Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அரசியல்வாதிகளிடம் மட்டும் தமிழர் அரசியலை விட்டுவிட முடியாது - சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் பேட்டி

அரசியல்வாதிகளிடம் மட்டும் தமிழர் அரசியலை விட்டுவிட முடியாது - சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் பேட்டி

 

தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லாதுவிட்டால் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் இன்றைய நிலையில் வடகிழக்கின் நிலைமைகள் தொடர்பாகவும் வீரகேசரியின் வாரவெளியீட்டுக்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவரளித்த பேட்டி வருமாறு

போருக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதியில் நல்லாட்சிக்குரிய விடயங்களான சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், சனநாயக நடைமுறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா? தற்போதைய நிலைமையினை உங்கள் பார்வையில் எவ்வாறாகப் பார்க்கின்றீர்கள்?

போருக்கு பின்னரான சூழலில் அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றினது வடிவங்கள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன. ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது அடக்குமுறை மொத்தத்தில் அதிகரித்தும் உள்ளது. போர் ஒன்று ஓய்வடைந்ததன் பின்னர் உயிர் இழப்புக்கள் குறைவடைந்துள்ளன என்ற முன்னேற்றத்தை தவிர்த்து வேறென்றையும் பெரிதாகச் சொல்வதற்கில்லை என்பதை வடக்குக் கிழக்கு நிலைமைகளை அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சர்வதேச அழுத்தங்களின் விளைவாகப் பெயருக்கு சில மாற்றங்கள் நடந்த மாதிரியாகத் தோற்றப்பாடு காட்டப்படுகின்றது. ஆனால் வெவ்வேறு வடிவங்களில் அடக்குமுறைகள் புதிது புதிதாக கட்டவிழ்த்து விடப் படுகின்றன.

போருக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 'வாழ்ந்தால் போதும்' என்ற மனநிலைக்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் வகையில் - அவர்களுடைய நாளாந்த 'இருத்தல்' (Existence) பற்றி மட்டுமே அவர்களை சிந்திக்க, செயலாற்றக் கூடிய வகையில் அவர்களது அரசியல் கூட்டு மனநிலையை தாழ்த்தும் நோக்கில் இலங்கையின் அரச இயந்திரம் மிகவும் நுண்ணியமாக செயற்பட்டு வருகின்றமையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர் பிரதேசத்தில் காணப்படும் அதி உச்ச இராணுவப் பிரசன்னத்தையும் குறிப்பாக அரசியல் கருத்தாக்கத்திற்கான வெளிகளை மூடுவதற்கும் செயலற்றதாக்கவதற்கும் அரச இயந்திரம் எடுக்கும் முயற்சிகளை இந்த கண்ணோட்டத்தில் தான் நாம் பார்க்க வேண்டியள்ளது.

'இருத்தல்' பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் நேரத்தைச் செலவிடுகின்ற போது தமிழர்கள் தமது அரசியலை மறந்து விடுவார்கள் அல்லது தமது அரசியல் செயற்திட்டத்தில் விட்டுக் கொடுப்புக்களை (compromise) செய்து விடுவார்கள் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடத்தில் உள்ளது. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்த இருப்பு சார்ந்த பிரச்சினை ஓர் தனிப்பட்ட நபரொருவருக்குரிய இருப்பு சார் பிரச்சினை இல்லை என்பதை நன்கு அறிவார்கள். ஒவ்வொரு தனிநபரதும் இருப்பு சார் பிரச்சினையானது சமூகத்தின் இருப்போடு பின்னிப் பிணைந்தது என்பதைத் தமிழர்கள் அனுபவ ரீதியாக அறிவார்கள். அந்த இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலான அரசியற் செயற்றிட்டத்தையும் அவர்கள் எளிதில் கைவிடமாட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

