Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சம்பூர் அனல்மின் நிலையத்தை ஏற்க மாட்டோம்!

சம்பூர் அனல்மின் நிலையத்தை ஏற்க மாட்டோம்!
நேர்காணல்: பார்த்திபன்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான க.துரைரெட்ணசிங்கம் அவர்களை சந்தித்து திருகோணமலை மாவட்ட நிலவரம் குறித்து உரையாடினோம்.

தமிழர்களின் தலைநகரான திருமலையில் இடம்பெற்றுவரும பண்பாட்டு ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சமூகச் சீர்கேடுகள் தொடர்பான பல நுணுக்கமான தகவல்களை இச் செவ்வியில் அவர் பகிர்ந்து கொண்டார்.

தமிழரின் பாரம்பரிய நிலங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு பற்றிய ஆழமான புரிதலுக்கு இச்செவ்வி உதவும் என்றே நம்புகிறோம்.

***

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணை தொடர்பாக உங்கள் கருத்தென்ன?

சுமார் 62 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற அகிம்சைப் போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் விளைவாகவே தமிழர் பிரச்சினை இன்று சர்வதேச ரீதியில் ஓங்கி ஒலித்துள்ளது.

இன்று சர்வதேசம் தமிழர் பிரச்சினையில் தலையிட்டதை அடுத்து மஹிந்த அரசு கடுங்கோபத்தில் உள்ளது. இனப்பிரச்சினை விடயத்தில் மஹிந்த அரசு சரியான  நேர்மையான தீர்வைக் கண்டிருந்தால் சர்வதேச நெருக்குதல்களை இலங்கை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இதனால் இன்று மஹிந்த அரசு சர்வதேசத்தின் வலைக்குள் சிக்கித் தவிக்கின்றது. சர்வதேச அரங்கில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஜெனிவாப் பிரேரணையை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

கட்டாயம் இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும். இலங்கை அரசு சர்வதேசத்தின் பிடியில் இருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமெனில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உடனே நிறைவேற்றவேண்டும். இதனை அரசு ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றியே ஆகவேண்டும். அத்துடன் தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வழங்க மஹிந்த அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் அதன் விபரீதங்களை எதிர்நோக்கவேண்டி வரும்.

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்மையில் நீங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தீர்கள்... இந்நிலையில் அந்த அறிக்கைக்கு அரசு தரப்பின் பதில்தான் என்ன?

இது சம்பந்தமாக நான் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இருக்கும் அனைத்து எம்.பிக்களும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கைகளை பல தடவை விட்டிருக்கின்றோம். ஆனால், அரசிடமிருந்து சரியான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை...

தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் மட்டுமல்ல, சிறைக்கூடங்களிலும் பாதுகாப்பு இல்லை என்பதை சிறைச்சாலைகளில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் முன்பும் பல தடவைகள் நடந்திருக்கின்றன.

அதேவேளை, சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அங்கு பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சிறைச்சாலைகளில் உள்ள சிங்களக் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துகின்றனர் என எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

எனவே, விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையாவது உடன் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

திருகோணமலையின் தமிழர் வரலாற்றை வெளிப்படுத்தும் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதி நீண்டகாலமாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதனிடமிருந்து பறிக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு இன்று அப்பகுதி பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது?

கன்னியா வெந்நீர் ஊற்று மிகவும் பழைமையானது. திருக்கோணேஸ்வர ஆலய வரலாற்றோடு சம்பந்தப்பட்டது. இராவணன் தன்னுடைய தாயாரின் ஈமக்கிரியைகளைச் செய்வதற்காக கன்னியாவில் வெந்நீர் ஊற்றை நிறுவினான், உருவாக்கினான் என்பது நம்பிக்கை. இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் இறந்தவர்களுடைய அந்தியேட்டி கிரியைகளை கன்னியாவிலேயே  நிறைவேற்றி வருவதும் வழமையாக இருந்து வருகின்றது. இங்கு அமையப்பெற்ற விநாயகர் ஆலயம் மிகப் பழைமையானது.

அதுபோன்று, அங்குள்ள நடேசர் ஆலயமும் பழைமையானது. அந்தியேட்டி கிரியைகளை நிறைவேற்றுவதற்கான மண்டபம், அன்னதான மண்டபங்கள் ஆகியனவும் அமைக்கப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. வெந்நீர் ஊற்று ஆலயம் அமைந்த இடங்களும், அங்குள்ள பெருநிலப்பரப்பும் திருகோணமலை மடத்தடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானவை. அதற்கான அத்தாட்சிகளை மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா மற்றும் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரும் பாதுகாத்து வருகின்றார்கள். இந்த வரலாற்றை கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியை தரிசித்த இலங்கையிலுள்ள இந்துப் பெரியார்களும், வெளி இடங்களிலிருந்து வந்தவர்களும் நன்கு அறிவார்கள்.

