Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜெனிவா: சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானமா? சிறிலங்கா மீதான தீர்மானமா?

ஜெனிவா: சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானமா? சிறிலங்கா மீதான தீர்மானமா?
தாமரை காருண்யன்

 

மனம்திறந்து பேசுவோமே – 5

ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 வது அமர்வில் சிறிலங்கா மீதான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருதற்காக அமெரிக்கா வெளியிட்ட பிரேரணை நகல் தொடர்பான வாதப் – பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் முக்கிய இடத்தினைப் பிடித்து வருகின்றன.

அமெரிக்காவின் இந்த தீர்மான நகலை 'சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்' என்றே பல தமிழ் ஊடகங்கள், குறிப்பாக இணையப்பரப்பு ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. இதேவேளை சில ஊடகங்களில் இந்தத் தீர்மானம் சிறிலங்காவினைக் காப்பாற்றும் தீர்மானம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானமானது மாற்றங்களின்றியோ அல்லது சில மாற்றங்களுடனோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள இத்தீர்மான நகல் சிறிலங்காவுக்கு எதிரானதா? அல்லது சிறிலங்காவுக்கு ஆதரவானதா? அல்லது இதனை சிறிலங்கா மீதான தீர்மானம் என்று குறிப்பிடுதல் கூடுதல் பொருத்தப்பாடுடையதா?

வார்த்தைகள் அப்பாவித்தனமானவை அல்ல (words are not innocent) என்ற ஒரு கருத்தும் உண்டு. இது பயன்படுத்தப்படும் வார்த்தைகள் தொடர்பான ஒரு விமர்சனப் பார்வையினை முன்வைக்கிறது.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் - இன்னும் தெளிவாகச் சொன்னால் நாம் பேசுவதற்கு – எழுதுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மால் தெரிவு செய்யப்படும் வார்த்தைகளே. இதனால் நாம் ஏன் இவற்றைத் தெரிவு செய்கிறோம் என்ற நோக்கம் வார்த்தைகளுக்குள் உண்டு என்பதனை சுட்டிக் காட்டும் வகையில் இக் கருத்து அமைகிறது.

இந்த அடிப்படையில் சிறிலங்காவுக்கு 'எதிரான' 'ஆதரவான' 'மீதான' என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குள் ஒவ்வொரு வகையான அரசியல் புரிதல் உள்ளது.

ஜெனிவா: சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானமா? சிறிலங்கா மீதான தீர்மானமா?

இப் புரிதலுடன் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா எதற்காக இத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறது? தமிழ் மக்களுக்கு உதவுதற்காகவா? அல்லது சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவுவதற்காகவா? இத் தீர்மானம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானமாகப் பார்க்கப்படுவதற்கான காரணங்கள் எவை? ஆதரவாகப் பார்க்கப்படுவதற்கான காரணங்கள் எவை?

ஜெனிவாவில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான நகலை தனக்கு எதிரானதாக சிறிலங்கா எடுத்தக் கொள்வதே இத் தீர்மானம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானமாகப் பார்க்கப்படுவதற்கான அடித்தளத்தைக் கொடுக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பும் இத் தீர்மானத்தை சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானமாகப் பார்க்க வைக்கிறது.

இத் தீர்மான நகல், சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பெயரில் வெளிக்கொணரப்பட்ட LLRC அறிக்கையினை தனது ஆதாரமாகக் கொள்கிறது.  இவ் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடிய நடவடிக்கைளை அமுல்படுத்தக் கோருகிறது.

இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டப் போர் நடவடிக்கைகளில் இடம்பெற்ற அனைத்துலகச் சட்டங்களுக்குப் புறம்பான மீறல்கள் தொடர்பான மேலதிக விசாரணைக்கான நடவடிக்கைகளை சிறிலங்காவிடம் கோரி நிற்கிறது. இதற்கு உறுதுணையான பங்களிப்பை வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோருகிறது.

பொதுவான பார்வையில் இத் தீர்மான நகல் சிறிலங்கா மீதான ஒரு தீர்மானமாகவே இருக்கிறது. அனைத்துலக அரங்கில் தற்போது போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கு இருக்கக்கூடிய சங்கடங்களை அகற்றுவதற்கு வழிவகை செய்யுக்கூடிய ஒரு தீர்மானமாகவும் இது தெரிகிறது. இந்த வகையில் இது சிறிலங்காவுக்கு உதவக்கூடிய ஒரு தீர்மானமாகவும் அர்த்தம் கொள்ளப்படலாம்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இத் தீர்மானத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கிறது. சிறிலங்கா அரசாங்கம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது?

சிறிலங்காவைப் பொறுத்தவரை நடைபெற்று முடிந்த போர் நடவடிக்கைகளை – போர்க்குற்றங்கள் - இனஅழிப்பு போன்ற எத்தகைய குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்துவிட்டு - மூடி மறைத்து விட்டு - அடுத்த கட்டம் நோக்கி நகரவே விரும்புகிறது.