'சட்டத்தின் ஆட்சி' என்ற வரையறையை எமது பிரச்சனையை விளங்கிக் கொள்வதற்கும் அதற்கு தீர்வு காண்பதற்குமான ஓர் அளவு கோலாகக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் ஒரு வகையில் 'சட்டத்தின் ஆட்சி' தான். சட்டங்களே மோசமாக இருக்கின்றன. இதற்கு அப்பால் சட்டத்துக்கு புறம்பான ஆட்சியும் (extra-legal regime) நடைபெறுகின்றது. இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான ஆட்சியை நீதிமன்றங்களும் அங்கிகரிக்கின்றன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக இயங்குதலானது இந்த நாட்டின் சட்டக் கலாச்சாரத்தில் ஒர் பிரித்தறிய முடியாத அங்கமாகி விடுகின்றது. தமிழர்களைப் பொறுத்த வகையில் நாம் இந்த சட்டங்களை உருவாக்குகின்ற அரச வரைமுறையைக் கோள்விக்குட்படுத்துபவர்கள். இன்றிருக்கும் அரச வரையறைக்குள் நின்று கொண்டு நாம் சட்டத்தின் ஆட்சி மூலமாக எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்ற முடிவை நாம் சுயாட்சி கேட்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சொல்லி வருகின்ற விடயம்.

வடக்குக் கிழக்கினை மையப்படுத்தி அண்மையில் தோற்றம் பெற்ற சிவில் சமூகக் குழவில் நீங்களும் அங்கத்துவம் வகித்திருந்தீர்கள். இச் சிவில் சமூகக் குழு முக்கியமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் விட்டுச் செல்லும் குறைபாடுகள் பற்றி மட்டுமே கவனம் செலுத்தியிருந்தது. அதற்கப்பால் தொடர்ந்து இன்றைய நிலையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள இடர்பாடுகள் பற்றி கவனம் கொள்வதாகத் தெரியவில்லை. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? எதிர்காலத்தில் இச்சிவில் சமூகம் தொடர்பாக என்ன வகையான திட்டங்களைக் கொண்டுள்ளீர்கள்? 

தமிழ்ச் சிவில் சமூகம் என்று பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடப்பட்ட அறிக்கையில் கையொப்பமிடப்பட்டவர்கள் ஒர் அமைப்பாக இயங்குவதில்லை. எமக்கு என்று ஒர் காரியாலயமோ தெரிந்தெடுக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்போ கிடையாது. தமிழரது அரசியல் செல்நெறி தொடர்பில் அக்கறை கொண்டவர்கள் என்றளவில் கூட்டாக எடுத்த முயற்சி தான் இந்த அறிக்கை. தமிழ் அரசியலைத் தனியே அரசியல்வாதிகளிடம் விட்டுவிடக் கூடாது என்ற சிந்தனையின் அடிப்படையில் இம்முயற்சி இடம்பெற்றதாகக் கொள்ளலாம். தனிநபரகள் என்ற வகையில் தத்தமது வேலை சார் தளங்களுடாக, அமைப்புக்களுடாக இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நாளாந்த இடர்பாடுகள் தொடர்பில் செயற்பட்டு வருகிறார்கள். அப்படிச் செயற்படுகின்றமையால் வந்த அக்கறையில் தான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான எண்ணம் தோன்றியது.

'சிவில் சமூகம்' என்றவொரு அமைப்பு இருக்க முடியாது. அது ஒர் எண்ணக்கரு சார்ந்த ஒர் முக்கியமான சமூக செயற்பாட்டு வெளியைக் குறித்து நிற்கின்றது. கட்சியரசியலுக்கப்பால் - பிரதிநிதித்துவ அரசியலுக்கப்பால் - அரசியல் தொடர்பில் செயலாற்றக் கூடிய முக்கிய வெளியை இது குறித்து நிற்கும். இந்தச் செயற்பாட்டு வெளிக்குள் நின்று கொண்டு தமிழரது அரசியல் தொடர்பிலும் அவர்களது சமூக பொருளாதார கலாச்சார இருப்பு பற்றியும் செயலாற்றுகின்றவற்றை சிவில் சமூக அமைப்புக்கள் (civil society organizations) என அழைக்கலாம். இவ்வாறான அமைப்புக்கள் எம்மத்தியில் மிகக் குறைவானவையே. இவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். எம்மில் சிலர் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். அரச இயந்திரத்துக்கு இப்படியான சிந்தனையும் செயற்பாடுகளும் தமது நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து முன்னகர்த்துவதில் பாரிய தடைகற்களாகத் தென்படுகின்றன. தொடர்ச்சியான அழுத்தங்கள் மூலமாக இவ்வாறாகச் சிந்திக்கும் வெளிகளை மூடிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் நாளாந்தம் செயற்படுகின்றனர். ஒர் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற வகையில் நாளாந்தம் இத்தகைய அழுத்தங்களின் பல்வேறு வடிவங்களிற்கு நான் முகம் கொடுத்து வருகின்றேன் என்பதையும் இந்த இடத்தில் சொல்லி வைக்கலாம்.

