Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஆரண்ய காண்டம் - ஓர் அற்புதமான தமிழ் சினிமா

ஆரண்ய காண்டம் - ஓர் அற்புதமான தமிழ் சினிமா
இரவி பரமேஸ்வரி

 

தமிழ் சினிமாவை உள்ளும் புறமும் கொண்டு அலைந்து திரிகின்ற ஒருவன் ஆரண்ய காண்டம் திரைப்படம் பற்றி ஒரு குறிப்பும் எழுதாவிட்டால் அது கடும் குற்றம். தமிழ்ச்சினிமா இப்பொழுது நிறைய உன்னதங்களைக் கண்டுகொண்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் பட்டியல் இடுவது எனக்கு உவப்பான விடயம் இல்லாவிட்டாலும் இதில் பட்டியலிட வேண்டும். பிதாமகன் பாலா, புதுப்பேட்டை செல்வராகவன், சித்திரம் பேசுதடி மிஷ்கின், பருத்தவீரன் அமீர், காதல் பாலாஜி சக்திவேல், வெயில் வசந்தபாலன், சுப்ரமணியபுரம் சசிகுமார், வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன், பசங்க பாண்டிராஜ், ஆடுகளம் வெற்றிமாறன், மைனா பிரபு சாலமன், தென்மேற்குப் பருவக்காற்று சீனு ராமசாமி இன்னவை பிற

இப்பட்டியலில் உள்ள திரைப்படங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு ஆரண்யகாண்டம் திரைப்படத்திற்கு உண்டு. இப்பட்டியலுக்குள் வராது மேலே முனைப்பட்டு அல்லது துருத்திக்கொண்டிருக்கிறது ஆரண்ய காண்டம்.

சுமார் பத்து மாதங்களுக்கு முன் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு ஏன் காலம் கடந்த குறிப்பு என்ற கேள்வி எழலாம். இது காலம் கடந்த திரைப்படம். எனவே காலம் கடந்த குறிப்பு பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்பது வெறும் சமாளிப்பு வாக்கியம் அல்ல. அது உண்மையும் கூட. ஆனால் காலம் கடந்தமைக்கு முக்கிய காரணம் நான் இல்லை. தமிழ்சினிமாவைப் பொறுத்து இலண்டன் பெருநகரத்தின் வறுமை. நான் பட்டியலிட்டவற்றில் இலண்டன் திரையரங்கில் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தையே பார்த்தேன். ஏனைய அனைத்தும் டிவிடிக்களில் பார்த்தவையே.

ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு என்ன நடந்ததென்றால் அது டிவிடியில் கூட இலண்டனுக்கு வரவில்லை. நான் ஒவ்வொரு கிழமையும் டிவிடிக் கடைக்குச் சென்று தேடினேன். என் ஆய்க்கினை தாங்காது இறுதியில் எங்கிருந்தோ பெற்று கமெராக்கொப்பி ஒன்றைத் தந்தார் கடைக்காரர். அதனால் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் முழுவீச்சையும் தரிசிக்க முடியவில்லை.

ஆனால் அதுவே எனக்குப் போதிய திருப்தியைத் தந்து விட்டது. நான் எதிர்பார்த்ததைக் கண்டடைந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று அதைச் சொல்லலாம். பொதுவாக நல்ல சினிமாவைப் பார்க்க நான் விரும்பினால் செய்வது இதுதான். அது கட்டாயம் சனிக்கிழமை இரவாக இருக்கும். மனைவியுடனும் இரண்டு மகன்மாருடனும் அமர்வேன். தொலைபேசி விளக்குகள் யாவும் அணைக்கப்படும். தொலைக்காட்சியின் அகன்ற திரையின் அளவு ஐம்பது அங்குலம். மிகத் துல்லியமான சினிமா மண்டபத்திற்கு உரிய ஒலியமைப்பை மகன்மார் செய்திருக்கின்றனர். திரைப்படம் தொடங்கியபிறகு வேறெதிலும் என் புலன் செல்லாது.

திரைப்படம் முடிந்த பிறகு எங்களிடையே கருத்துக்கள் பரிமாறப்படும். பல உலகத்தரமான சினிமாக்களைப் பார்த்த என் மைந்தர்களுக்கு என் இரசவாதத்துடன் ஒத்துப்போவது கடினமாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒத்த ரசனையே உண்டு. ஏனைய பிறவற்றிலிருந்து ஆரண்ய காண்டம் அவர்களுக்கு மிக மிக வியப்பளித்த திரைப்படம்.