'முடிந்தவை முடிந்து விட்டது, அவற்றை விட்டு விடுவோம். இனி நடக்க வேண்டியவற்றைப் பார்த்துக் கொள்வோம்' என்பதே சிறிலங்கா அரசாங்கம் தற்போது முன்வைக்கும் அணுகுமுறையாக உள்ளது.

வன்னியில், இறுதிக் கட்டப் போர் நடவடிக்கைளை 'மனிதாபிமான நடவடிக்கை'யாகச் (Humanitarian Operation) சிறிலங்கா அரசாங்கம் வர்ணித்திருந்தது. முன்னரைப்போல இராணுவப் பெயர்கள் எதுவும் பெரும் இராணுவ நடவடிக்கையான இதற்கு சூட்டப்படவில்லை. இது ஜனாதிபதி மகிந்தரின் ஆலோசனையின் பேரில்தான் மேற்கொள்ளப்பட்டது என சிறிலங்காவால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இம் 'மனிதாபிமான நடவடிக்கை' என்ற பதாகையின் கீழேதான் பெரும் தமிழனஅழிப்பு நடாத்தப்பட்டது.

சிறிலங்கா அரசு மேற்கொண்ட இந்த இனப்படுகொலை அமெரிக்கா உட்பட அனைத்துலக அரசுகளுக்கு இது நடைபெறும் வேளையில் தெரிந்திராத ஒன்றல்ல. இப் பெரும் இனப்படுகொலை தொடர்பான தகவல்களை நன்கு தெரிந்திருந்தும் இதனை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான உருப்படியான காரியங்கள் எதனையும் இந்த அரசுகள் மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் இந் நாடுகளின் நலன்களுடன் தொடர்புபட்டு இருந்தன. இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டம் அற்ற, நாடு பிரியாத வகையிலான ஒரு தீர்வுடன் இலங்கையின் தேசியப் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்பதே இந் நாடுகளின் முடிவு. இதனையே தமது நலன்களுடன் ஒத்துப்போகும் செயல்முறையாக இந் நாடுகள் கருதின.

2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் உறுதுணையாக இருந்தமை ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, தமிழீழத்துக்கு மாற்றாக நாடு பிரியாத ஒரு தீர்வினை அமைதி வழியில் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சிதான்.

இதற்காகத்தான் நோர்வேக்கு சமாதானத் தூதுவர் பாத்திரம் வழங்கப்பட்டது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தெரியாத ஒரு விடயம் அல்ல.

இவ்வாறு தெரிந்திருந்தும் தத்தமது வேறுபட்ட நோக்கங்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பும் சிறிலங்கா அரசாங்கமும் நோர்வேயின் சமாதானத் தூதர் பாத்திரத்தை வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.

சமாதான காலத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரவோ அல்லது தமிழீழம் என்ற தனது இலக்கினை அடைந்து கொள்ளுவதற்கான வழிமுறையாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தினைக் கைவிடுவதற்கோ தயாராக இல்லை என்பதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தீர்மானகரமாக உணர்ந்து கொண்டது.

இதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவரீதியில் முழுமையாக அழிக்கப்படுவதற்கு பச்சைக்கொடியினை மேற்குலகம் காட்டியது. இதற்குத் தேவையான உதவிகளையும் வழங்கியது.

மேற்குலகம் இம் முடிவுக்கு வரும்போது இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாதம் நிறுவனமயப்படடு இறுகிப்போய் இருப்பதனையும் சிறிலங்காவில் அரசு என்பது இப் பேரினவாதப் பூதத்துக்கு சேவகம் செய்யும் நிறுவனமாக உள்ளது என்பதனையும் பொருட்படுத்தவில்லை.

இத்தகைய ஒரு நிலையில், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை என்பது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மேற்குலக நாடுகளும் உறுதியாக இருந்தன.

இதனால் இறுதிப் போர்க்காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட எந்தவொரு போர்நிறுத்த முன்னெடுப்பும் விடுதலைப்புலிகளின் சரணாகதியினைக் கோருபவையாக இருந்தன.

நான் முன்னர் பொங்குதமிழில் எழுதிய 'ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?' என்ற தொடரில் மேற்குலக இராஜதந்திரி ஒருவர் இறுதிப் போர்க்காலகட்டத்தில் குறிப்பிட்ட கருத்து ஒன்றினைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

'மகிந்தரின் அரசாங்கம் மேற்குலகம் விரும்பும் தாராளவாத அணுகுமுறைனைப் பின்பற்றுவதாக இல்லையே. பின்னர் எதற்காக மேற்குலகம் இப் போரில் சிறிலங்கா அரசினை ஆதரிக்கிறது என்ற ஒரு கேள்வி ஒரு மேற்குலக இராஜதந்திரியிடம் தனிப்பட்டமுறையில் கேட்கப்பட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தாராம்.