இது சம்பந்தமாக பல நூல்களும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சான்று பகர்கின்றன. இந்தக் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதி நீண்டகாலமாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குத் திடீரென சென்ற திருகோணமலை அரச அதிபர் தலைமையிலான குழுவினர் அங்கு போடப்பட்டிருந்த வரலாற்றுப் பதிவுகள் அடங்கிய பெயர்ப் பலகையைப் பிடுங்கி சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரதேசசபையினால் அங்கு வாகனங்கள், கடைகளுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டை கடமையிலிருந்த ஊழியரிடமிருந்து பறித்து, கிழித்து மிக அநாகரிகமாக நடந்துகொண்டனர். அது மட்டுமல்லாமல், அந்தக் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியாகப் பிரகடனப்படுத்தி, அண்மையிலுள்ள வெல்கம் விகாரையின் நிர்வாகத்திற்குத் தற்போது ஒப்படைத்துள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு உடன் கொண்டு வந்தார். ஆனால், இவ்விடயம் சம்பந்தமாக அரசு எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

திருகோணமலைக்கு தெற்கே அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்துவாரம் என்ற பழம் பெரும் தமிழ்ப் பிரதேசம் இன்று 'லங்கா பட்டினம்' எனப் பெயர் மாற்றப்பட்டு அங்கு சமுத்திரகிரி விகாரையும் கட்டப்பட்டுள்ளதோடு சிங்கள மக்களின் இருப்பிடமாக மாற்றப்பட்டு வருகின்றது. இவ்விடயம் பற்றி உங்கள் கருத்து என்ன?

இலங்கைத் துறைமுகத்துவாரம் பழம்பெரும் தமிழ்ப் பிரதேசம். தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பிரதேசம். இந்த இடத்தில் பௌத்த ஆலயம் இருப்பதற்கும், இருந்ததிற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. இந்த நிலையில் இங்கு விகாரை கட்டப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் முருகன் ஆலயமே அமைந்திருக்கின்றது. இதற்கு அப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் முதியவர்கள் சான்று அளிப்பார்கள். இந்நிலையில் தான் நினைத்தமாதிரி நடந்துகொள்ளும் அரசு அங்கேயும் தனது அடாவடியைக் காட்டியுள்ளது.

திருகோணமலையிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலை அண்மையில் சேதமாக்கப்பட்டமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

திருகோணமலை சிவன்கோயில் வீதியில் அமைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை காடையர்களால் உடைக்கப்பட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகின்றது. அங்கு தற்காலிகமாக ஒரு சிலையை வைத்துள்ளோம். மிக விரைவில் புதிய சிலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சி எடுக்கப்படும்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சேருவில பிரதேசசபைக்கு உட்பட்ட அரியமான்கேணிப் பிரதேசத்தில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறி பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி தமிழ் மக்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தனர் என்றும், ஆனால், இதுவரை அது தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

அரியமான்கேணி, லிங்கபுரம் பகுதியில் தமிழ் மக்கள் கடந்தகால யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் குடியேறாமல் உள்ளனர். இவர்களுக்கான மீள்குடியேற்ற ஒழுங்குகளும் அரசால் செய்யப்படவில்லை. வன பரிபாலன இலாகா இப்பிரதேச வயல் காணிகள், குடியிருப்புக் காணிகள் ஆகியவற்றின் மத்தியில் எல்லைகளை அமைத்து அந்த எல்லைகளுக்குள் எவரும் செல்லக்கூடாது எனத் தடையும் விதித்துள்ளது.

இக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் குடியிருப்புக் காணிகளும், வனபரிபாலன இலாகாவுக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. இதனால் இக்காணிகளை வெட்டி, திருத்தி கஷ்டப்பட்ட மக்கள் மீள்குடியேற முடியாத நிலையும், வயல் நிலங்களை பயிர் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துக் கூறியுள்ளார். ஆனால், ஜனாதிபதி இது தொடர்பில் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில், இந்தப் பிரச்சினையை எமது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கவுள்ளனர்.

திருகோணமலைக்குத் தென்பகுதியிலிருந்து செல்லும் உல்லாசப்பயணிகளால் கலாசார சீரழிவுகள் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வருகின்றன எனவும், இதற்கு படையினரின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?

தமிழர் தலைநகரான திருகோணமலைக்குத் தென்பகுதியிலிருந்து வரும்  உல்லாசப்பயணிகளால் கலாசார சீரழிவுகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். இந்தக் கேவலமான செயல்களை அறிந்து நாம் மிகவும் கவலையடைகின்றோம்.

திருகோணமலையில் அதுவும் குறிப்பாக, கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் இந்தக் கலாசார சீர்கேடுகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன என்று நாம் அறிந்துள்ளோம். கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் உள்ள சவுக்குத் தோட்டங்களில் இவர்கள் விபசாரத்திலும் ஈடுபடுகின்றனர் என்று மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

இந்தச் சிங்கள இளைஞர், யுவதிகளுடன் படையினரும் காணப்படுகின்றனர் எனவும், எனவே, இவ்வகையான கலாசாரச் சீர்கேட்டு நடவடிக்கைகளுக்குப் படையினரின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது போலத் தெரிகின்றது எனவும் மக்கள் கூறுகின்றனர். இந்த அநாகரிக செயல்கள் குறித்து நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகரசபைத் தலைவர் சுப்ராவிடம் (செல்வராஜா) தெரியப்படுத்தியுள்ளேன்.