தியாகராஜன் குமாரராஜா என்ற தமிழன் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் இது. அப்படியா தெரிகிறது இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது. யுவன்சங்கர் ராஜா இதற்குப் பின்னணி இசை. இத்திரைப்படத்தில் பாடல் ஏதுமில்லை. அதனால் பின்னணி இசை என்று குறிப்பிட்டேன். உண்மையில் இதுவேதான் அற்புதமான பின்னணி இசை. அதுபற்றி பிறகு பேசுவோம். ஆரண்ய காண்டத்தின் ஒளிப்பதிவை செதுக்கியிருப்பவர் பி.எஸ் வினோத். ஒளிப்பதிவு ஓவியராக மிளிர்ந்ததையும் பிறகு பேசுவோம். இதன் திரைக்கதை வசனங்கள் யாவும் குமாரராஜாவினுடையது.

இத்திரைப்படம் ஒருநாளில் நிகழ்கின்ற கதை. நகரத்தில் வாழ்கின்ற விளிம்புநிலை மாந்தர்கள் இதில் உலாவுகின்றார்கள். புதுப்பேட்டை திரைப்படமும் விளிம்புநிலை மாந்தர்களின் கதைதான். ஆயினும் அது நாயகன் தனுஷை சுற்றியே பின்னப்படுகின்றது. ஆரண்ய காண்டம் அப்படியல்ல. சம்பவங்களே அதன் நாயகர்கள். உண்மையில் அது தமிழ் திரைக்கு மிக மிகப் புதுசு. நாயகன் நாயகி என்றே தமிழ்த்திரை தன் கதையைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதை மீறிய முதல் தமிழ்திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படி பல முதல்களை ஆரண்ய காண்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆரண்ய காண்டம் - ஓர் அற்புதமான தமிழ் சினிமா

ஜாக்கி ஷெரப் - சிங்கப்பெருமாள், சம்பந்தராஜ் - பசுபதி, யாசின் பொன்னப்பா - சுப்பு, ரவி கிருஷ்ணா - சப்பை, சோமசுந்தரம் - காளையன், வசந்த் - சிறுவன் கொடுக்குப் புளி ஆகியோரே திரை சுமந்த முக்கிய நாயகர்கள். தனது வைப்பாட்டியை படுக்கையில் திருப்திப்படுத்த முடியாதவன் சிங்கப் பெருமாள். இவ்வாறு நடிக்க தமிழ் நடிகர்கள் எவரும் தயாராக இல்லை. எனவே இந்தியில் புகழ்பெற்ற ஜாக்கி ஷெரப் என்ற நடிகர் அப்பாத்திரத்தை ஏற்றார். எனது மேலான ஆச்சரியம் என்னவென்றால் சப்பையாக நடித்த ரவி கிருஷ்ணாவையிட்டே. இவரது முதல் திரைப்படம் 7 ரெயின்போ காலனி. அதில் இவரே நாயகன். தொடர்ந்து பொன்னியின் செல்வன், கேடி என்ற திரைப்படங்களிலும் நாயகனாகத் தோன்றியவர். ஆரண்ய காண்டத்தில் பெண்மை போன்ற நளினம் மினுங்க நடை உடை பாவனைகளில் அப்படியே பெண்ணாகத் தோன்ற ஓர் அனாயசமான நடிப்பு ரவி கிருஷ்ணாவுக்கு வருகிறது. ரவி கிருஷ்ணாதான் சப்பை என்று என்னால் நம்பவே முடியாதிருந்தது.

இதன் கதை என்ன என்று சொல்வதிலும் ஒரு தேவை இருக்கிறது. பொதுவில் சினிமா பற்றிய குறிப்பு எழுதுகிற போது அதன் கதை சொல்ல உடன்பட்டவன் அல்லன். கதை என்று எதைச் சொல்ல. ஒற்றை வரியில் சொல்வது கதையும் ஆகாது. சினிமா யாவற்றிலும் மேலாக ஒரு கலை. கதையைச் சொல்லி அதனைக் கடந்துவிட முடியாது. பாட்டுப் புத்தகங்களே கதைச்சுருக்கத்தினை வேண்டி நிற்கின்றன.

இங்கு கதை சொல்வதற்கு தேவையான காரணங்கள் இரண்டு. ஒன்று திரைப்படத்தின் உயிர் நாடி திரைக்கதை என்று சொல்வேன். ஆரண்யகாண்டம் திரைப்படத்தின் திரைக்கதை சொல்லும் தரமன்று. மையம் அங்கிங்கென ஊர்ந்து போகாத, சிதையாத ஒரு பிரதி. அவ்வகையில் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படத்திற்குப் பிறகு மையம் சிதையாத பிரதி என்று ஆரண்ய காண்டம் திரைப்பட திரைக்கதைப் பிரதியைக் கூறுவேன். பருத்திவீரன், சுப்ரமணியபுரம், மைனா ஆகிய திரைக்கதைப் பிரதிகளும் அப்படி வைத்து எண்ணத்தக்கவைதாம். என்றாலும் ஆரண்ய காண்டம் திரைக்கதைப்பிரதி ஒரு படி மேலேதான் நிற்கிறது.