இலங்கை அரசின் சார்பில் காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இனப்பிரச்சனை தொடர்பில் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் ஆரோக்கியம், ஆரோக்கியமற்ற தன்மைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளது. தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற பாசாங்கைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதானது சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கு அவசியமானதாக அரசாங்கத்திற்குள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது தமிழர் தரப்பு நியாயமற்ற வகையில் விட்டுக் கொடுப்பின்றி செயற்படுவது போல் ஒர் தோற்றத்தினை ஏற்படுத்துவது தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மிகத் திறமையாக பாவித்து வந்த ஒர் உத்தி. விடுதலைப் புலிகள் பங்குபற்றிய பல பேச்சுவார்த்தைகளிலும் இவ் உத்தி கையாளப்பட்டது. இந்த உத்தியைத் பாவித்து தமிழர் தரப்பின் விட்டுக்கொடாத் தன்மை பற்றி பரப்புரை செய்வதனுடாக தமிழர் தரப்பைத் தமது நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி வரவைப்பது அரசாங்கம் இந்த உத்தியைப் பயன்படுத்துவதற்கான பிரதான நோக்கம் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

தற்போது தமிழர் சார்பில் பேசுகின்ற பிரதிநிதிகள் தாம் நியாயமாக (reasonable) நடந்து கொள்கின்றோம். என்பதைக் காட்டுவதற்காக - குறிப்பாக சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக -  எமது அரசியல் கோரிக்கைகளை விடுத்து கீழிறங்கி வரவேண்டும் என்ற மனநிலையோடு செயற்படுகிறார்கள். அதாவது அரசாங்கம் வைத்த இந்தப் பொறிக்குள் பேச்சில் ஈடுபடும் தமிழர் தரப்பு பேச்சுக்குழு நன்கு சிக்குண்டு விட்டது. 13ஆவது திருத்தத்தை (தந்திரோபாயக் காரணங்களுக்காக) முழுமையாக அமுல் நடத்துமாறு த.தே.கூ கோருமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. (நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து 100 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை விடுத்துப் பின்னர் அதனை இன்று அமுல்படுத்துமாறு கேட்பது இந்த மனநிலையில் நின்று தான்). மேற்சொன்னவை உத்தி (Strategy) சார்ந்து இன்றைய தமிழர் அரசியல் தலைமைத்துவத்திடம் இருக்கக் கூடிய குறைபாடு. ஆனால் பிரச்சனை இதனை விட ஆழமானது போல் தெரிகின்றது.

பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பில் கலந்து கொள்கின்ற தலைமைகள் உத்தி சார்ந்து மட்டுமன்றி தமிழரது நீண்டகால அரசியலின் அடிப்படைகளிலிருந்து ஒர் கருத்தியல் உடைப்பைச் செய்துள்ளது என்பதை நாம் எமது 13 டிசம்பர் 2011 தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் த.தே.கூவிற்கு விடுத்த பகிரங்க அறிக்கையில் கூட்டிக் காட்டியிருந்தோம். த.தே.கூ வினுடைய தலைமை செய்கின்ற பொது வெளிப்படுத்தல்களில் தீர்விற்கான அடிப்படை தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர், சம உரிமைகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுவதாக நாம் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தோம். தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக் கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அதற்கான நிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் எமது அறிக்கையில் சொல்லியிருந்தோம். ஆனால் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும் என்றும் அறிக்கையில் எச்சரித்திருந்தோம்.