அவர் இதனை தமது நகரசபை உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தியுள்ளதுடன் குறித்த இடங்களில் கடும் கண்காணிப்பை சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரின் உதவியுடன் இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கையையும் திருகோணமலை நகரசபையினர் எடுக்கவுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலைக்கு வெளிநாட்டு, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனாலும், கலாசார சீரழிவுகளும் தலைதூக்கிய நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஸ்தலமாக உள்ள திருக்கோணேஸ்வர ஆலயப்பகுதியை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஆலயப்பகுதியை புனித நகரமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை சைவப் பெருமக்களாலும், தமிழ் அரசியல் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த ஆலயப்பகுதி புனித நகராக்கப்படவேண்டும். இது அனைவரினதும் எதிர்பார்ப்பு. இந்த ஆலயத்தின் புனிதத் தன்மையைக் கருத்தில்கொண்டு ஆலயப்பகுதிகளில் கலாசார சீர்கேடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஆலய பரிபாலன சபையினர் பல ஆக்க செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பூர் மக்களை சொந்த மண்ணில் மீண்டும் மீள்குடியேற்றுவது தொடர்பாக  கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

சுமார் 6 வருடங்களாக தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான பிரச்சினை ஒரு புறம் இருக்க அவர்கள் தற்போது மிகப் பெரிய அவல நிலையை சந்தித்துள்ளனர். அதாவது உலக உலர் உணவுத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்டு வந்த நிவாரணம் கடந்த ஒன்றரை மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளமையால் அம்மக்கள் பெரும் கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, சூடைக்குடா, நவரத்தினபுரம் மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கட்டைபறிச்சான், கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, சேனையூர் ஆகிய பகுதிகளிலுள்ள தற்காலிக முகாம்களில் தொழிலின்றி கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளில் குடியேறாவிட்டால் நிவாரணங்களை விநியோகிக்கக்கூடாதென கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநரும், திருகோணமலை மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தனர். இதனையடுத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயத்தை தெரியப்படுத்தியதன் விளைவாக நிவாரணம் மீண்டும் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக இம்மக்களுக்கான நிவாரணம் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனைக் கூட்டமைப்பு அரசிடம் எடுத்துச் சொல்லியும் இன்னும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்கின்றதே தவிர, நிவாரணம் இன்னும் வழங்கப்படாமையால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட நிவாரணப் பொருட்களை மக்களுக்குத் தாமதமின்றி உடன் வழங்குவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இதேவேளை, சம்பூர் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற அரசு இடமளிக்க வேண்டுமென நான் அரசிடம் கோரி பல அறிக்கைகளை அனுப்பிவைத்துள்ளேன். அத்துடன் எமது கூட்டமைப்பு உறுப்பினர்களும் இது தொடர்பாக கடந்த காலங்களில் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். ஆனால், அரசு இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அரசு அம்மக்களை குடியமர்த்துமானால் மக்கள் தாங்களே உழைத்து தமது வாழ்க்கையை நடத்துவார்கள்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஏனைய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், தாம் மீளக்குடியேற்றப்படாதமை கவலையளிக்கிறது என்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இம்மக்கள் இடம்பெயர்ந்து சுமார் 6 வருடங்களாகின்றன. எனவே, அவர்களை மீளக்குடியேற அரசு அனுமதிக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பினரின் கோரிக்கையாகும்.

இதேவேளை, நீர் வளமும், நில வளமும் கொண்ட பொன் கொழிக்கும் பூமி சம்பூர். அந்த இடம் இந்திய அரசின் அனல் மின் நிலையத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனைத் தவிர்த்து வேறு பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் அனல்மின் நிலையத்தை அமைக்கலாம். அதைவிடுத்து மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்திய அரசிடம் இதுபற்றி விளக்கமாக கூட்டமைப்பினரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை இலங்கை தமிழரசுக் கட்சியில் இளைஞர், யுவதிகளின் பங்கு மிகக் குறைவாகக் காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

திருகோணமலை மாவட்டத்தின் சகல கிராமங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செம்மையாக அவற்றின் செயற்பாடுகள் நடைபெற்றுவந்தன. இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் உச்சக்கட்டம் அடைந்தபோது  இக்கட்சியின் செயற்பாடுகள் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தான. ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னர் இம்மாவட்டத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் கிராம மட்டக் கிளைகள் புனரமைக்கப்பட்டு, கட்சியின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று பரவலாக இளைஞர்கள் மத்தியிலும், வளர்ந்தவர்கள் மத்தியிலும் ஆர்வமும் அவசிய தேவையும் இருந்தாலும் கூட இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சில காரணங்களுக்காக கட்சிக் கிளைகளைப் புனரமைப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

ஆனால், தமிழரசுக் கட்சியில் இளைஞர், யுவதிகள் இணைந்துகொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இளைஞர், யுவதிகள் இணைந்து எமது அரசியல் பலத்தை மேலோங்கச் செய்யவேண்டும். இது காலத்தின் தேவையுமாகும்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமா?

இதைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் கருத்துகளையும் அறிந்து ஒரு தீர்மானத்திற்கு வரும்.

4/8/2012 1:27:39 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்