இரண்டாவது காரணம் இதன் கதை சொல்லப்படவேண்டிய ஒன்று. இதனை வாசிக்கின்ற யாவரும் திரையில் இத்திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. யாரும் கதைகேட்டு சினிமா சுவைப்பின் ஊறு நேரவும் சந்தர்ப்பம் இல்லை. சரியா இனிக் கதை சொல்கின்றேன்.

சிங்கப்பெருமாள் ஒரு தாதா. பசுபதி அவன் கையாள். சிங்கப்பெருமானின் வைப்பாட்டி சுப்பு. சிங்கப் பெருமாளும் அவன் ஏவலர்களும் சொல்கிற தொட்டாட்டு வேலைகளைச் செய்பவன் சப்பை. கஜேந்திரன் இன்னொரு தாதா. கஜேந்திரனுக்கு சேரவேண்டிய ஐம்பது இலட்சம் பெறுமதியான சரக்கை தாம் மடக்கினால் என்ன என்பது பசுபதியின் எண்ணம். அது ஆபத்து என்று தெரிகிறது சிங்கப்பெருமாளுக்கு. இந்த இடத்தில் சிங்கப்பெருமாளின் வயதையும் பலவீனத்தையும் குத்தி விடுகிறான் பசுபதி. இது சிங்கப்பெருமாளின் ஈகோவினை பெரும் காயப்படுத்தி விடவும் பசுபதியைத் தீர்த்துக்கட்ட தன் ஏவலர்களுக்கு உத்தரவிடுகிறான் சிங்கப்பெருமாள்.

இவ்வேளையில் முன்னாள் ஜமீன்தார், இப்போது ஒட்டாண்டியாகத் திரிகிற காளையனிடமும் அவன் மகன் கொடுக்காப்புளியிடமும் அந்த ஐம்பது இலட்சம் பெறுமதியான சரக்கு எப்படியோ வந்து விடுகிறது. இவர்களுக்கு அதன் பெறுமதி தெரியாது. ஆனால் பெரும் பொருள் என்று தெரிகிறது. அந்தச் சரக்கு பசுபதியிடம் அகப்பட்டு விட்டது என்று கஜேந்திரன் நினைக்கிறான். அதனால் கஜேந்திரன் குழு பசுபதியைத் துரத்துகிறது. அதே சமயம் பசுபதியைக் கொல்வதற்காக சிங்கப்பெருமாளின் ஆட்களும் துரத்துகிறார்கள். மீதி என்ன.. வெண்திரையில் காண்க என்றுதான் பாட்டுப் புத்தகம் சொல்லும்.

உண்மையில் நான் சொன்னது கதை அல்ல. அது அனுபவித்து உணரப்படவேண்டியது. என்றாலும் சின்னக் கோடு ஒன்றை இழுத்து விட்டேன். ஆனால் குமாரராஜா திரையில் ஒரு மாயம் செய்து விட்டிருந்தார். சடசடவென்று கோடுகள் அங்கும் இங்கும் இழுபடுகின்றன. வளையம் இடப்படுகின்றது. வட்டங்கள் உருக்கொள்கின்றன. வண்ணங்கள் திரள்கின்றன. சில கணங்களில் நம்கண்முன்னே அற்புத ஓவியம் உருவாகும். அதைத்தான் அல்லது அப்படித்தான் செய்திருந்தார் குமாரராஜா ஆரண்ய காண்டம் திரைப்படத்தில்..

ஒரு நல்ல இயக்குனரின் கைபட்டால் அத்தனையும் பொன்னாகும். ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. இத்திரைப்படத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களும் தமது உச்சபட்ச திறமையைக் காட்டி விட்டனர்.

ஒரு திரைப்பட பின்னணி இசையில் உச்சத்தைத் தொடுபவர் இளையராஜா என்பது எழுதப்படாத விதி. சிறைச்சாலையில் தொடங்கி பிதாமகன், நந்தலாலா ஈறாக இளையராஜாவின் பின்னணி இசையை கண்மூடி காதுகுளிரக் கேட்கலாம். அவரது இசையே ஒரு மந்திரம் சொல்லி காட்சிகளை எம்முன்னே விரித்துச் செல்லும். பிதாமகன் திரைப்படத்தை இளையராஜாவின் பின்னணி இசையை மாத்திரம் கேட்பதற்காக மூன்றாம் முறை பார்த்தேன்.