'பிரபாகரனை மகிந்தர் இப்போது பார்க்கட்டும். நாம் மகிந்தரைப் பின்னர் பார்த்துக் கொள்வோம்'.

இக் கூற்று மேற்குலகத்தின் இறுதிப் போர்க்காலகட்டத்து நடவடிக்கைகளை புரிந்துகொள்ள மட்டுமன்றி தற்போதய ஜெனிவாவினையும் நாம் புரிந்து கொள்வதற்கு உதவக் கூடியது.

பெரும் தொகையில் மக்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகள் தமிழீழத்தையும் ஆயுதங்களையும் கைவிட்டு சரணாகதியடைய வேண்டும், அல்லது அழிக்கப்பட வேண்டும் என்ற மேற்குலகத்தின் நிலைப்பாட்டை சிறிலங்கா போர்க்காலகட்டத்தில் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது.

'நீங்களும் ஆதரித்த போர்தானே. இப்போது எதற்காக வரிந்து கட்டிக்கொண்டு போர்க்குற்றம் பற்றிப் பேச வருகிறீர்கள்' என்ற கோபம்கூட அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் மீது சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு வரலாம்.

இவற்றுக்கெல்லாம் மேலாக போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை எதனையும் தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தால் செய்யமுடியாது. கீழ்மட்ட இராணுவ அதிகாரிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளக்கூடிய வகையில் போர்நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

போர் நடாத்தப்பட்ட முறை மகிந்தரும் கோத்தபாயாவும் இணைந்து போட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஆதாரங்களும் பல இரண்டாம் மூன்றாம் மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உள்ளன.

இதனால் போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்குலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய எத்தகைய உள்ளூர் விசாரணைகளும் தமக்கு நெருக்கடியினை உருவாக்கும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு நன்கு தெரியும்.

மேலும் சரத் பொன்சேகாவினை மகிந்தர் கையாள்கின்ற முறையும் இராணுவத்தினரின் ஒரு சாராரிடம் அதிருப்தியினைத் தோற்றுவித்திருக்கிறது. அந்தச் சாராரும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் மகிந்தருக்கு எதிராகச் செயற்படுக்கூடிய நிலைமைகளும் உள்ளன.

எனவேதான் போர்க்குற்றங்கள் தொடர்பான கண்துடைப்பு உள்நாட்டு விசாரணையினைக்கூட செய்வதற்கு மகிந்தர் தயாராக இல்லை. இதனால் அமெரிக்காவின் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் பிரச்சினையாகவே நோக்குகிறது. இத்தகைய ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேறாமல் தடுப்பதற்கு பகிரத முயற்சி எடுக்கிறது.

சிறிலங்காவின் நிலைப்பாடு இப்படியாக இருக்க, அமெரிக்காவின் தீர்மானம் அனைத்துலக விசாரணைகளை நிராகரிக்கிறது – ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசம் என்ற நிலையில் இருந்து இந்தத் தீர்மானம் அணுகவில்லை –கண்துடைப்புக்காக சிறிலங்கா அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட LLRC அறிக்கையினை தீர்மானம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது – எதிர்காலத்தில் ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு அமெரிக்கா தடையாக இருக்கும் என்பதனை இத் தீர்மானம் கோடிட்டுக் காட்டுகிறது – போன்ற மாற்றுக் கருத்துக்களும் இத் தீர்மானம் தொடர்பாக எழுகின்றன.

இக் காரணங்களால், இத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு சார்பானது அல்ல. சிறிலங்கா அரசினைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியே என்ற கருத்து தமிழ்த் தேசியர்களிலும் மகிந்தர் ஆட்சியினை நிராகரிக்கும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை ஆதரிக்கும் சிங்கள முற்போக்காளர்களாலும் முன்வைக்கப்படுகிறது.

ஈழத் தமிழர் தேசிய நலன் என்ற நோக்குநிலையில் இருந்து பார்க்கும்போது இக் கருத்துக்களில் உள்ள தர்க்கமும் நியாயமும் புரிந்து கொள்ளப்படக்கூடியது.

மேலும் நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் நோக்கமும் அளவும் நீதியின் அடிப்படையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினைக் கோரி நிற்பவை.

சிறிலங்கா புரிந்த இனப்படுகொலையினை சிறிலங்காவினைக் கொண்டே விசாரிக்கக் கோருவது கொலையாளியே தனது கொலைதொடர்பான வழக்கில் நீதிபதியாக இருப்பதற்கு ஒப்பானது.

