt இருவரும்  வாழ்ந்து வந்தார்கள் என்பது பொலிசுக்குத் தெரிய வந்தது. இவர்களுடன் வாழ்ந்து வந்த இன்னும்  ஒருவரான Beate Zschaepe என்ற பெண்ணே குண்டு வைத்து வீட்டைத் தகர்த்து விட்டுத் தப்பி ஒடியதும் தெரிய வந்தது.

பின்னர் அவரை பொலிஸ் கைது செய்தது. இதன் பின்னர் பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. வெளிநாட்டவர்களின் கொலைகளைச் செய்தவர்கள் இவர்கள்தான் என்றும், 14 தடவைகள் வங்கிகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில்தான் தங்கள் செலவுகளைப் பார்த்துக் கொண்டார்கள் என்றும் தற்கொலை செய்த ஆண்களுடன் செயற்பட்ட ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறோம் என்றும் பொலிஸ் அறிக்கையை வெளியிட்டது.

'சரி. அப்படியாயின் கைல்புறோன் நகரத்தில் பெண் பொலிஸை ஏன் கொன்றார்கள்? பொலிஸ் துறைக்குள்ளும் நியோநாசியா?' என்ற கேள்விகளை ஊடகங்கள் கேட்கத் தொடங்கின. இவை சம்பந்தமாகப் பல கட்டுரைகளை அவை எழுதத் தொடங்கின.

வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர்

பல கேள்விகளுக்குப் பதில்கள் இன்னும் தெளிவாக இல்லை. நியோநாசி என்ற இனவாத அமைப்பு தேசிய சோசலிய திரைமறைவு அமைப்பாக (Nationalsozialistischer Untergrund (NSU)) தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செய்த குற்றச்செயல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் போன்ற பல விடயங்களைத் திரட்டி யேர்மனியில் பத்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய ´என்எஸ்யு வின் இரகசிய விடயங்கள் (Geheimsache NSU) என்ற புத்தகம் மே 26 இல் வெளிவந்துள்ளது.

இந்தப் பத்து எழுத்தாளர்களில் ஒருவராகத் துமிலன் இருக்கின்றார். தமிழரான இவர் 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். இன்று யேர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும், எடிட்டராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் பல சிக்கலான பிரச்சனைகளையும் ஆபத்து நிறைந்த விடயங்களையுமே தொட்டு நிற்கின்றன.

துமிலன், தேசிய சோசலிய அமைப்பின் திரைமறைவுச் சம்பவங்களைப் பத்திரிகையில் வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர்களில் முதன்மையாக இருக்கிறார். அவர்கள் சம்பந்தமான விடயங்களைச் சேகரிப்பதற்காக பல ஆபத்து நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.

இன்றும் என்எஸ்யூ வின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், என்எஸ்யூ விற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வர இருந்த ஒருவர் வழக்குக்கு முதல் நாள் மர்மமான முறையில் இறந்திருந்தார். இந்த சம்பவம் இன்னமும் நாங்கள் இருக்கிறோம் என்று அவர்கள் கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

துமிலன் ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய மொழியில் நூல் வெளியிடுவதில் பெருமை இருக்கிறது. அதை விட வெளிநாட்டவர்களையே கொலை செய்யும் ஒரு நியோநாசி அமைப்பைப் பற்றியும் அவர்களின் திரைமறைவுச் செயற்பாடுகளையும் எழுதும் ஒரு வெளிநாட்டவர் என்றளவில் மிகப் பெருமையாக இருக்கிறது.

6/4/2014 12:51:08 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்