உத்தி தொடர்பிலான பிரச்சனைக்கு சற்று மீள வருவோம். நாம் ' reasonable ' ஆக நடந்து கொள்கின்றோம் எனக் காட்டும் முயற்சியில் (அரசாங்கமோ சிங்கள தேசியவாத அரசியலோ எமது பிரச்சனைக்குத் திர்வைத் தராது என்பதைக் காட்டும் முயற்சியில்) எமது தரப்பு அரசியலை நாம் விட்டுக் கொடுத்து, அப்படியாக அவர்கள் தீர்வெதனையும் தரமாட்டார்கள் எனக் காட்டியதன் பின்னர் நாம் பழையபடி எங்களுடைய அரசியல் தேவைகளைப் பற்றி உரக்கச் சொல்லலாம் என நினைத்தால் அது சாத்தியப்படாது. இறங்கினால் நாம் மீள் ஏறமுடியாது. அப்படியென்றால் நாம் ' reasonable ' ஆக நடந்து கொள்கின்றோம் என்பதைக் காட்ட வேண்டியது முக்கியம் இல்லையா என நீங்கள் கேட்கக் கூடும். இந்த இடத்தில் தான் நாம் அறிவுபூர்வமாகச் அதைப் பற்றி சிந்தித்துச் செயற்படுவது முக்கியமானதாகும்.

எமது அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய தெளிவான ஒளிவு மறைவற்ற விளக்கங்களை மிகவும் ஆணித்தரமாகவும் விசாலமானதாகவும் நாம் முன்வைக்க வேண்டும். தமிழ் தேசியவாத அரசியலை ஒர் முற்போக்கு தேசியவாதமாக, உள்ளடக்கும் தேசியவாதமாக, காத்திரமான பார்வையுடைய அரசியலாக நாம் முன்வைக்கும் போது நாம் ' reasonable ' ஆக நடந்து கொள்கின்றோம் என்பது தானாகப் புலனாகும். இந்த அறிவு பூர்வமாக அரசியலை மேற்கொள்ளுவதன் மூலமாகவே நாம் எமது தரப்பு நியாயத்தை, எமது தரப்பின் ஏற்புடைத்தன்மையை (legitimacy) வளர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய உத்திகளுக்காக எமது அரசியல் அடிப்படைகளில் சந்தர்ப்பவாத மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது.  

இனப் பிரச்சனைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்ட தீர்வு பற்றிச் சிந்திக்கப்படுகின்றதே. மேலும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் பற்றியும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்நிலைமைகளின் ஆரோக்கியத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

13ஆவது திருத்தத்தை தமிழர்கள் முழுமையாக, தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கிறார்கள். 28.10.1987 அன்று இந்தியப் பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கு அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றம் சம்பந்தன் ஆகியோர் அனுப்பி வைத்த கடிதமொன்றில் 13ஆவது திருத்தம் எமது மக்களின் அடிப்படையான அபிலாசைகளைத் தானும் பூர்த்தி செய்யாத ஒன்று என்றும், எமது மக்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்களை எந்த வகையிலும் ஈடு செய்வதாக அமையாதது என்றும் தெரிவித்திருந்தனர். (இதே சம்பந்தன் அவர்கள் 13ஆவது திருத்தத்தைத் தாம் ஏற்றுக் கொள்வதாகத் தன்னிடம் தெளிவாகக் கூறியதாக இங்கிலாந்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் நஸ்பி அவர்கள் அண்மையில் கூறியிருந்தமை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. பத்திரிகைகள் 06-04-2012 அன்று இதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தன.)

27-04-1989 அன்று வடக்குக் கிழக்கு மாகாண சபையில் உரையாற்றிய முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் 13ஆவது திருத்தத்தின் கீழ் தேசிய பொலிஸ் பிரிவுக்கும் மாகாண பொலிஸ் பிரிவுக்குமுள்ள பொறுப்புக்களைப் பற்றி ஆராய்ந்து விட்டு இவ்வளவையும் தேசிய பொலிஸ் பிரிவு செய்வதாக இருந்தால் மாகாணப் பொலிசுக்கு என்ன வேலை? சம்பளம் வாங்கிப் படுத்து உறங்க வேண்டியது தான் என்று கூறியிருந்தார். இதை விட 13ஆவது திருத்தத்தின் இலட்சணத்திற்கு சான்றாதாரம் வேண்டுமா? சந்திரிகா குமாரதுங்கவினது அரசாங்கமோ ரணில் விக்கிரமசிங்கவினது அரசாங்கமோ 13ஆவது திருத்தத்தைத் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி எனக் கருதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகள் இருந்தபோது 13ஆவது திருத்தத்தைப் பற்றிப் பேசாத சிங்கள அரசியல் தலைமைகள் இன்று 13ஆவது திருத்தம் என்ற வரையறைக்கப்பால் பேச மறுக்கின்றமை எம்மைத் தோல்வியடைந்த இனம் என்ற மமதையில் அவர்கள் அரசியல் செய்வதையே காட்டுகின்றது. 