ஆரண்ய காண்டம் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா பின்னியெடுத்திருக்கிறார். ஒரு பாடல் கூட இத் திரைப்படத்தில் இல்லை. திரைப்படத்தில் பாடல் இடம்பெறுவதற்கு நான் எதிரானவன் அல்லன். பாடல்கள் யதார்த்தத்தை மீறுகின்றன என்று புறக்கணிக்கவும் தேவையில்லை. யதார்த்தம் என்று பார்த்தால் பின்னணி, இசை கமெராக் கோணங்கள் என்பனவும் யதார்த்தத்தை மீறியவையே. திரையில் காட்டப்படும் உணர்வுகள் எம் நெஞ்சை நெருங்கச் செய்யும் என்றால் அத்தகைய பாடல்கள் ஒலிப்பது தவறு அல்ல. எமது பெரும்பாலான உணர்வுகளை இசையே தீர்மானிக்கின்றது.

ஆரண்ய காண்டம் சில இடங்களில் பாடல்களை வேண்டிநிற்கிறது. அப்படிக் கூட சொல்லக்கூடாது. அந்த இடங்களில் பாடல்களை இட்டிருக்கலாம். அது பாதகமில்லை. ஆனால் குமாரராஜா அதனை நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். எனக்கென்னவோ அப்படி மறுத்தமைதான் ஆரண்யகாணடம் உலகத்தரத்தைத் தொட்டமைக்கு காரணம் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் உதிரிப்பூக்கள், திரைப்படம் என்ற வகையில் ஒப்பற்றதாக இருந்தாலும் அபசுரமாக கல்யாணம் பாரு என்றொரு பாடல்காட்சி வருகிறது. அப்பொழுதெல்லாம் மகேந்திரனையிட்டு நான் பெரும் கவலை அடைந்தேன். இப்படியொரு உன்னத திரைப்படத்தை எடுத்துவிட்டு இந்தப்பாட்டை வைத்திருக்கிறாரே என்று. குமாரராஜா அந்தக் கவலையை எனக்கு வைக்கவில்லை.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் பின்னணி இசையே எமக்கு கதைசொல்லியாக வந்தது. திரைப்படத்தின் ஓட்டத்தை இசை மீறவில்லை. வேண்டியபோதெல்லாம் மௌனத்தை மொழிந்து கொண்டிருந்தது. சுமார் இருபது பேராவது வெட்டிச் சாய்க்கப்படுகையில் கேட்ட பின்னணி இசை என்னை என்னவோ செய்தது. இதன் பின்னணி இசையை ஒரு இசைப்பேழையாக வெளியிட்டால் டைட்டானிக் இசைப் பேழைக்கு சமாந்தரமாகப் பயணிக்கும்.

ஒளிப்பதிவின் உன்னதம் பற்றிச் சொல்ல சற்றுத் தடுமாறுகிறேன். கமெராக் கொப்பி என்பதனால் ஒளிப்பதிவில் உச்ச பயனை அடைந்தேன் என்று சொல்ல முடியாதிருக்கிறது. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். பல இடங்களில் ஓவியமாகவே இருந்தது ஒளிப்பதிவு.

இப்பிரதியை நூலாக்கினால் ஓர் அற்புதமான இலக்கியம் கிடைத்து விடும். ஒரு கட்டம் வருகிறது. காளையனை மீட்டு மகன் கொடுக்காப்புளியிடம் கொடுக்கிறான் பசுபதி. அப்போது பசுபதி கேட்கிறான், உனக்கு அப்பாவைப் பிடிக்குமா. அதற்கு கொடுக்காப்புளி பதில் சொல்கிறான். அப்படி இல்லை. ஆனா அவரு எங்கப்பாவாச்சே.. இன்னொரு சமயத்தில் தன் தந்தை காளையனிடம் கேட்கிறான், ஏம்பா நீ முட்டாளா இல்லை முட்டாள் மாதிரி நடிக்கிறியா? இப்படியான இலக்கியத்தரம்மிக்க உரையாடல் படம் நெடுகலும் இறைந்து கிடக்கிறது.

இயக்கம் நடிப்பு இன்னபிற நிறையப் பேசலாம். ஆனால் ஒன்றை மாத்திரம் சொல்லி நிறைவு செய்கிறேன். ஒருபோதும் எந்த ஒரு சினிமா பற்றியும் இவ்வளவு விலாவாரியாக நான் எழுதியதில்லை. ஆனால் அப்படி எழுத வைத்திருக்கிறது ஆரண்யகாண்டம் என்ற அருமையான சினிமா. நன்றியும் மகிழ்வும் வாழ்த்தும் குமாரராஜா அவர்களுக்கு..

3/21/2012 6:32:27 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்