இவற்றையெல்லாம் இத் தீர்மான நகல் கவனத்திற் கொள்ளவில்லை. இவ் விடயம் தொடர்பான கசப்பான நடைமுறை உண்மை ஒன்று உள்ளதனை நாம் இங்கு கவனத்திற் கொண்டேயாக வேண்டும்.

உண்மையில் ஜெனிவாவில் நடைபெறுவது அரசுகளின் விளையாட்டு. அரசுகள் தமது நலக்களுக்கு ஏற்ற வகையில்தான் இவ் விளையாட்டின் விதிமுறைகளை அமைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும்தான் அதன் தீர்மானகரமான பகுதி.

அரசுகளின் தீரமானம் எடுக்கும் நடைமுறையில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சக்தியாக ஈழத் தமிழர் தேசம் தற்போதய நிலையில் இல்லை.

இந்திய அரசு தீர்மானம் எடுக்கும் நடைமுறையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஆற்றல் தமிழகத்துக்கு உண்டு.

ஆனால் இந்திய மத்திய அரசின் வெவ்வேறு அலகுகள் தமிழகத்தின் முக்கிய கட்சிகளை வெவ்வேறு முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள்ளோ அல்லது செல்வாக்குக்குள்ளோ வைத்திருப்பதால் இந்திய மத்திய அரசின் முடிவுகளுடன் ஒத்தோடும் களமாகத்தான் தமிழகம் இருக்கிறது.

அளவுகள் வேறுபட்டாலும் தமிழகத்தின் ஆளும் கட்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய மத்திய அரசினை மீறிச் செயற்படமுடியாத வகையிலான ஒரு அரசியல் ஒழுங்கு அங்கு உள்ளது.

இத்தகைய ஒரு சூழலில் ஜெனிவாவில் ஈழத் தமிழ் தேசத்தின் செல்வாக்கு என்பது மிக மிகக் குறைவானதே. நமது விருப்பத்துக்கு ஏற்ற முறையில் அரசுகளின் தீர்மானங்களை அமைத்துக் கொள்வதும் நடைமுறையில் மிகுந்த சவால் மிக்கதே.

ஜெனிவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளும் வெளியும் ஒலிக்கும் நமது குரல்கள் நியாயம் கோரும் குரல்களாக இருக்கின்றன. இவ்வாறு இருத்தலும் அவசியம். ஆனால் நமது குரல்களுக்கு அரசுகள் செவிசாய்க்கும் நிலை தற்போது இல்லை. இதனால் நாம் நீதியின் அடிப்படையில் இயங்கக்கூடிய அனைத்துலக சிவில் சமூகத்தினை நோக்கி நமது பார்வையினைத் திருப்புவது மிகவும் அவசியம்.

இலங்கைத்தீவில் சீனாவின் படர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாகவே அமெரிக்கா கருதவது போல் தெரிகிறது. இதனால்தான் சிறிலங்காவினை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பினை அமெரிக்கா தனது கையில் எடுத்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் அமெரிக்கா தானே முன்னின்று செயற்படுத்தும் இந்தத் தீர்மானம்.

இதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துக்கு சிறிலங்கா ஒரு நட்பு அரசு என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். மேற்குலகத்தின் முரண்பாடு தற்போதய மகிந்த அரசாங்கத்துடன்தான். மகிந்தர் அரசாங்கம் தனது வழிக்கு வரவேண்டும். அல்லது காலப்போக்கில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். அது தான் அமெரிக்காவின் தந்திரோபாயம்.

மகிந்தர் தான் இன்னொரு ஆட்சிக்காலத்தையும் அதன் பின்னர் தனது மகனை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் எண்ணத்திலும் உள்ளார்.

இதனால் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான இத் தீர்மானத்தை அமெரிக்கா – இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடாகத்தான் மக்கள் மத்தியில் விதைப்பார். தனக்கு மக்கள் ஆதரவு இருக்கும் வரைக்கும் - தன்னிடமோ அல்லது தனது மகனிடமோ ஆட்சி இருக்கும்வரை தம்மையும் தமது குடும்பத்தினரையும் எவரும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியாது என்றே நம்புவார்.

இதனால் சிறிலங்காவில் அமெரிக்க – இந்திய எதிர்ப்பு சிங்கள மக்கள் மத்தியில் வலுவடையக் கூடிய நிலமைகள் தோற்றம் பெறும் சூழல் உள்ளது. இது சீனாவின் கையினை சிறிலங்காவில் மேலும் பலப்படுத்தக்கூடும். இந்நிலைமை ஏற்படுத்தும் முரண்பாட்டின் தர்க்கரீதியான வளர்ச்சியில் ஈழத் தமிழர் தேசத்துக்கான வாய்ப்புக்கள் உருவாகவும் கூடும்.

ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்துகட்ட வரலாற்றில் உரிய தருணத்துக்காகக் காத்திருத்தலும் முக்கியமானது.

3/21/2012 1:32:28 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்