பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து 350க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சிறைச்சாலை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே, இக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமிய தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி இச்சிறைச்சாலை மீது மேற்கொண்ட தாக்குதலின் போது தப்பிச் சென்றவர்களில் சிறைவைக்கப்பட்டிருந்த மிகவும் பயங்கரமான தீவிரவாதிகளும் அடங்குவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அச்செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இச்சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த சுமார் 1000 பேரில் 381 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். இச்சிறைச்சாலை பாகிஸ்தானில் பழங்குடிமக்கள் வாழும் பகுதியின் எல்லையை அண்மித்த பான்னு பகுதியில் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கந்தஹாரலுள்ள சிறைச்சாலையின் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது 470 கைதிகள் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.