மாகாண சபைக் கட்டமைப்பைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்ற செய்தியை வெளிப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சபைக்கு நடாத்தப்படும் தேர்தல்களில் நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது என சிவில் சமூக அறிக்கையில் த.தே.கூவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மாகாண ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்று த.தே.கூ சிந்திப்பது போல் தெரிகின்றது. இந்த உபாயம் ஆபத்தானது என சிவில் சமூக அறிக்கையில் நாம் எச்சரித்திருக்கிறோம். 13ஆவது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பிரயாணிக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனை சாத்தியப்படாது என்றும் மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வுகளைத் தர முடியாத - அடிப்படையில் வலுவான மாகாண சபைக் கட்டமைப்பை த.தே.கூ ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்; கூறியிருந்தோம்.

தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறு மாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் நேரடியாகத் தான் த.தே.கூ போட்டியிடக் கூடாது என்று நாம் வலியுறுத்தியிருந்தமையும் நினைவு கூரத் தக்கவை. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியுள்ள இன்றைய சூழலில் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக வைக்குமாறு இந்தியா வலியுறுத்துவதாக அறியக் கிடைக்கின்றது. இதிலிருந்தே எமது அரசியலை முடக்குவதற்காகவே மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயுத்தங்கள் நடைபெறுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம். 

தோற்றம் பெற்றுள்ள சிவில் சமூகம் வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் என்பதற்கு அப்பால் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் என்ன கொள்கையினைக் கொண்டுள்ளது?

முஸ்லிம் மக்கள் சார்பிலோ மலையக மக்கள் சார்பிலோ தமிழர்கள் அரசியல் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்பது எனது நிலைப்பாடு. முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் தனித்துவமான அரசியலும் அதற்கென கட்சிகளும் உண்டு. ஒலுவில் பிரகடனத்திற்குப் பின்னர் முஸ்லிம்கள் தம்மைத் ஓர் தேசமாகக் கருதி அரசியல் செய்வது போல எனக்குத் தோன்றினாலும் இதிலும் தெளிவற்ற தன்மைகள் காணப்படுகின்றன. ஆட்சிக்கு வருகின்ற எந்தவொரு அரசாங்கத்திலும் பங்கெடுப்பதன் மூலமாகத் தமது மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரலாம், அத்தகைய அரசியலே சரியானது என்ற பார்வை முஸ்லிம் அரசியலிலும் மலையக அரசியலிலும் ஆழமாக ஊன்றி இருப்பது போல் படுகின்றது. தமது அரசியல் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது இந்த சமூகங்களினது பொறுப்பாகும்.

இம்மக்கள் சார்பில் அரசியல் செய்யக் கூடாது என்ற நிலைப்பாடானது அந்த மக்களுடன் நாம் சேர்ந்து இயங்குவதை நிச்சயமாகத் தடுக்கக் கூடாது. முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஆழமான விளங்கிக் கொள்ளலையும் அதற்கான ஆதரவு அரசியலையும் (solidarity politics) நாம் நிச்சயமாக செய்ய வேண்டும். குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் சுயாட்சி அதிகாரம் கொண்ட இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழர்கள் முற்று முழுதாக பெரும்பான்மைத்துவ ஆட்சியொன்றை நடாத்தமாட்டார்கள் என்பதையும் அதற்கான கட்டமைப்பு சார்ந்த ஏற்பாடுகளைப் பற்றிப் பேச எமது விருப்பத்தையும் நாம் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதற்கான சூழல் அமையப் பெற வேண்டும். நிச்சயமாக நீதியமைச்சராகவுள்ள ஹக்கீம், பதுர்தீன் ஆகியோரது அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகள் இதற்கான ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தருவதற்குத் துணை செய்யவில்லை.

நேர்கண்டவர்: தியாகராஜா நிரோஷ்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 

 

4/16/2012 2:54:36 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்